Sunday, 15 March 2026

கேள்வி-பதில் (12.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

 1. கேள்வி: "திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற திரைப் பாடல் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் அல்லவா?

 

பதில்: பொருந்தும்.

 

திருடன் என்ற சொல் மூலமாகப் பொதுமக்களுக்குத் தீங்கு செய்து, தான் பிழைக்கும் எல்லாத் தீயவர்களையும் பாடலாசிரியர் பொதுவாகக்  குறிப்பிடுகிறார். ஊழல் அரசியல்வாதி, வாரிசு அரசியல்வாதி, பங்கு வாங்கும் தலைவர், கமிஷன் கிங், வளைகுடா நாட்டில் செல்வம் பதுக்கும் தலைவர்கள், சிறுபான்மையினரின் காலைப் பிடிக்கும் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் காழ்ப்பைக் கொலம்பியாவில் கொட்டுகிற தலைவர், என்று பாடலில் பிரித்துச் சொல்ல அவசியமில்லை.

 

 

2. கேள்வி: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பெரியாரின் மீது வைக்கும் விமர்சனம் சரியாகத் தோன்றுகிறது. கொடையாளர் லட்சுமண ஐயர் என்ற பிராமணரின் பெயர் சொல்லி அவருடைய தர்ம சிந்தனையைப் போற்றியதும் நியாயம் என்று படுகிறது. சீமான் ஒரு நல்ல, நடுநிலையான, அரசியல் தலைவராகத் தெரிகிறார் அல்லவா?

 

பதில்: தேச நலனில் உள்ளார்ந்த அக்கறை, தொலைநோக்குப் பார்வை, சமநிலைக் கண்ணோட்டம், தெளிவான சிந்தனை, நிதானம் மிக்க பேச்சு, தனிமனித ஒழுக்கம், தேவைப்படும் தருணங்களில் பொறுமையும் வேகமும் - இவற்றுடன் தைரியம், சாதுர்யம் - இவை அனைத்தும் ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கான அடையாளங்கள், நாட்டிற்கு நன்மை செய்பவை. இந்த அளவுகோலில் சீமானுக்கு - பல கட்சிகளில் உள்ள மிகப் பல தலைவர்களுக்கும் - அதிக மார்க்குகள் கிடைக்காது.

 

வெடுக் துடுக்கென்று மேடையிலும் பத்திரிகையாளர்களிடமும் ஒரு தலைவர் பேசிக் கொண்டே இருந்தால், பார்ப்பதற்கும் படிப்பதற்கும் விறுவிறுப்பாக இருக்கும். அதோடு சரி.

 

இன்று சாதாரண மக்களுக்குப் பெரியாரிடம் ஈடுபாடு கிடையாது. அவரைச் சரியாக விமர்சனம் செய்வது மட்டும் - ஒரு விவாதத்தில் அதற்கு மதிப்பு உண்டென்றாலும் -  ஒரு பெரிய அரசியல் தலைவருக்கான முக்கிய அடையாளம் அல்ல.

 

தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் பொதுவெளியில் ஒரு பிராமணர் பெயரைச் சொல்லி அவருடைய நற்காரியங்களைப் பாராட்டுவது அசாதாரணமானது. இருந்தாலும், போற்றத் தகுந்த ஒரு அரசியல் தலைவருக்கான அதிக அடையாளங்கள் வேறு.

 

 

3. கேள்வி: "ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத் தக்கது அல்லவா?

 

பதில்: வரவேற்கத் தக்கதுதான். அத்துடன், "சட்டத்திற்கு எதிராக அத்துமீறல்கள் மற்றும் முறைகேடுகள் செய்வோர் யாராக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுங்கள். அத்தகைய மனிதர்கள் ஜெயிலுக்குப் போய் வந்தாலும் நான் அவர்களை ஆரத் தழுவ மாட்டேன். அவர்களைக் கட்டுக்குள் வைப்பதும், பொதுமக்களிடம் நாம் காண்பிக்கும் ஒருவகை மனிதநேயம்" என்றும் ஸ்டாலின் பேசி இருந்தால், அவர் வழங்கிய மனித நேய அறிவுரையில் நேர்மை இருக்கும்.

 

 

4. கேள்வி: ஆட்சியிலிருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் விரும்பினால், அவர் ஏன் தனது கட்சியை அதிமுக-பாஜக தேர்தல் கூட்டணியில் சேர்க்கக் கூடாது? அதன் மூலம் ஏன் சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்கும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடாது? அதைப் போல், நாம் தமிழர் கட்சி சீமானும் ஏன் சிந்திக்கவில்லை?

 

பதில்: தமிழகத்தில் திமுக-வுக்கு மாற்றாக, அதன் இடத்தில் தவெக அமரவேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதே மாதிரி சீமானும் தனது கட்சி பற்றி நினைக்கலாம். ஆனால் இந்த இரு தலைவர்களும் சற்று மர்மமானவர்கள் - சீமான் அதிகம். உள் மனதில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அதாவது ஆட்சிக்கு வந்து என்ன செய்ய நினைக்கிறார்கள், என்பது சரியாகத் தெரியவில்லை.

 

அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக சேர்ந்தால், திமுக கூட்டணி சட்டசபைத் தேர்தலில் தோற்பது கிட்டத்தட்ட நிச்சயம். சீமானும் இந்தக் கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணி தோற்பது வெகு நிச்சயம்.

 

விஜய் இப்படி நினைப்பார்: 'திமுக தோற்று, தனது கட்சி ஒரு புதிய திமுக-வாக வந்து கோலோச்ச வேண்டும் - ஆனால் தவெக-வும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில் திமுக தோற்றால், எடப்பாடி பழனிசாமி பெரிதாக எதையும் விஜய்க்காக  விட்டுக் கொடுக்க மாட்டார்; இதுபோக, விஜய் சேர்ந்த கூட்டணியில் பாஜக-வுக்கு நிச்சயம் அதிக எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கும், அதனால் அண்ணாமலை விரைவாக வளர்ந்து விஜய்யின் வளர்ச்சியைப் பாதிப்பார். ஆகையால் வரும் தேர்தலில் விஜய் கட்சி தோற்று திமுக ஜெயித்தாலும் பரவாயில்லை, அண்ணாமலை பெரிய சக்தியாக வளர்வதை இப்போதைக்குத் தாமதப் படுத்துவோம். அதுவே நமக்கு ஒருவகை பலம்.'

 

சீமானின் தனியான போக்கில் ஒரு மர்மக் கணக்கு இருக்கும்.

 

விஷயம் என்னவென்றால்: திமுக-வை எதிர்த்துத் தான் அதிமுக அரசியல் செய்ய வேண்டும். அது அதிமுக-வின் பிறப்பு நிர்பந்தம். விஜய்யும் சீமானும் தமிழ்நாட்டு நலனுக்காகத் திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்க விரும்பவில்லை; தங்களின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக அவர்கள் திமுக-வை எதிர்க்கிறார்கள். ஆகையால் திமுக-வை பலமாக எதிர்க்க அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்து தங்களின் லாபக் கணக்கில் கோட்டை விடக்கூடாது என்பதும் இருவரின் எண்ணம்.

 


5. கேள்வி: "பாஜக வேறு எந்த மாநிலத்திலும் காவி அடிக்கலாம், தமிழ்நாட்டில் அடிக்க முடியாது" என்று திமுக தலைவர் ஸ்டாலின், திருச்சி மாநாட்டில் பேசியிருக்கிறாரே?

 

பதில்: ஸ்டாலின் சொன்னதில் 'காவி அடிப்பது' என்பதை நீக்கிவிட்டு, 'நல்லாட்சி அமைப்பது' என்பதைப் பொருத்திப் படியுங்கள். அவர் பேச்சின் நிஜ அர்த்தம் வெள்ளை அடித்த மாதிரிப் பளிச்சிடும்.


பகுதி 65 // 12.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment