Tuesday 16 April 2024

‘இண்டி’ கூட்டணியில் ஏன் பிரதமர் வேட்பாளர் கிடையாது? ஸ்டாலின் அற்புத விளக்கம்!

  

          -- ஆர். வி. ஆர் 

 

நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. “யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தலின் குறிக்கோள் – யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை அல்ல” என்று ஒருவர் பிதற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  சிரிப்பீர்கள். அவரே, தமிழக முதல்வர்  ஸ்டாலினாக இருந்தால்?  சற்றுப் பெரிதாக சிரிப்பீர்கள்.


சமீபத்தில் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த ஒரு பேட்டியில்தான் ஸ்டாலின் அப்படிப் பேசி இருந்தார்.

 

ஒரு பதவிக்குப் பலர் ஆசைப்படும்போது, அதற்காக அவர்கள் போட்டியிடும்போது, போட்டியாளர்களில் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்பதை சம்பத்தப்பட்டவர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்யும் வழிமுறை தேர்தல். இதை ஆங்கிலத்தில் elect (எலெக்ட்) செய்வது என்றும், இந்த வழிமுறையை  election (எலெக்ஷன்) என்றும் சொல்கிறோம்.

 

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு அணியையோ அல்லது கட்சியையோ  அரசு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முறை இருக்கிறது, அந்தப் பெரும்பான்மை தேர்தல் மூலமாகத் தீர்வு செய்யப்படுகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.

 

மக்கள் ஓட்டுப் போட்டு, தேர்தல் மூலம் ஒரு பதவிக்கு ஓருவர் தேர்வானால் – கவுன்சிலராகவோ, சட்டசபை உறுப்பினாராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினாராகவோ – அதன் மறுபக்கமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றவர்கள் தேர்வாகவில்லை என்று ஆகிவிடுகிறது. ஆனால் தேர்தலின் நோக்கம் என்ன? யார் ஒருவர் தேர்வாகிப் பதவிக்கு வந்து செய்யலாற்ற வேண்டும் என்பதா? அல்லது ஸ்டாலின் சொல்ல வருவது போல், எந்தப் போட்டியாளர் தோற்றுப் போகவேண்டும் என்று முதலில் தீர்மானிக்கப் பட்டு, எஞ்சியவர்களில் ஒருவர் – அந்த மனிதர் எப்படியானவராக இருந்தாலும் – ஜம்மென்று பதவி நாற்காலியில் அமர்ந்து அவருக்குத் தோன்றுகிற, அவரால் முடிகிற, வேலைகளைப் பார்க்கட்டும் என்பதா?

 

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்னும் புரியவில்லையா? சரி, அவருக்காகத் தேர்தலின் நோக்கத்தை இப்படி விளக்கலாம்.    

 

தேர்தல் என்பது ஒரு வகையில் ஓட்டப் பந்தயம் மாதிரி. ஓட்டப் பந்தயத்திற்கு ஒரு நடுவர் உண்டு. அவர் என்ன செய்வார்? ஓடும் விளையாட்டு வீரர்களில் யார் முதலில் எல்லைக் கோட்டைக் கடந்தார் என்று பார்த்து, எந்த விளையாட்டு வீரர் ஜெயித்தார், இரண்டாவதாக, மூன்றாவதாக வந்த வீரர்கள் யார் யார் என்றும் பார்த்து, போட்டியின் முடிவுகளை நடுவர் அறிவிப்பார்.  

 

எந்த ஓட்டப் பந்தயமும் நடப்பது எதற்கு? தோற்பவர் யார், அதுவும் மிகக் கடைசியில் வருபவர் யார், என்று தீர்மானித்து அதை அனைவரும் தெரிந்துகொள்ளவா? அல்லது, எந்த விளையாட்டு வீரர் முதலாவதாக வரப் போகிறார் என்று பார்த்து அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து கவுரவிப்பதா? 

 

முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா? அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் காரண காரியமாகத் தனது பேட்டியில் இப்போது பிதற்றி இருக்கிறார். இதே பிதற்றலை அவரது ‘இண்டி’ கூட்டணியின் மற்ற தலைவர்களும்  வேறு வழியில்லாமல் பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்.

 

நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கும், பாஜக-வின் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார் என்பது நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு.  தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றிருக்கின்றன. மோடியை எதிர்த்து, பாஜக-வை வென்று, மத்தியில் தாங்கள் கூட்டாக ஆட்சி அமைக்க முடியும் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூட நம்பவில்லை.

 

திமுக, காங்கிரஸ் என்று ‘இண்டி’ கூட்டணியில் 28 கட்சிகளோ என்னவோ இருக்கின்றனவாம். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தால், அதன் சிறந்த நடவடிக்கைகளால்,  பத்து வருடங்களாக எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டத்தையாவது தாங்கலாம், நஷ்டத்தைச் சொல்லவும் முடியவில்லை, நீண்ட காலம் தாங்கவும் முடியவில்லை. அவர்களின் நஷ்டம், அவர்களின் வேதனை, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

 

தனித் தனியாக மோடியை எதிர்த்து மாளவில்லை என்பதால் கூட்டுசேர்ந்து, கசப்புடன் தமக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு, பாஜக-வை இந்தத் தேர்தலில் எதிர்க்கின்றன ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள். ஆனாலும், இந்தத் தேர்தலில் தங்கள் கூட்டணி ஜெயித்தால் தமக்குள் இன்ன கட்சியின் இன்ன தலைவர்தான் பிரதமராக வருவார் என்று இந்தக் கூட்டணிக் கட்சிகள் எதையும் தங்களுக்குள் ஏற்றுக் கொண்டு அறிவிக்கத் தயாரில்லை. காரணம்: தான் பிரதமராக வந்தால் தனக்கு அதிக லாபம், தனக்கு அதிகப் பயன், என்று அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு அந்த மகா பெரிய அனுகூலத்தைக் கூட்டணியில் உள்ள மற்ற ஒரு கட்சியின் தலைவருக்கு முன்னதாகவே தாரை வார்த்துவிட அந்தக் கூட்டணித் தலைவர்கள் என்ன மக்குகளா? இப்போது விட்டுக் கொடுத்தால் அடுத்த சான்ஸ் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும்?

 

தமக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிக்க முடியாததால், அதை நேரடியாகச் சொல்லவும் முடியாமல், ‘இந்தத் தேர்தல் நடப்பது, யார் ஜெயித்து வரக் கூடாது என்பதற்காக’ என்று அந்தக் கூட்டணித் தலைவர்கள் ஏதோ பிதற்றி மகிழ்கிறார்கள். அப்படிப் பேசி, தங்களின் தீராத பரஸ்பரப் போட்டியையும் பொறாமையையும் மறைக்க  முனைகிறார்கள். அதுதான் விஷயம்.

 

‘நமது கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, நமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. நம்மில் எவரும் பிரதமர் ஆகப் போவதில்லை. நம்மில் எவருக்கும் கிடைக்க முடியாத வெற்றிப் பழத்திற்கு நாம் ஏன் முன்னதாக அடித்துக்கொள்ள வேண்டும்?’ என்ற நடைமுறை சிந்தனைதான், ஸ்டாலினும் மற்ற ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரிப் பிதற்றி வருவதின் காரணம்.  

 

ஏதோ இந்த வரையிலாவது ‘இண்டி’ கூட்டணித் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்று நினைத்து நாம் மீண்டும் ஒரு முறை சிரித்துக் கொள்ளலாம்.  வேறென்ன?

* * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

 

 

 

Wednesday 10 April 2024

அரசியலில் ஒரு அரைகுறை - ராகுல் காந்தி

 

-- ஆர். வி. ஆர்

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்கள் முன்பு டெல்லி ராம் லீலா மைதானத்தில் இப்படிப் பேசினார்: “நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தல், நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் பாதுகாப்பதற்கான தேர்தல். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ‘மேட்ச் பிக்சிங்’ செய்ய நினைக்கிறார்.”

 

ராகுல் மேலும் பேசியது: “இந்தத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெல்ல பாஜக கோஷம் போடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லாமல், ‘மேட்ச் பிக்சிங்’ செய்யாமல், எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம் தராமல், மீடியாவை விலைக்கு வாங்காமல், அவர்கள் 180 சீட்டுகள் கூட ஜெயிக்க முடியாது. பாஜக-வின் முயற்சிகள் வென்றால், நாட்டின் அரசியல் சட்டம் மாற்றப் படும், மக்களின் உரிமைகள் பறிக்கப் படும்.  பிறகு எங்கும் தீப்பற்றி எரியும்.”


தான் ஒரு அரைகுறை என்று இப்போதும் காண்பிக்கிறார் ராகுல் காந்தி. அவர் என்ன சொல்ல வருகிறார், பாருங்கள்.

 

லோக் சபாவுக்குத் தேர்தல் நடக்கும் சீட்டுகள் 543. மத்தியில் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்த பட்சம் 272 சீட்டுகள் வெல்ல வேண்டும். இந்தப் பின்னணியில் ராகுல் காந்தி சொல்ல வருவது: ‘இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 180 சீட்டுகளுக்கு மேல் கிடைத்து அவர்கள் ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியையும் எட்டிவிட்டால், அதற்கு நான்கு காரணங்கள்தான் இருக்க முடியும்.’

 

முதலாவதாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை உபயோகிப்பது பாஜக தகிடுதத்தம் செய்வதற்கான வழி, அவர்கள் மோசடியாக 180 சீட்டுகளுக்கு மேல் வெல்வதற்கு அந்த எந்திரங்கள் காரணம் என்று ராகுல் ஆதாரமில்லாமல் பேச வருகிறார். அதோடு, அந்த முறைகேடு நடப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் துணை என்றும் அபாண்டமாகச் சொல்ல வருகிறார் அவர்.    

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், லோக் சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் ஒரு நிச்சய அம்சம் என்றாகி விட்டன. அப்படி என்றால் ராகுலின் பேச்சுக்கு என்ன அர்த்தம்?

 

வருகின்ற லோக் சபா தேர்தலில், அல்லது எந்த  சட்டசபைத் தேர்தலிலும், காங்கிரஸ் தோற்றால், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இல்லாமல், காகித வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்திருந்தால் எங்கள் கட்சிதான், எங்கள் கூட்டணிதான், ஜெயித்திருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் சொல்லிக் கொண்டே இருப்பாரா? ஒரு தேர்தல் முடிவில் மக்கள் குரலை மதிக்கத் தெரியாமல், இப்படிப் பொதுவெளியில் வெட்கம் இல்லாமல் பேசும் ஒரு தலைவர் இந்தியாவில் வேறு யார் இருக்கிறார்?

 

ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ராகுல் காந்தி மாதிரி காங்கிரஸில் ஒரு வாரிசுத் தலைவர். ஆனால் அவரே கூட, “மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் யாரும் தில்லுமுல்லு செய்ய முடியாது. மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள், அதிக ஓட்டுக்கள் பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் ஜெயிக்கிறார்கள், அவ்வளவுதான்” என்று ஒரு ஒரு வீடியோ பேட்டியில் சொல்லிவிட்டார்.  இந்த அளவு நேர்மை கூட ராகுல் காந்தியிடம் இல்லை.  

 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடக்கிறது என்றால், வழக்கமான அமேதியை விட ஏன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் அதிக நம்பிக்கை வைக்கிறார்?  வயநாடு தொகுதி எந்திரங்களில் மட்டும் எவரும் மோசடி செய்ய முடியாது, ஆனால் மற்ற தொகுதி எந்திரங்களில் அது சாத்தியம் என்பதாலா? அல்லது, அமேதியில் கிடைக்காத பெரும்பான்மை வாக்குகள் ராகுல் காந்திக்கு நிஜமாகவே வயநாடில் கிடைகின்றன, மற்ற தொகுதிகளைப் போல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கேயும் முடிவுகளைச் சரியாகக் காட்டுகின்றன என்பதாலா? ராகுல் காந்தி வயநாடில் ஜெயித்தால், மக்கள் கொடுத்த வெற்றி; பாஜக வேட்பாளர்கள் மற்ற தொகுதிகளில் ஜெயித்தால் அங்கு வாக்குப்பதிவு எந்திர மோசடியா?

 

ராகுல் காந்தி அடுத்துப் பேசியது, ‘மேட்ச் பிக்சிங்’ என்று ஒரு உளறலோ உளறல், ‘மீடியாவை விலைக்கு வாங்குதல்’ என்று ஒரு பேத்தல், ‘எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம்’ என்று ஒரு அர்த்தமற்ற கோழைத்தனம்.  

 

ராகுல் காந்தி பேசியது எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. பிறகு என்ன, 'மீடியாவை விலைக்கு வாங்குவது'?

 

எல்லா எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மோடியை எதிர்க்க ஒரு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். பிறகு என்ன, 'எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அழுத்தம்'? எந்த ஒரு அரசியல் கட்சியும், தன்னை எதிர்க்கும் மற்ற கட்சியைச்  சட்டத்திற்கு உட்பட்டுக் கூடியவரை நெருக்குவதும், பலவீனமாக்குவதும் அரசியலில் நடப்பது, புரிந்துகொள்ளக் கூடியது. இருந்தாலும் மேடை ஏறி மூக்கால் அழுகிறார் ராகுல்.

 

தனது பேச்சில் இதோடு நிற்கவில்லை ராகுல் காந்தி. பாஜக இந்த லோக் சபா தேர்தலில் ஜெயித்தால், அப்போது அரசியல் சட்டத்தை மாற்றி மக்களின் உரிமைகளைப் பறித்துவிடுமாம் அந்தக் கட்சி. சரி, பாஜக எதற்காக அதைச் செய்யவேண்டும்? அரசியல் சட்டத்தை அப்படி மாற்றாமல் பாஜக தேர்தலில் ஜெயித்து ஏற்கனவே இரண்டு முறை மோடி பிரதமர் ஆனார். இப்போது மூன்றாவது முறையும் பாஜக ஜெயித்து மோடி பிரதமர் ஆகிவிட்டால், இனி எதற்காக பாஜக அரசியல் சட்டத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும்? 


பாஜக நினைப்பதாக ராகுல் காந்தி பேசும் அந்த அரசியல் சட்ட மாற்றங்கள் என்ன, ஏது, எத்தகையவை என்று அவர் சொல்லவும் இல்லை. மங்கலாக ஒரு பூச்சாண்டியைக் காண்பிக்கிறார் ராகுல்,  அவ்வளவுதான்.  என்ன இருந்தாலும், எதுவானாலும், சுப்ரீம் கோர்ட்டின் மீதும் ராகுலுக்கு நம்பிக்கை இல்லையா?

 

கடைசியாக, எரிகின்ற தனது நப்பாசையை ராகுல் காந்தி எப்படியோ சொல்லிவிட்டார். அதாவது, இந்த முறை பாஜக ஜெயித்து அவர்கள் அரசியல் சட்டத்தையும் மாற்றிவிட்டால், பிறகு நாட்டில் எங்கும் தீப்பற்றி எரியுமாம்!

 

ராகுல் காந்தி அரசியலில் ஒரு அரைகுறையாக இருந்தால் போகட்டும். ஆனால் தேச விடுதலைக்காகத் தியாகம் செய்து இந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்த பல தலைவர்கள் வளர்த்த காங்கிரஸ் கட்சி, இன்று இந்த அரைகுறையின் கையில் இருக்கிறது. இது பெரிய சோகம்.

 

ராகுல் காந்தி ஒரு அரைகுறை என்று தெரிந்தும், இவரை அண்டியும் தாங்கியும் நின்றிருந்தால் கட்சிக்குள் தங்கள் இடத்தை எளிதாகக் காத்துக் கொள்ளலாம், தங்களின் தனிப்பட்ட வளமைக்கு அது ஏதுவானது என்ற நினைப்பில் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் பல மூத்த தலைவர்களின் சுயநலம், அந்தக் அக்கட்சியின் இன்னொரு துர்பாக்கியம்.

 

நினைத்துப் பாருங்கள். நரேந்திர மோடி மட்டும் காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சராக குஜராத்தில் பதிமூன்று ஆண்டுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டுப் பின்னர் காங்கிரஸ் பிரதமராகவும் பத்தாண்டுகள் ஜொலித்திருந்தால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் இப்படிச் சுயநலமிகளாக இருக்க மாட்டார்கள், அவர்களில் திறமைசாலிகள் மட்டும் மேலே உயர்ந்திருப்பார்கள், இல்லையா? ஆக, ஒரு கட்சியின் உயர் தலைவன் எப்படி அமைகிறான் என்பதை வைத்துத்தான் அக் கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்கள் அமைகிறார்கள், வளர்க்கப் படுகிறார்கள்.

 

இப்போது என்னிடம் ஏதோ சொல்கிறீர்களே, என்ன சொல்கிறீர்கள்? ஓஹோ, "பாஜக-வில் வாஜ்பாய் மாதிரி ஒரு தலைவர் இருந்ததால், மோடி மாதிரி ஒருவர் குஜராத்தில் முதல்வர் ஆனார். ஒரு கட்சிக்கு சோனியா காந்தி மாதிரி ஒரு குறுமதித் தலைவர் கிடைத்தால், அவருக்கு ராகுல் காந்தி மாதிரி ஒரு வாரிசு இருக்கும்போது, அந்த வாரிசு அரைகுறையாக இருந்தாலும் கட்சிக்குள் அடுத்த தலைவராக அவர்தானே வர முடியும், மோடி மாதிரி ஒரு திறமைசாலி அந்தக் கட்சிக்குள் எப்படித் தலையெடுக்க முடியும்" என்று என்னிடம் கேட்கிறீர்களா?  உங்கள் கேள்வி தெளிவானது, நியாயமானது. உங்களை மறுத்துப் பேச நான் என்ன அரைகுறையா?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Saturday 30 March 2024

சங்கீத கலாநிதி சர்ச்சை: அபஸ்வரம் கூடுகிறது

 

-- ஆர். வி. ஆர்

 

சங்கீத கலாநிதி சர்ச்சை இப்படிப் போகிறது. கச்சேரி முடியவில்லை. அபஸ்வரம் கூடுகிறது.  

 

அபஸ்வரத்தை ஆரம்பித்தவர், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. கூட்டியவர், அவர் சகோதரர் என். ராம். இருவரும் ‘ஹிந்து’ பத்திரிகை கம்பெனியின் முக்கியப் பங்குதாரர்கள்.

 

2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப் படும் என்று மியூசிக் அகாடமி சமீபத்தில் அறிவித்தது. விருது அவருக்குப் போவதற்கு ஆட்சேபம் செய்தவர்களில் முதன்மையானவர்கள், ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள். காரணம் என்ன?

 

கர்நாடக சங்கீதத்தில் கலந்துள்ள ஹிந்துமத இறை உணர்வு மற்றும் ஆன்மிகம், அதைச் சார்ந்த பண்புகள், அதைப் போற்றிய மனிதர்கள், சாதனை செய்த முன்னோடிகள், ஆகியோரை, ஆகியவற்றை டி. எம். கிருஷ்ணா அவமதிப்பு செய்தவர், கர்நாடக இசைக் குடும்பத்தை அவர் தூற்றியவர், கர்நாடக சங்கீதக் கலைஞராக இருப்பதே வெட்கக் கேடானது என்ற எண்ணத்தைப் பரப்ப முயன்றவர், பிராமணர்களைக் களையெடுக்கப் பிரஸ்தாபித்த ஈ. வெ. ராமசாமியை அவர் உயர்த்திப் போற்றியவர், என்பது ரஞ்சனி-காயத்ரி செய்த எதிர்ப்பிற்கு அவர்கள் அளித்த விளக்கம். மற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலரும், இசை ரசிகர்கள் பலரும், அந்த எதிர்ப்பில் சேர்ந்தனர்.

 

ரஞ்சனி-காயத்ரி தங்கள் எதிர்ப்பைத் தெளிவாக, அழுத்தமாக, ஆனாலும் நாகரிகமாக, வெளிப்படுத்தினார்கள். மறுநாள் பொங்கி எழுந்த மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி, அவர்களுக்குச் சூடாக ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.   

 

“உங்கள் கடிதம் வசைபாடுவதாக, அவமதிப்பதாக, மான நஷ்டம் செய்வதாக இருக்கிறது, சக கலைஞர் மீது குரூர தொனி காண்பிக்கிறது” என்று தனது பதிலில் அபஸ்வரத்தை ஆரம்பித்தார் என். முரளி. பிறகு உச்சஸ்தாயியைத் தொட்டு, சங்கீத கலாநிதி விருதுக்கு ஒருவரைத் தேர்வு செய்வது மியூசிக் அகாடமியின் “பிரிராகெடிவ்” (prerogative) என்று அவர் மார் தட்டினார்.  

 

Prerogative என்றால் “விசேஷ உரிமை, அதிகாரம் மற்றும் சிறப்புரிமை”, “பிரிட்டிஷ் அரசருக்கு உரித்தான விருப்ப அதிகாரம்” என்று மெரியம் வெப்ஸ்டர் டிக்ஷனரி அர்த்தங்கள் தருகிறது. அதாவது, “கொடுப்பது நாங்கள், கேட்பதற்கு  நீங்கள் யார்?” என்று பேச வந்தார் என். முரளி. கடிதத்தின் அடுத்த வரியிலேயே, “இந்த விருது எப்போதும் கவனமான ஆராய்வுக்குப் பின்னர் அளிக்கப் படுகிறது” என்று அவர் சொல்லி இருந்தாலும், ராஜ தொனியில் அவர் தொடங்கி இருக்கவேண்டாம். 


ரஞ்சனி-காயத்ரியின் எதிர்ப்பை மியூசிக் ஆகாடமி ஏற்காமல் இருப்பது வேறு - அதுவும் விமரிசனத்துக்கு உட்பட்டது. ஆனால் தனது கருத்தை, விளக்கத்தை, அகாடமி இன்னும் நாகரிகமாகத் தெரிவித்திருக்க வேண்டும்.

 

என். முரளியின் பதிலைத் தொடர்ந்து, அவரது சகோதரர் என். ராம் X தளத்தில்  ஒரு அறிவிப்பு செய்தார். அது எடுத்த எடுப்பிலேயே திராவிட மாடல் ஸ்டைலில் தொடங்கியது. “கண்மூடித்தனமான ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம் (bigoted and casteist coterie) டி. எம் கிருஷ்ணாவையும் மியூசிக் அகாடமியையும் குறி வைக்கிறது” என்று தொடங்கி, முரளி ஆரம்பித்த அபஸ்வரத்தை ராம் அதிகப் படுத்தினார். தான் குறிப்பிட்ட ஜாதிய உணர்வு எது, இந்த விஷயத்தில் அது ரஞ்சனி-காயத்ரியிடம் எந்த வகையில் காணப்படுகிறது என்று ராம் ஒரு துளியும் விளக்கவில்லை.

 

டி. எம். கிருஷ்ணா, என். முரளி, என். ராம்,  மற்றும் ரஞ்சனி-காயத்ரி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சங்கீத கலாநிதி விருதுக்கு டி. எம். கிருஷ்ணா ஏற்றவரல்ல என்று ரஞ்சனி-காயத்ரி கருத்து சொன்னால், அதில் என்ன ஜாதியப் பார்வை இருக்க முடியும்? என். ராம் அபாண்டமாகச் சொல்ல வருவது இதுதான்:  'டி. எம். கிருஷ்ணா குப்பத்திற்குச் சென்று அந்த மக்களுக்காகப் பாடியவர், சமூக சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமியைப் போற்றியவர். ஆனால் ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் குப்பத்து ஜனங்களிடம் ‘ஜாதிய வெறுப்புணர்வு’ கொண்டு, ஈ. வெ. ரா-வையும் ஏற்காதவர்கள். ஆகவே  சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்கு அளிக்கப்படுவதை ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் எதிர்க்கிறார்கள்'. என். ராமின் சுத்தமான அரசியல் வகைப் பிதற்றல் இது.

 

ஒரு மதத்தை, ஒரு ஜாதியை, குறிப்பிட்டு அந்த மதத்தினரை அல்லது ஜாதியினரைக் களையெடுப்பேன் என்று ஒருவர் பிரஸ்தாபிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மதத்திலோ ஜாதியிலோ உள்ள மனிதர்கள் அதை  எதிர்க்கத்தான் செய்வார்கள். அப்படி எதிர்த்தால் அவர்கள் மதவாதியா, ஜாதியவாதியா? என்ன சொல்ல வருகிறார் என். ராம்?

 

ராம் நினைத்திருந்தால் இதற்கு மேலும் ரஞ்சனி-காயத்ரியை அபாண்டமாக இழிவு செய்திருக்கலாம். ஆனால் இதற்கும் கீழாக முடியாது என்ற அளவுக்கு அவர் தரம் தாழ்ந்து போனார்.


ஒரு போக்கிரி உங்கள் முகத்தில் சேற்றை எறிந்துவிட்டு ஓடினால், நீங்கள் கௌரவம் பார்க்கும் ஒரு அமைதியானவர் என்றால், சாதாரணமாக நீங்கள் பொறுமையாகத் துடைத்துக் கொண்டு போவீர்கள். இங்கேயும் அப்படி நடக்கும் என்ற நினைப்பில் ரஞ்சனி-காயத்ரியைப் பார்த்துச் சேறு எறிவதுபோல் பேசினார் என். ராம். அந்த இருவர் மட்டுமல்ல, அவர்களைப் போல டி. எம். கிருஷ்ணாவுக்கான விருதை வேறு யார் எதிர்த்தாலும், அவர்களும் “ஜாதிய உணர்வுடைய ஒரு கூட்டம்” என்று அனைத்து எதிர்ப்பாளர்களையும் சகட்டுமேனிக்கு அற்ப சந்தோஷத்தில் பழித்தார் என். ராம்.


ராம் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் ரஞ்சனி-காயத்ரியிடமிருந்து இரண்டு நாட்களில் வந்தது. அவர்கள் முரளியின் கடிதத்திற்கு மறுமொழி சொல்ல வந்து, அதில் ராம் சேறாக வீசிய வார்த்தைகளைக் குறிப்பிட்டு, “ஜாதி சமத்துவத்தை மியூசிக் அகாடமியின் நிர்வாகக் கமிட்டியில் ஆரமியுங்கள். தேவையான தீர்மானத்தைப் போடுங்கள். கொத்தாக சில கமிட்டி உறுப்பினர்கள் ராஜினாமா செய்யுங்கள்.” என்று சொல்லிவிட்டனர். 


வேண்டுமென்றே அரசியல்வாதி மாதிரி பிரச்சனையின் திசையைத் திருப்பியவர், அவரோடு சேர்ந்தவர்கள், இப்போது மேலும் கீழும் பார்ப்பார்கள். என்ன நடந்திருக்கிறது என்றால்: அரசியல் ஸ்டைலில் தன் மீது எறியப்பட்ட சேற்றை வழித்தெடுத்து, அது வந்த திசையில் ரஞ்சனி-காயத்ரி திருப்பி எறிந்து தங்களை ஒரு குயுக்தியான பழியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஷயம் எங்கோ போகிறது. 

 

கர்நாடக சங்கீதத்தில் ஹிந்து சமய பக்தியும் உணர்வும் மேலோங்கி இருக்கும். ‘ஹிந்து’ சமாச்சாரம் பழமையானது, தொன்மையானது. அதில் சில ஒட்டுண்ணிகள் அவ்வப்போது வரலாம், சேதமும் செய்யலாம். இதனால் பாதிப்படையும் கர்நாடக இசைக் கலைஞர்கள், பொறுமையும் கண்ணியமும் காத்துத் தங்களையும் இசை உலகையும் மீட்பார்கள் என்று நம்புவோம்.

 

இப்படி நல்லதாகத் தானே நாம்  நினைக்க முடியும்? கன்னாபின்னாவென்று நினைக்க, பேச, நாம் ஒன்றும் கிருஷ்ணா, முரளி, ராம் இல்லையே?

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Friday 22 March 2024

கிருஷ்ணா, கிருஷ்ணா! மியூசிக் அகாடமிக்கு ஏனப்பா சோதனை!

  

-- ஆர். வி. ஆர்

 

      டி. எம். கிருஷ்ணா ஒரு மிகச் சிறந்த கர்நாடக சங்கீத வித்வானா? ஆம். சென்னை மியூசிக் அகாடமி அவருக்கு 2024-க்கான சங்கீத கலாநிதி பட்டம் அளிப்பதோடு  விஷயம் முடிகிறதா? இல்லை.

 

டி. எம். கிருஷ்ணாவின் பாட்டுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. அவரது தடாலடிப் பேச்சாலும் எழுத்தாலும் அவரது பிரபல்யம் மேலும் அதிகரித்தது. பொதுவாக பிராமணர்கள் பற்றி, மற்ற சீனியர் வித்வான்கள் பற்றி, அரசியல் சார்ந்த விஷயங்கள் பற்றி, அவர் தாட்பூட்டென்று, கன்னாபின்னாவென்று,  கருத்துகள்  சொல்லியும்,  பெரியார் என்று அழைக்கப்படும் ஈ. வெ. ராமசாமியைப் போற்றியும் கூடுதலான கவனம் ஈர்த்தார். இதனால் பல கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு அவர்மீது வருத்தமும் கோபமும் உண்டு.

 

கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள், மேடைக் கச்சேரி செய்பவர்கள், அந்த இசையை ரசிப்பவர்கள் ஆகியோரில் பிராமணர்கள் தொன்றுதொட்டு அதிகம் இருக்கிறார்கள். டி. எம். கிருஷ்ணாவும் ஒரு பிராமணர். 

 

பொதுவாக பிராமணர்கள் அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்கள். ஹிந்து தெய்வங்கள் மீதான ஸ்தோத்திரங்கள் கற்று மனப்பாடம் செய்கிறவர்கள் – இப்போது அந்தச் சமூகத்துச் சிறுவர்களிடம் அந்த வழக்கம் குறைந்து வந்தாலும்.

 

ஹிந்து மதத்தை, ஹிந்து தெய்வங்களை, மிக இழிவாகப் பேசி, ராமருக்குச் செருப்பு மாலை அணிவித்த ஊர்வலத்தில் பிரதானமாக இருந்து, பிராமணர்களையும் கேவலம் செய்து வந்தவர் ஈ. வெ. ராமசாமி. ஆகையால் அவர்  மீது மனக் கசப்பு கொண்ட நிறைய ஹிந்துக்கள் உண்டு, அவர்களுள் நிறைய பிராமணர்கள் உண்டு. அத்தகைய பிராமணர்கள் – அதுவும் தெய்வத்தைப் புகழ்வது மிக முக்கிய அம்சமாக இருக்கும் கர்நாடக இசையைப் பயின்றவர்கள் – ஈ. வெ. ரா-வைச் சிலாகித்துப் பேசும் டி. எம். கிருஷ்ணாவை அந்தக் காரணத்தினாலும் மனதளவில் தள்ளி வைப்பார்கள். தெய்வ நம்பிக்கை உள்ள மற்ற இசைக் கலைஞர்களும் அப்படித்தான்.

 

தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்துக்களுக்கு வாழ்வில் அது மிக முக்கியம். தெய்வத்தை வலிய இகழ்கிற ஒருவரை, ஈ. வெ. ரா-வைப் பெரிதும் புகழ்கிற ஒருவரை, அவர்கள் கச்சை கட்டி பதிலுக்கு எதிர்க்காமல் இருக்கலாம், ஆனால் அந்த நபரிடமிருந்து விலகி இருப்பார்கள், அவருடன் கூடிக் குலவ மாட்டார்கள். இப்படி விலகி நிற்கும் போக்கு படித்தவர்களிடம் அதிகம் இருக்கும். சரித்திரக் காரணங்களால் அநேக பிராமணர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் டி. எம். கிருஷ்ணா போன்ற பெரியார் அபிமானியிடமிருந்து – அவரே ஒரு பிராமணர் என்றாலும் –  கசப்புடன் விலகி இருக்க நினைப்பார்கள்.

 

பகுத்தறிவுத் தந்தை எனப்படும் ஈ. வெ. ரா - வைப் போற்றும் ஒரு புதிய பாடலை டி. எம். கிருஷ்ணா சென்ற வருடம் கர்நாடக சங்கீத பாணியில் பாடினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. அந்தப் பாடலை அறிமுகம் செய்து அந்த வீடியோவில் சில வார்த்தைகள் பேசுபவர், “பயன்படாத எதையும் பெரியார் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். அதில் இசை முதலிடம் பெறும்” – அதாவது,  பெரியாருக்கு இசை பிடிக்காது, ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை இசையினால் யாருக்கும் எதுவும் பிரயோஜனம் இல்லை – என்றும் கூறுகிறார். பெரியாரைப் போற்றும் டி. எம். கிருஷ்ணா, பெரியார் நிராகரித்த இசையிலேயே அவரைப் புகழ்ந்து பாடுகிறார். இது என்ன பகுத்தறிவோ?

 

பகுத்தறிவு விஷயத்தை விட, அடிப்படை மனித இயல்பு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், டி. எம். கிருஷ்ணா விருதுக்கான எதிர்ப்பில் உள்ளது.  அதுதான் முக்கிய விஷயம்.  

 

மனதளவில் நான் மிகவும் கசந்த ஒருவரிடம் திறமைகள் இருந்தால், அவர் திறமையை நான் மறுக்க அவசியம் இல்லை. ஆனால் அந்த நபரின் திறமைக்காக அவரை நான் மனமுவந்து கொண்டாடத் தயங்குவேன், அவரைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற விரும்ப மாட்டேன். அதுவும் என் ஜென்மத்தில் நான் பணிந்து வணங்கும் தெய்வத்தைத் தூற்றிய ஈ. வெ. ரா என்ற மனிதரின் அபிமானியாக, அந்த மனிதரைப் போற்றுபவராக, அந்த மற்ற நபர் இருந்தால் நான் அந்தக் காரணத்திற்காகவும் அந்த நபரை நிச்சயம் கொண்டாட மாட்டேன். அவர் மீது எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் முடிந்தவரை என் மதிப்பை என் செயலால் நான் காப்பாற்றுவேன்.      

 

மேற்சொன்ன காரணத்தால், சங்கீத கலாநிதி விருது டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் என்று சில தினங்கள் முன் மியூசிக் அகாடமி அறிவித்த உடன், கர்நாடக சங்கீத உலகைச் சேர்ந்தவர்கள், உபன்யாசம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், என்று சிலர் தங்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள், சித்திர வீணை ரவிகிரண், விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், ஆகியோர் அந்த எதிர்ப்பாளர்கள். கடிதம் மற்றும் சமூக வலைத் தளம் மூலமாக, கவலை தோய்ந்த அவர்களின் உணர்வுகள் நாகரிகமாக வெளியாகி இருக்கிறது.   

 

அகாடமியின் தேர்வுக்கு வெளிப்படையாக எதிர்ப்புச் சொன்னவர்கள் போக, தங்கள் எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளிப்படுத்தாத கர்நாடக இசைக் கலைஞர்கள், அதுவும் வளரும் கலைஞர்கள், இருப்பார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்? ‘நமது எதிர்ப்பை வெளியில் சொன்னால், வருவது வரட்டும் என்று டி. எம். கிருஷ்ணாவுக்கே துணிச்சலாக சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கும் மியூசிக் அகாடமி, வளர்ந்துவரும் நமக்கு வேண்டுமென்றே என்ன கெடுதல் செய்வார்களோ?’ என்று அவர்கள் கவலைப் படுவார்களே? அதனால் அவர்கள் மௌனம் காப்பார்கள். அதிருப்தி அடைந்த மற்ற பல முன்னணிக் கலைஞர்கள் கூட, சக்திவாய்ந்த அகாடமியைக் குறைசொல்ல சற்று யோசிக்கலாம். போகப் போகத் தெரியும்.

 

மியூசிக் அகாடமியின் இப்போதையத் தலைவர் என். முரளி. அவர் ‘ஹிந்து’ பத்திரிகை வெளியிடும் கம்பெனியில் ஒரு இயக்குனரும் கூட. ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் அகாடமிக்கு வருத்தப்பட்டு எழுதிய எதிர்ப்புக் கடிதத்திற்கு அவர் எழுதிய பதிலில் கடுகடுப்பும் அதிகார தோரணையும் அதிகம் தெரிகிறது. பிரச்சனையின் தன்மை, அதன் அடிப்படை, அவருக்குப் புரிந்த மாதிரி இல்லை. அல்லது அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை.

 

என்னதான் ஒருவர் சிறந்த விளையாட்டு வீரராக இருந்தாலும், பதக்கங்கள் வென்றாலும், அவர் தேசியக் கொடியை அவமதித்து வந்தால் – அல்லது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேசியது போல், இந்தியா-சைனா மோதலில்  இந்தியாவை சங்கடப் படுத்தி சைனா சந்தோஷப்படும் வகையில் பேசி வந்தால் – அவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதை வழங்காமல் இருப்பது நல்லது. தெய்வத்தைத் துதிக்கும் கர்நாடக இசை உலகில், ஹிந்து மதத்தை அனுதினமும் இழிவு செய்த ஒருவரைப் போற்றி வந்த டி. எம். கிருஷ்ணாவுக்கு – மேற்சொன்ன மற்ற காரணங்களுக்காகவும் – பாரம்பரியமான அகாடமி இயந்திர நோக்கில் ஒரு பெரிய கௌவரத்தை அளிக்காமல் இருக்கலாம். 

 

ஒருவேளை, தேசிய அரசியலை ஹிந்து பத்திரிகை பொறுப்பில்லாமல் காண்பிப்பது போல், மியூசிக் அகாடமியும் இனி அப்படி நடத்தப் படுமா – தனக்குள்ள சட்ட உரிமைகளை மட்டும் உயர்த்திக் காட்டி?  திமுக-வின் கனிமொழியும்  தமிழக மார்க்சிஸ்ட் கட்சியும் கூட, மியூசிக் அகாடமியின் தேர்வைப் பாராட்டி எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம் தெரிவித்து விட்டார்களே?

 

கிருஷ்ணா, கிருஷ்ணா! உன்னை வேண்டிக் கொள்வதா கடிந்து கொள்வதா?

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Tuesday 19 March 2024

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக – இவை சொல்வது ஒன்றே!


-- ஆர். வி. ஆர்

 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இந்தக் கட்சிகள்  ஒரு முக்கியச் செய்தியை அவரவர் பாணியில் சொல்கின்றன, கவனித்தீர்களா? சர்ரென்று பார்க்கலாம்.

 

அண்ணாத்துரை தனது தலைமைப் பண்பினால் பலரையும் ஈர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார், தமிழகத்தில் திமுக-வின் ஆட்சியை அமைத்தார். அவர் அகால மரணம் அடைந்த பின் திமுக-வின் முதல்வரான மு. கருணாநிதி தனது சாதுர்யத்தால், உழைப்பால் கட்சிக்குள் பெரிதும் உயர்ந்தார்.  

 

49 வருடங்கள் திமுக-வில் கோலோச்சினார் கருணாநிதி. அப்போது, சில கட்சிக்காரர்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாக வளர்ந்து பெருகத் துணை நின்றார். அந்தத் தலைவர்கள் கருணாநிதியின் குறிப்பறிந்து அவரைப் பாராட்டிச் சீராட்டித் தங்களையும் பக்கவாட்டில் கவனித்துச் செழித்தார்கள்.

 

அருமை மகன் ஸ்டாலினையும் செல்ல மகள் கனிமொழியையும் கட்சிக்குள் முன்னிலைப் படுத்தினார் தந்தை கருணாநிதி. திமுக-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் ஒதுங்கி நின்று அந்த வாரிசுத் தலைவர்களை ஆதரித்தார்கள். பிரதிபலனாக, தங்கள் தங்கள் வாரிசுகளும் கட்சிக்குள் வளர வழி செய்து கொண்டார்கள். கழகம் ஒரு குடும்பம்.

 

கருணாநிதியின் மறைவுக்குப் பின், தேர்தலில் மறுபடியும் திமுக ஜெயித்து ஸ்டாலின் இப்போது தமிழக முதல்வராக இருக்கிறார். கட்சிக்குள் இது ஸ்டாலினை மகிழ்விக்கும் காலம் என்பதால், திமுக–வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரது மகன் உதயநிதியை வணங்கிப் பணிந்து நிற்கிறார்கள். அவரும் பல்லக்கில் அமர்ந்து தடாலடி அரசியல் செய்கிறார்.


நடிகர் எம். ஜி. ஆர் திமுக-வில் இருக்கும்போதே சாதாரண மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர். திமுக-வில் இருந்து அவர் வெளியேற்றப் பட்டவுடன் அதிமுக-வை அவர் வளர்த்துத் தன் ஆயுட்காலம் வரை திமுக-வை வீழ்த்தி வைத்திருந்தார். அவரால் கட்சியில் அறிமுகம் செய்து ஊக்கம் தரப்பட்டவர் நடிகை ஜெயலலிதா. எம். ஜி. அர் மறைந்த பின் தனது உறுதியால், போராட்டக் குணத்தால், கட்சியின் தலைமைப் பொறுப்பைப் பிடித்து முதல்வர் ஆனவர் ஜெயலலிதா.  

 

எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மகன், மகள் என்ற குடும்ப வாரிசுகள் இல்லை. கட்சியில் எம். ஜி. ஆரைப் பக்தியுடன் போற்றியவர்கள், ஜெயலலிதாவை பயத்துடன் வணங்கியவர்கள், அங்கு இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்தார்கள். கருணாநிதியைப் போலவே, அந்த இரு தலைவர்களும் கட்சிக்குள் பெரும் திறமைகளை ஈர்த்தவர்களோ ஊக்குவித்தவர்களோ அல்ல.

 

இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பதினேழு வருடங்கள் இருந்தார் ஜவஹர்லால் நேரு. அவரது மகள் இந்திரா காந்தி.  நேரு இருந்தவரை அவர் இந்திரா காந்தியைக் கட்சிக்குள் கனகாரியமாகத் தூக்கி விடவில்லை. அன்றைய காங்கிரஸ் தலைவர்களும் அப்படியான செயலை விரும்பி இருக்க மாட்டார்கள். நேரு மறைந்த பின் லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமர் ஆக்கியது காங்கிரஸ். அவருக்குப் பின் அக்கட்சி இந்திரா காந்தியைப் பிரதமராக அமர்த்தியது.

 

இந்திரா காந்தி அமல் செய்த நெருக்கடி நிலைக் காலத்தில் அவர் மகன் சஞ்சய் காந்தி ஆட்டம் போட்டார். பிரதமர் இந்திரா அதை அனுமதித்தார்.  சஞ்சய் காந்தியும் இந்திராவும் அடுத்தடுத்து மரணித்த பின், அரசியல் அனுபவம் குறைந்த இந்திராவின் இன்னொரு மகன் ராஜீவ் காந்தியைக் காங்கிரஸ் கட்சி பிரதமர் ஆக்கியது. 


ராஜீவ் காந்தியின் காலத்திற்குப் பின், ஒரு இடைவெளி விட்டு அவர் மனைவி சோனியா காந்தி கட்சியில் தலை தூக்கினார். இன்றும் கட்சியில் அவர் அதிகார மாதா. ராஜீவ்-சோனியாவின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி, காங்கிரஸின் இளவரசர், இளவரசி என்று பல வருடங்களாகக் கட்சியில் மிதக்கிறார்கள். அந்த இளவரசர் ஒரு தத்துப்பித்து. அவர்தான் இப்போது கட்சிக்குள் ராஜ தர்பார் நடத்துகிறார்.

 

இந்த மூன்று கட்சிகளுக்கு மாறாக பாஜக செயல்படுகிறது. பாஜக-வில் வாரிசுகளோ தனிப்பட்ட முறையில் தலைவருக்கு வேண்டியவர்களோ வளர்க்கப் படுவதில்லை,  தூக்கி நிறுத்தப் படுவதில்லை.

 

இந்திரா காந்தி, கருணாநிதி, எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர், தலைவரின் வாரிசு என்ற காரணத்தால் தலைவரே மேலே இழுத்துவிட்டுக் கட்சிக்குள் தலை எடுத்தவர்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தியும் கருணாநிதியும் கட்சிக்குள் வாரிசுகளை அனுமதித்து உயர்த்திவிட்டார்கள்.  

