|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "உங்ககிட்ட யாராவது லஞ்சம் கேட்டா, குடுக்க
முடியாதுன்னு சொல்லிடுங்க. நான் இருக்கேன் உங்களோட" என்று அண்மையில்
முதலமைச்சர் விஜய் கரூர் கூட்டத்தில் பேசி இருக்கிறாரே? பதில்: விஜய்
என்ன பேசினாலும், அரசு வேலைகளுக்காக லஞ்சம்
கேட்கிறவர்களின் முகத்துக்கு நேராகச் சாதாரண மக்கள் அனைவரும்
"தரமுடியாது" என்று சொல்வது எளிதல்ல. இருந்தாலும் விஜய்யின் பேச்சால், அவர் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் லஞ்சம்
கேட்கிறவர்களின் எண்ணிக்கை குறையும், விடாப்பிடியாகக்
கேட்கிறவர்கள் எதிர்பார்க்கும் தொகை குறையும். லஞ்சத்தைக் கட்டுப்படுத்த
விஜய்யின் பேச்சு ஒரு நல்ல முனைப்பு. முந்தைய முதலமைச்சர்களில் குறிப்பாக சிலர் லஞ்சத்தைத் தீர்க்கமாக
எதிர்த்ததில்லை, கண்டித்துப் பேசியதில்லை. காரணம்
அவர்களுக்கே தெரியும். நமக்கும் தெரியும். |
|
2. கேள்வி: "விஜய் அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர். எனவே, அவருக்குக்
குறைந்தது ஓராண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அரசின்
செயல்பாடுகளை விமர்சிப்பது அவசியம் என்றாலும், அது ஆக்கபூர்வமான விமர்சனமாக
இருக்க வேண்டும். புதிய அரசு செயல்படத் தேவையான கால அவகாசம் வழங்கப்பட
வேண்டும்" என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். இது சரியா? பதில்: ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில், ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சிகளோ
அரசியல் விமர்சகர்களோ வைக்கும் விமர்சனம் எப்போதும் ஆக்கபூர்வமாக
இருக்கவேண்டும். அநாகரிகமாக, அல்லது வெறும் காழ்ப்பில், யாரும் ஒரு அரசை விமர்சனம் செய்வது சரியல்ல
- ஆட்சி செய்பவர் அண்மையில் அரசியலுக்கு
வந்தவரோ அல்லது அவர் பல வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியவரோ. அரசியலுக்கு விஜய் புதியவர், அவர் ஒரு புதிய அரசின் முதலமைச்சர், என்றாலும் அவர் அரசு எடுத்திருக்கும் சில
நல்ல முடிவுகளைப் பலரும் பாராட்டுகின்றனர். பொருத்தமான இந்தப் பாராட்டை, யாரும் ஒரு வருடம் தள்ளிப் போடக் கூடாது.
அதைப் போல, பொதுநலனைப் பாதிக்கும் ஒரு தவறான செய்கையை அவர் அரசு செய்தால், அதற்கான விமர்சனமும் அவரை நோக்கி உடனே
வரவேண்டும். இதுபோக, விஜய் அரசியலுக்குப் புதியவரானாலும் ஆள்
கெட்டியாகத் தெரிகிறார். எந்த மோசமான அல்லது காட்டமான விமர்சனத்தாலும் அவர்
துவண்டுவிடுவார் என்று தோன்றவில்லை. மற்றபடி விஜய் அரசு தொடர்ந்து மதிப்பிடப்
படும். |
|
3. கேள்வி: 2026 தேர்தலுக்கு முன் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்ட
நெரிசலில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு, அரசுப் பணி
வழங்கி இருக்கிறார் முதல்வர் விஜய். இதில் தவறு இருக்கிறதா? பதில்: கரூர்
சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அது ஒரு விபத்து.
அது தவிர்க்கப் பட்டிருக்கலாமா என்ற கேள்வி வேறு விஷயம். கரூர் சோகம் தொடர்பான குடும்பத்தினருக்கு நல்ல இழப்புத் தொகையை விஜய்யே
தனிப்பட்ட முறையில், அல்லது அவர் கட்சி வழியாக, அளித்திருக்கிறார் - அதை நாம் குறை சொல்லமுடியாது.
ஆனால் விஜய் அந்தக் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதன் மூலம், அரசு செலவில் தன் அரசியல் நலனைப் பூர்த்தி
செய்திருக்கிறார் என்று அர்த்தம். சட்டம் என்ன சொன்னாலும் அவர் செய்திருப்பது
அதிகார துஷ்பிரயோகம். அன்று விஜய் வந்து சேர்வதற்கு முன்பே கரூர் கூட்டம் கட்டுக்கடங்காமல்
இருந்த நிலையை அறிந்த போலீஸ், "கடைசி
நேரத்தில் என்னைக் கூட்டத்திற்கு வரவேண்டாம் என்று எச்சரித்திருக்கலாம், அல்லது அவர்களாகவே அந்தக் கூட்டத்தை ரத்து
செய்திருக்கலாம்" என்றும் விஜய் இப்போது பேசி இருக்கிறார். அதாவது, அரசு ஊழியர்களான போலீஸ் அதிகாரிகள் அன்று விழிப்புடன்
செயல்படாததால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று
அரசு வேலை தருகிறோம் என்று அவர் உணர்த்துகிறார். இந்த நியாயம் எடுபடாது. போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், மின்வாரிய
ஊழியர்கள் ஆகியோரின் அஜாக்கிரதையால் மரணிக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை
கிடைக்கிறதா? டாஸ்மாக்கில் மது விற்பனை செய்து பல
சாதாரணக் குடும்பங்களின் வாழ்வைச் சீரழிக்கும் அரசு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏதாவது செய்கிறதா?
சாலையைச் சரியாகப் போடாமல், அல்லது பராமரிக்காமல், இருக்கும்
உள்ளாட்சிகளின் அலட்சியத்தால் விபத்துகள் நேர்ந்து உயிர்ப்பலி தரும்
குடும்பத்தினருக்கு அரசு வேலைகள் கிடைப்பதில்லை. விஜய் இப்போது செய்தது தவறு. |
|
4. கேள்வி: "அதிமுக-விலேயே இருக்கவேண்டும் என நினைக்கும்
தொண்டர்களைத் தவெக-வினர் மனமாற்றம் செய்யவேண்டாம்" என்று புதுச்சேரி அதிமுக
நிர்வாகி அன்பழகன் பொதுமேடையிலிருந்து வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே? பதில்: இந்த பயந்தாங்கொள்ளிப் பேச்சைக் கேட்ட
பிறகும், அதிமுக-வில் தாமாக நீடிக்க விரும்பும் தொண்டர்களைத் தவெக-வினர் மனமாற்றம்
செய்ய முடியாது. அந்த அதிமுக நிர்வாகி நிம்மதி கொள்ளலாம். |
|
5. கேள்வி: "திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை. அதைவிட, கண்முன்னே
அதிமுக சிதைவது ஒரு கவலை" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறி இருக்கிறாரே? பதில்: திமுக, அதிமுக, இரு
கட்சிகளையும் 2026 சட்டசபைத் தேர்தலில் வீழ்த்திய தவெக, விஜய் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது; அந்த விஜய்யின் அமைச்சரவையில் ஒரு விசிக பிரதிநிதி
அமைச்சராகி இருக்கிறார்; அந்த விசிக-வின் தலைவர் திருமாவளவன், தவெக-வின் வெற்றியை மனமுவந்து போற்றவில்லை; திமுக தோல்வியடைந்தது, அதிமுக
கரைந்து வருவது, பற்றி அவர் மனமுடைந்து கவலை
தெரிவிக்கிறார். எல்லாவற்றையும் விட நமக்குக் கவலை தருவது, திருமாவளவனிடம் அதிகரிக்கும் மனக் குழப்பம். |
|
பகுதி 112 // 11.07.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com |
No comments:
Post a Comment