Sunday 31 March 2019

வீரமணி விற்கிறார்: பகுத்தறிவு வாங்கலையோ பகுத்தறிவு!


திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஒரு முழு பகுத்தறிவுவாதி – அவர் பேசாமல் இருக்கும் வரை. பகுத்தறிவு என்று நினைத்து அவர் பேசும்போதுதான் அவரது பகுத்தறிவு பல்லிளிக்கிறது.

பொள்ளாச்சியில் பல இளம் பெண்களிடம் தறிகெட்ட இளைஞர்கள் சிலர் பாலியல் அக்கிரமங்கள் செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இப்போது போலீஸ் விசாரிக்கிறது. சில குற்றவாளிகள் கைதாகி இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் வீரமணி திருவாய் மலர்ந்தார். இந்துக்கள் வழிபடும் பகவான் கிருஷ்ணரை இழிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், 'பொள்ளாச்சி பாதகர்கள் தமது சுபாவத்தில் அப்பாவிகளாக இருக்கக் கூடும். ஆனால் அவர்களுக்கு கிருஷ்ணர்தான் தனது லீலைகள் மூலமாக மோசமான முன்னுதாரணமாக இருந்து தவறான வழியைக் காட்டி விட்டார்!'  என்கிற அர்த்தத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் வீரமணி.

‘கடவுள் இல்லை, அதுவும் இந்துக் கடவுள்கள் இல்லவே இல்லை’ என்கிற ரீதியில் இந்து மதத்தையும் அதன் தெய்வ வழிப்பாட்டையும் பழித்த ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழி வந்தவர் வீரமணி.  வந்த வழியை விட, ஈ. வே.ரா சேர்த்து வைத்து அதனால் வளர்ந்த சொத்துக்களை ஏதோ டிரஸ்டு மற்றும் நிறுவனங்கள் பெயரில் நிர்வாகம் செய்யும் அதிர்ஷ்டத்தை வீரமணி பெரிதும் மதிப்பார். காரணம் கேட்காதீர்கள் - இது எளிதில் புரியாத பெரிய பகுத்தறிவு சமாசாரமாக இருக்கும் என்று நாம் பக்குவமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, இப்போது சிறிய பகுத்தறிவு விஷயங்களைப் பார்க்கலாம்.

எந்த மதத்திலும், கடவுள் என்பவர் கருணை மிக்கவர், தன்னை நம்புகிறவர்களைக் காப்பவர், தீயவர்களை தண்டிப்பவர் என்றுதான் அந்த மதத்தை சார்ந்தவர்கள் நினைப்பார்கள். கடவுளின் சக்தியையும் மகிமையையும் வெளிப்படுத்தும் வகையில் எல்லா மதத்திலும் அதன் கடவுளைப் பற்றிய புராணங்கள், இதிகாசக் கதைகள் உண்டு. சிலர் இவை எவற்றையும் நம்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, ’கடவுள் என்று யாரும் கிடையாது, அதனால் கடவுளைப் பற்றிய, கடவுளின் வாழ்க்கை மற்றும் செய்கைகள் பற்றிய, எந்தக் கூற்றும் உண்மையல்ல, வெறும் கற்பனை’. அவர்கள் கடவுளை வணங்குவதும் இல்லை, இழிவு செய்வதும் இல்லை. இந்த சிந்தனை சரியோ தவறோ, இது நேர்மையானது. ஆனால் வீரமணியின் ஆட்டம் அலாதி. அவரது டான்ஸ் உடான்ஸ்.

கடவுள் மறுப்புக் கொள்கையை அடிக்கடி சத்தம் போட்டு சொல்லுகிறவர்கள் - அதுவும் தமிழ் நாட்டில் அப்படியானவர்கள் - தங்களை 'பகுத்தறிவுவாதிகள்' என்று சொல்லிக் கொள்வதுண்டு. அதாவது, இவர்கள் எந்த விஷயத்தையும் 'பகுத்து' 'அறிந்து' செயல்படுகிறவர்கள் என்று தங்களைப் பெருமிதமாக நினைப்பார்கள். மற்றவர்களும் தங்களைப் பற்றி அதே போல் நினைக்க ஆசைப்படுவார்கள். இப்படி ஒரு பகுத்தறிவு லேபிளை தன் மீது ஒட்டிக் கொண்டவர் வீரமணி.

புராணங்கள், இதிகாசக் கதைகள் மூலமாக இந்துக் கடவுள்களின் மகிமையை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சிகளை ஒரு பகுத்தறிவாளர் 'கடவுள் என்பவரே கற்பனை' என்ற அடிப்படையில் நிராகரிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதே ஆசாமி,  அந்தக் கதைகளில் வரும் வேறு சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு - அதையும் தவறாகப் புரிந்துகொண்டு - கடவுளைத் திட்ட வேண்டும் என்பதற்காக அந்த நிகழ்ச்சிகள் மட்டும் நிஜமாக நடந்தவை என்பது போல் பேசினால் அவர் ஒரு டுபாக்கூர் - அல்லது வீரமணி. அவர் கடவுளைத் திட்டுகிற போர்வையில் கடவுள் நம்பிக்கையாளர்களின் மீதான வெறுப்பைக் காட்டுகிறார் என்றும் அர்த்தம்.  இந்தியாவில் மிகக் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக் கடவுள்களை மட்டும் அவர் இகழ்ந்து கொண்டு, மற்ற சிறுபான்மை மதத்தினரின் கடவுள்களை பற்றி மூச்சு விடாமல் இருந்தால், 'இந்துக்களின் தோள்கள் துவண்டு இருக்கும், மற்றவர்களின் முஷ்டி உயர்த்தப் பட்டிருக்கும்' என்று அவர் கருதுவது நிரூபணம் ஆகிறதா இல்லையா?

பெரும்பான்மையான இந்துக்கள் தங்களின் முஷ்டியை வீரமணிக்கு நேராக சுழட்டி வீச வேண்டாம். தள்ளி நின்று உயர்த்திக் காண்பித்தாலே அவர் புரிந்துகொள்ள வேண்டும். கவிஞர் வைரமுத்துவும் அவருக்கு இன்றைய இந்துக்களின் மனநிலையை உணர்த்தலாம். பாம்பின் காலுக்கு ஏற்பட்ட சறுக்கலை, அது இன்னொரு பாம்பும் அறியச் செய்யலாம்.

இன்னொரு விஷயம்.  "ஒரு டிரஸ்டின் நோக்கத்தை செயல்படுத்தி மக்களிடையே பகுத்தறிவை வளர்க்கப் பார்க்கிறோம்.  ஆனால் மக்கள் விழிப்படையவில்லை. ஆகையால் நாங்களும் தொடர்ந்து பகுத்தறிவைப் பரப்புகிறோம். அப்போதுதான் டிரஸ்டுக்கு உயிர் இருக்கிறது, அதன் நோக்கம் பூர்த்தி ஆகவில்லை, அதன் நோக்கம் இன்றும் செயல்படுத்தப் படுகிறது என்பதற்கு ஆதாரம் இருக்கும். தோற்றம் அப்படி இருந்தால்தான், அம்மாடியோவ் என்றிருக்கும் டிரஸ்டின் சொத்துக்களை நாங்கள் கட்டிக்கொண்டு நிர்வாகம் செய்வது சுலபம்.  இதில் சட்டத்தின் நிர்பந்தங்கள் எப்படி எப்படியோ இருக்கும். அதை வெளிப்படையாக பேசக் கூடாது என்பது பலன் அனுபவிக்கிற பேர்வழிக்குத்தான் தெரியும்!' என்று ஒரு மனதின் குரலை பலர் ஊகிக்கலாம். இதற்கு என்ன அர்த்தம் என்றால்: பகுத்தறிவாவது பக்கோடாவாவது!

கத்திரிக்காய் விற்பது மாதிரி "பகுத்தறிவு வாங்கலையோ பகுத்தறிவு!" என்று கூவிக் கூவி மார்க்கெட்டிங் செய்து வருகிறார் வீரமணி. இரண்டிலும் ஒரு ஒற்றுமை – இவை வாங்குபர்களின் லாபத்துக்காக நடக்கும் வியாபாரம் இல்லை. யாருக்கும் புரியுமே!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Tuesday 26 March 2019

பா.ஜ.க-விற்கு தி.மு.க காட்டும் வழி!


நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சி இன்னும் பலமான தோற்றத்துடன் போட்டியிட வேண்டும் என்றால் அதன் தலைவர் நரேந்திர மோடியின் பெயரும் பெருமையும் தமிழ் மக்களுக்கு மேலும் தெரிய வேண்டும். அதற்கான வழி அந்தக் கட்சிக்கு சரியாகத் தெரியவில்லையே

கலைஞர் கருணாநிதி பிரபலமாவதற்காக அவரைப் புகழ்ந்து பாடிய பாடல்களை தி.மு.க எப்படி பட்டி தொட்டி எல்லாம் ஒலிபரப்பியதோ, அதே பாணியை பா.ஜ.க-வும் ஓரளவு பின்பற்றவேண்டும். இதற்காக, பா.. தனது தொலைநோக்கு, தனது தலைவர் மோடியின் தீரம், தனது தேர்தல் வீரம், எதிர்க்கட்சியினர் மீதான விமரிசனம் அனைத்தையும் உள்ளடக்கி ஒரு பிரசாரப் பாடலை தமிழகம் எங்கும் ஒலிக்கச் செய்யவேண்டும். தமிழ் நாட்டில் இந்த வழியை மறக்கவே கூடாது!

இதற்காக பா.. புதிதாகப் பாடல் எதையும் புனைய வேண்டாம். இருக்கவே இருக்கிறது ஒரு பிரலபமான எம்.ஜி.ஆர் பாடல் - எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் அவர் பாடுவதாக வரும்நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்என்னும் பாடல். அதன் முதல் வரியிலேயே எம்.ஜி.ஆர் கற்பனை செய்து பாடுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்பறம் என்ன? அந்தப் பாடலின் சில வரிகளை சிறிது மாற்றி, பா,,-வும் கருத்து பாதி, கற்பனை பாதி கலந்து ஒருவழியாக ஒப்பேத்த வேண்டியதுதான்! எப்படி என்கிறீர்களா? இதோ, இப்படித்தான்!


ஒரிஜினல் பாடல்
(வாலி எழுதியது)



ஒப்பேத்திய பாடல்!
(பெயர் முக்கியமில்லை!)


நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
                                   
இங்கு ஏழைகள் வேதனை
ப் படமாட்டார்.

உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை.

அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் ஏமாற்றப் படமாட்டார்!

உயிர் உள்ள வரை, ஒரு துன்பம் இல்லை!

அவர் இலவசக் கடலிலே விழ மாட்டார்!


ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!

உடல் உழைக்கச் சொல்வேன்!
அதில் பிழைக்கச் சொல்வேன்!

அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்!


ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால்

அவன் சி.எம் என்றாலும் விடமாட்டேன்!

நாடு தழைக்கச் சொல்வேன்!
அதற்குழைக்கச் சொல்வேன்!


நம் அரசின் பணத்தைத் தொட விடமாட்டேன்!

சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும்,
வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.



ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!


அவர் எப்போதும் வால்
பிடிப்பார்!


சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரைக் கொள்ளை அடிப்பார்!

ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!

அவர் எப்போதும் பிள்ளை பிடிப்பார்!


எதிர்காலம் வரும்!
என் கடமை வரும் !

இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!

பொது நீதியிலே, புது பாதையிலே

வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன்


எதிர்காலம் வரும்!
என் கடமை வரும்!

இந்தக் கூட்டத்தின் டெபாசிட்டை ஒழிப்பேன்!

பொது நீதியிலே, புது பாதையிலே

வரும் தாமரை மலர்ச்சியில் விழிப்பேன்! 


இங்கு ஊமைகள் ஏங்கவும்,
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன் ?




ஒரு கடவுள் உண்டு!
அவன் கொள்கை உண்டு!


அதை எப்போதும் காத்திருப்பேன்.



இங்கு ஸ்டாலின்கள் பிதற்றவும்,
ராகுல்கள் உளவும்
நானா பார்த்திருப்பேன்?

ஒரு தேசம் உண்டு!
அதன் மகிமை உண்டு!

அதை எப்போதும் காத்திருப்பேன். 


முன்பு ஏசு வந்தார்!
பின்பு காந்தி வந்தார்!

இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்.

இவர் திருந்தவில்லை!
மனம் வருந்தவில்லை!

அந்த மேலோர் சொன்னதை மறந்தார்


முன்பு காந்தி வந்தார்!
இன்று மோடி உள்ளார்!

இந்த நாட்டினர்  மேலெழ பிறந்தார்.

இவர் முயன்றதில்லை!
மனம் வருந்தவில்லை!

அந்த நல்லோர் சொன்னதை மறந்தார்


* * * * *


Copyright © R. Veera Raghavan 2019


Saturday 23 March 2019

பொள்ளாச்சியும் ஒரு பொளேர் உண்மையும்


பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வஞ்சகம் செய்து வரவழைத்து மானபங்கம் செய்திருக்கிறார்கள் சில இளைஞர்கள். அந்தக் கயவர்கள் விடியோ காட்சிகளையும் எடுத்து அந்தப் பெண்களை மேலும் அச்சுறுத்தி இருக்கிறார்கள்.  விஷயம் வெளிவந்து இப்போது போலீஸ் சில குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை செய்கிறது.

இந்தக் கொடுமையான நிகழ்ச்சி பற்றி பொது மக்களிடையே இரண்டு விதமான அபிப்பிராயம் உண்டு. "இந்த காலிப் பசங்களை கண்டம் துண்டமா வெட்டணும்!" என்று ஆத்திரம் கலந்த ஒன்று. "அவன் கூப்பிடான்னா இவளுக்கு புத்தி வேண்டாம்?" என்று வருத்தம் சேர்ந்த ஒன்று.  இரண்டுமே நல்ல எண்ணத்தில் எழுந்தவைதான்.  ’அராஜகம் செய்த பொறுக்கிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. இள வயது ஆண்-பெண் தொடர்பில், ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிப்படையலாம் என்பதால் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்ற நல்ல நோக்கத்தில் எழும் பேச்சுகள் இவை. இதெல்லாம் போக, பொள்ளாச்சி துயரத்தின் பின்னால் ஒரு பேருண்மை ஒளிந்திருக்கிறது.  அதையும் பார்க்க வேண்டும். 

பொது வாழ்வில் நேர்மை இல்லாமல் சுய சம்பாத்தியம் பார்த்தவாறு ஆட்சியில் அமர்ந்திருந்த தமிழக அரசியல்வாதிகள்தான் பொள்ளாச்சி அரக்கர்களின் பாதக செயல்கள் அரங்கேற பின்புலமாக இருந்தார்கள். அது எப்படி?

எந்த உயர்ந்த ஜனநாயக நாட்டிலும் பொள்ளாச்சி மாதிரியான நிகழ்வுகள் இத்தனை எளிதாக, இத்தனை நீண்ட காலமாக, இத்தனை அதிகமான பெண்கள் பாதிக்கப்படும் அளவிற்கு நடக்க முடியாது. இதற்கு காரணம், அந்த ஜனநாயக தேசத்து ஆண்கள் எல்லாம் மிக மிக கண்ணியமானவர்கள், நமது நாட்டு ஆண்கள் மிகவும் கண்ணியம் குறைந்தவர்கள் என்பதல்ல. வளர்ந்த ஜனநாயக நாடுகளில் நிலவும் சீரான திடமான சட்டம்-ஒழுங்கு, குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை கொடுத்து அவர்களை பெரும்பாலும் முளையிலேயே தடுத்து நிறுத்துகிறது. தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் அப்படி ஒரு அச்சத்தை போலீஸ் குற்றவாளிகளுக்கு ஏற்படுத்துகிறது என்று யாராவது நம்புவார்களா?

இந்தியாவின் பல மாநிலங்களில் போலீஸை உதவாக்கரை நிலையில் வைத்திருப்பவர்கள் ஆட்சியில் அமர்ந்த அரசியல்வாதிகள்தான். அப்படி வைத்திருந்தால்தானே அரசியல்வாதிகள் பல வழிகளில் சட்டத்தை மீறியபடி தங்களின் அக்கிரமங்களையும் சம்பாத்தியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும்? பாரபட்சமில்லாமல், மக்களுக்காக சட்டம்-ஒழுங்கை கறாராக செயல்படுத்தும் விதமாக போலீஸ்காரர்களை உருவாக்கினால், பிறகு அந்த போலீஸ்காரர்கள் எப்படி அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும் சட்ட மீறல்களையும் அனுமதித்து கண்டும் காணாமல் இருப்பார்கள்? அரசியல்வாதிகள் தங்கள் சம்பாத்தியத் தேவைகளுக்காக போலீஸ்காரர்களை வளைத்தால், போலீஸ்காரர்களும் சரியாக வேலை செய்யாமல் தங்கள் தேவைகளுக்காக பொது மக்களை இம்சிக்கத்தானே செய்வார்கள்? இது இயற்கை விதி அல்லவா? இதை அறிந்து, இதை விரும்பி ஆட்சி செய்பவர்கள்தானே நமது அரசியல்வாதிகள்?

நமது நாட்டில், அதுவும் தமிழ் நாட்டில், 'சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது, மக்களுக்கான பாதுகாப்பை பாரபட்சம் இல்லாமல் அளிக்க பொலீஸ் எப்போதும் தயாராக இருக்கிறது' என்று குற்றம் செய்பவர்களும் சரி, அவர்களால் பாதிக்கப்படும் சாதாரண மக்களும் சரி நினைப்பதில்லை. இதைத் தெரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டாம். ஒரு நாட்டு சட்டம்-ஒழுங்கின் லட்சணம், அதன் தெருக்களில் காணப்படும் போக்குவரத்து ஒழுங்கின் லட்சணத்திலேயே ஓரளவு வெளிப்படும். அதையும் தவிர, சாலைகளில் வலம் வரும் போலீஸ்காரர்களின் பேச்சிலும் தோரணையிலும் கூட சட்டம்-ஒழுங்கு தன்னை அடையாளம் காட்டும். பின்னர் நமது தெருவில், நமது பகுதியில், நமது ஊரில் போலீஸ்காரர்கள் உண்மையிலேயே யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் அல்லது இருப்பதில்லை என்கிற செய்தியும் காற்றில் வந்துகொண்டிருக்கும். இதெல்லாம் சேர்ந்துதான் பொதுமக்களுக்கு போலீஸ்காரர்கள் மீது நம்பிக்கையோ அவநம்பிக்கையோ ஏற்படுத்தும். லண்டனிலும் அப்படித்தான், நம் ஊரிலும் அப்படித்தான். இதில் என்ன வேறுபாடு என்றால், லண்டன் அரசியல்வாதிகளின் தரம் வேறு, நமது லோக்கல் அரசியல்வாதிகளின் தரம் வேறு.

இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதிகள், நமது மாநிலங்களின் தலைவர்கள் போல் சுய சம்பாத்தியத்தை பிரதானமாக வைத்து அரசியலுக்கும் ஆட்சிக்கும் வருவதில்லை. அதனால்தான் அங்கு போலீஸ்காரர்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டு மக்கள் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். குற்றங்களும் எளிதாகத் தலை எடுப்பதில்லை.

இன்னொன்று. 'பெண்களை துன்புறுத்துகிறவர்களுக்கு மிக அதிகமான தண்டனை கிடைக்கும்படி சட்டம் வைத்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும். அதன்படி, அகப்பட்ட சிலருக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தால், குற்றங்கள் குறையும். சட்டம் ஒழுங்கை அரசு சரியாகப் பராமரிக்கிறது என்று மக்களும் நம்பி விடுவார்கள்' என்று ஒரு தப்புக் கணக்கையும் அரசாங்கம் போடுகிறது - இல்லை, அப்படி ஒரு பாசாங்கு செய்கிறது.

பல குற்றங்கள் வெளிவராமல் போகவிட்டு, பல குற்றவாளிகளை பிடிக்காமலே விடுகிறது அரசாங்கம். பிறகு, தவிர்க்க முடியாமலோ மீடியாக்கள் பிரதானப் படுத்துவதாலோ வெளிவந்த பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை மட்டும் விரட்டிப் பிடித்து கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கிறது அரசாங்கம். வெளிச்சம் விழுந்த இந்த குற்றங்களை பலமாக தண்டிப்பதால் மட்டும் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் சரியாக உள்ளது என்று அர்த்தமல்ல. அப்பா உள்ளே வருகிற சத்தம் கேட்கும் சமயத்தில் மட்டும் புத்தகத்தை சடாரென்று விரித்துப் படிக்கும் பள்ளி மாணவன் போல நமது போலீஸ்காரர்கள் செயல்படுகிறார்கள்.  போலீஸை அப்படி உருவாக்கிவைத்து ஆட்டுவிக்கிறார்கள் அரசியல்வாதிகள். இது தவிர, குற்றம் செய்பவர்களுக்கு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்தால், படிக்காத பையனையும் தட்டிக் கொடுக்கும் அப்பாவாக இருக்கிறது போலீஸ்.

உங்கள் சுய லாபம் நிறைவேற, கைகள் கட்டிய போலீஸ்காரர்களையே வளர்த்துவரும் அரசியல்வாதிகளே, மக்கள் உங்களை அடையாளம் காணாதவரை மக்களின் சோகம் பல வழிகளில் தொடரும். மக்கள் கண் விழிக்கட்டும் என்று அவர்களுக்காக பலரும் பிரார்த்திக்கலாம்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019