Monday, 4 December 2023

அமலாக்கத் துறை அதிகாரி கைது. பின்னணியில் மர்மம் இருக்கிறதா?

           -- ஆர். வி. ஆர்

 

      ஒரு விஷயத்தின் பின்னணியில் மர்மம் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?


     அந்த விஷயத்தைப் பற்றி மேலாகப் பார்க்கும்போது ஒன்று பெரிதாகத் தெரிகிறது, ஆனால் அதை ஆராய்ந்தால் வேறு முக்கிய அம்சங்கள், கசப்பான உண்மைகள் புலப்படும் என்று அர்த்தம். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரையில் மத்திய அரசின் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை இப்போது கைது செய்திருப்பதும் அப்படியான விஷயம்.  அதன் பின்னணியில் மர்மம் இருக்கிறது.


          பத்திரிகைகளில், டிவி-யில், வந்திருக்கும் செய்தி இது.

                      

மதுரையில் உள்ள ஒரு அமலாக்கத் துறை அதிகாரி திண்டுக்கல் டாக்டர் ஒருவரை மிரட்டி, அவர் மீது அமலாக்கத் துறை வழக்குத் தொடராமல் இருக்க முதல் தவணையாக இருபது லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றார்.  இரண்டாவது தவணையாக, லஞ்சப் பணமான இன்னொரு இருபது லட்ச ரூபாயை அந்த அதிகாரி தனது காரின் டிக்கியில் வைக்கச் சொல்லி பெற்றுக்கொண்டு காரைக் கிளப்பிய பின், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரைத் தங்கள் காரில் தொடர்ந்தனர். வழியில் அந்த அதிகாரியின் வாகனத்தைத் தடுத்து நிறுத்தி அவர் காரிலிருந்த லஞ்சப் பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு அந்த அதிகாரியின் அலுவலக அறையைச் சோதனை செய்து அவரையும் கைது செய்தனர்.  

 

இந்தச் செய்தியை அறிந்த ஒருவர் மேலாக இப்படி நினைக்கலாம்: ‘மத்திய அரசின் சக்திவாய்ந்த அமலாக்கத் துறை அதிகாரி என்றும் பார்க்காமல், அவர் மீதான லஞ்சப் புகாரில் உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் திறமையும் கடமை உணர்ச்சியும் அபாரமானது.’

 

அங்கித் திவாரியின் மீது வந்திருக்கும் லஞ்சப் புகாரின் உண்மைத் தன்மை பற்றி இப்போது நமக்கு முழுதாகத் தெரியாது. கோர்ட்டு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கட்டும். அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆனால் அவர் கடுமையாக தண்டிக்கப் படவேண்டியவர்.  சரி, உற்றுப் பார்த்தால்  இந்த விஷயத்தில் நமக்கு விளங்குகிற மர்மம் எது?

 

          தமிழக அரசின் மிக உயர் பதவியில் இருக்கும் ஒரு முக்கிய நபரின் முன் அனுமதி இல்லாமல் இந்தக் கைது நடவடிக்கை வந்திருக்காது. ஏனென்றால் அமலாக்கத் துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்து, அதனால் மாநில அமைச்சரவையே ஜன்னி கண்டிருக்கிறது. அவர் சுப்ரீம் கோர்ட் சென்றும் பெயில் கிடைக்காமல் இன்னும் ஜெயிலில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் இன்றும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருக்கிறார், பாசத்துடன் இன்னும் அவரை அமைச்சராக வைத்திருக்கிறார்.

 

தமிழகத்தின் மற்ற மந்திரிகள் ஒன்றிரண்டு பேராவது அமலாக்கத் துறையால் கைதாகலாமோ, தண்டிக்கப்படலாமோ என்பதாக அவர்களின் செயல்பாடுகள் தெரிகின்றன. முதல் அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினரின் கதி, மற்ற சில அமைச்சர்களின் கதியோடு பின்னிப் பிணைந்தும் இருக்கலாம்.

 

தூய நிர்வாகத்திலும் அரசு கஜானாவைக் காப்பதிலும் திமுக-வின் சாதனைகள் சொல்ல முடியாதவை. முழுதாகக் கண்டுபிடிக்க முடியாதவையும் கூட.

 

இத்தகைய கட்சி நடத்தும் ஒரு மாநில அரசு, தங்கள் அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வரும் அமலாக்கத் துறையைச் சார்ந்த ஒரு அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையை எடுத்து அவரைக் கைது செய்து, அந்தத் துறை அலுவலகத்திற்குள் 35 பேர்களை அனுப்பி  ஆய்வு செய்து, தனது நடவடிக்கைகளை நன்றாக பகிரங்கப் படுத்தவும் செய்தால் நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?

 

   பொதுமக்களுக்குத்  திமுக  இதைத்தான் சொல்ல வருகிறது: ‘திண்டுக்கல் டாக்டரை அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் மிரட்டி லஞ்சம் வாங்கிய மாதிரித்தான், அதே ரீதியில்தான்,  மத்திய பாஜக அரசானது அமலாக்கத்துறை மூலமாக திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கிறது. அதன் மூலமாக திமுக-வை அடக்கி ஒடுக்கி வைத்துத் தமிழகத்தில் பாஜக வளரப் பார்க்கிறது.‘

 

ஆனால் உண்மை என்ன? அமலாக்கத் துறை திமுக முக்கியஸ்தர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கிறது, அவை பெரிய குடும்பத்தை நெருங்கும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களுக்குத் தங்கள் மீதான சந்தேகம் குறைய அந்தக் கட்சி உத்தமர் வேஷம் போட விரும்புகிறது. பின்னால் வழக்கு எப்படிப் போனாலும், இப்போதைக்கு அந்த உத்தமர் வேஷம் அன்றாட அரசியலிலும் வருகின்ற தேர்தல்களிலும் உதவும்.  அந்த வேஷத்திற்கான ஒட்டு மீசை, ஒட்டு தாடியாக, திண்டுக்கல் டாக்டர் புகாரில் சிக்கிய அமலாக்கத் துறை அதிகாரி கிடைத்திருக்கிறார். பிறகு என்ன? கிடத்த தாடி மீசையை ஒட்டியபடி வேஷம் போட்டுக் கொண்டது திமுக. விஷயத்தை உற்றுப் பார்த்தால் தெளிவாகும் மர்மம் இது தானே?

 

இன்னொன்றையும் நாம் மறக்கக் கூடாது. அந்த அமலாக்கத்துறை அதிகாரி உண்மையிலேயே லஞ்சம் பெற்றிருந்தால், அது வெளி வந்துதான் ஆகவேண்டும், அவர் நீதிமன்றத்தால் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும். அந்த நிலையில், அது திமுக செய்த நல்ல காரியம் என்றாகும்.  

 

இந்திரா காந்தியின் மத்திய அரசு, நெருக்கடி நிலையை அமல் செய்தது. அந்த சமயத்தில் அவர் 42-வது அரசியல் சட்ட திருத்தம் செய்து, கல்வி என்ற பொருளை மாநிலங்கள் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அது இன்றும் நிலைக்கிறது. அந்த அரசியல் சட்ட திருத்தத்தின் நோக்கம் இந்திரா காந்திக்கு என்னவாக இருந்தாலும், அது தேசத்திற்கும் மாணவர்களுக்கும் இன்றைய மத்திய அரசால் நல்ல முறையில் பிரயோகிக்கப் படுகிறது. ஆனாலும் இந்திரா காந்தி, இந்திரா காந்திதான், அவர் ஜனநாயக விரோதிதான். அதுபோல் தான் திமுக-வும் அதன் தனிக் குணங்களும். அவற்றை வேஷம் போட்டு மறைக்க முடியாதே? மர்மமாக வைக்க முடியாதே?    

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

3 comments:

  1. Very well written. Brings out all facts objectively.

    Chittanandam

    ReplyDelete
  2. This is for the administration to enquire and establish the findings. Both centre and state should put their defence properly. This is for yue courts to decide. Your views are personal and may not justify the facts.

    ReplyDelete
  3. Nice. You could hv gone further deep

    ReplyDelete