Wednesday, 22 July 2026

கேள்வி-பதில் (22.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று ஒரு திமுக எம்.எல்.ஏ பொதுவெளியில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தொடக்கத்திலிருந்தே திமுக தலைமை இரட்டை அர்த்த வசனங்கள் பேசியதுண்டு; ஹிந்து மதத்தை இழித்துப் பேசியதுண்டு. இவை இரண்டுமே வரம்பு மீறியவை. ஒரு கட்சியின் தலைமை இவ்வாறு வரம்பு மீறினால், கீழ்மட்டத் தலைவர்களும் நிர்வாகிகளும் அதே வகையில் வரம்பு மீறுவார்கள்; அதற்கு மேல், வன்முறைப் பேச்சு, வன்முறைச் செயல்கள் போன்ற வரம்பு மீறல்களிலும் ஈடுபடுவார்கள் - இதுகுறித்து கட்சிக்குள் என்ன பேச்சு நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

 

 

2. கேள்வி: "தமிழ்நாட்டில் காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் லஞ்சம் என்பதே கிடையாது. புதிதாகப் பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும் லஞ்சத்தைத் தவிர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் மீண்டும் லஞ்சம் தவிர்த்த ஆட்சியாக அடுத்த ஐந்தாண்டுகள் இருக்க வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது அக்கட்சி தலைமை தாங்கிய கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது. அப்போது, லஞ்சம் தவிர்த்த காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூர்ந்து அதைப்போல் திமுக ஆட்சி நடைபெற வேண்டும் என்று ப. சிதம்பரம் பேசியதில்லை. அவ்வாறு பேசாமல் இருந்தால் திமுக-வுக்கு சங்கடம் வராது, தனக்கும் வசதியானது, என்று சிதம்பரத்திற்குப் புரிந்தது. அடுத்ததாக, 2026 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமையாமல் இருக்கவும், முன்பிருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரவும் சிதம்பரம் தன்னாலான முயற்சிகள் செய்து வெற்றி பெற்றார். திமுக தோற்று தவெக ஆட்சி அமைத்து, லஞ்சத்திற்கு எதிராகத் தவெக முதலமைச்சர் குரல் கொடுக்கவும் சிதம்பரத்திற்குச் சட்டென்று காமராஜர் ஆட்சி நினைவுக்கு வருகிறது.

 

பிழைக்கத் தெரிந்த மனதிற்குப் பேசாமல் இருக்கத் தெரியும், பேசவும் தெரியும்.

 

 

3. கேள்வி: அரசு வேலைகளுக்காக லஞ்சம் பெறப்படுவதை முதலமைச்சர் விஜய் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். இதனால் லஞ்சம் வாங்கும் அரசுப் பணியாளர்கள் விஜய் மீது அதிருப்தி கொள்வார்களா, அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

 

பதில்: அமைச்சர்கள் மட்டத்தில் லஞ்சம் இல்லை என்றால், லஞ்சம் வாங்கும் பெருவாரியான பிற அரசுப் பணியாளர்கள் மத்தியில் லஞ்சம் மெள்ள மெள்ள நன்றாகக் குறையும் - முற்றிலும் நீங்காது என்றாலும்.  ஆகவே அமைச்சர்களை, அதுவும் ஒரு சில துடிப்பான அமைச்சர்களை, விஜய் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.

 

என்ன இருந்தாலும், வேறு ஒன்றிரண்டு கட்சிகளின் ஆட்சி வராதா என்று பல லஞ்சப் பேர்வழிகள் உள்ளூர ஏங்கலாம். திராவிட மண் கலந்திருப்பதுதான் தமிழ் மண்.

 

 

4. கேள்வி: மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு வினாத்தாள் அண்மையில் கசிந்தது என்பதால், நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டது. இருந்தாலும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதற்காக, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் போராட்டம் செய்கிறார்கள். அந்தக் கோரிக்கை நியாயமானதா?

 

பதில்: நீட் வினாத்தாள் கசிவில் அமைச்சர் நேரடியாக சம்பந்தப் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டோ நிரூபணமோ இல்லை. மத்திய அரசை எப்படியாவது சங்கடப் படுத்தவேண்டும் என்பது போராட்டத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

 

நீட் வினாத்தாள் கசிவைத் திட்டமிட்டு நடத்தியவர்கள், அதனால் பலன் அடைந்தவர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அந்த முயற்சி நடக்கிறது.

 

வினாத்தாள் கசிவுக் குற்றத்தை யாரோ செய்திருந்தாலும் மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கேட்பது நியாயம் இல்லை. அது நியாயம் என்றால், அவரைக் கல்வி அமைச்சராகத் தேர்வு செய்த பிரதமரும் அதே ரீதியில் பழி சுமந்து பதவி விலக வேண்டுமா?

 

நீட் வினாத்தாள் கசிந்தது வெளிப்படை. அது மாணவர்களைப் பாதித்த பெரிய பிரச்சனை என்பதும் வெளிப்படை. ஆனால் அதுகுறித்துப் போராட்டம் நடத்தும் அமைப்பின் உள்நோக்கம் வெளிப்படையாகத் தெரியாது. மத்திய அரசாங்கம் இந்தப் போராட்டத்தைக் கடுமையாக அணுகினால், அரசாங்கம் ஏதோ நீட் வினாத்தாள் கசிவையும் அதைச் செய்தவர்களையும் பாதுகாக்கிற மாதிரித் தோன்றும். அது போராட்டம் செய்யும் தலைவர்களின் உள்நோக்கத்தை மேலும் மறைத்து அவர்களை உன்னதப்படுத்தும். ஆகையால் மத்திய அரசு இந்தப் போராட்டத்தைப் பொறுமையாகக் கையாள்வது அவசியம். அதை மத்திய அரசு செய்கிறது.

 

 

5. கேள்வி: நீட் வினாத்தாள் கசிந்தது என்பதற்காக மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் அமைப்பிற்கு 'கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி' என்றா பேர் வைப்பார்கள்? கேவலமாக இல்லை?

 

பதில்: உங்களுக்கு வாய் இருக்கிறது, நீங்கள் கேட்கலாம். தான் கேவலம் செய்யப்படுவதை வாயில்லாத கரப்பான்பூச்சி யாரிடம் சொல்லி அழும்?

 

பகுதி 115 // 22.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Monday, 20 July 2026

கேள்வி-பதில் (20.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்று ஆட்சியை இழந்தது. அதன் தலைவர் உதயநிதி, "இந்தத் தேர்தலில் நமது எதிரி யார் என்பதை நாம் அடையாளம் காணாமல் போட்டியிட்டோம்" என்று தனது கட்சியின் தவறு குறித்துப் பேசினார். அந்தத் தேர்தலில் இன்னும் மோசமாகத் தோற்ற அதிமுக-வின் தவறு என்ன?

 

பதில்:  தனது கட்சிக்குள்ளேயே பல இரண்டாம் கட்டத் தலைவர்களை எதிரிகளாக்கிக் கொண்டு, கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியிடம் நட்பில்லாமல் போன எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராகக் கொண்டிருந்தது, அதிமுக-வின் முக்கியத் தவறு.

 

 

2. கேள்வி: "2026 தேர்தலில் திமுக தோற்றது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் கூட்டணி ஏன் நிலைக்கவில்லை? திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் அதிவேகமாக வெளியேறி தவெக-வுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு, திமுக-வுடனான உறவு காங்கிரஸுக்கு ஏன் கசந்தது?" என்று விசிக தலைவர் திருமாவளவன் கேட்கிறாரே?

 

பதில்: அரசியல் லாப நோக்கத்தைக் கணித்து அதன்படி கூட்டணிகள் அமைவதும் கலைவதும் திருமாவளவனுக்குத் தெரியும். அப்படித்தான் அவரும் செயல்படுகிறார் - அதிலும் அவர் கட்சி இந்தக் கூட்டணியில் இருக்கிறதா, அந்தக் கூட்டணியில் இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாதபடித் தனது கட்சியின் ஆதாயத்தைப் பேணுவதில் திருமாவளவன் கிங்.

 

 

3. கேள்வி: தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் குறித்துப் புகார் தெரிவிக்க வசதியாக, வாட்ஸாப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, "ஊழல் புகாரில் சிக்கினால், அமைச்சர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்; தவறு செய்தவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பார்க்க மாட்டேன்" என்று தனது அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாகவும் செய்திகள் வருகின்றனவே?

 

பதில்: "விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழக மக்கள் லஞ்சம் ஊழல் என்றால் என்ன என்பதே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். மாநிலத்தில் இல்லாத லஞ்ச ஊழல் எனும் பூதத்தை விஜய் கற்பனை செய்துகொண்டு, அதை அடக்க நினைப்பது நகைப்புக்குரியது" என்று திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் விஜய்யைக் கண்டித்து அறிக்கை விடவில்லை. லஞ்ச ஊழலுக்கு எதிரான விஜய்யின் அணுகுமுறையை அவர்கள் வரவேற்கவும் இல்லை. திமுக, அதிமுக தலைவர்களுடைய மௌனம் எதையோ உணர்த்துகிறது.

 

 

4. கேள்வி: "என் வாழ்வில் இரு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று, 2006-ல் அதிமுக-வுடன் உடன்பாடு வைத்தது. அப்போது சில மதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவைச் சந்திக்க வைத்தனர். அந்த நிர்பந்தத்திற்கு நான் உடன் பட்டேன். 2017-ல், பாஜக-வை எதிர்ப்பதற்காகத் திமுக-வுடன்  உடன்பாடு செய்தது பெரும் பிழை. சட்டசபைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேசியபோது, 'நான்கு இடங்கள் தான் உங்கள் கட்சிக்கு; மறு பேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்று, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தி முடிவைத் திணித்தனர்" என்று மதிமுக தலைவர் வைகோ அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: மதிமுக போன்ற சிறிய கட்சி ஒரு கூட்டணியில் சேரும்போது, வாக்காளர்களிடம் அந்தக் கட்சிக்கு உள்ள அரசியல் சக்திக்கு ஏற்பத்தான் கூட்டணிக்குள் அந்தக் கட்சிக்கு மதிப்பும் தொகுதிகளும் கிடைக்கும் - அதன் தலைவர் மேடைகளில் என்னதான் ராஜமுழக்கம் செய்தாலும்.  தனது பழைய கூட்டணிகள் எப்படித் தவறானவை என்று வைகோ வியாக்கியானம் செய்யாமல் இருந்தால் 'அரசியலில் கூட்டணி மாறுவது கட்சிகளிடையே சகஜம்' என்று அனைவரும் வைகோவை சாதாரணமாக நினைத்துப் போய்விடுவார்கள். ஆனால் அவர் விளக்கமும் நியாயமும் சொல்லவந்து பரிதாபமாகக் காட்சி தருகிறார்.

 


5. கேள்வி: அரசியலில் குதிரை பேரம் நடப்பதாகத் தினமும் செய்திகள் வருகின்றன. இது பற்றி விவரிக்கவும்.

 

பதில்: இந்தவகைப் பேரத்தில் குதிரைகளை வாங்குபவர் மட்டுமல்லாமல், விற்பனையாகும் குதிரைகளும் கெட்டிக்காரத்தனம் மிக்கவை. ஆகையால் வாங்குபவர் தவிர, விற்கப்படும் குதிரைகளும் நல்ல பலன் அடைகின்றன.

 

இந்தக் குதிரை பேரத்திற்கு முன்னோடியாக, வழிகாட்டியாக இருப்பது, தேர்தலின்போது நடைபெறும் கன்றுக்குட்டி பேரம். மக்கள்தான் கன்றுக்குட்டிகள் - சற்று வளர்ந்த கன்றுக்குட்டிகள்.

 

கன்றுக்குட்டி பேரத்தில், வாங்குபவர்களுக்கு மட்டும் அமோகமான பயன்கள் கிடைக்கும். தன்னை யார் வாங்குவார் என்று காத்துக் கிடக்கும் அப்பாவி கன்றுக்குட்டிகளுக்கு ஒன்றிரண்டு வாழைப்பழம் மட்டும் கிடைக்கும்.

 

தான் உண்டு, தனக்குக் கிடைக்கும் வாழைப்பழம் உண்டு என்று இருப்பவை கன்றுக்குட்டிகள். குதிரைகள் யார், அவைகளுக்குக் குதிரை பேரத்தில் ஏன் நல்ல பலன்கள் கிட்டுகின்றன என்பதைச் சொல்ல அவசியமில்லை.

 

கன்றுக்குட்டிகளுக்கு, கெட்டிக்காரக் குதிரைகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. குதிரைகளுக்கு, கன்றுக்குட்டிகளின் பாவப்பட்ட நிலை நன்றாகத் தெரியும்.


பகுதி 114 // 20.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

Thursday, 16 July 2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி. தமிழகத்தில் இவை எப்படி?

ஆர். வி. ஆர்

 

மோடி கட்சி எனப் புரிந்துகொள்ளப் படுவது, பாஜக; அண்ணாமலை கட்சி, தற்காலிகமாக 'வீ த லீடர்ஸ்' வேடத்தில் உள்ளது; விஜய் கட்சி, தவெக.

 

2026 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, மாநில மக்களின் நிலை இது: மக்களுக்கு முதலில் ஒரு மோசமான ஆட்சியிலிருந்து விடுதலைஅடுத்ததாக நிர்வாகத்தில் லஞ்ச ஊழலை ஊக்கப்படுத்தாத ஒரு புதிய அரசு, பிறகு மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை, வேலை வாய்ப்பை, மக்கள்நலப் பணிகளை முன்னெடுக்கும் ஒரு முதலமைச்சர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வேண்டி இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு சில விஷயங்களை நாம் பார்க்க வேண்டும்.

 

பாஜக-விலிருந்து வெளியேறிய அண்ணாமலை தொடங்கவிருக்கும் கட்சி, தமிழகத்தில் நடக்கப் போகும் தேர்தல்களில் போட்டியிடும்போது பாஜக-வையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யும். அந்த நேரத்தில், "எங்கள் கட்சி தமிழக பாஜக-வை மட்டும் எதிர்க்கிறது, மத்திய பாஜக-வை அல்ல" என்று அண்ணாமலை கட்சி பேச முடியாது. அதாவது, நரேந்திர மோடி நடுநாயகமாக இருக்கும் பாஜக-வை, அண்ணாமலை கட்சி எதிர்க்கப் போகிறது. "நான் தேசியவாதி, தமிழகத்தில் நல்லாட்சி தர விரும்புகிறேன். இருந்தாலும் மிகச் சிறந்த தேசியவாதியாக இருந்து மத்தியில் 2014-லிருந்து நல்லாட்சி வழங்கி வரும் மோடி, அல்லது அவர் அனுப்பிவைக்கும் வேறு மத்திய பாஜக தலைவர்கள், தமிழக பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினாலும், நான் அந்த வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்குவேன் - அப்போது நான் மோடியையும் குறைசொல்லிப் பிரசாரம் செய்வேன்" என்று அண்ணாமலை இப்போதே மறைமுகமாகத் தெரிவிக்கிறார்.

 

தேசநலன் காரணமாக மோடியைத் தீவிரமாக ஆதரிக்கும் பலர், அண்ணாமலைக்காகத் தாங்கள் பாஜக-வை விட்டு விலகிப் போவதை நினைக்க முடியாது. அதே சமயம், அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை வைத்து, மோடி கட்சியான பாஜக-வை எதிர்த்து அண்ணாமலை கட்சிக்காக வேலை செய்யவும் வாக்களிக்கவும் அதிகமானவர்கள், கணிசமானவர்கள், இருப்பார்கள்.

 

அண்ணாமலைக்காக அவர் கட்சிக்கு வாக்களிக்க இருப்பவர்கள் திமுக மற்றும் அதிமுக வேண்டாம் என்று நினைப்பார்கள். அவர்களில் பலர் முன்பு பாஜக-வுக்கு வாக்களித்திருப்பார்கள். மொத்தத்தில், அண்ணாமலை அபிமானிகள் அநேகமாகப் படித்தவர்களாக, விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

 

2026 சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து நின்று போட்டியிட்டது. இருந்தாலும் அவர் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரு பெரும் கூட்டணிகளை ஒருசேரத் தோற்கடித்து, 234 தொகுதிகளில் 108-ஐ வென்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறார். விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாலோர் படித்தவர்கள், பொது அறிவு மிக்கவர்கள், மிக விவரமானவர்கள் என்று இல்லை.  அவர்கள் பெரும்பாலும் சாதாரணமானவர்கள். அவர்களின் நிலை வேறு, அண்ணாமலை அபிமானிகளின் நிலை வேறு. ஆனால் விஜய் வாக்காளர்கள் அண்ணாமலை அபிமானிகளை விட எண்ணிக்கையில் மிக அதிகமாக இருப்பார்கள். அண்ணாமலை அபிமானிகளை, விஜய் ஈர்ப்பது கடினம். விஜய் வாக்காளர்களை, அண்ணாமலை ஈர்ப்பதும் கடினம். இரு தரப்பிலும்  ‘ஜென் சீ’ நபர்கள் நிறைய உண்டு.

 

2026 தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, முதல் வேலையாக அப்போதிருந்த மோசமான திமுக ஆட்சியை வீழ்த்தினால்தான், அடுத்ததாக நேரான ஆட்சி, மக்களுக்கு வளம் சேர்க்கும் ஆட்சி போன்றவை மாநிலத்தில் சாத்தியமாகும் என்றிருந்தது. அந்தத் தேர்தலில் அந்த முதல் வேலையைச் செய்து காண்பித்தவர், கூட்டணி ஏதுமில்லாமல் திமுக-வைக் குறிவைத்து எதிர்த்த விஜய்.

 

தேர்தல் நேரத்தில் விஜய் மேடையில் சினிமாத்தனமாகப் பேசி இருக்கலாம். அந்த வழிதான் அவருக்குத் தெரிந்தது என்றிருக்கலாம். ஆனாலும் அவர் அநாகரிகமாக, ஆபாசமாகப் பேசவில்லை. அவர் கட்சியைச் சார்ந்தவர்கள் பல தொகுதிகளில் பணவிநியோகம் செய்து வாக்குகளை வாங்கினார்கள் என்ற சீரியஸான குற்றச்சாட்டும் அந்தக் கட்சி மீது கிடையாது. அண்ணாமலையின் சிறந்த கல்வியறிவு, பொது விஷயங்கள் பற்றிய ஆழ்ந்த ஞானம்நுணுக்கமான சிந்தனை ஆகியவை விஜய்யிடம் இல்லை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, விஜய் ஒற்றை மனிதராகத் திமுக-வை அந்தத் தேர்தலில் வீழ்த்தினார், அதிமுக-வை ஓரத்தில் கடாசினார். இந்த அரிய சாதனையை விஜய் செய்ததற்குக் காரணம், அவர் சாதாரண மக்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார் என்பதுதான்.

 

விஜய்க்காக அவர் கட்சிக்கு வாக்களித்த சாதாரண மக்கள் அனைவரின் வாக்குகளும் நமது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். அந்த வாக்குகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குச் செல்லாமல் தடுத்து, அவற்றைத் தன் பக்கம் வரவழைத்து, திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய பெருமை விஜய்க்கு உண்டு, அவருக்கு மட்டும்தான் உண்டு. அதற்கான மகுடத்தை விஜய்க்குத்தான் அணிவிக்க வேண்டும். 

 

2026 தேர்தலின் போதே அண்ணாமலை பாஜக-விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி அந்தத் தேர்தலில் அவர் கட்சி போட்டியிட்டிருந்தாலும் (அதுவும் திமுக, அதிமுக-வையும் எதிர்த்துப் போட்டியிட்டிருந்தால்) விஜய்யின் வாக்காளர்களை அண்ணாமலை ஈர்த்திருக்க மாட்டார். அப்போதும் விஜய் கட்சிதான் மிக அதிகத் தொகுதிகளை வென்றிருக்கும். இதையெல்லாம் குறிப்பிடுவதன் நோக்கம், அண்ணாமலையை விட விஜய் சிறந்த அரசியல் தலைவர் என்று சொல்ல வருவதல்ல. படித்தவர்களை விட, விவரமானவர்களை விட, சாதாரண மக்கள் அதிகமுள்ள நம் மாநிலத்தில் திமுக-வை ஆட்சியிலிருந்து வீழ்த்த விஜய்யால் மட்டும் முடிந்தது; அதற்கான பெருமை அவருக்கே உரித்தானது என்பதை நாம் ஒதுக்க முடியாது, கூடாது.

 

மக்கள் நலனில் திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றிய முதற்கட்டம் முடிந்தது. அடுத்ததாக, விஜய் லஞ்ச ஊழலை ஊக்கப் படுத்தாத அரசு நிர்வாகத்தை வழங்குவாரா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக நாம் ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. அண்ணாமலை படித்தவர்களை, விவரம் தெரிந்தவர்களை, அதிக நேர்மையாளர்களை, தனது புதிய அமைப்பிற்கு, இனி அவர் தொடங்கப் போகும் அரசியல் கட்சிக்கு, இயல்பாக ஈர்ப்பார். ஆனால் அதைப் போன்ற மனிதர்களை சினிமாப் புகழ் விஜய் தன்னுடைய கட்சிக்கு ஈர்த்திருக்க முடியாது. விஜய் கட்சியின் சில தலைவர்கள், சில நிர்வாகிகள், விஜய்யின் பிரபல்யத்தை வைத்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ள முனைவார்கள். அதை விஜய்யும் அறிந்திருப்பார் – மனிதர்களைப் புரிந்துகொள்வதில் விஜய் கெட்டிக்காரர். அனைத்தையும் உணர்ந்து, ஒரு முதலமைச்சராக லஞ்ச ஊழலுக்கு எதிராக விஜய் இதுவரை பொதுவெளியில் உரத்துக் குரல் கொடுத்தது பெரிய விஷயம். விஜய் இதில் முனைப்பாகச் செயல்படுவார் என்று தோன்றுகிறது. அதைக் கவனித்து அவரைச் சுற்றி உள்ளவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும் – அதில் அவர்கள் தவறினால், அதற்கான நிரூபணம் வெளிப்பட்டால், விஜய் அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நாம் பார்ப்போம், அதற்கேற்ற விமர்சனத்தை விஜய் அப்போது சந்திக்க வேண்டும். இன்றைய தேதியில், மக்கள் நலன் சார்ந்த இந்த இரண்டாவது விஷயத்தில் விஜய்யின் தொடக்கம் குறை சொல்லும்படியாக இல்லை. பொதுவாகப் பாராட்டும்படி இருக்கிறது.

 

மக்கள் நலனில் மூன்றாவது கட்டமான தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் நலப் பணிகள் ஆகியவற்றில் விஜய் எப்படிச் செயல்படுகிறார் என்று போகப் போகத் தான் நாம் பார்க்க முடியும். பார்க்கலாம்.

 

இதுதான் 2026 தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் அரசு நிர்வாகம் பற்றிய நிலை. இதைத் தொடர்ந்து, அண்ணாமலை கட்சியை, மோடி கட்சியை, நாம் இவ்விதம் பார்க்கலாம்.

 

கல்வியில் சிறந்து, பேச்சாற்றல் மிகுந்து, மதிநுட்பம் கொண்டு, பண்பான அரசியலை முன்னெடுத்து, மக்கள் நலனை மனதில் வைத்து அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு தலைவர் அண்ணாமலை. சாதாரண மக்கள் நிறைந்த தமிழகத்தில், அவர்கள் மத்தியில் விஜய் ஒரு முக்கியத் தலைவராக உருவெடுத்துவிட்ட இந்த நேரத்தில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி அதைத் தொடர்ந்து நடத்தி வந்தால் அது மிக அரிதான செயல், வரவேற்கத் தக்க முனைப்பு. தனது பேச்சில் உள்ள ஒருசில முரண்பாடுகளை அண்ணாமலை உணர்ந்து காலப் போக்கில் தன்னைச் சரிசெய்து கொள்கிற வயதும் பக்குவமும் அவரிடம் இருக்கும் என்று நாம் தாராளமாக எதிர்பார்க்கலாம்.

 

அண்ணாமலை போன்ற ஒரு அரிய தலைவரும் தமிழகத்துக்கு அவசியம். ஒரே வீச்சில் திமுக-வை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்தி, அதிமுக-வையும் ஓரம் கட்டிய விஜய்யும் பாராட்டுக்கு உரியவர். மத்திய அரசு நிர்வாகத்தில் இமாலயப் புரட்சி செய்த மோடியை முக்கியத் தலைவராகக் கொண்ட பாஜக-வும் தமிழகத்தில் வளர்ந்து மத்தியில் செய்ததற்கு இணையான சாதனைகளை இந்த மாநிலத்திலும் நிகழ்த்த முயற்சிக்க வேண்டும். நடக்கும் நல்லதை வரவேற்று, நடக்கத் தக்க நல்லதையும் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை.  

 

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

 

* * * * *
Author: R. Veera Raghavan, Advocate, Chennai