Monday 26 October 2020

திமிர்மாவளவன்!

 

-- ஆர்.வி.ஆர்

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஹிந்து மதத்தைப் பழித்து அற்ப சந்தோஷம் கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்களில் அவரும்  ஒருவர்.  அற்ப சந்தோஷத்தில்  பெருமை கண்டு வலம் வருவது திமிரின் அடையாளம். திருமாவளவனின் அடையாளமும் கூட.

 

சென்ற மாதம் திருமாவளவன் ஒரு இணையதளக்  கருத்தரங்கில் பேசியதின் வீடியோ பதிவு சமீபத்தில் வெளிவந்தது. அதில் அவர் உளறிய ஒரு பகுதி இது: “இந்து தர்மம், சனாதன தர்மம், மனு தர்மப் படி, எல்லாப் பெண்களுமே அடிப்படையில் கடவுளால் ‘பரத்தையர்களாக’, அதாவது ‘விபச்சாரிகளாக’,  படைக்கப் பட்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தில் பெண்கள் இப்படித்தான் நடத்தப் படுகிறார்கள், நசுக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள் ........ ”

 

பலரும்  தனது வீடியோ பேச்சைக்  கண்டனம் செய்வதைப் பார்த்தார் திருமாவளவன். உடனே சடாரென்று மனுஸ்மிருதி, பா.ஜ.க இரண்டையும் ஒன்றாக எதிர்த்து, மனு காலத்துப் பெண்களை விட்டுவிட்டு தற்காலப் பெண்களின் பாதுகாவலராக மாறிவிட்டார். அதன்படி, 23.10.2020 அன்று ட்விட்டர் மூலமாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.  அதில் அவர் சொல்வது: “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன  சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக்  காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன...”  இதனால் மனுஸ்மிருதிக்கு மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். மறுநாள் அவரது கட்சி ஆர்ப்பாட்டமும் நடத்தியது திருமாவளவன் நீளமாகப் பேசினார்.

 

முதலில் ஒன்று. மனு தர்மத்தின் ஒரு உள்ளடக்கம் என்று குறுப்பிட்டு திருமாவளவன் இணையதள கருத்தரங்கில் பேசியதற்கான மூல ஆதாரம்  எதையும் அவர் அப்போதும் சொல்லவில்லை, பின்னர் நிகழ்த்திய ஆர்ப்பாட்ட மேடை  உரையிலும் சொல்லவில்லை. அவரது கட்சி எம்.பி-யான ரவிக்குமார், மனுஸ்மிருதியின் ஒரு ஆங்கில மொழி பெயர்ப்புப் புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தைத் தேர்ந்தெடுத்து அதன் முதல் பக்கத்தை 23.10.2020 தேதியன்று ஆதாரமாக  வெளியிட்டார். அந்தப் பக்கத்திலும் கூட, திருமாவளவனின் ஹிந்துப் பெண்கள் இழிவுப் பேச்சின் பிரதிபலிப்போ ஆதார மூலமோ காணப்படவில்லை.  அதுவும் குறிப்பிட்ட அந்த பழிச் சொல் அந்தப் பக்கத்தில் இல்லவே இல்லை.    

                                                                                      

ஹிந்து மதத்தின் மீது தனக்குள்ள வெறுப்பைக் கொச்சையாக வெளிப்படுத்தி, ஹிந்துப் பெண்களை அபாண்டமாக இழிவுபடுத்தும் வரை திருமாவளவன் சென்றிருக்கிறார். உண்மையில் அவர் இணையதளத்தில் சொல்ல வந்தது இதுதான்:  “ஹிந்துக்களே! இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஹிந்துக்களுக்கு தர்ம-நியாயம் சொன்ன மனு, பெண்களை எப்படி இழிவாக வர்ணித்திருக்கிறார் பாருங்கள்! பிற்கால இந்தியாவின், அதுவும் சுதந்திர இந்தியாவின், நிலைமையும் சட்டமும் வேறாக இருக்கலாம்! இப்போது ஹிந்துப் பெண்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக, பிரதமராக, முதல் அமைச்சர்களாக ஆகி இருக்கலாம்! ஆண் தலைவர்களை நடுக்கத்தில் வைத்துத்  தம் காலில் விழவைக்கும் அரசியல் கட்சித் தலைவிகளாகவும்  இருக்கலாம்! ஆனால் அந்தக் காலத்தில் பெண்களை கீழ்மையாகச் சொன்ன ஒரு ரிஷி இருந்த மதம்தானே ஹிந்து மதம்? இந்த மதத்தில் ஹிந்துக்கள் தொடரலாமா? கூடாது! கூடாது!”  இவர் பேச்சிலும் அடிப்படை உண்மை இல்லை, நோக்கத்திலும் நேர்மை இல்லை.

 

சில நூற்றாண்டுகளாக ஹிந்துக்களே வாழாத ஒரு வாழ்க்கை முறை மனுதர்மம், பின்பற்றாத நூல் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதியைப் பற்றி இப்போது யாருக்கும் தெரியாது, அது நம்மிடையே சட்டமாகவும் இல்லை. ஆனால் மனதளவில் ஹிந்துக்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு - அது ஆதி காலத்திலிருந்து ஹிந்துக்களிடம் தொடர்ந்து நீடிக்கிறது. அந்தக் கடவுளையும் ஹிந்துப் பெண்களையும்  ஒருசேர அநாகரிகமாகப் பழித்து அவமதித்து, அந்தப் பழிப்பு வார்த்தைகள் மனுதர்மத்தில் உள்ளது என்று ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசிய திருமாவளவனை சட்டமும் வாக்காளர்களும் தண்டிக்கவேண்டும். 

    

திருமாவளவனின் பெண்கள்-இழிவுப் பேச்சுக்காக சென்னை போலீஸ் அவர் மீது வழக்குப் பதிந்தது.  உடனே என்ன நடக்கக் கூடுமோ அது நடந்தது. தி. மு. க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து, அவர் மீது   வழக்குப் பதிவானதைக் கண்டித்து அது திரும்பப் பெறப் படவேண்டும் என்று அறிக்கை தந்தார். காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்திற்கு, அதே ரீதியில் திருமாவளவனின் பேச்சிற்கு துணை நிற்க வெட்கமாக இருந்திருக்க வேண்டும்.

 

ஒரு ட்வீட் போட்டார் சிதம்பரம். அதில் திருமாவளவன்  மீது பதிவான வழக்கைக் குறுப்பிட்டு, அவர் “பேசிய பொருள் ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம்.  ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றமாகும்?  பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள்தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசி இருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?” என்று நடுத்தரமாகச் சொல்லி முடித்துக் கொண்டார்.   

 

‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்று உச்சரித்த தனது கட்சியின் பெரும் தலைவர், தேசப் பிதா   மகாத்மா காந்தி இன்று உயிரோடு இருந்தால் திருமாவளவனின் பெண்கள்-இழிவுப் பேச்சைக் கண்டிப்பார் என்று நினைக்காமல் – நினைத்தாலும் அதைச்   சொல்ல முடியாமல் -  “தந்தை பெரியார் இன்று இருந்து திருமாவளவன் மாதிரிப் பேசினால் அவர்மீதும் வழக்கா போடுவீர்கள்?” என்று பித்துக்குளித்தனமாக கேட்கிறார் ப. சிதம்பரம்.  தமிழ்நாட்டு அரசியலில்  தி.மு.க மற்றும் வி.சி.க-வுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்றால் எப்படி அசட்டுத்தனமாக சிந்திக்க வேண்டி இருக்கிறது! அசட்டு ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்கி வாங்கிப் பழக்கப்பட்ட சிதம்பரத்திற்கு இதெல்லாம் அத்துப்படி.  

 

ஒரு நடைமுறை விஷயத்தையும் பார்க்கலாம். அரசியல் தலைவராக இருக்கும் ஒருவர் அதிக விஷயங்கள் பேச வேண்டும், அதிக நேரமும் பேச வேண்டும். ஆனால் மக்கள் கவனத்தைப் பெறாத விஷயங்களை அவர் அதிகம் பேசக் கூடாது. அது கால விரயம். அனாவசிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளும் பேச்சையும் அவர் தவிர்க்க வேண்டும். அதை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கினால் அதற்கு பதில் சொல்லியே அவருக்கு மாளாது.

 

எல்லாம் போகட்டும். யுகம் யுகமாகப் பெண் தெய்வங்களை வணங்கி வருபவர்கள் ஹிந்துக்கள். பெண் தெய்வங்கள் பெயரில் ஹிந்துக் கோவில்களும் உண்டு. அப்படியான ஹிந்துக்களுக்கு தர்ம நியாயம் உபதேசித்த ஒருவர் - மனுவோ  யாரோ - பெண்கள் அகௌரவத்திலும் அவமானத்திலும் வீழ்ந்து கிடக்கும் ஒரு நிலையை, அதாவது திருமாவளவன் விவரித்த நிலையை, படைத்த கடவுளே எல்லாப் பெண்களுக்கும் கொடுத்தார் என்று எழுதி வைப்பாரா? அந்தப் பரிதாப நிலைதான் உண்மையாக இருந்திருக்க முடியுமா? தாயும் தாரமும் மகளும் கொண்டிருந்த அரசர்களும் அமைச்சர்களும் பொது  மக்களும்  அப்படி அவமானம் மிக்க சித்தரிப்பைக் காலம் காலமாக ஏற்றார்கள், ஆனால் திருமாவளவன் வந்துதான் ஒரு மாதத்திற்கு முன் இக்காலத்து ஹிந்துக்களின் கண்ணையாவது திறந்து விட்டார் என்று ஆகுமா? இதை ஏன் திருமாவளவன் யோசிக்கவில்லை?  மைக் கிடைத்தால் ஒரு அரசியல்வாதி இந்த அளவிற்கா தரம் தாழ்ந்து புத்தி மழுங்கிப் போவார்? 

  

தேர்தல் பாதிப்புகளையும் யோசிக்கலாம். 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு லோக் சபா தேர்தல்களிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். அதற்கு ஒரு முக்கிய காரணம் மோடி என்ற மனிதரின் தலைமைப் பண்புகள். இன்னொரு காரணம், இந்த தேசத்தில் ஊறிய ஹிந்து மத நம்பிக்கைகளை பா.ஜ.க புறம் தள்ளாமல் தாங்கிப் பிடித்தது - பிற மதத்தவர்களையும் அணைத்து. வெளியில் சொல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் இந்த உண்மை தெரியும்.  அப்படியானால், எதிர்க் கட்சிகள் மோடியைக் குறை சொல்லட்டும், அவரது செயல் திட்டங்களைக் குறை சொல்லட்டும். ஆனால் ஹிந்து மத மக்களை, அந்த மதப் பெண்களை, இப்படிக் கீழ்த்தரமாகப் பேசினால் என்ன ஆகும்? அந்தப் பெண்களை மட்டுமல்ல, அவர்கள் வீட்டின் ஆண்களையும் அந்தப் பேச்சு  நோகடிக்குமே, அவர்கள் தேர்தலில் நமக்கு எதிராக, நமது கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பலாமே என்ற எண்ணமாவது ஒரு அரசியல் தலைவருக்கு இருக்காதா? இருக்க வேண்டாமா?

 

தமிழக அரசியல் களத்தில், தலைவர்களின் எந்த இரட்டை வேஷமும், எந்த ஊழல் கறையும், எந்த கண்ணியக்  குறைவான பேச்சும் அவர்களுக்குத் தேர்தல்களில் நஷ்டம் தராதோ? அடுத்து, தண்டனை முடிந்து ஜெயிலில் இருந்து வெளிவரும் ஒரு தலைவருக்கும் கூட்டம் கூடுமோ?  

 

தப்பு செய்யும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் தாங்கள் பாதிக்கப் படமாட்டோம் என்று நினைக்கிறார்கள் – கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும். அதே சமயம், மாற்றத்திற்காகக்  காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது, புதிய தலைவர்களும் அரும்புகிறார்கள்.  நல்லவர்கள் நம்பிக்கையை விடாமல் வைத்திருக்க வேண்டும் – திருமாவளவன் போன்றவர்கள் வலுவிழக்கும் வரை.  தமிழ் நாட்டில் அதுதானே வழி?

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2020