Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (29.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: மணல் விற்பனை வாயிலாகத் தமிழக அரசுக்கு 36 கோடி ரூபாய் வருவாய் காட்டப்பட்டுள்ளது, ஆனால் தமிழகக் குவாரிகளில் நடந்த மணல் திருட்டால் மாநில அரசுக்கு 4,730 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி-க்குத் தகவல் அனுப்பி இருக்கிறதே?


பதில்:
'பெரியார் மண்'ணுக்கு மதிப்புத் தராதவர்கள் ஒன்றை உணரவேண்டும். அந்த மண்ணை அவ்விதம் நேசிப்பவர்களுக்கு அதன் மதிப்பு எவ்வளவு என்று தெரியும். அமலாக்கத்துறை கூட முழுக்க அளவிட முடியாதது அது.

 

 

2. கேள்வி: அதிமுக-வில் பல வருடங்கள் முன்னணித் தலைவராக இருந்து, அக்கட்சியின் தற்போதைய தலைமையுடன் முரண்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர் கே. ஏ. செங்கோட்டையன். பின்னர் அவர் தவெக-வில் சேர்ந்து, "வழி தெரியாமல் நின்ற எனக்கு வழி காட்டியவர் விஜய். என் உடலில் ஓடும் ரத்தம் விஜய்க்காகத் தான்" என்று பேசி இருக்கிறாரே?


பதில்:
செங்கோட்டையன், திராவிட அரசியலில் நீண்ட அனுபவசாலி. விஜய்யும் திராவிட வாசனை கொண்ட அரசியல் தலைவர். எப்படிப் பேசினால் விஜய்யின் மனம் குளிரும் என்று சரியாக ஊகித்துப் பேசியிருக்கிறார், செங்கோட்டையன். குனியாமலே தலைவர் காலைத் தொடுவதும் திராவிட அரசியல் கலை.

 

 

3. கேள்வி: மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி, ஶ்ரீநகரில் பத்திரிகையாளர்கள் முன்பு தனது பிரதேச காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது ஒரு பத்திரிகையாளர் அவரை உருது மொழியில் பேசச் சொல்ல, "மாநில மொழிக்கு மதிப்புத் தரவேண்டும். என்னைக் கேட்ட மாதிரி தமிழக முதல்வர் ஸ்டாலினை உருது மொழியில் பேசச் சொல்வீர்களா?" என்று கோபமாகக் கேட்டிருக்கிறாரே?


பதில்:
பாவம், விவரம் புரியாதவர் மெஹபூபா முப்தி. பாஜக-வை எதிர்க்கவும் வேறு சுயலாபத்திற்காகவும் குட்டிக்கரணம் அடித்து சிறுபான்மையினரைத் தாஜா செய்து வருகிறார் ஸ்டாலின். மெஹபூபாவின் பேச்சால், இனி ஸ்டாலின் தானாகவே உருதுவில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசித் தமிழகத்தின் ஒரு சிறுபான்மையினரில் உருது பேசுபவர்களைத் தாஜா செய்ய முனையலாம். "தமிழ் வாழ்க! உருது உயர்க!" என்ற கோஷமும் அவரிடமிருந்து வரலாம் காஷ்மீர் மாடல் வேறு, திராவிட மாடல் வேறு.

 

 

4. கேள்வி: தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேரத் தேர்வு எழுதியவர்களில் 36 சதவிகிதம் பேர், அதாவது 85,000த்துக்கு அதிகமானோர், தமிழ்ப் பாடத்தில் 40 சதவிகித மார்க் கூட எடுக்காமல் பெயில் ஆகி இருக்கிறார்களே - அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்தும்?


பதில்:
சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தில் முறைகேடான ஆட்சிக்கு வித்திட்டு உரமிட்டு வளர்த்த ஒரு கட்சி, இந்த அவலத்திற்குப் பெரும் பொறுப்பேற்க வேண்டும். வன்முறையிலும் வருமானத்திலும் பெரும் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள், மொழிப் பாதுகாப்பிலும் மொழி வளர்ச்சியிலும் அக்கறை காட்ட முடியாது. அவர்களின் ஆட்சி, ஆற்று மணலோடு அடிப்படைத் தமிழறிவையும் மறையச் செய்யும்.

 

 

5. கேள்வி: 'வாய்மையே வெல்லும்' என்ற சொற்கள் தமிழ்நாடு அரசு சின்னத்தின் அங்கம். ஆனால் அரசியல் உலகில் 'வாய் மெய்யை வெல்லும்' என்பது விதி என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். சரி, 'பொய்மை' யைப் பற்றிய அரசியல் விதி என்ன?

பதில்:
"பொய் மையை வெல்லும்". எப்படியென்றால்:

 

தேர்தலில் ஒரு வாக்காளர் ஓட்டுப் போடுவதின் அடையாளம், ஓட்டுச் சாவடியில் அவர் கைவிரலில் வைக்கப் படும் மை. அந்த மை, தங்களுக்கு ஓட்டளிக்கும் அதிக வாக்காளர்களின் விரல்களில் காணப்படவேண்டும் என்பதற்காக அநேக அரசியல்வாதிகள் கூசாமல் மக்களிடம் பொய் சொல்கிறார்கள், பொய் வாக்குறுதிகள் தருகிறார்கள், நினைத்தபடி தேர்தலில் வெற்றி அடைகிறார்கள். ஆகையால், பொய் மையை வெல்லும்.

 

வாய் மெய்யை வெல்லும்;

பொய் மையை வெல்லும்.

 

பகுதி 32 // 29.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment