Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (21.12.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: "கிறிஸ்தவக் கொள்கைக்கும் திராவிடக் கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது. ஏசுவைப் போல் வாழ்ந்தவர்கள் ஈ.வெ.ரா, அண்ணா, கருணாநிதி" என்றெல்லாம் துணை முதல்வர் உதயநிதி ஒரு கிறிஸ்துமஸ் விழாவில் பேசி இருக்கிறாரே?


பதில்:
தமிழக வெற்றிக் கழகத்தினால் வந்த வினை இது.

 

தவெக நிறுவனர் விஜய், கிறிஸ்தவர். அவர் கட்சிக்குக் கிறிஸ்தவர்களின் ஓட்டுகள் அதிகமாகப் போகலாம் என்று திமுக அஞ்சுகிறது. முன்பு கிறிஸ்தவர்களின் ஓட்டுக்காக அவர்கள் முன்னால் சாதாரண டான்ஸ் ஆடிய உதயநிதி, இப்போது உதறல் எடுத்து பயங்கர ராப் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுதான் விஷயம்.

 

 

 

2. கேள்வி: ஸ்டாலினையும் உதயநிதியையும் அவர்கள் முன்னாலேயே திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பொய்யாக வானளாவப் புகழ்ந்து பேசுகிறார்கள். அது பொய் என்று அந்த இரு தலைவர்களுக்கும் புரியாதா?


பதில்:
புரியும். தங்களைப் பொய்யாகப் புகழ்கிறவர்கள் அந்த நேரத்தில் வாலைக் குழைத்து தமக்குப் பணிகிறார்கள், அந்தக் குழைவின் வெளிப்பாடு அவர்களின் பொய் என்பதை அறிந்து ரசிப்பவர்கள் ஸ்டாலினும் உதயநிதியும்.

 

 

 

3. கேள்வி: தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ், "விஜய் இப்போது நடிகர் இல்லை. அவர் ஒரு முன்னாள் நடிகர். நடிப்பை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறாரே?


பதில்:
விஜய் சினிமாவை விட்டாரோ இல்லையோ, நடிப்பை விடவில்லை. அரசியல் மேடைகளில் தனது சினிமா பாணியில் அவர் ஆர்ப்பாட்டமாக நடிக்கிறார். ஒரு தேர்ந்த அரசியல்வாதி மாதிரி, தான் நடிக்கிறோம் என்று காண்பிக்காமல் அரசியல் மேடையில் நடிக்கும் கலையை விஜய் கற்க வேண்டும். அது நடக்காத வரை அவர் நடிகராகவே பார்க்கப் படுவார் - ரசிகர்களின் ஓட்டுக்காக அதை அவர் விரும்புவதாகத் தெரிகிறது.

 

 

 

4. கேள்வி: திராவிடர் கழகம் என்ற பெயரில் 'ர்' இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பதில் 'ர்' இல்லை. திமுக-வின் பெயரில் ஏன் 'ர்' இல்லை, அதனால் என்ன வேறுபாடு?


பதில்:
நிஜத்தில் பெரிய காரணம் இல்லை, வேறுபாடும் இல்லை. இரண்டு அமைப்புகளின் தலைமைக்கும் குறுகல் பார்வை, கோணல் புத்தி, குறைவான தேசாபிமானம் இருக்கிறது.

 

புஸ்வாணத்தில் 'ஸ்' உண்டு, பூவாணத்தில் கிடையாது. இரண்டும் பட்டாசு ரகம். ஜாக்கிரதையாகத் தள்ளி இருப்பது நல்லது.

 

 

 

5. கேள்வி: குதிரையைப் படைத்த ஆண்டவன் வரிக்குதிரையைப் படைத்தார். கழுதையைப் படைத்த அவர் ஏன் வரிக்கழுதையைப் படைக்கவில்லை?


பதில்:
ஆண்டவன் கருணை மிக்கவர். அளவோடு வரி போடுவார்.

 

 

பகுதி 28 // 21.12.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment