Wednesday 10 February 2021

சிறை சென்ற சசிகலாவுக்கு கோலாகல வரவேற்பு. இது இந்தியா!

          -- ஆர். வி. ஆர்

 

தெரியுமல்லவா? தேங்காய் பூசணி உடைப்பு, ஆரத்தி மரியாதைகளோடு சசிகலா நேற்று காலை பெங்களூரில் இருந்து சாலை வழியாக சென்னைக்கு வந்துவிட்டார்.  வழியில் சசிகலாவின் ஆயிரக் கணக்கான அபிமானிகளால் அவரது கார் அவ்வப்போது  நிறுத்தப்பட்டு, மலர் தூவப்பட்டு ஊர்ந்து வந்தது. வாகனத்தின் முன் சீட்டில் அமர்ந்தபடி, தனது காரை சூழ்ந்து ஆர்ப்பரித்த மக்களுக்குக் கும்பிடு போட்டு  இரு விரல் உயர்த்தியபடி வந்தார் அவர். வழி நெடுக வெயிலிலும் பனியிலும் இத்தனை மக்களையும் ஏற்பாடு செய்து பணம் கொடுத்து ஒருவர் கூட்டி வந்திருக்க முடியாது. தானாக வந்தவர்கள் அதிகம் இருப்பார்கள்.

 

சசிகலா ஆதரவு டிவி-யிலும் ‘தியாகத் தலைவி சின்னம்மா’ என்ற அவர் போற்றப்பட்டு அவரது பயணம் முழுவதும்  நேரடி ஒளிபரப்பாகியது.  சாதாரண ஆறேழு மணி நேர பயணம் இருபத்தி மூணு மணி நேரமாகியது.  இரவிலும் கண்விழித்து பெருமிதமாக வந்தார் சசிகலா.

 

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெங்களூரு சிறையில் முடித்துவிட்டு சசிகலா காரில் சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போதுதான் அவருக்கு இவ்வளவு தடபுடலான வரவேற்பு. ஊழல் குற்றத்திற்காக, அதற்கு கூட்டுசதி செய்து துணை போனதற்காக, ஜெயில் தண்டனை ஏற்பது நமது அரசியல் தலைவர்களுக்கு அவமானம் அல்ல, அவர்களின் மக்கள் செல்வாக்கையும் அது பாதிக்காது. தண்டனை காலத்தில் தமது செயல் திறன் முடங்கி இருப்பதுதான் அவர்களின் கவலை. வெளி வந்த பின் அவர்களுக்கு அப்பாவி மக்களிடையே இன்னும் மெருகு ஏறலாம். காரணம், இது இந்தியா!

 

இந்தியா முதிர்ச்சி இல்லாத ஒரு ஜனநாயகம். அதற்கான முக்கிய அடையாளம் நமது மக்களின் ஏழ்மை அல்ல – அதன் பங்கு சிறிதளவுதான்.  தங்களை ஏமாற்றி, தங்கள் தலையில் நர்த்தனம் ஆடிக் கொழிக்கும் அரசியல்வாதிகளின் கயமையை உணராத நமது அப்பாவி ஜனங்கள்தான் அதற்கான முக்கிய அடையாளம். ஒரு உதாரணம் சொல்லி இதை விளக்கலாம்.  

 

அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். 2016 தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியானவர் டொனால்ட் டிரம்ப்.  பிறகு மறுபடியும் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, தனது நாட்டின் கணிசமான மக்கள் ஆதரவு இருந்தும் அவர் ஜனநாயக விரோதமான காரியங்களை அப்பட்டமாக செய்தாரே, என்ன காரணம்அமெரிக்கா முதிர்ச்சியற்ற ஜனநாயகம், அங்கு அப்படித்தான் நடக்கும் என்பதாலா? இல்லை. அமெரிக்கா முதிர்ச்சி அடைந்த ஜனநாயகம்தான், முதிர்ச்சி அம்சத்தில், நமது இரு ஜனநாயகங்களுக்கும் உள்ள வித்தியாச அறிகுறிகள்  நன்றாகத் தெரிகின்றன.   

 

எந்த சூழ்நிலைக்கும் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கும். அமெரிக்க ஜனநாயகத்தில் பித்துக்குளி டிரம்ப் விதி விலக்கானவர். 2020 தேர்தலில் ஜெயித்து அவர் மறுபடியும் ஜனாதிபதியாக ஆசைப்பட்டார். இரண்டாம் முறை தேர்தலில் வெல்வதற்காக அவர் சட்டத்தையும் ஜனநாயக பண்புகளையும் அபாண்டமாக மீறிய போது - அதுவும் தனக்கு எதிராக வெளிப்பட்ட சில மாநில ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அவர் தனக்கு சாதகமாக அமைக்க முயற்சிகள் செய்தபோது - என்ன ஆயிற்று? எதிர்க் கட்சியினர் மட்டுமல்ல, அவரது  குடியரசுக் கட்சித் தலைவர்களே பலர் அவரிடம் இருந்து விலகி அவரது ஜனநாயக விரோத போக்கிற்கு துணை போகவில்லை. அவர் தனித்து விடப்பட்டார். அதனால் அவர் 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடாக வெல்ல முடியவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடன்தான் வென்றார்.

 

இப்போது இந்தியாவில் நடக்கும் வேறு ஒரு காட்சியைப் பாருங்கள். பிரதமர் மோடி அப்பழுக்கற்ற நேர்மையாளர், குறிப்பாக பொதுப்பண விஷயங்களில். அவரால் ஆட்சிக்கும் வர முடியாமல் அதன் கோடி கோடி பலன்களை அடையவும் முடியாமல் தவிக்கும் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒன்றா இரண்டா? தங்களுக்குள்ளேயே பிளவு பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒரு நேர்மையாளரை எதிர்ப்பதற்காக இப்படி திரும்பத் திரும்ப ஒன்று கூடுகிறார்கள் என்றால் அதுவே நமது முதிர்ச்சி இல்லாத ஜனநாயகத்தின் அடையாளம். 

 

ஜனநாயக முதிர்ச்சி உள்ள நாட்டில், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசாங்கத்தின் கஜானா முறையாகக் காக்கப்பட்டு அது  கொள்ளை போகாமல் கவனிக்கப் படும். இதற்கு இங்கிலாந்தும் அமெரிக்காவும் உதாரணங்கள். இந்தியாவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக பல கட்சிகள் இருந்தாலும்அநேகமாக அவை அனைத்தும் அரசு கஜானாவின் சிறந்த பாதுகாவலர்கள் இல்லை.  அந்த கட்சித் தலைவர்கள் வெளியில் பேசக் கூடாத பொருளாதார வல்லமை கொண்டவர்கள்.  அது பற்றி உங்களுக்கும்  தெரியுமே?

 

சாமர்த்தியமாக சம்பாதிக்கும் தலைவர்கள் சட்டத்தில் சிக்காமல் ஊழல் செய்வார்கள். அது தெரியாமல் அநேக மக்கள் நமது நாட்டில் அந்தத் தலைவர்களையே திரும்பவும் ஆட்சிக்கு தேர்வு செய்வார்கள். இது போக, தாங்கள் சட்டத்தில் மாட்டி ஊழலுக்கான தண்டனை பெற்று வெளிவந்தாலும், அநேக மக்கள் தங்கள் சொல்படி ஓட்டளிப்பார்கள் என்ற சரியான நம்பிக்கையும் நமது தலைவர்கள் பலருக்கு உண்டு. இந்தியா முழுவதும் இதுதான் நிலை. தமிழ் நாட்டில் இது ஸ்டாலினுக்குத் தெரியாதா, சசிகலாவுக்குப் புரியாதா?

 

சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒரு கேள்வி கேட்கலாம். சசிகலா அதிமுக-விற்குள் வருவதை, வந்து தலைமை ஏற்பதை எதிர்க்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மர்ம மவுனத்தில் இருக்கும் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வமும் எப்படிப்பட்டவர்கள்? பொது வாழ்வில் நேர் நடத்தையை உயர்த்திப் பிடிக்கும் ஜனநாயக தூண்களா? இருக்க முடியாது.

