Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (08.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: சீமான் பேசுகிறார்: "விஜயகாந்தின் தேமுதிக, தேர்தலில் தனியாக நின்று 10.5 சதவிகிதம் வாக்குகள் பெற்றது. ஆனால் அவர் கூட்டணி வைத்தபின் அவரது வாக்கு வங்கி சரிந்தது. நான் விஜயகாந்த் மாதிரி கூட்டணி வைக்கும் தவறைச் செய்ய மாட்டேன்." இது சரியான அரசியல் வியூகமா?


பதில்:
2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் 29 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றார். உடல்நிலை காரணமாக அவர் தனது கட்சியை ஸ்திரப்படுத்தி வளர்க்க முடியவில்லை. விஜயகாந்தின் தேசிய சிந்தனை இல்லாதவர் சீமான். திமுக-வை விட மேலும் தனித் தமிழ்நாடு பார்வை உள்ளவர் சீமான். அவர் தனித்தே போட்டியிட்டு எம்.எல்.ஏ-க்கள் கிடைக்காமல் போகக் கடவது!

 

 

 

2. கேள்வி: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னது பித்தலாட்டம் என்கிறாரே வைகோ?


பதில்: சாத்தியப் பட்டதை விஜய் செய்திருக்கும்போது, வைகோ பேச்சில் நியாயம் இல்லை. ஆனால் ஒன்று. பித்தலாட்டம் பற்றி வைகோ-வுக்கு நன்கு தெரியும். முன்பு ஒரு டிவி பேட்டியில் "ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. தி. மு. கழகத்தின் வரலாறும் தெரியாது. ஸ்டாலின் எனக்கு ஒரு பொருட்டே அல்ல" என்று அவரைத் துச்சமாகப் பேசிய வைகோ, பின்பு ஸ்டாலின் தலைமையிலான திமுக-வுடன் கூட்டணி வைத்து ஸ்டாலினை வணங்கி நிற்கிறார். வைகோ அறியாத பித்தலாட்டமா?

 

 

 

3. கேள்வி: வளர்ந்த நாடுகள் போல் இந்தியாவுக்கு ராக்கெட் விடத் தெரிகிறது. அங்குள்ள மாதிரி ஏன் நமது ஜனநாயகம் மக்களுக்குப் பயன்கள் தரவில்லை?


பதில்:
அங்கு விவரமான மக்கள் அதிகம். அவர்கள் தங்கள் நலனில் அரசியல்வாதிகளைச் சரியாக எடை போடுகிறார்கள். இங்கு விவரமான அரசியல்வாதிகள் அதிகம். அவர்கள் தங்கள் நலனில் மக்களின் ஏழ்மை மற்றும் இயலாமையைச் சரியாக எடை போடுகிறார்கள்.

 

 

 

4. கேள்வி: பிரதமர் மோடியை இனிய மனிதர், உயர்ந்த மனிதர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் இப்போதெல்லாம் சொல்கிறார், ஆனால் டிரம்பைப் பற்றி மோடி அப்படிப் பேசுவதில்லையே?

 
பதில்:
இந்தியப் பொருளாதாரத்தை முன்பு இழித்துப் பேசியவர் டிரம்ப். "நான் மோடியின் அரசியல் வாழ்க்கையை ஒழிக்க விரும்பவில்லை" என்றும் சமீபத்தில் உளறியவர் டிரம்ப். தனது கன்னாபின்னா பேச்சுகள் மோடியிடம் பலிக்கவில்லை என்று உணர்ந்த டிரம்ப், இப்போது மோடியைப் பற்றி நல்லதனமாக சமாளிப்புப் பேச்சு பேசுகிறார். டிரம்பையும் அமெரிக்காவையும் பற்றி முன்பு வரம்பு மீறிப் பேசாத மோடிக்கு, இப்போது சமாளிப்புப் பேச்சு அவசியமில்லை.

 

 

 

5. கேள்வி: 'நாயகன்' சினிமாவின் மறுவெளியீட்டுக்குத் தடை கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, "நாயகன் படத்தை நான் 15 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு பிரேம் வாரியாக நான் இப்போது சொல்ல முடியும்" என்று கருத்து சொல்ல, தடை வழங்கக் கூடாது என்று வாதிட்ட வக்கீலும் "நான் இந்தப் படத்தை 50 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்" என்று கோர்ட்டில் தெரிவித்திருக்கிறாரே?


பதில்:
மெய் சிலிர்க்கிறது! இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை!

 

 

பகுதி 12 // 08.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment