Saturday 23 March 2019

பொள்ளாச்சியும் ஒரு பொளேர் உண்மையும்


பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வஞ்சகம் செய்து வரவழைத்து மானபங்கம் செய்திருக்கிறார்கள் சில இளைஞர்கள். அந்தக் கயவர்கள் விடியோ காட்சிகளையும் எடுத்து அந்தப் பெண்களை மேலும் அச்சுறுத்தி இருக்கிறார்கள்.  விஷயம் வெளிவந்து இப்போது போலீஸ் சில குற்றவாளிகளைக் கைது செய்து விசாரணை செய்கிறது.

இந்தக் கொடுமையான நிகழ்ச்சி பற்றி பொது மக்களிடையே இரண்டு விதமான அபிப்பிராயம் உண்டு. "இந்த காலிப் பசங்களை கண்டம் துண்டமா வெட்டணும்!" என்று ஆத்திரம் கலந்த ஒன்று. "அவன் கூப்பிடான்னா இவளுக்கு புத்தி வேண்டாம்?" என்று வருத்தம் சேர்ந்த ஒன்று.  இரண்டுமே நல்ல எண்ணத்தில் எழுந்தவைதான்.  ’அராஜகம் செய்த பொறுக்கிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கக் கூடாது. இள வயது ஆண்-பெண் தொடர்பில், ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிப்படையலாம் என்பதால் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்’ என்ற நல்ல நோக்கத்தில் எழும் பேச்சுகள் இவை. இதெல்லாம் போக, பொள்ளாச்சி துயரத்தின் பின்னால் ஒரு பேருண்மை ஒளிந்திருக்கிறது.  அதையும் பார்க்க வேண்டும். 

பொது வாழ்வில் நேர்மை இல்லாமல் சுய சம்பாத்தியம் பார்த்தவாறு ஆட்சியில் அமர்ந்திருந்த தமிழக அரசியல்வாதிகள்தான் பொள்ளாச்சி அரக்கர்களின் பாதக செயல்கள் அரங்கேற பின்புலமாக இருந்தார்கள். அது எப்படி?

எந்த உயர்ந்த ஜனநாயக நாட்டிலும் பொள்ளாச்சி மாதிரியான நிகழ்வுகள் இத்தனை எளிதாக, இத்தனை நீண்ட காலமாக, இத்தனை அதிகமான பெண்கள் பாதிக்கப்படும் அளவிற்கு நடக்க முடியாது. இதற்கு காரணம், அந்த ஜனநாயக தேசத்து ஆண்கள் எல்லாம் மிக மிக கண்ணியமானவர்கள், நமது நாட்டு ஆண்கள் மிகவும் கண்ணியம் குறைந்தவர்கள் என்பதல்ல. வளர்ந்த ஜனநாயக நாடுகளில் நிலவும் சீரான திடமான சட்டம்-ஒழுங்கு, குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை கொடுத்து அவர்களை பெரும்பாலும் முளையிலேயே தடுத்து நிறுத்துகிறது. தமிழ் நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் அப்படி ஒரு அச்சத்தை போலீஸ் குற்றவாளிகளுக்கு ஏற்படுத்துகிறது என்று யாராவது நம்புவார்களா?

இந்தியாவின் பல மாநிலங்களில் போலீஸை உதவாக்கரை நிலையில் வைத்திருப்பவர்கள் ஆட்சியில் அமர்ந்த அரசியல்வாதிகள்தான். அப்படி வைத்திருந்தால்தானே அரசியல்வாதிகள் பல வழிகளில் சட்டத்தை மீறியபடி தங்களின் அக்கிரமங்களையும் சம்பாத்தியத்தையும் சாதித்துக் கொள்ள முடியும்? பாரபட்சமில்லாமல், மக்களுக்காக சட்டம்-ஒழுங்கை கறாராக செயல்படுத்தும் விதமாக போலீஸ்காரர்களை உருவாக்கினால், பிறகு அந்த போலீஸ்காரர்கள் எப்படி அரசியல்வாதிகளின் அட்டூழியங்களையும் சட்ட மீறல்களையும் அனுமதித்து கண்டும் காணாமல் இருப்பார்கள்? அரசியல்வாதிகள் தங்கள் சம்பாத்தியத் தேவைகளுக்காக போலீஸ்காரர்களை வளைத்தால், போலீஸ்காரர்களும் சரியாக வேலை செய்யாமல் தங்கள் தேவைகளுக்காக பொது மக்களை இம்சிக்கத்தானே செய்வார்கள்? இது இயற்கை விதி அல்லவா? இதை அறிந்து, இதை விரும்பி ஆட்சி செய்பவர்கள்தானே நமது அரசியல்வாதிகள்?

நமது நாட்டில், அதுவும் தமிழ் நாட்டில், 'சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது, மக்களுக்கான பாதுகாப்பை பாரபட்சம் இல்லாமல் அளிக்க பொலீஸ் எப்போதும் தயாராக இருக்கிறது' என்று குற்றம் செய்பவர்களும் சரி, அவர்களால் பாதிக்கப்படும் சாதாரண மக்களும் சரி நினைப்பதில்லை. இதைத் தெரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டாம். ஒரு நாட்டு சட்டம்-ஒழுங்கின் லட்சணம், அதன் தெருக்களில் காணப்படும் போக்குவரத்து ஒழுங்கின் லட்சணத்திலேயே ஓரளவு வெளிப்படும். அதையும் தவிர, சாலைகளில் வலம் வரும் போலீஸ்காரர்களின் பேச்சிலும் தோரணையிலும் கூட சட்டம்-ஒழுங்கு தன்னை அடையாளம் காட்டும். பின்னர் நமது தெருவில், நமது பகுதியில், நமது ஊரில் போலீஸ்காரர்கள் உண்மையிலேயே யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் அல்லது இருப்பதில்லை என்கிற செய்தியும் காற்றில் வந்துகொண்டிருக்கும். இதெல்லாம் சேர்ந்துதான் பொதுமக்களுக்கு போலீஸ்காரர்கள் மீது நம்பிக்கையோ அவநம்பிக்கையோ ஏற்படுத்தும். லண்டனிலும் அப்படித்தான், நம் ஊரிலும் அப்படித்தான். இதில் என்ன வேறுபாடு என்றால், லண்டன் அரசியல்வாதிகளின் தரம் வேறு, நமது லோக்கல் அரசியல்வாதிகளின் தரம் வேறு.

இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதிகள், நமது மாநிலங்களின் தலைவர்கள் போல் சுய சம்பாத்தியத்தை பிரதானமாக வைத்து அரசியலுக்கும் ஆட்சிக்கும் வருவதில்லை. அதனால்தான் அங்கு போலீஸ்காரர்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டு மக்கள் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். குற்றங்களும் எளிதாகத் தலை எடுப்பதில்லை.

இன்னொன்று. 'பெண்களை துன்புறுத்துகிறவர்களுக்கு மிக அதிகமான தண்டனை கிடைக்கும்படி சட்டம் வைத்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும். அதன்படி, அகப்பட்ட சிலருக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தால், குற்றங்கள் குறையும். சட்டம் ஒழுங்கை அரசு சரியாகப் பராமரிக்கிறது என்று மக்களும் நம்பி விடுவார்கள்' என்று ஒரு தப்புக் கணக்கையும் அரசாங்கம் போடுகிறது - இல்லை, அப்படி ஒரு பாசாங்கு செய்கிறது.

பல குற்றங்கள் வெளிவராமல் போகவிட்டு, பல குற்றவாளிகளை பிடிக்காமலே விடுகிறது அரசாங்கம். பிறகு, தவிர்க்க முடியாமலோ மீடியாக்கள் பிரதானப் படுத்துவதாலோ வெளிவந்த பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை மட்டும் விரட்டிப் பிடித்து கடுமையான தண்டனை வாங்கி கொடுக்கிறது அரசாங்கம். வெளிச்சம் விழுந்த இந்த குற்றங்களை பலமாக தண்டிப்பதால் மட்டும் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் சரியாக உள்ளது என்று அர்த்தமல்ல. அப்பா உள்ளே வருகிற சத்தம் கேட்கும் சமயத்தில் மட்டும் புத்தகத்தை சடாரென்று விரித்துப் படிக்கும் பள்ளி மாணவன் போல நமது போலீஸ்காரர்கள் செயல்படுகிறார்கள்.  போலீஸை அப்படி உருவாக்கிவைத்து ஆட்டுவிக்கிறார்கள் அரசியல்வாதிகள். இது தவிர, குற்றம் செய்பவர்களுக்கு ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்தால், படிக்காத பையனையும் தட்டிக் கொடுக்கும் அப்பாவாக இருக்கிறது போலீஸ்.

உங்கள் சுய லாபம் நிறைவேற, கைகள் கட்டிய போலீஸ்காரர்களையே வளர்த்துவரும் அரசியல்வாதிகளே, மக்கள் உங்களை அடையாளம் காணாதவரை மக்களின் சோகம் பல வழிகளில் தொடரும். மக்கள் கண் விழிக்கட்டும் என்று அவர்களுக்காக பலரும் பிரார்த்திக்கலாம்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019






3 comments:

  1. Well written. One aspect has perhaps missed the author. Police and superintendace or severe criminal are not t enough .The entertainment industry is sashing out grossly obscene and almost bordering on pornographic material. Even when the story does not want such intimate scenes they are in most cinema
    There was a time in India when DH Lawrence 's book "Lady Chatterlys lovers" was proscribed.
    The hero and the heroin express love for each other in movies keeping a distance of one foot apat
    The "me too" revelation did not do is proud.
    The literature drama cinema and Utube have to self regulate. No amount of detterent punishment will help reform
    In fact the urge to earn money fair or foul is the root cause. Every section of society be police; politician; bureaucrat or ordinary citizen need to reform the young adul to by example

    ReplyDelete