 

குடும்ப வாரிசு இல்லாத ஜெயலலிதா, தோழி சசிகலாவைத் தனது ‘உடன்பிறவா சகோதரி’ என்று அறிவித்து, சசிகலாவின் தகுதிக்கு மீறி அவருக்குக் கட்சிக்குள் செல்வாக்கு சேரக் காரணமாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக தலைவர்கள் சசிகலாவின் காலில் விழுந்து அடைக்கலமும் ஆதாயமும் தேடினார்கள்.  ஊழல் குற்றத்திற்காக சசிகலா ஜெயிலுக்குப் போனார் என்பதை ஒரு சமயோசித சாக்காக வைத்து, அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் அதிமுக-வின் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவரே தனக்கான மக்கள் செல்வாக்கு இல்லாமல் தடுமாறுகிறார்.

 

அண்ணாத்துரை-கருணாநிதி காலத்து திமுக-வை விட, இப்போதைய திமுக-வின் வலிமை குறைவு. எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் அதிமுக-வை விட இந்நாள் அதிமுக-வின் சக்தி மிகக் குறைவு. 

 

இந்திரா காந்தி காலத்து தமிழக காங்கிரஸ், திமுக-வால் பலமிழந்து  நின்றது. இன்றைய தமிழக காங்கிரஸ் இன்னும் சோப்ளாங்கியாய் நிற்கிறது. தமிழக பாஜக மட்டும் கடந்த மூன்று வருடங்களில் அதிவேகமாக வளர்கிறது. எந்த அளவுக்கு? திமுக-வின் துரைமுருகனே, "தமிழகத்தில் பாஜக பிசாசு மாதிரி வளர்கிறது” என்று பயத்தில் சொல்லும் அளவுக்கு.

 

பிற மாநிலங்களிலும் தமிழகத்திலும் பாஜக வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால், என்ன காரணம்? நேர்மை, திறமை, துணிவு, அர்ப்பணிப்பு, ஆகிய பண்பு கொண்டவர்களைத் தன்னிடத்தே ஈர்க்கிறது அந்தக் கட்சி.

 

தனது மகன் மகள் என்ற பாசத்தால், அல்லது ரகசியப் பலன்களுக்காகத் தனக்கு வேண்டியவர் என்பதால், ஒரு அரசியல் கட்சித் தலைவர் கட்சிக்குள் ஒருவரைத் தாங்கி முன்நிறுத்தினால், கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களும் அதை ஏற்றுக் கொண்டால், என்ன நடக்கும்? ஒன்று, கட்சிக்குள் ஏற்கனவே இருக்கும் திறமை அடங்கி முடங்கித் தன் இடத்தைப் பாதுகாக்கும். இரண்டு, நேர்மையான, திறமையான, செயல்திறன் மிக்க வெளி மனிதர்கள் அந்தக் கட்சிக்குள் வரத் தயங்குவார்கள். ஏனென்றால் அந்த மனிதர்கள் தலைவருக்கு வேண்டியவர்களிடம் பணிந்து நின்று தங்கள் சுய மரியாதையை இழக்க விரும்பமாட்டார்கள், சிறுமைப்பட கூச்சப் படுவார்கள்.

 

வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற காரணத்தினால் ஒரு கட்சியில் திறமையற்ற சிலர் முக்கியத்துவம் பெறுவது ஒரு தீமையின் அறிகுறி. அவர்கள் கட்சிக்குள் முன்னிலைப் படுவதுதான் கட்சித் தலைவருக்கே அதி முக்கியம் என்றால், மக்கள் நலன் அந்தக் கட்சிக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.  அந்தக் கட்சியின் ஆட்சியில் கண்துடைப்புத் திட்டங்கள் மட்டும் கோலாகலமாக நடக்கும். பார்க்கிறோமே?

 

திமுக, அதிமுக, இந்திரா தலைமையிலான காங்கிரஸ் ஆகிய கட்சிகள், செல்வாக்கான பெரும் தலைவர்களை முன்பு கொண்டிருந்தாலும், அந்தத் தலைவர்கள் நேர்மையும் திறமையும் கொண்ட இளைஞர்களைக் கட்சிக்கு ஈர்க்கவில்லை, அத்தகையவர்கள் புதிய தலைவர்களாகக் கட்சிக்குள் வளர வழி செய்யவில்லை. ஆனால் பாஜக அந்த உன்னதக் காரியத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது.


இன்னொரு பக்கத்தில், சாதாரண இந்திய மக்களிடம் உள்ள ஒரு நியாய-நேர்மை உணர்வு நமக்கு வரப்பிரசாதம். ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிகாசங்கள் பல நூற்றாண்டுகளாக நம் மக்களின் ரத்தத்தில் கலந்த பண்பின் மீதி மிச்சம் அது. அதை வைத்துத் தனது நேர்மையால், திறமையால், உழைப்பால், சேவை மனப்பான்மையால், சாதுர்யத்தினால், சாதாரண மக்களை ஈர்க்க முடிகிறது பாஜக-வின் நரேந்திர மோடியால். அதோடு நாட்டின் தீய அரசியல் சக்திகளின் வலுவைக் குறைக்க முடிகிறது அவரால். 

 

மோடியைப் போன்ற ஒரு தலைவர்தான் அண்ணாமலை மாதிரியான ஒரு அற்புதமான இளம் தலைவரை தமிழகத்திற்காக ஈர்க்க முடிகிறது. வாரிசு மற்றும் வேண்டியவர்கள் வளரும் ஒரு கட்சியால் அண்ணாமலை போன்ற ஒரு தலைவரைக் கவர முடியாது. அண்ணாமலையும் அவர் பங்குக்குத் துடிப்பான இளைஞர்களை பாஜக-வுக்கு ஈர்ப்பார். இது ஒரு தொடர் நன்மையாக அமையக் கூடியது. பெரிய விஷயமல்லவா இது?

 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து, இந்த ஒரு செய்தியைச் சொல்கின்றன என்பது தெரிகிறது. அதாவது, ஒரு கட்சி எப்படி நடத்தப் பட்டால், ஒரு கட்சியின் தலைவர் எப்படிச் செயல்பட்டால் – வாரிசுகள், வேண்டியவர்கள் என்ற சுயநல விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர் கட்சி நடத்தினால் – மக்கள் நலன் அந்தக் கட்சியின் ஒரே குறிக்கோளாக இருக்கும், அந்தக் கட்சியின் ஆட்சியில்  பொதுமக்கள் அதிக நன்மைகள் பெறுவார்கள், அரசாங்க கஜானாவும் நலமாக இருக்கும், என்பதை இப்படியும் அப்படியுமாகச் சொல்கின்றன இந்த நாலு கட்சிகள். சரிதானே?  

 

* * * * *

 

Author: R. Veera Raghavan, Advocate, Chennai