Sunday, 26 July 2026

கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

 

-- ஆர். வி. ஆர்

 

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.

 

2026 இளநிலை மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்னரே அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டது என்பதை மத்திய அரசு பின்னர் அறிந்தது. அந்தத் தேர்வு உடனே ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியாகி மருத்துவச் சேர்க்கைகள் நடக்கப் போகின்றன. பிறகென்ன என்றால் – இருக்கிறது.

 

முதலில் நடந்த தேர்வின் வினாத்தாள் கசிந்தது என்பதால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு முன்னணியில் நின்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 37 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியது. முதலில் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், இறுதியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஜந்தர் மந்தர் போராட்டமும் வாபஸ் ஆகிவிட்டது.

 

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

 

விவேகம் என்றால் என்ன? ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் மாட்டிக் கொண்டால் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு மேலும் சங்கடம் தரும் முடிவை எடுக்காமல், ஒரு பாதுகாப்பான முடிவை எடுத்து அந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கு விவேகம் என்று அர்த்தம். அதன் பெயர் தோல்வி அல்ல. அது உங்களுக்கான வெற்றி – மற்றவர்களுக்கு எப்படி இருந்தாலும்.

 

நீட் வினாத்தாள் கசிந்ததற்கு தர்மேந்திர பிரதான் ஒரு நேரடியான காரணம், அவர் தன்னுடைய அல்லது தனக்கு வேண்டியவர்களின் லாபத்திற்காக உடந்தையாக இருந்து அந்த வினாத்தாள் கசிய உதவினார் என்பது உண்மையானால், ஒரு அகப்பட்ட குற்றவாளியாக அவர் ராஜினாமா செய்யவேண்டும்; மறுத்தால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் விடுவிக்க வேண்டும். அப்படியான குற்றச்சாட்டு தர்மேந்திர பிரதான் மீது இல்லை, அதற்கான சாட்சியம் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. பிறகு ஏன் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும், அது ஏன் மத்திய அரசின் விவேகம் என்றாகும்?

 

டெல்லி போராட்டக்களப் பகுதியில் குவிந்தவர்களில் அநேகர் மாணவர்களாகத் தெரியவில்லை. அவர்களில் வெகுசிலர்  மாணவர்களாக இருக்கலாம். கரப்பான்பூச்சியினர் இருந்தார்கள். அதோடு, மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு அது லட்டு மாதிரியான வாய்ப்பு என்பதால்  காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், இன்னும் சில கட்சியினர் அங்கு திரண்டிருந்தனர்.

 

ஜந்தர் மந்தரில் போராட வந்தவர்கள் கைகட்டி வாய்பொத்தி காந்திய வழியில் போராடுபவர்கள் அல்ல. அதோடு, பொதுவெளியில் கூட்டம் எங்கு எதற்காகக் கூடினாலும் வந்து சேரும் சமூக விரோதிகளும் அங்கு கலந்திருப்பார்கள். இந்தியாவை வீழ்த்த நினைக்கும் வெளிநாட்டு சக்திகள் அந்தக்கூட்டத்தில் சிலரை அனுப்பி வைத்திருக்கலாம். வேடிக்கை பார்க்கச் சில அப்பாவி மக்களும் அங்கு வந்திருப்பார்கள். அந்த எல்லா மனிதர்களிலும் யார் யாரை என்ன செய்யத் தூண்டுவார்கள், எப்போது என்ன உயிர்ச்சேதம் அல்லது விபரீதம் அவர்களாலேயே ஏற்படுத்தப் படும் அல்லது தூண்டப்படும் என்பதைக் கணிக்க முடியாது. போராட்டக்களமும் டெல்லியில், நமது தலைநகரில், அகில இந்தியாவின் கவனத்தைப் பெறுகின்றதாக இருந்தது.  

 

ஒரு தீக்குளிப்பு, ஒரு கொலை, பெரிய கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூடு என்று  போராட்டக் களத்தில் ஏற்பட்டால் என்ன ஆகும்? அது கரப்பான்பூச்சிகளால், எதிர்க் கட்சிகளால், மீடியாவால், ஊதிப் பெரிதாக்கப்படும். அது சாதாரண இந்திய மக்களைப் பாதித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்களைத் திருப்பும். காரணம், சாதாரண இந்திய மக்கள் அறிவைவிட உணர்ச்சிகளால் அதிகம் உந்தப் படுகிறார்கள். ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களை விடவும், அது தொடர்பான கூக்குரல், களேபரம், அடிதடி, ரத்தம், உயிரிழப்பு, ஆகியவை அவர்களை அதிகம் பாதிக்கும், அதன்படி அவர்கள் பெரிதும் வழி நடத்தப்படுவார்கள். இந்த விளைவுகள் ஏற்பட அனுமதித்து, ஒரு கல்வி அமைச்சரின் பதவியைத் தக்கவைத்து, வரப்போகும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் – அடுத்த எட்டு மாதங்களில் உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் வருகின்றன – பாஜக கூட்டணி தனது வெற்றி வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. பத்து ரூபாய் நஷ்டத்தை ஏற்கச் சம்மதிக்காமல், நூறு ரூபாய் இழப்பை பாஜக வரவழைக்கக் கூடாது. 


கூட்டிக் கழித்துப் பார்த்தால், மத்திய அரசு தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டது, அவரும் ஒரு பெரிய நன்மைக்காக அதற்கு உடன்பட்டது, மத்திய அரசின் தோல்வி அல்ல. அது மத்திய அரசின், பாஜக-வின், விவேகமான காரியம்.

 

இன்னொன்று. ஜந்தர் மந்தர் போராட்டம் ஜனநாயகத்தின் வெற்றி என்று சொல்வதும் சரியல்ல. மெஜாரிட்டி மக்களின் தீர்ப்பு, அல்லது அம்மக்களின் விருப்பம், என்பதுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து மறுதேர்வு நடந்த சில நாட்களில் லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது கரப்பான்பூச்சி கட்சியோ மற்ற எதிர்க்கட்சிகளோ அந்த வினாத்தாள் கசிவு பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மக்களிடம் பிரசாரம் செய்து அந்த லோக் சபா தேர்தலில் வென்றிருக்க முடியுமா? இல்லை, அது நடந்திருக்காது, என்பது ஒரு நல்ல அனுமானம். கரப்பான்பூச்சி கட்சியின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்பது கண்சிமிட்டிச் சொல்லும் கருத்து. இருந்தாலும், கல்வி மற்றும் கல்வித்தரம் தொடர்பாக மேலும் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு இனி நினைத்துப் பார்ப்பது சற்று எளிதாகும்.

 

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது யாருக்காவது பெரிய இழப்பு, எதிர்பாராத தோல்வி, என்றால் அது லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குத்தான். போராட்டம் நீடித்து அதில் ஏதாவது நிகழ்ந்து, அதனால் மக்கள் மத்தியில் பாஜக பெரிய பின்னடைவைச் சந்திக்கும், அதன் விளைவாக நாம் மக்களிடையே அதிக வெளிச்சம் பெறலாம் என்று நினைத்த ஒருவரின் எண்ணத்தில் மண் விழுந்தால், அதை அவர் தன்னளவில் எப்படி எடுத்துக் கொள்வார்? மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றா, அல்லது தனது நப்பாசைக்குக் கிடைத்த தோல்வி என்றா?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Friday, 24 July 2026

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்

 

-- ஆர். வி. ஆர்

 

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

 

இந்த 2026-ல் மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தவுடன், நீட் வினாத்தாள் முன்னதாகவே கசிந்தது என்று தேசியத் தேர்வு முகமை கண்டறிந்தது. உடனே அது பற்றி மத்தியக் கல்வி அமைச்சகம் புகாரளித்து சி.பி.ஐ வழக்குப் பதிந்தது.  நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்தது. மறுதேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடக்கப் போகிறது.

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னணியில் நின்று, மற்ற சில அமைப்புகளும் இணைந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வீதிப் போராட்டம் நடத்துகின்றன. அவற்றின் கோரிக்கை: வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் அவரோ பிரதமர் மோடியா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.  பின்னாளில் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று நமக்குத் தெரியாது.

 

நீட் வினாத்தாள் கசிவைப் புலன்விசாரணை செய்யும் சி.பி.ஐ, 13 நபர்களைக் கைது செய்திருக்கிறது. வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த ஒரு கெமிஸ்ட்ரி புரொபசர் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு வினாத்தாளைக் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது. அதாவது, வினாத்தாள் கசிவு லஞ்சத்திற்காக நடைபெற்றது என்பது புலன்விசாரணையில் தெரியவருகிறது. வழக்கு நடக்கும். 

 

இப்போது போராட்டத்திற்கு வருவோம். போராட்டக்காரர்கள் மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? இது புரிவதற்கு, நாம் சில அடிப்படை விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

 

இந்தியாவில் லஞ்ச ஊழல் ஒரு வாழ்க்கை முறை என்றாகி விட்டது. அரசு உயர் மட்டத்தில் லஞ்ச ஊழல் பலப்பல வருடங்களாகப் பரவி விட்டது.  அதன் விளைவாக, கீழ் மட்டத்தில் லஞ்ச ஊழல் நர்த்தனம் ஆடுகிறது.

 

லஞ்சம் தருகிறவர்கள் இருவகை. ஒன்று, லஞ்சம் கொடுத்துத் தாங்கள் நேர்வழியில் பெறமுடியாத சலுகைகளையும் பலன்களையும் பெற்று அதன்மூலம் தாங்கள் அளித்த லஞ்சப் பணத்தைவிட அதிகப் பயன் அடைகிறவர்கள். நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் கொடுத்தவர்கள் இந்த வகை.

 

இன்னொரு வகையினர், அரசு அளிக்கும் சேவைகள் மற்றும் பலன்களைப் பெறுவதற்காக லஞ்சம் தரும் கட்டாயத்துக்கு உள்ளாகிப் பணம் இழக்கிறவர்கள். உதாரணம்: பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறையாக ஒரு விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக, லஞ்சம் கொடுக்க வேண்டிய பொதுமக்கள்.

 

இந்தியாவில் மத்தியிலோ ஒரு மாநிலத்திலோ, எந்த அரசு இருந்தாலும் முறைகேடான பயன்களுக்காக லஞ்சம் தருபவர்களும், அதிக வருமானத்திற்காக லஞ்சம் வாங்கும் அரசுத்துறை மனிதர்களும் கைகோர்ப்பது அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும். இதற்குக் காரணம், இரு பக்கத்திலுமான ஒழுக்கக் குறைவு. ஒரு நேரான அரசு கவனிப்பாக இருந்து அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அவற்றை முற்றிலும் ஒழிக்க முடியாது. காரணம்: தனிமனித மனங்களில் உள்ள ஒழுக்கக் குறைவை ஒரேயடியாக எந்த அரசும் களைய முடியாது. அந்த மனிதர்கள் அரசுக் காரியங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டும்போது, ஒரு பொறுப்பான அரசு அவர்களைப் பிடித்து வழக்கு நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரலாம், அவர்கள் எதிர்பார்த்திராத சமூக அவமானத்தை அவர்களுக்குத் தரலாம் - அதன் மூலம் பின்னர் அதே குற்றத்தைச் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த முனையலாம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

 

சரி, தொன்றுதொட்ட நாளிலிருந்து இந்தியா தனிமனித ஒழுக்கக் குறைவுள்ள சமூகமா? இல்லை. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் இதிகாசங்களையும் புராணங்களையும் போதனைகளையும் கொண்ட நாடு இந்தியா. அந்நியர்கள் ஆட்சியின்போது, அவர்களது ஆட்சியே அக்கிரமம், அநியாயம் என்றிருந்து அதனால் இந்தியப் பொதுவாழ்வில் ஒழுக்கக் குறைவு துளிர்த்துப் பரவியது.  அதில் அகப்பட்டவர்கள் அதிகம், தப்பித்தவர்கள் குறைவு.

 

மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், அதை வழி நடத்துபவர்கள், அதை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுவாழ்வுப் பிரபலங்கள் ஆகியோருக்கு, ஒரு அடிப்படை விஷயம் புரியாதா? அதாவது, நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் துளியும் காரணமல்ல; அதற்குக் காரணம் நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட சிலரும், தேர்வுக்கு முன்னதாக அந்த வினாத்தாளை அறிய முற்பட்ட சில மாணவர்களும், அவர்கள் அனைவரிடம் இருந்த ஒழுக்கக் குறைவும் என்ற அடிப்படை விஷயம் புரியாதா?

 

புரியும். நன்றாகப் புரியும். இருந்தாலும் போராட்டத்தை நடத்துபவர்கள், அவர்களோடு இணையும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்களிடம் ஒரு குறை இருப்பதால் அவர்கள் தங்களின் அநியாயச் செயலில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அந்தக் குறை: அவர்களிடமும் உள்ள ஒழுக்கக் குறைவு – ஒரு பேருக்காக, வெளிச்சமும் விளம்பரமும் கிடைப்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, உண்மையை ஏற்க மறுக்கும் ஒழுக்கக் குறைவு.  அந்த ஒழுக்கக் குறைவையும் அரசால் நீக்க முடியாது.

 

இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யலாம்?

 

ஒழுக்கக் குறைவான நோக்கத்துடன் வீதியில்  போராட்டம் நடத்துகின்ற, ஒழுக்கக் குறைவுடன் அதற்கு ஆதரவு தருகின்ற, மனிதர்களின் செயல், நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் வாங்குவது மாதிரியான பெரிய குற்றம் அல்ல. தெருக்களில் இறங்கி அவர்கள் செய்யவிருந்த போராட்டத்தை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், மத்திய அரசுக்கு மக்கள் மத்தியிலும் கோர்ட்டுகள் பார்வையிலும் கெட்ட பெயர் ஏற்படலாம்  – ஏதோ நீட் வினாத்தாள் கசிய விட்டவர்களுக்கு  ஆதரவாக மத்திய அரசு நடப்பதாகப் பொதுவெளியில் ஒரு தோற்றம் ஏற்படலாம். அதனால் எதிர்க் கட்சிகளின் கையும் ஓங்கலாம். யார் கண்டது, இந்தியாவுக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகளும் வலிமை பெறலாம். ஆகவே போராட்டத்தை அரசு கடுமையாகக் கையாளாமல் இருந்தது விவேகம் மிக்கது.

 

போராட்டம் தொடர்பான மனிதர்கள் தங்களை, தங்களின் போலி அக்கறையை, மேலும் மேலும் வெளிக்காட்டிக் கொள்ளச் செய்து, பொதுவெளியில் அவர்கள் செய்யத் துடிக்கும் அராஜகங்களையும் சிறிய அளவில் அனுமதித்து, மதியூகமாகவும் பொறுமையாகவும் அவர்களை அம்பலப்படுத்தி வலுவிழக்கச் செய்வதுதான் மத்திய அரசு செய்யத் தகுந்தது.  அதை மத்திய அரசு செய்து வருகிறது. அதைச் செய்வதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமர்த்தர்கள் அல்லவா?  

 

* * * * *


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Wednesday, 22 July 2026

கேள்வி-பதில் (22.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று ஒரு திமுக எம்.எல்.ஏ பொதுவெளியில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தொடக்கத்திலிருந்தே திமுக தலைமை இரட்டை அர்த்த வசனங்கள் பேசியதுண்டு; ஹிந்து மதத்தை இழித்துப் பேசியதுண்டு. இவை இரண்டுமே வரம்பு மீறியவை. ஒரு கட்சியின் தலைமை இவ்வாறு வரம்பு மீறினால், கீழ்மட்டத் தலைவர்களும் நிர்வாகிகளும் அதே வகையில் வரம்பு மீறுவார்கள்; அதற்கு மேல், வன்முறைப் பேச்சு, வன்முறைச் செயல்கள் போன்ற வரம்பு மீறல்களிலும் ஈடுபடுவார்கள் - இதுகுறித்து கட்சிக்குள் என்ன பேச்சு நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

 

 

2. கேள்வி: "தமிழ்நாட்டில் காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் லஞ்சம் என்பதே கிடையாது. புதிதாகப் பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும் லஞ்சத்தைத் தவிர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் மீண்டும் லஞ்சம் தவிர்த்த ஆட்சியாக அடுத்த ஐந்தாண்டுகள் இருக்க வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது அக்கட்சி தலைமை தாங்கிய கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. அப்போது, லஞ்சம் தவிர்த்த காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூர்ந்து அதைப்போல் திமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்று ப. சிதம்பரம் பேசியதில்லை. அவ்வாறு பேசாமல் இருந்தால் திமுக-வுக்கு சங்கடம் வராது, தனக்கும் வசதியானது, என்று சிதம்பரத்திற்குப் புரிந்தது. அடுத்ததாக, 2026 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமையாமல் இருக்கவும், முன்பிருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரவும் சிதம்பரம் தன்னாலான முயற்சிகள் செய்து வெற்றி பெற்றார். திமுக தோற்று தவெக ஆட்சி அமைத்து, லஞ்சத்திற்கு எதிராகத் தவெக முதலமைச்சர் குரல் கொடுக்கவும் சிதம்பரத்திற்குச் சட்டென்று காமராஜர் ஆட்சி நினைவுக்கு வருகிறது.

 

பிழைக்கத் தெரிந்த மனதிற்குப் பேசாமல் இருக்கத் தெரியும், பேசவும் தெரியும்.

 

 

3. கேள்வி: அரசு வேலைகளுக்காக லஞ்சம் பெறப்படுவதை முதலமைச்சர் விஜய் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். இதனால் லஞ்சம் வாங்கும் அரசுப் பணியாளர்கள் விஜய் மீது அதிருப்தி கொள்வார்களா, அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

 

பதில்: அமைச்சர்கள் மட்டத்தில் லஞ்சம் இல்லை என்றால், லஞ்சம் வாங்கும் பெருவாரியான பிற அரசுப் பணியாளர்கள் மத்தியில் லஞ்சம் மெள்ள மெள்ள நன்றாகக் குறையும் - முற்றிலும் நீங்காது என்றாலும்.  ஆகவே அமைச்சர்களை, அதுவும் ஒரு சில துடிப்பான அமைச்சர்களை, விஜய் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.

 

என்ன இருந்தாலும், வேறு ஒன்றிரண்டு கட்சிகளின் ஆட்சி வராதா என்று பல லஞ்சப் பேர்வழிகள் உள்ளூர ஏங்கலாம். திராவிட மண் கலந்திருப்பதுதான் தமிழ் மண்.

 

 

4. கேள்வி: மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் அண்மையில் கசிந்தது என்பதால், நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இருந்தாலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்காக, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் செய்கிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமானதா?

 

பதில்: நீட் வினாத்தாள் கசிவில் அமைச்சர் நேரடியாக சம்பந்தப் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டோ நிரூபணமோ இல்லை. மத்திய அரசை எப்படியாவது சங்கடப் படுத்தவேண்டும் என்பது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

 

நீட் வினாத்தாள் கசிவைத் திட்டமிட்டு நடத்தியவர்கள், அதனால் பலன் அடைந்தவர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அந்த முயற்சி நடக்கிறது.

 

வினாத்தாள் கசிவுக் குற்றத்தை யாரோ செய்திருந்தாலும் மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்பது நியாயம் இல்லை. அது நியாயம் என்றால், அவரைக் கல்வி அமைச்சராகத் தேர்வு செய்த பிரதமரும் அதே ரீதியில் பழி சுமந்து பதவி விலக வேண்டுமா?

 

நீட் வினாத்தாள் கசிந்தது வெளிப்படை. அது மாணவர்களைப் பாதித்த பெரிய பிரச்சனை என்பதும் வெளிப்படை. ஆனால் அதுகுறித்துப் போராட்டம் நடத்தும் அமைப்பின் உள்நோக்கம் வெளிப்படையாகத் தெரியாது. மத்திய அரசாங்கம் இந்தப் போராட்டத்தைக் கடுமையாக அணுகினால், அரசாங்கம் ஏதோ நீட் வினாத்தாள் கசிவையும் அதைச் செய்தவர்களையும் பாதுகாக்கிற மாதிரித் தோன்றும். அது போராட்டம் செய்யும் தலைவர்களின் உள்நோக்கத்தை மேலும் மறைத்து அவர்களை உன்னதப்படுத்தும். ஆகையால் மத்திய அரசு இந்தப் போராட்டத்தைப் பொறுமையாகக் கையாள்வது அவசியம். அதை மத்திய அரசு செய்கிறது.

 

 

5. கேள்வி: நீட் வினாத்தாள் கசிந்தது என்பதற்காக மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் அமைப்பிற்கு 'கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி' என்றா பேர் வைப்பார்கள்? கேவலமாக இல்லை?

 

பதில்: உங்களுக்கு வாய் இருக்கிறது, நீங்கள் கேட்கலாம். தான் கேவலம் செய்யப்படுவதை வாயில்லாத கரப்பான்பூச்சி யாரிடம் சொல்லி அழும்?

 

பகுதி 115 // 22.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Monday, 20 July 2026

கேள்வி-பதில் (20.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்று ஆட்சியை இழந்தது. அதன் தலைவர் உதயநிதி, "இந்தத் தேர்தலில் நமது எதிரி யார் என்பதை நாம் அடையாளம் காணாமல் போட்டியிட்டோம்" என்று தனது கட்சியின் தவறு குறித்துப் பேசினார். அந்தத் தேர்தலில் இன்னும் மோசமாகத் தோற்ற அதிமுக-வின் தவறு என்ன?

 

பதில்:  தனது கட்சிக்குள்ளேயே பல இரண்டாம் கட்டத் தலைவர்களை எதிரிகளாக்கிக் கொண்டு, கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியிடம் நட்பில்லாமல் போன எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராகக் கொண்டிருந்தது, அதிமுக-வின் முக்கியத் தவறு.

 

 

2. கேள்வி: "2026 தேர்தலில் திமுக தோற்றது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் கூட்டணி ஏன் நிலைக்கவில்லை? திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் அதிவேகமாக வெளியேறி தவெக-வுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு, திமுக-வுடனான உறவு காங்கிரஸுக்கு ஏன் கசந்தது?" என்று விசிக தலைவர் திருமாவளவன் கேட்கிறாரே?

 

பதில்: அரசியல் லாப நோக்கத்தைக் கணித்து அதன்படி கூட்டணிகள் அமைவதும் கலைவதும் திருமாவளவனுக்குத் தெரியும். அப்படித்தான் அவரும் செயல்படுகிறார் - அதிலும் அவர் கட்சி இந்தக் கூட்டணியில் இருக்கிறதா, அந்தக் கூட்டணியில் இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாதபடித் தனது கட்சியின் ஆதாயத்தைப் பேணுவதில் திருமாவளவன் கிங்.

 

 

3. கேள்வி: தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துப் புகார் தெரிவிக்க வசதியாக, வாட்ஸாப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, "ஊழல் புகாரில் சிக்கினால், அமைச்சர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்; தவறு செய்தவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பார்க்க மாட்டேன்" என்று தனது அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாகவும் செய்திகள் வருகின்றனவே?

 

பதில்: "விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழக மக்கள் லஞ்சம் ஊழல் என்றால் என்ன என்பதே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். மாநிலத்தில் இல்லாத லஞ்ச ஊழல் எனும் பூதத்தை விஜய் கற்பனை செய்துகொண்டு, அதை அடக்க நினைப்பது நகைப்புக்குரியது" என்று திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் விஜய்யைக் கண்டித்து அறிக்கை விடவில்லை. லஞ்ச ஊழலுக்கு எதிரான விஜய்யின் அணுகுமுறையை அவர்கள் வரவேற்கவும் இல்லை. திமுக, அதிமுக தலைவர்களுடைய மௌனம் எதையோ உணர்த்துகிறது.

 

 

4. கேள்வி: "என் வாழ்வில் இரு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று, 2006-ல் அதிமுக-வுடன் உடன்பாடு வைத்தது. அப்போது சில மதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்தனர். அந்த நிர்பந்தத்திற்கு நான் உடன் பட்டேன். 2017-ல், பாஜக-வை எதிர்ப்பதற்காகத் திமுக-வுடன்  உடன்பாடு செய்தது பெரும் பிழை. சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேசியபோது, 'நான்கு இடங்கள் தான் உங்கள் கட்சிக்கு; மறு பேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்று, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தி முடிவைத் திணித்தனர்" என்று மதிமுக தலைவர் வைகோ அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: மதிமுக போன்ற சிறிய கட்சி ஒரு கூட்டணியில் சேரும்போது, வாக்காளர்களிடம் அந்தக் கட்சிக்கு உள்ள அரசியல் சக்திக்கு ஏற்பத்தான் கூட்டணிக்குள் அந்தக் கட்சிக்கு மதிப்பும் தொகுதிகளும் கிடைக்கும் - அதன் தலைவர் மேடைகளில் என்னதான் ராஜமுழக்கம் செய்தாலும்.  தனது பழைய கூட்டணிகள் எப்படித் தவறானவை என்று வைகோ வியாக்கியானம் செய்யாமல் இருந்தால் 'அரசியலில் கூட்டணி மாறுவது கட்சிகளிடையே சகஜம்' என்று அனைவரும் வைகோவை சாதாரணமாக நினைத்துப் போய்விடுவார்கள். ஆனால் அவர் விளக்கமும் நியாயமும் சொல்லவந்து பரிதாபமாகக் காட்சி தருகிறார்.

 


5. கேள்வி: அரசியலில் குதிரை பேரம் நடப்பதாகத் தினமும் செய்திகள் வருகின்றன. இது பற்றி விவரிக்கவும்.

 

பதில்: இந்தவகைப் பேரத்தில் குதிரைகளை வாங்குபவர் மட்டுமல்லாமல், விற்பனையாகும் குதிரைகளும் கெட்டிக்காரத்தனம் மிக்கவை. ஆகையால் வாங்குபவர் தவிர, விற்கப்படும் குதிரைகளும் நல்ல பலன் அடைகின்றன.

 

இந்தக் குதிரை பேரத்திற்கு முன்னோடியாக, வழிகாட்டியாக இருப்பது, தேர்தலின்போது நடைபெறும் கன்றுக்குட்டி பேரம். மக்கள்தான் கன்றுக்குட்டிகள் - சற்று வளர்ந்த கன்றுக்குட்டிகள்.

 

கன்றுக்குட்டி பேரத்தில், வாங்குபவர்களுக்கு மட்டும் அமோகமான பயன்கள் கிடைக்கும். தன்னை யார் வாங்குவார் என்று காத்துக் கிடக்கும் அப்பாவி கன்றுக்குட்டிகளுக்கு ஒன்றிரண்டு வாழைப்பழம் மட்டும் கிடைக்கும்.

 

தான் உண்டு, தனக்குக் கிடைக்கும் வாழைப்பழம் உண்டு என்று இருப்பவை கன்றுக்குட்டிகள். குதிரைகள் யார், அவைகளுக்குக் குதிரை பேரத்தில் ஏன் நல்ல பலன்கள் கிட்டுகின்றன என்பதைச் சொல்ல அவசியமில்லை.

 

கன்றுக்குட்டிகளுக்கு, கெட்டிக்காரக் குதிரைகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. குதிரைகளுக்கு, கன்றுக்குட்டிகளின் பாவப்பட்ட நிலை நன்றாகத் தெரியும்.


பகுதி 114 // 20.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com