Wednesday, 31 December 2025

கேள்வி-பதில் (22.11.2025)

 

 

கேள்வி-பதில்

 

 

 

1. கேள்வி: அதிமுக-வின் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விருப்பம் கருதியும், தமிழக பாஜக-வின் தலைவராக அண்ணாமலையின் பதவி நீடிக்கப் படவில்லை. பழனிசாமி இறுதியில் வென்றுவிட்டார் என்றாகுமா?

 
பதில்:
அதில் எடப்பாடி பழனிசாமி திருப்தி கண்டார் என்று ஆகலாம், அவ்வளவுதான்.

 

இன்னொன்று. அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இல்லை என்றாலும் தமிழக பாஜக-வில் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இடையே இன்றும் அவர் மதிப்பு உயர்ந்தே இருக்கிறது. அதிமுக-வின் தலைவர் மாற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி அந்தப் பதவியில் இன்று இல்லை என்றால், அவருக்கு அதிமுக-வில் மற்றும் அதிமுக ஆதரவாளர்களிடையே என்ன மதிப்பு இருக்கும்? மற்றதெல்லாம் தற்காலிகம்.

 

 

 

2. கேள்வி: தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை, த.வெ.க தலைவர் விஜய் எதிர்க்கிறார். ஆளும் கட்சியான திமுக-வும் அதை எதிர்க்கிறது. அந்தத் திமுக-வை விஜய் எப்போதும் எதிர்க்கிறார். ஒன்றும் புரியவில்லையே!


பதில்:
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வேற்று நாட்டவர் ஆகியோரின் பெயர்கள் இப்போது நீக்கப் பட்டால் யாருக்கு நஷ்டம்? இன்னமும் அந்த மக்கள் பெயர்களில் இருக்கும் ஓட்டுகளைப் பெறுகின்ற ஜாலம் தெரிந்த பிரபல கட்சிக்குத்தான் நஷ்டம் - அதுவும் 6 மாதத்தில் வரப்போகும் சட்டசபைத் தேர்தலில். அந்த ஜாலத்தை அறியும் அளவுக்கு, நினைத்தால் அதைச் செயலாக்கும் அளவுக்கு, இன்னும் த.வெ.க வளரவில்லை. அதே சமயம், திமுக மாதிரித் தானும் மத்திய அரசை, ஒரு அரசமைப்பு நிறுவனத்தை, எதிர்ப்பதாகக் காண்பித்து, தனது கட்சி திமுக-வுக்கு இணையானது, முன்னர் ஆட்சியில் இல்லை, ஊழலும் செய்யவில்லை என்பதால் தனது கட்சி திமுக-வை விடவும் மேலானது, திமுக-வுக்குப் பதில் த.வெ.க-வுக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் சொல்கிறார் விஜய். இவரும் ஆபத்தானவர்.

 

 

 

3. கேள்வி: "இந்தியாவும் பாகிஸ்தானும் போர் புரிந்தால் நான் அந்த நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை மிகவும் உயர்த்துவேன் என்று சொன்னேன். அதனால் பிரதமர் மோடி இந்தியா போருக்குப் போகாது என்று என்னிடம் போனில் தெரிவித்தார்" என்று டிரம்ப் இப்போது சொல்கிறாரே? முன்பும் இதுபோல் அடிக்கடி பேசி இருக்கிறாரே?

 
பதில்:
அமெரிக்காவிடம் பெரிய துடிப்பான பொருளாதாரம் இருக்கிறது. அதிபர் டிரம்பிற்குள், விஷமக்கார அற்பராக ஒரு ராகுல் காந்தி இருக்கிறார். அந்த இரண்டோடும் அதிகம் மல்லுக் கட்டாமல், டிரம்ப் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நாளை எதிர்நோக்கி இருப்பது எந்த நாட்டிற்கும் விவேகம்.

 

 

 

4. கேள்வி: ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அரசியல் சட்டத்தில் கால அவகாசம் இல்லை, அதைக் கோர்ட் நிர்ணயிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் ஜனாதிபதியின் கேள்விக்கு விடை அளித்திருக்கிறதே?


பதில்:
மக்கள் நலனுக்காகக் கட்டுப்பாடுடன் திறமையாக நிர்வாகம் நடைபெறுவது, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் குணத்தைப் பொறுத்தது - கணவன் மனைவிக்குள் இருக்கவேண்டிய இணக்கம் அந்த இருவரின் குணத்தைப் பொறுத்து அமைவது மாதிரி. இரண்டு விஷயங்களிலும், சட்டமும் நீதிமன்றமும் ஓரளவு உதவலாம், முழுவதுமாக அல்ல. அதன்படி உச்சநீதி மன்றத்தின் பரவலான விடைகள் இப்போது ஓரளவு உதவுகின்றன.

 

 

 

5. கேள்வி: அமெரிக்காவில் டிரைவரே இல்லாத கார், டிரைவர் இருப்பது மாதிரி ஓடுகிறதாமே?


பதில்:
இந்தியாவில் டிரைவர் இருக்கும் பஸ், டிரைவரே இல்லாத மாதிரி ஓடுகிறதே!

 

 

பகுதி 17 // 22.11.2025

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment