|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "1000 ஆண்டுகள் நின்று பேசக்கூடிய சாதனைகளை 5 ஆண்டுகளில்
செய்திருக்கிறோம்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: தமிழக
சட்டசபைத் தேர்தல் நெருங்கும்போது ஸ்டாலின் இப்படிப் பேசி இருக்கிறார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பது பேச்சு வழக்கு.
ஆயிரம் ஆண்டு நிலைக்கும் சாதனை என்று சொல்லியாவது ஒரு தேர்தலைச் சந்திக்கலாம்
என்பது ஸ்டாலினின் கண்டுபிடிப்பு. இரண்டுமே கோணல் சிந்தனை, ஏமாற்று வழிகள். |
|
2. கேள்வி: "அடுத்து அமையும் திமுக ஆட்சியில் சீனியாரிட்டி, மூத்தவர் என்ற
தகுதியெல்லாம் இனி பொருந்தாது. அதிக வெற்றியைப் பெற்றுத் தருபவர்களுக்கே
அமைச்சர் பதவி கிடைக்கும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருக்கிறாரே? பதில்: திமுக தலைமையின் எதிர்பார்ப்பின்படி, அதிகம் பெற்றுத் தருவது அவசியம்தான்.
சம்பந்தப் பட்டவர்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். |
|
3. கேள்வி: "அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்றவேண்டும்
என்று முயன்ற நடிகர் ரஜினியை
அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது. அதனால் ரஜினி அரசியலுக்கு
வரவில்லை. அரசியலுக்கு வரும் மன தைரியம் விஜய்க்கு மட்டும்தான் உள்ளது"
என்று விஜய் கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசி, பின்னர் ரஜினி பற்றி
அப்படிப் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டார். ரஜினி மற்றும் விஜய் பற்றி, ஆதவ் அர்ஜுனா
குறிப்பிட்டது முற்றிலும் தவறா? பதில்: ஒரு
தமிழ்நாட்டு நடிகர் அரசியலுக்கு வரவேண்டும், திமுக
மற்றும் அதிமுக கட்சிகளை எதிர்த்து நேராக அரசியல் செய்யவேண்டும் (அதாவது, வெறும் பணப்பெட்டி அரசியல் செய்யவேண்டாம்), என்று நினைத்து சில அடிகள் எடுத்து வைப்பதற்கே
அசாத்திய தைரியம் வேண்டும். ஆரம்பத்தில் அது ரஜினியிடம் இருந்தது. போகப்போக ரஜினியின் அந்த தைரியம் நிலைக்கவில்லை. அதற்கு மிக முக்கிய
காரணம்: ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்திலிருந்து பின்வாங்கிய போது அவர்
வயது 70, அவருடைய உடல் ஆரோக்கியமும் ஆஹா என்றில்லை. அந்த வயதில், அந்த உடல்நிலையில், அவர்
தனது செல்வாக்கை மட்டும் நம்பி ஒரு கட்சியை ஆரம்பித்து, அவருடைய வாழ்நாளில் அதை ஸ்திரப்படுத்தி, ரஜினிக்குப் பின்னரும் அந்தக் கட்சியே தனக்கான நல்ல
தலைவர்களை உருவாக்கிக் கொள்ளும் என்ற சாத்தியம் கிடையாது என்பதை, அவர் முன்னர் உணராவிட்டாலும் தாமதமாக உணர்ந்தார். அவர்
ஒரு கட்சியை ஆரம்பித்துத் தீவிர அரசியலுக்கு வரும் முடிவைக் கைவிட அதுவே போதுமான
காரணம். அதுதான் அவரது அப்போதைய 70
வயதில், அவருடைய உடல்நிலையில், அவருக்கான விவேகம். அதைத் தாண்டி அதில் தைரியத்திற்கு
இடமில்லை. நடுத்தர வயதுள்ள விஜய் அரசியலுக்கு வர, திமுக-வை
எதிர்க்க, அவருக்குத் தைரியம் இருக்கிறது என்று
அர்த்தமாகும். ஆனால் ஒரு கடினமான
காரியத்தைச் செய்வதற்கு, தூய எண்ணம் இல்லாமல் எழும் தைரியம்
மட்டுமே போற்றத் தகுந்தது அல்ல. இது புரியாவிட்டால், சந்தன வீரப்பனும் ஹீரோ மாதிரித்தான். ஆதவ் அர்ஜுனாவும்
அனுமார் மாதிரித்தான். |
|
4. கேள்வி: அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு மைய இயக்குனர்
கென்ட், ஈரான் நாட்டின்
மீது அமெரிக்கா போர் புரிய நியாயமில்லை என்று கூறித் தனது பதவியை ராஜினாமா
செய்திருக்கிறாரே? பதில்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர் பற்றிய
நியாயம் என்னவாக இருந்தாலும், அந்தப் போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அவ்வப்போது மார் தட்டி, தோள் தட்டி, தொடைகள் தட்டி விடுக்கும் அறிக்கைகள், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு
மதிப்பளிக்கவில்லை. "நான்தாண்டா உலக மகா பயில்வான்" என்பது மாதிரி
அவர் அறைகூவல் விட்டுக் கொண்டே இருக்கக் கூடாது, அது அவசியமில்லை. எதுவானாலும் டிரம்பின் கீழ் வேலை செய்யப்
பல அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படும். சிலர் அதை ராஜினாமா மூலம்
வெளிப்படுத்தலாம். சிலர் பல்லைக் கடித்தோ, பல்லைக் காட்டியோ, சம்பளம் பெற்றுப் போகலாம். |
|
5. கேள்வி: அதிமுக-வை விட்டுத் திமுக-வில் சேர்ந்திருக்கும் ஓ.
பன்னீர்செல்வம், அண்மையில்
திருநெல்வேலியில் திமுக-வினர் முன்பு பேசியபோது விசில் சத்தம் வர, "விசில் சத்தம்
தான் நம் தேசிய கீதம்; விசில் சத்தம் கேட்டால் நம் வெற்றி உறுதி"
என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறாரே? பதில்: ஓ.பி.எஸ் தனது சிந்தனையில் ஒரு பாதியை
மட்டும் வெளியிட்டார். "கறுப்பு சிவப்புக் கொடிதான் நம் தேசியக் கொடி. அது
தோரணமாகத் தொங்கினால் நம் வெற்றி மேலும் உறுதி" என்றும் சொல்லி, எதையும் மறைக்காமல் அவர் முழுப் பைத்தியமாகவே பேசி
இருக்கலாம். |
|
பகுதி 68 // 18.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Wednesday, 18 March 2026
கேள்வி-பதில் (18.03.2026)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment