Tuesday, 14 July 2026

கேள்வி-பதில் (14.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "நான் ஒரு ஹிந்து. என்னுடைய மதத்தையும் ஜாதியையும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, சாமானிய மனிதனாக, அனைவருக்கும் பொதுவானவனாக, உங்கள் முன்னே நிற்கிறேன். ஜாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்வது என் நோக்கமல்ல" என்று 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சி மாநாட்டில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: இந்தியாவை ஒற்றை தேசமாகப் பெருவாரியான மக்கள் கருதுவதின் அடிப்படைக் காரணம், இந்தியா ஒரு ஹிந்து தேசம் என்று அவர்கள் நினைப்பதால் - நம் அரசியல் சட்டம் சொல்வதால் அல்ல. அந்தச் சிந்தனையை, ஹிந்துவாக இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்காவிட்டால், இந்தியா ஒரு ஹிந்து தேசமாக நீடிக்கும் வாய்ப்பு மேலும் மேலும் குறையும், அதன் தொடர்ச்சியாக இந்திய ஒருமைப்பாடும் தேயும். இன்னொன்று: ஹிந்துவாக இருக்கும் ஒரு தலைவர் - குறிப்பாக, ஒரு பிரதமரோ அல்லது முதலமைச்சரோ - தான் ஹிந்து என்பதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, ஆனாலும் "ஜாதி, மதத்தால் அரசியல் செய்யாமல்" அனைத்து மக்களுக்கும் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியும். ஒரு பிரதமராக மோடி அதைச் செய்துவருகிறார்.

 

 

2. கேள்வி: அமெரிக்காவில் நடைபெற்ற 'வீ த லீடர்ஸ்'அமைப்பின் நிகழ்ச்சியில் ஜூலை 6-ம் தேதி பேசிய அண்ணாமலை, "தவெக அரசு தமிழகத்தில் புதிய அரசு. ஒரு பொலிடிகல் டிசிப்ளின் என்பதாக நாம் அதற்கு ஒரு வருட காலம் சப்போர்ட் கொடுப்போம். எக்கிப் பண்ணுவோம். பெட்டர்-ஆ பெர்பார்ம் பண்ணட்டும். தவெக அரசு தமிழ்நாட்டுக்கு நல்லது பண்ணினா அதை முதல் ஆளாக நின்று வரவேற்கப் போறோம்" என்று பேசி இருக்கிறார். இது அவருடைய விசாலமான பார்வை தானே?

 

பதில்: ஆறு நாட்கள் கழித்துப் பொள்ளாச்சியில் ஜூலை 12-ம் தேதி நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் அண்ணாமலை பேசினார். அப்போது, "தமிழகத்தில் 2031-ல் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026-ல் நடந்த மாதிரி, 2031-லும் 39 வயதுக்குக் கீழே உள்ள இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தைச் செய்து காட்டுவார்கள்" என்று அண்ணாமலை பேசியதைக் கேட்டபோது இரு கைகளால் பிடித்து, என் சுற்றிய தலையை நிறுத்தினேன்.

 

 

3. கேள்வி: மோடி, அமித் ஷாவைத் தலைவர்களாகக் கொண்ட பாஜக-விலிருந்து விலகி - அதிலும் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இந்தியாவைத் திறம்பட நிர்வகிக்கையில் பாஜக-வை விட்டுவிட்டு - அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதன் உண்மையான காரணம் என்ன?

 

பதில்: அது அண்ணாமலைக்கு மட்டும் தெரியும். வெளியில் அவர் தெரிவித்த காரணங்கள் எடுபடவில்லை.

 

ஒரு ஊகம் இது. மோடி முதலமைச்சராக இருந்து குஜராத்தை மேம்படுத்திய மாதிரி, அண்ணாமலை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து, லஞ்ச ஊழலற்ற திறமையான ஆட்சியைக் கொடுத்து, இந்த மாநிலத்தை முன்னேற்ற விரும்பி இருக்கலாம். அதற்கான நெஞ்சுரமும் திறமையும் அர்ப்பணிப்பும் அவரிடம் உண்டு. ஆனால் தமிழகத்தில் பாஜக தனியாகவோ, அக்கட்சி தலைமை தாங்கும் கூட்டணியாகவோ, தேர்தலில் மெஜாரிட்டி எம்.எல்.ஏ தொகுதிகளை வென்றாலும் அப்போதைய மத்திய பாஜக - அது எந்த வருடம், அந்த நேரத்தில் அங்கே யார் முக்கியத் தலைவர்களாக இருப்பார்கள் என்பதும் இப்போது தெரியாது - அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கும் என்ற நிச்சய உணர்வு அவருக்கு இல்லாமல் போகலாம். ஆகையால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்க நினைத்திருக்கலாம்.

 

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

 

இன்னொரு புறத்தில், திமுக மற்றும் அதிமுக-வை எதிர்த்து, பாஜக-வையும் எதிர்த்து, 2026 தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு ஜெயித்து முதல்வரான விஜய் அவரது சினிமா வழி ஈர்ப்பால் சாதாரண மக்கள் பலரையும் தனது தவெக-வின் வாக்காளர்களாக மாற்றி இருக்கிறார். திமுக, அதிமுக (அல்லது அந்த இரு கட்சிகளின் கூட்டணி), பாஜக, அண்ணாமலை கட்சி, தவெக + காங்கிரஸ் ஆகியவை தேர்தலில் பிரிந்து போட்டியிட்டால் 2031-ல் அண்ணாமலை ஆட்சிக்கு வருவது மிகக் கடினம்.

 

 

4. கேள்வி: அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா? சுருக்கமாகப் பதில் சொல்லவும்.

 

பதில்: வேண்டும். அந்தப் பதவிக்கு அவர் மிகப் பொருத்தமானவர். ஆனால் அதன்பொருட்டு அவர் போகும் வழி, தேர்தலில் அவர் கட்சியோ அதன் கூட்டணியோ அவர் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு வெல்ல உதவுமா என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிச்சயமின்மைக்கு ஒரு முக்கிய காரணம், சென்ற தேர்தலில் விஜய் கட்சி தனித்து நின்று பெற்ற மகத்தான வெற்றி.

 


5. கேள்வி: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் பொள்ளாச்சி மாநாட்டு மேடைக்கு வந்த அண்ணாமலை, அந்த மேடையிலேயே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பார்வையாளர்களை வணங்கினாரே?

 

பதில்: தமிழக மக்கள் புரிந்துகொள்ளும் ஒரு மொழியை அவர் மோடியிடம் கற்றிருக்கலாம்!


பகுதி 113 // 14.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment