Sunday 26 April 2020

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: கொரோனா வழங்கும் காட்சி


         -- ஆர். வி. ஆர்
வைரஸ் பேரு 'கொரோனா'வாம். அதுனால வர்ற தொற்று வியாதிக்கு 'கோவிட்-19'-ன்னு பேராம். அமெரிக்கா ஐரோப்பா அளவுக்கு இந்தியால பெரிசா உயிரை எடுக்காம இருக்கு இந்த வைரஸ். இன்னி வரைக்கும் இப்படி. ஆனா இன்னும் இந்த வியாதிக்கு தடுப்பும் இல்லை, மருந்தும் இல்லைன்னா கதி கலங்கறது.

வைரஸ் பரவற வேகத்தை குறைக்கணும்னு ஊரெல்லாம் 'லாக்டவுன்'னு பூட்டடைப்பு போட்டாச்சு. பூட்டடைப்பை யார் அமல் படுத்தறா? மாநில போலீஸ்தான். எல்லா மாநிலத்துலயும் எப்படிப் பண்றா? வாயைத் திறந்து பேஷ்னு சொல்லலாம். ஒண்ணு ரெண்டு இடத்துல தப்பு, அதிகப்படின்னு இருக்கலாம். ஆனா பொதுவா இப்ப போலீஸ்காராளை மனசாற பாராட்டணும்.

அடுத்ததா மருத்துவத் துறையைப் பாருங்கோ, அதுவும் அரசாங்கத்துல இருக்கறவாளை. டாக்டரோ நர்ஸோ, அவா கூட வேலை பண்றவாளோ, உயிரைப் பணயம் வைச்சு பொதுமக்களுக்கு சேவை பண்றா. அவாளை கையெடுத்து கும்பிடணும். அப்பறம் வருவாய்த்துறை மனுஷா, ரோடுல தூய்மைப் பணி பண்றவான்னு அவாளுக்கும் தேங்க்ஸ் சொல்லணும். இதெல்லாம் தாண்டி, ஒரு விஷயத்தை ஏன் எதுன்னு கவனிச்சேளா?

இந்த வைரஸை கட்டுப்படுத்தணும்னு நடவடிக்கை எடுத்த பல மாநில அரசுகள் நல்ல பேர் வாங்கிண்டிருக்கு. எல்லாத்துக்கும் உறுதுணையா பக்கபலமா இருக்கற மத்திய அரசும், அதை ராப்பகலா மேற்பார்வை பாக்கற பிரதமர் மோடியும் நமக்குக் கிடைச்ச அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கணும். கொரோனா எதிர்ப்பு வேலைக்காக, மோடியை உலகத் தலைவர்களே பெரிசா தூக்கி வச்சுப் பேசறா. ஆனா இந்திய மீடியாக்கள் சிலதோட ராகுல், சிதம்பரம், ஸ்டாலின், கமல்னு ஒரு பட்டாளம் சேர்ந்துண்டு,  பரவலா பளிச்னு இருக்கற  இடங்களைப் பாக்காம, ஓரத்துல கொஞ்சம் கருப்பா இருக்கற புள்ளிகளைப் பெரிசுபடுத்தி குதர்க்கப் பேச்சு, கொனஷ்டைக் கேள்வின்னு திருப்திப் பட்டுக்கறா.  

மத்திய மாநில அரசுகள் வரிசையா வைரஸ் தடுப்பு காரியம் பண்ணும் போது, சில அடுத்த கட்ட காரியங்களை "அரசாங்கம் இப்பவே செய்யணும்"னு முன்னாடியே அறிக்கை விடறது, அப்பறம் அந்தக் காரியத்தை அரசாங்கம் கைல எடுக்கற போது "எங்க யோசனைப்படி அரசாங்கம் செயல்படறது நாட்டுக்கு நல்லது" அப்படின்னு தனக்கே மாலை போட்டுக்கறது, இதை எல்லாம் ராகுலும் பிரியங்காவும் சிதம்பரமும் குழந்தைத்தனமா பண்ணிண்டிருக்கா.

உலகத் தலைவர்களுக்கும் உள்நாட்டு  எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் ஏன் மாறுபட்ட கண்ணோட்டம்னு கேக்கக் கூடாது. கொரோனா வைரஸ் எதிர்ப்பை மோடி விடாப்பிடியா வழிநடத்தி தேசத்தை மீட்டுட்டாஅடுத்த இந்திய எலெக்ஷன்ல தோக்கப் போறது உலகத் தலைவர்களா, நம்ம எதிர்க்கட்சி கோஷ்டியா? அது மட்டுமில்லை. உலகத் தலைவர்கள் அவா நாட்டுத் தேர்தல்ல தோத்து ஆட்சிக்கு வரலைன்னா அவாளுக்குப் பெரிசா நஷ்டம் இருக்காது. ஆனா இந்திய எதிர்க்கட்சிகள் பலதும் ஆட்சில உக்காரலைன்னா - அதுவும் மத்தில ஆட்சியைப் பிடிக்கலைன்னா - அந்த அந்தத் தலைவர்களோட நஷ்டத்தை எண்ணிப் பாக்க முடியுமா? அதெல்லாம் எண்ணவே முடியாது. 

சென்ட்ரல் பாயிண்டுக்கு வரேன். அநேகமா எல்லா மாநில அரசுகளும் வைரஸ் தடுப்பு பணிகளை அபாரமா பண்றது, நாமளும் ஷொட்டு குடுக்கணும். ஆனா கொரோனா காலத்துக்கு முன்னால (அதாவது, கொ.மு காலத்துல) ஒரு நாப்பது அம்பது வருஷமா அதுகளோட போலீஸ் துறையும், அரசாங்க மருத்துவத் துறையும், வருவாய்த் துறையும், இப்ப மாதிரி சிறப்பா வேலை செஞ்சு, மக்களோட மனம் நெறைஞ்ச பாராட்டை வாங்கினதா? அந்த அரசு ஊழியர்கள் கிட்டயே ‘நெஞ்சைத் தொட்டு பதில் சொல்லுங்கோ'ன்னு இப்ப கேட்டா அவா இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பாப்பா – பதில் வராது. இப்ப ரெண்டு மூணு மாசமா வைரஸ் தடுப்பு வேலை பாக்கற அதே ஊழியர்கள்தான், மாநிலங்கள்ள முன்னாடியும் பல வருஷமா வேலை பாத்தா. இப்ப மட்டும் எப்படி பொதுமக்கள் அவதிப்படாம, பண நஷ்டம் ஏற்படாம, திடீர்னு தாங்களே  முன்வந்து போலீஸ், அரசு மருத்துவத் துறை, வருவாய்த்துறை எல்லாரையும் பாராட்டறா?

இந்த கொரோனா காலத்துல, பல்லடம்னு ஒரு ஊர்ல என்ன நடந்ததுன்னு வாட்ஸ்-அப்ல பாத்திருப்பேள். அந்த ஊர்ல, வீட்டுப் பெண்மணி ஒருத்தர் தன் வீட்டுக்கு வெளில வந்து, தன் தெருவுல தூய்மைப் பணி பண்ற ஒரு பெண்மணிக்கு கால் அலம்பி பாத பூஜை பண்ணி வணங்கி, ஒரு புதுப்புடவையை தானம் பண்ணி கௌரவிச்சு, தன்னோட நன்றியை காமிக்கறா. அரசு ஊழியர்கள் பொது மக்களுக்கான கடமையை தவறாம சரியா செஞ்சா, பொதுமக்கள் எப்பவுமே அரசு ஊழியர்களை நன்றியோட நினைப்பா - அந்த அளவு கேட்பார் இல்லாம  கதி இல்லாமக் கிடக்கறவாதான் நம்ம பொதுமக்கள் - அப்டிங்கற உண்மை நடுத்தெருவுக்கு வந்து நம்மளை நெகிழ வைச்சதுதான் பல்லடம் நிகழ்ச்சி.

மறுபடியும் பாயிண்டுக்கு வரேன். அரசு ஊழியர்கள் இந்த கொரோனா காலத்துல மட்டும் எப்படி திறமையா முழு மனசோட வேலை செய்யறா, முன்னால ஏன் செய்யலை? இதுக்கு, பாதிக்கு மேல அவா காரணம் இல்லை. விஷயம் என்னன்னா, அவாளுக்கும் மேலான ஸ்தானத்துல  அரசங்கத்தோட சிண்டைப் பிடிச்சிண்டு காரண காரியமா உக்காந்திருக்காளே மந்திரிகள், அப்பறம் முதல் மந்திரி, அப்பறம் ஆளும் கட்சி முதலைகள் ஒண்ணு ரெண்டு, இவா போடற தாளத்தையும் சொடக்கையும் சரியா புரிஞ்சுண்டு ஆட வேண்டிய நிர்பந்தத்துல இருக்கறவாதான் அரசு அதிகாரிகள் நிறையப் பேர், அப்பறம் அவாளுக்கு கீழ பல தட்டுல உள்ள ஊழியர்கள்.  தப்புத் தாளத்துக்கு ஆட்டம் போடற நிர்பந்தம்னா, ஆடறவா பல பேர் அவா அவா இஷ்டத்துக்கும் கொஞ்சம் ஆடிப்பா. தாளம் போடறவனும் அதைக் கண்டுக்க மாட்டான். வரவேண்டியது வந்தா சரின்னு இருப்பான். கொ.மு காலத்துல முக்கியமா இதான் நடந்தது.

சரி, முந்தி தப்புத் தாளம் போட்டவாள்ளாம் இப்ப ஏன் சரியான தாளம் போடணும்? அது ஏன்னா, இப்ப எல்லாருக்கும் சேர்த்து தாளம் போடறது, சொடக்கு போடறது கொரோனா வைரஸ்தான். அதுக்கு ஏத்தபடிதான் எல்லா மந்திரிகளும் கரெக்டா கை வீசி காலை ஆட்டி, இடுப்பை வளைச்சு, முகபாவம் காட்டி முழியை உருட்டி நாட்டியம் ஆடணும். ஒழுங்கா அப்படி ஆடலை, ராஜாங்கம் பண்றவா  உடம்புக்கே தொற்று  நோய் வந்து அந்த உடம்புலயே ஆரோக்கியம் இருக்காது, உயிர்கூட  தங்காதுன்னு  கொரோனா நட்டுவனார் கெடுபிடியா இருக்கார். கொ.மு. காலத்துல - கொரோனாவுக்கு முன்னால – ஆட்சியாளர்களுக்கு இந்த பயம் இல்லை பாத்தேளா, அதான் காரணம். இதை ஒட்டி இன்னொண்ணும்  சொல்றேன்.

மத்தில மோடி அரசாங்கம் முதல்ல வந்தது 2014-ம் வருஷம். அடுத்ததா வந்தது 2019-ம் வருஷம். இப்ப ஆறு வருஷமா அவர் நிர்வாகத்துல தங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைச்சிருக்குன்னு சாதாரண மக்களுக்கு இந்தியா  முழுக்க நன்னா தெரியும். மோடி வரதுக்கு முன்னாடி பத்து வருஷம் மன்மோகன் மாமா பிரதமரா இருந்து அரசாங்கத்தோட சிண்டை கைல வச்சிருந்தார், அவரோட சிண்டை சோனியா காந்தியும் கூட்டணி கட்சித் தலைவர்களும் ஆளுக்கொரு பக்கம் பிடிச்சிண்டா. இப்ப மோடிட்ட இருக்கற அதே அரசாங்க நிர்வாகம், அதே மாதிரி ஐ.ஏ.எஸ், வகையறா ஊழியர்கள் அமைப்புதான் மன்மோகன் மாமாட்டயும் ஜோரா இருந்தது. ஆனாலும் மன்மோகன் மாமா என்ன பண்ணினார்? கண்ணை மூடிண்டு காதைப் பஞ்சால அடைச்சுண்டு தப்புத்தாளம் போட்டார். அவருக்குப் பின்னால சோனியா கோஷ்டியும் கூட்டணி கும்பலும் கர்ண கொடூர கன்னா பின்னா தாளத்தை விளாசினது. அதுக்கு ஏத்தபடி அரசாங்க ஊழியர்கள் பலபேர் தப்பு டான்ஸ் ஆடினா, சிலபேர் ரகசியமா  சொந்த டான்ஸும் ஆடிண்டா. கதியில்லாத ஜனங்கள் கம்முனு சகிச்சுண்டா, அவ்வளவுதான்.

கோரோனா ஒழிஞ்சதுக்கு அப்பறமும், மனசாட்சி பிசகாத நல்ல நட்டுவனார்கள் ஒண்ணு விடாம எல்லா மாநிலங்கள்ளயும்  கிடைக்கணும்னு நான் வேண்டிக்கறேன். நீங்களும் அப்படித்தான?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020