 

தினமும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ் பாடி, மதுரை அருகே அவருக்காகக் கட்டிய கோவில் ஒன்றையும் சமீபத்தில் திறந்து வைத்தவர்கள்  ஈ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவரும்.  அவர்கள் போற்றி வணங்கும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருடன் 33 வருடங்கள் நெருங்கிய தொடர்பில் இருந்து, அதில் பல காலம் ஜெயலலிதாவின் வீட்டிலேயே தங்கி ஜெயலலிதாவுக்கு உதவியவர் சசிகலா. ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்றும்  அறியப் பட்டவர் அவர்.  பலர் அறியாத ஜெயலலிதாவின் தனிப்பட்ட முக்கிய விஷயங்கள் சசிகலாவுக்குத் தெரியும். அந்த அளவு சசிகலாவின் மீது நம்பிக்கை வைத்து அவரை சார்ந்திருந்தார் ஜெயலலிதா. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க முடியாமல் இருந்தார்கள். இதை எல்லாம் உணர்ந்த அதிமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், அந்த இருவரையும் தொழுது வந்தால்தான் தாங்களும் பிழைத்து செழிக்க முடியும்  என்று அந்தப் பணி செய்து தங்களுக்கும் வசதி செய்துகொண்டார்கள்.   

 

தமிழக முதல்வர் என்ற பதவியில் பொது ஊழியராக  இருந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஜெயலலிதா தன் வருமானத்திற்கு அதிகமான சொத்து வைத்திருந்தார், அந்த அதிக சொத்தை சேர்ப்பதற்காக அவர் சசிகலா, இளவரசி மற்றும் வி.என். சுதாகரனோடு கூட்டு சதி செய்தார் என்று ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு வந்தது.  சசிகலாவும் மற்ற இருவரும் அந்தக் கூட்டு சதியில் ஈடுபட்டார்கள், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்புக்கு துணை போனார்கள்  என்பது அந்த மூவர் மீதான வழக்கு.  ஜெயலலிதாவிடம் பொது அதிகார ஆவணம் பெற்றிருந்த சசிகலா அந்த மூவரில் முக்கிய புள்ளி.  

 

மாஜிஸ்டிரேட் கோர்ட், ஹை கோர்ட் இரண்டையும் கடந்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து இரு தரப்ப வாதங்களும் முடிந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு  சொல்ல தாமதம் ஆனது. அந்த தீர்ப்பு வருவதற்கு முன் டிசம்பர் 2016-ல் ஜெயலலிதா மறைந்தார். பின்னர் ஒரு நாள் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், மாஜிஸ்டிரேட் கோர்ட்டின் முடிவுகளை ஏற்று, சொத்துக் குவிப்பு நடந்தது என்று உடன்பட்டது. 

 

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முன் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் மீதான வழக்கு ஓய்ந்து போனது (proceedings abated) – அதாவது அவர் மீது தீர்ப்பு எதுவும் சொல்லாமல் அவருக்கு எதிரான வழக்கு மட்டும் சட்ட ரீதியாக நிறுத்தப் பட்டது.  சசிகலா, மற்ற இருவரின் மீதான குற்றச்சாட்டுகள்  – அதாவது, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பிற்காக அவருடன் கூட்டு சதி செய்தது, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பிற்கு துணை போனது ஆகிய குற்றச்சாட்டுகள் – நிரூபணம் ஆனது என்று சுப்ரீம் கோர்ட்டும்  முடிவு செய்தது. அதோடு, சசிகலாவுக்கும் மற்ற இருவருக்கும் மாஜிஸ்டிரேட் கோர்ட் விதித்த நான்கு வருட சிறைத் தண்டனையையும் ஊர்ஜிதம் செய்தது சுப்ரீம் கோர்ட். அந்த தண்டனையை பூர்த்தி செய்துவிட்டுதான் சசிகலா இப்போது வெளி வந்திருக்கிறார். ஊழல் சம்பந்தமான வழக்கில் தண்டனை அடைந்து வெளிவந்ததால் அவருக்கு  ‘தியாகத் தலைவி’ பட்டமும் கிடைத்துவிட்டது. புதிய பட்டத்திற்கு ஏற்ப இனி அவர் என்ன என்ன தியாகச் செயல்கள் செய்வாரோ!

 

தண்டனை பெற்று சிறை செல்வதற்கு முன் சசிகலா நியமித்த எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து அவரை முதல்வராக ஆக்கினார்கள்.  சசிகலாவை விலக்கிய அதிமுக தன் கையில் சிதையாமல் இருக்கும், மக்களும் தன் தலைமையை ஏற்பார்கள் என்று இந்த நிமிடம் வரை நம்புகிறார் எடப்பாடி.

 

தலைவர்களிடம் ஒரு ஈர்ப்பு (charisma) இருந்தால் அப்பாவி இந்திய மக்கள் அதன் காரணமாகவே அந்தத் தலைவர்களைப் பெரிதும் ஆதரிப்பார்கள். இந்த ஈர்ப்பானது, இயற்கையாக அமைந்த தோற்ற ஈர்ப்பாக இருக்கலாம் – உதாரணம், நேரு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா. இன்னொரு விதமாக,   ஒரு தலைவர்  ஆற்றிய பணிகளால் மக்களுக்கு பெரிய நன்மைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அந்தத் தலைவருக்கு கிடைக்கும் காரிய ஈர்ப்பாக இருக்கலாம்  - உதாரணம். நரேந்திர மோடி. சசிகலாவை நீங்கள் ஏற்கிறீர்களோ இல்லையோ,  அவருக்கும் ஓரளவு தோற்ற ஈர்ப்பு வந்திருக்கிறது.   

 

தனக்குக் கிடைத்த  மக்கள் சக்தியை ஆதாரமாக வைத்து, ஈர்ப்புள்ள ஒரு இந்தியத் தலைவர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா, அல்லது தனக்கு ஆதாயம் தேடிக் கொள்கிறாரா என்பது அந்த அந்தத் தலைவரின் நல்லொழுக்கத்தைப் பொறுத்தது, அப்பாவி மக்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.  

 

மீண்டும் தமிழ்நாட்டைப் பார்க்கலாம். ஜெயலலிதாவின் அடிப்படைக் குற்றமான சொத்துக் குவிப்பை நீக்கிவிட்டு, சசிகலாவின் கூட்டு சதி மற்றும் துணை போதல் குற்றம் நிலைக்க முடியாது.  அதாவது, ஜெயலலிதா ஒரு குற்றமும் செய்யவில்லை, சசிகலாதான் ஏதோ குற்றம் செய்து தண்டனை அடைந்தார் என்று எடப்பாடி பழனிசாமியும் வேறு யாரும் சொல்ல முடியாது.  ஜெயலலிதாவும் சசிகலாவும்  வேறு வேறு வகையில் ஊழல் தொடர்பான குற்றங்கள் செய்தவர்கள்தான்.

 

ஜெயலலிதாவின் நிழலில் சசிகலா அமோக பயன் அடைந்தது போல், ஜெயலலிதாவின் நினைவையும், படத்தையும் போற்றி, சசிகலாவைத் தள்ளிவைத்து,    எடப்பாடி பழனிசாமியும் மற்ற சில அதிமுக தலைவர்களும் அபாரமாகத்  பயன் அடையப் பார்க்கிறார்கள், ஆனால் அனுபவம் வாய்ந்த சசிகலா விடுவதாக இல்லை. சிறையில் இருந்து வெளி வந்த உடன் தனது மக்கள் ஆதரவை, ஓட்டு சக்தியை, எடப்பாடிக்கு உணர்த்த ஆரம்பித்து விட்டார் சசிகலா. இதுதான் விஷயம், இதுதான்  அவர்களுக்குள்ள போட்டி. யார் கண்டது, இந்தப் போட்டியில் எடப்பாடி தரப்பு சிறிதாகவோ சற்று பெரிதாகவோ வெல்லலாம், அல்லது சசிகலா நன்கு வெல்லலாம். அல்லது எடப்பாடியும் அவருடன் சேர்ந்திருக்கும் தலைவர்களும் சசிகலாவுக்குப் பணிந்து அவரோடு இணைந்து அனைவரும் தங்களுக்குக் கிடைக்கும் பயன்களைப் பிரித்து  அனுபவிக்கலாம்.  சொல்லுங்கள், இதுதானே இந்தியா?

 

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021