Thursday 28 December 2023

நியாயத்தின் முகம் விஜயகாந்த்

 

-- ஆர். வி. ஆர்

 

சில திரைப்பட நடிகர்களிடம் சில விசேஷ தனிமனிதப் பண்புகள் இருக்கலாம். அந்தப் பண்புகள் அவர்களின் நடிப்பையும் தாண்டி எல்லா மக்களையும் பரவலாக ஈர்க்கும். அவர்கள் நடிக்கும் பல கதாபாத்திரங்களில் அந்தப் பண்புகள் அவர்களுக்காக வைக்கப்படும். திரை நடிகரும் தரை மனிதரும் ஒருவரை ஒருவர் உயர்த்திப் பிடிப்பார்கள். அப்படி ஒரு நடிகர், மறைந்த விஜயகாந்த்.

 

விஜயகாந்தின் பண்பு எதுவாக இருந்தது? சாதாரண மக்களுக்கு அவர் நியாயத்தின் முகமாகத் தென்பட்டார். உரத்து நியாயம் கேட்பது அவரது குணமாகப் பார்க்கப்பட்டது.  அத்தகையவர், நாள்தோறும் அநீதியையும் அநியாயத்தையும் பலதரப்பில் எதிர்நோக்கும் சாதாரண மக்களுக்கு உயர்ந்த மனிதராகத் தென்பட்டார்.  இதுதான் விஜயகாந்த் வெற்றியின் நுட்பம். அவரது மனிதத் தன்மையும் அவருக்கு மெருகு சேர்த்தது.  

 

அன்பின் முகமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நியாயத்தின் முகமாக இருந்தவர் விஜயகாந்த். போர்க்குணத்தின் முகமாக இருந்தவர் ஜெயலலிதா. இப்போது எளிமையின் முகமாக இருப்பவர் ரஜினிகாந்த். இந்த நடிகர்கள் சாதாரண மக்களின் அபிமானத்தைப் பெற்றது இந்த உயர்ந்த பண்புகளுக்காகத்தான். என்ன காரணம் ஆனாலும் – தனிப்பட்ட வாழ்விலோ, அரசியலிலோ, அரசு நிர்வாகத்திலோ இவர்கள் தவறு செய்திருந்தாலும் – இவர்களைச் சாதாரண மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாது.

 

விஜயகாந்த் நியாயத்தின் முகமாக சாதாரண மக்களால் அங்கீகரிக்கப் பட்டார் என்பதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

 

2005 செப்டம்பரில் விஜயகாந்த் தேமுதிக என்ற தனிக் கட்சி ஆரம்பித்தார். அடுத்த எட்டு மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது. வலுவான திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து, கூட்டணி எதுவும் இல்லாமல், எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டார் அவர். முடிவாக விஜயகாந்த் கட்சியில் அவர் மட்டும் தான் ஜெயித்தார்.  இருந்தாலும் தமிழக மக்களின் 8.4 சதவிகித ஓட்டுக்களை அவர் கட்சி மாநிலத்தில் பெற்றது  – அதுவும் திமுக மற்றும் அதிமுக-வை ஒருசேர எதிர்த்துப் பெற்றது. அது மட்டுமே விஜயகாந்தின் அசாதாரண வெற்றி. அடுத்து 2009-ல் நடந்த லோக் சபா தேர்தலில் கூட அவர் கட்சி தனியாகவே நின்று தமிழகத்தின் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில் அவர் கட்சி ஒரு சீட்டும் ஜெயிக்கவில்லை என்றாலும் மாநிலத்தில் 10.1 சதவிகித வாக்குகளைப் பெற்றது.  ஆனால் இந்த உந்துசக்தியை நிலைநிறுத்தி, பலதரப்பட்ட மக்களிடையே விரிவாக்கி, அரசியலில் மேலும் வெற்றி அடையும் பதவிசும்  சாமர்த்தியமும் அவரிடம் இல்லை. கூடிவந்த உடல் நலமின்மையும் அவரை முடக்கியது.

 

விஜயகாந்தின் ஆரம்ப 8 சதவிகித தேர்தல் சாதனைக்குக் காரணம்: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும்  அநியாயம் செய்கின்றன, அவற்றை எதிர்க்கவல்ல நியாயவான் விஜயகாந்த் என்று மக்களிடம் இருந்த உள்ளுணர்வு தான். நடிப்புத் துறையில் விஜயகாந்தை விட பன்முகச் சிறப்புடையவர் என்று பேரெடுத்த கமல் ஹாசன் முயன்றிருந்தாலும் அன்று இந்தச் சாதனையைச் செய்திருக்க முடியாது. இனிமேல் கமல் ஹாசனால் அப்படி முயற்சிக்க நினைக்கவும் முடியாது. நடிகர் என்பதையும் தாண்டி விஜயகாந்த் நியாயத்தின் முகமாக  மக்களுக்குத் தோன்றினார், அது விஜயகாந்தின் சிறப்பு என்பதை இந்த ஒப்பீடு உணர்த்தும்.  

 

தமிழக அரசியலில் ஊறி இருக்கும் அநியாயத்தை எதிர்த்துப் போரிடும் நியாயத்தின் முகம்  – அது இப்போது யாரிடம் இருந்தாலும் – நீண்ட காலம் பிரகாசமாக ஒளிரவேண்டும்.  அந்த முகம் தெளிவாக, தீட்சண்யமாக, நேர்மையாக இருந்தால் சாதாரண மக்கள் நிச்சயம் அடையாளம்  கண்டு வரவேற்பார்கள். பார்க்கிறோம் அல்லவா?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Thursday 21 December 2023

ஒன்றிய அரசென்று கொட்டு முரசே!

  

    -- ஆர். வி. ஆர்



தேசிய சிந்தனையில் ஒன்றாத கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.   ஒரு விஷயம் அதற்கு உதாரணம்.

 

நமது அரசியல் சட்டத்தில், “India, that is Bharat, shall be a Union of States” என்று இருக்கிறது. சட்டத்திலும் நடைமுறையிலும் இதன் பொருள் விரிவானது.

 

‘மத்திய அரசு’ என்று அனைவரும் அழைத்து வருவதை ‘ஒன்றிய அரசு’ என்று குயுக்தியாகச் சொல்கிறது திமுக - அரசியல் சட்டத்தில் ‘Union’ என்று இருப்பதைப் பிடித்துக் கொண்டு.பாத்துக்க! நான் வேற மாதிரி. நான் இல்லாம நீ இல்லை!” என்று மத்திய அரசிடம் மறைமுகமாக, ஒரு சண்டைக்கார சினிமா ஹீரோ மாதிரி, சவால் விடும் தொனி இதில் தெரிகிறது. அதே சமயம், அரசியல் சட்டம் இந்தியாவை ‘பாரதம்’ என்று தெளிவாகக் குறிப்பிடும் அந்தச் சொல்லை உச்சரிக்கவே திமுக கூச்சப் படுகிறது. காரணம்: ‘பாரதம்’ என்ற சொல்லில் தேசியம் இருக்கிறது!

 

சரி, தற்போதய மத்திய அரசு ‘ஒன்றிய அரசு’தான் என்று நாமும் இப்படிப் பார்க்கலாம். 


 


நன்றென்று கொட்டு முரசே! – தேச

நலம் காக்கும் மோடி அரசாம்.

உலகம் வியக்கும் தலைவர் – அவர்

வாக்கில் செயலில் வித்தகர்.

 


நாட்டினர் மனதிலொன்றி – இந்த

நானிலத்தின் மேன்மையில் ஒன்றி

சனாதன தர்மத்தில் ஒன்றி – நல்

ஆட்சியில் ஒன்றியவர் மோடி.

 


அன்னாரின் பண்புகளெல்லாம் – அவர்

அரசிலும் ஒன்றி விட்டதே.

‘ஒன்றிய அரசு’ என்றால் – அது

பல்வகைப் பொருத்தமன்றோ!

 


வாழ்கவென்று கொட்டு முரசே!

வளர் மோடி அரசைப் போற்றி.

ஒன்றிய அரசு இதுவென்று

ஓங்கி உரக்கக் கொட்டு முரசே!

 


Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Sunday 10 December 2023

வீசிய புயல் பேசிய சொற்கள்

   -- ஆர். வி. ஆர்



‘மிக்ஜாம்’ புயலால் மழையும் வெள்ளமும் சென்னையைத் தாக்கி சேதம் செய்தன. அப்போது சாலையில் கழிவுநீர் கலந்து தேங்கிய தண்ணீரை அருந்தி பசியில் அலைந்தது ஒரு தெருநாய். சில மணிகள் முன் வாகனம் ஏறி இறந்த ஒரு சிறிய ஆமை அந்த நாய்க்கு உணவான நேரத்தில் எடுக்கப்பட்ட படமும், அந்தக் காட்சி உருவாக்கிய வரிகளும் இவை. 

 

 


பாழ்பட்ட வீதியும் பாரா மனிதரும்

கழிவுநீரும் மரித்த ஆமையும்

இவை நான்கும் சேர்த்து

சென்னையிலுனக்கு நான் தருவேன்


நன்றிவிழி முகத்துத் தெருநாய்ப் பிறவியே

என்றும் நீ மாந்தர்க்கு விசுவாசம் தா!

 

    07.12.2023

Author: R. Veera Raghavan, Advocate, Chennai 



Monday 4 December 2023

அமலாக்கத் துறை அதிகாரி கைது. பின்னணியில் மர்மம் இருக்கிறதா?

           -- ஆர். வி. ஆர்

 

      ஒரு விஷயத்தின் பின்னணியில் மர்மம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?


     அந்த விஷயத்தைப் பற்றி மேலாகப் பார்க்கும்போது ஒன்று பெரிதாகத் தெரிகிறது, ஆனால் அதை ஆராய்ந்தால் வேறு முக்கிய அம்சங்கள், கசப்பான உண்மைகள் புலப்படும் என்று அர்த்தம். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரையில் மத்திய அரசின் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை இப்போது கைது செய்திருப்பதும் அப்படியான விஷயம்.  அதன் பின்னணியில் மர்மம் இருக்கிறது.


          பத்திரிகைகளில், டிவி-யில், வந்திருக்கும் செய்தி இது.

                      

மதுரையில் உள்ள ஒரு அமலாக்கத் துறை அதிகாரி திண்டுக்கல் டாக்டர் ஒருவரை மிரட்டி, அவர் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடராமல் இருக்க முதல் தவணையாக இருபது லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றார்.  இரண்டாவது தவணையாக, லஞ்சப் பணமான இன்னொரு இருபது லட்ச ரூபாயை அந்த அதிகாரி தனது காரின் டிக்கியில் வைக்கச் சொல்லி பெற்றுக்கொண்டு காரைக் கிளப்பிய பின், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரைத் தங்கள் காரில் தொடர்ந்தனர். வழியில் அந்த அதிகாரியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அவர் காரிலிருந்த லஞ்சப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த அதிகாரியின் அலுவலக அறையைச் சோதனை செய்து அவரையும் கைது செய்தனர்.  

 

இந்தச் செய்தியை அறிந்த ஒருவர் மேலாக இப்படி நினைக்கலாம்: ‘மத்திய அரசின் சக்திவாய்ந்த அமலாக்கத் துறை அதிகாரி என்றும் பார்க்காமல், அவர் மீதான லஞ்சப் புகாரில் உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் திறமையும் கடமை உணர்ச்சியும் அபாரமானது.’

 

அங்கித் திவாரியின் மீது வந்திருக்கும் லஞ்சப் புகாரின் உண்மைத் தன்மை பற்றி இப்போது நமக்கு முழுதாகத் தெரியாது. கோர்ட்டு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கட்டும். அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆனால் அவர் கடுமையாக தண்டிக்கப் படவேண்டியவர்.  சரி, உற்றுப் பார்த்தால்  இந்த விஷயத்தில் நமக்கு விளங்குகிற மர்மம் எது?

 

          தமிழக அரசின் மிக உயர் பதவியில் இருக்கும் ஒரு முக்கிய நபரின் முன் அனுமதி இல்லாமல் இந்தக் கைது நடவடிக்கை வந்திருக்காது. ஏனென்றால் அமலாக்கத் துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்து, அதனால் மாநில அமைச்சரவையே ஜன்னி கண்டிருக்கிறது. அவர் சுப்ரீம் கோர்ட் சென்றும் பெயில் கிடைக்காமல் இன்னும் ஜெயிலில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்றும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருக்கிறார், பாசத்துடன் இன்னும் அவரை அமைச்சராக வைத்திருக்கிறார்.

 

தமிழகத்தின் மற்ற மந்திரிகள் ஒன்றிரண்டு பேராவது அமலாக்கத் துறையால் கைதாகலாமோ, தண்டிக்கப்படலாமோ என்பதாக அவர்களின் செயல்பாடுகள் தெரிகின்றன. முதல் அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினரின் கதி, மற்ற சில அமைச்சர்களின் கதியோடு பின்னிப் பிணைந்தும் இருக்கலாம்.

 

தூய நிர்வாகத்திலும் அரசு கஜானாவைக் காப்பதிலும் திமுக-வின் சாதனைகள் சொல்ல முடியாதவை. முழுதாகக் கண்டுபிடிக்க முடியாதவையும் கூட.

 

இத்தகைய கட்சி நடத்தும் ஒரு மாநில அரசு, தங்கள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அமலாக்கத் துறையைச் சார்ந்த ஒரு அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையை எடுத்து அவரைக் கைது செய்து, அந்தத் துறை அலுவலகத்திற்குள் 35 பேர்களை அனுப்பி  ஆய்வு செய்து, தனது நடவடிக்கைகளை நன்றாக பகிரங்கப் படுத்தவும் செய்தால் நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?

 

   பொதுமக்களுக்குத்  திமுக  இதைத்தான் சொல்ல வருகிறது: ‘திண்டுக்கல் டாக்டரை அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் மிரட்டி லஞ்சம் வாங்கிய மாதிரித்தான், அதே ரீதியில்தான்,  மத்திய பாஜக அரசானது அமலாக்கத்துறை மூலமாக திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கிறது. அதன் மூலமாக திமுக-வை அடக்கி ஒடுக்கி வைத்துத் தமிழகத்தில் பாஜக வளரப் பார்க்கிறது.‘

 

ஆனால் உண்மை என்ன? அமலாக்கத் துறை திமுக முக்கியஸ்தர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கிறது, அவை பெரிய குடும்பத்தை நெருங்கும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்குத் தங்கள் மீதான சந்தேகம் குறைய அந்தக் கட்சி உத்தமர் வேஷம் போட விரும்புகிறது. பின்னால் வழக்கு எப்படிப் போனாலும், இப்போதைக்கு அந்த உத்தமர் வேஷம் அன்றாட அரசியலிலும் வருகின்ற தேர்தல்களிலும் உதவும்.  அந்த வேஷத்திற்கான ஒட்டு மீசை, ஒட்டு தாடியாக, திண்டுக்கல் டாக்டர் புகாரில் சிக்கிய அமலாக்கத் துறை அதிகாரி கிடைத்திருக்கிறார். பிறகு என்ன? கிடத்த தாடி மீசையை ஒட்டியபடி வேஷம் போட்டுக் கொண்டது திமுக. விஷயத்தை உற்றுப் பார்த்தால் தெளிவாகும் மர்மம் இது தானே?

 

இன்னொன்றையும் நாம் மறக்கக் கூடாது. அந்த அமலாக்கத்துறை அதிகாரி உண்மையிலேயே லஞ்சம் பெற்றிருந்தால், அது வெளி வந்துதான் ஆகவேண்டும், அவர் நீதிமன்றத்தால் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும். அந்த நிலையில், அது திமுக செய்த நல்ல காரியம் என்றாகும்.  

 

இந்திரா காந்தியின் மத்திய அரசு, நெருக்கடி நிலையை அமல் செய்தது. அந்த சமயத்தில் அவர் 42-வது அரசியல் சட்ட திருத்தம் செய்து, கல்வி என்ற பொருளை மாநிலங்கள் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அது இன்றும் நிலைக்கிறது. அந்த அரசியல் சட்ட திருத்தத்தின் நோக்கம் இந்திரா காந்திக்கு என்னவாக இருந்தாலும், அது தேசத்திற்கும் மாணவர்களுக்கும் இன்றைய மத்திய அரசால் நல்ல முறையில் பிரயோகிக்கப் படுகிறது. ஆனாலும் இந்திரா காந்தி, இந்திரா காந்திதான், அவர் ஜனநாயக விரோதிதான். அதுபோல் தான் திமுக-வும் அதன் தனிக் குணங்களும். அவற்றை வேஷம் போட்டு மறைக்க முடியாதே? மர்மமாக வைக்க முடியாதே?    

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai