|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: வைரமுத்துவின் எழுத்துகளுக்கு வழங்கப் படும் ஞானபீட
விருதுக்கு ஏன் பரவலான பலத்த எதிர்ப்பு? பதில்: கோலிக்குண்டு, கில்லி தாண்டு, பம்பரம்
ஆகியவற்றை விளையாடவும் ஒரு திறமை வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அந்த
விளையாட்டுகளை அனுபவித்து ஆடியிருப்போம். அவற்றைத் திறமையானவர்கள் ஆடுவதை நேரில்
பார்க்கும்போது உற்சாகப் பட்டிருப்போம். ஆனால் ஒரு நாடு, "ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்" என்ற விருதைத்
தனது மாநில விளையாட்டு வீரர் ஒருவருக்கு வழங்க விரும்பினால் ஓட்டப் பந்தயம், கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற பெரிய விளையாட்டுகள் ஒன்றில் சிறந்து
விளங்கும் ஒருவரை அதற்காகத் தேர்வு செய்யவேண்டும். அதில்லாமல், ஒரு மாநிலத்தில் பம்பரம் விளையாடுகிறவரைத் தேர்ந்தெடுத்து - அவர்
எவ்வளவு நன்றாகப் பம்பரம் விட்டாலும் - தனது நாட்டைப் பொறுத்தவரை அவர்தான்
"ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்" என்று ஒரு நாடு அறிவித்தால், அது சரியல்ல. அத்தகைய தேர்வு, பெரிய விளையாட்டுகளை இழிவு செய்வதாகும், சிறப்பாகப் பெரிய விளையாட்டுகள் ஆடும் வீரர்களை -
குறிப்பாக, அந்த விருதாளரின் சொந்த மாநிலத்தைச்
சார்ந்த விளையாட்டு வீரர்களை - சிறுமை செய்வதாகும். வைரமுத்து விஷயத்தில் இதுதான்
நடந்திருக்கிறது. இது தவிர, எந்தத் துறையிலும் தேசிய அளவில் உயரிய விருது பெறும் ஒருவர் அதற்காக
ஆள்பிடிக்கும் வேலைகள் செய்பவராக சந்தேகிக்கப் பட்டால், அல்லது பொதுவாக ஒழுக்கம் தவறியவராக அறியப்பட்டால்
அவருக்குக் கிடைக்கும் விருது அதனாலும் மதிப்பிழக்கும். |
|
2. கேள்வி: ஞானபீட விருது பெற்ற வைரமுத்து, அது தொடர்பான
விகடன் பத்திரிகைப் பேட்டியில் "விருதுகளுக்காக நான் ஆசைப்படுவதில்லை.
விருது வந்தால் தவிர்ப்பதுமில்லை" என்று கூறி இருக்கிறாரே? பதில்: முதல் வாக்கியம் அப்பட்டமான பொய். எந்த எழுத்தாளனும் தனது எழுத்துக்கான
சன்மானத்தை விட, தனக்கு வரும் பாராட்டையும் விருதையும் அதிகம் விரும்புவான். அது இயற்கை, அதில் தவறில்லை - எல்லா ஓட்டப் பந்தய
வீரர்களும் மாநில விருது, தேசிய விருது, அகில உலக விருது என்று மேலும் மேலும் ஆசைப்படுவது போல். ஒருவேளை, சில குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு
தெரிவிக்கும் நோக்கத்தில், தனக்கு ஞானபீட விருது கிடைப்பதற்காக அவர் திரைமறைவு முயற்சிகள் ஏதும்
செய்யவில்லை என்று சொல்ல நினைத்து, "நான் விருதுகளுக்கு ஆசைப்படுவதில்லை"
என்ற மறைமுக வார்த்தைகளில் வைரமுத்து தனது மறுப்பை வெளிப்படுத்தி இருக்கலாம். முதல் வாக்கியம் பொய் என்பதால், இரண்டாவது வாக்கியத்துக்கு அர்த்தம்
பூஜ்யம். |
|
3. கேள்வி: 'அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுடன் நடத்தும் போர் பற்றி
இந்தியா இதுவரை வெளிப்படையாகக் கருத்து சொல்லாமல் மெளனமாக இருப்பது கோழைத்தனம்
அல்ல, சிறப்பான
ராஜதந்திரம்' என்ற கருத்தை, காங்கிரஸ்
தலைவர் சசிதரூர் விரிவான கட்டுரையாக எழுதி இருக்கிறாரே? பதில்: அவர்
கருத்து நுட்பமானது, ஆழமானது. தனது கட்சிக்கு மாறாக அவர்
எடுக்கும் அநேக நிலைப்பாடுகளில் தெளிவும் சிந்தனையும் பளிச்சிடுகின்றன. இந்தியா இந்த விஷயத்தில் ஏதாவது கருத்து சொல்லி தனக்கு, தன் மக்களின் நலன்களுக்கு புதிய சிக்கல் வரவழைத்து, அதன் விளைவாக மோடியும் பரிதவித்தால் ராகுல் காந்தி
இடுப்பு டான்ஸ் ஆடக் காத்திருப்பார். இந்த விஷயத்தில் ராகுல் காந்தி ஆடாமல்
அசையாமல் இருப்பதாக! |
|
4. கேள்வி: "நமது கட்சிக்கு மதசார்பற்ற கொள்கையில்
எந்தச் சமரசமும் இல்லை" என்று தவெக தலைவர் விஜய், ஒரு சமீபத்திய
ரம்ஜான் நாளன்று இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்வில் தலையில் தொப்பியுடன்
பங்கேற்றுப் பேசி இருக்கிறாரே? பதில்: இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சித்
தலைவரும் இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் மத்தியில் பேசும்போது "எங்கள்
கட்சி மதச் சார்பற்ற கட்சி. நாங்கள் மதச் சார்பில்லாமல் செயல்படுவோம்"
என்று பேசி, சம்பந்தப்பட்ட மதத் தலைவர்களும் அதை வரவேற்கிறார்கள் என்றால் என்ன
அர்த்தம்? 'எங்கள் கட்சி, குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு ஆதரவாக மட்டும் செயல்படாது. அனைத்து
மதத்தவர்களிடேயே பாரபட்சமில்லாமல் நடுநிலையாக இருக்கும்' என்று அந்த அரசியல் தலைவர் சொல்வதாக
அர்த்தம் ஆகாது. 'எங்கள் கட்சி ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருக்காது. உங்களுக்குப்
பலவிதத்தில் ஆதரவாக இருக்கும்' என்று, தான் பேசும் சிறுபான்மையின மக்களிடம் அந்தத் தலைவர் சொல்வதாகவே
உணரப்படும். தலைவரின் அந்தச் செய்திக்கு, சம்பந்தப்பட்ட சிறுபான்மை மதத்தினிரிடம்
வரவேற்பு கிடைக்குமாறு அவர்களின் மதத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். "எங்கள் கொள்கை மதச்சார்பற்ற கொள்கை" என்று சிறுபான்மை மதத்தினருக்கு
ஒரு அரசியல் தலைவர் தரும் சிறிய உறுதிமொழி, ஒரு ஹவாலா மொழிப் பரிமாற்றம். சொல்பவர், கேட்பவர் இருவருக்குள்ளும், விரிவான பொருள் கொண்ட அந்த உறுதிமொழியின்
கொடுக்கல், வாங்கல் பரஸ்பரப் புரிதலுடன் நடந்தேறும். அந்த ஹவாலா மொழிப்
பரிமாற்றத்தைச் சட்டம் வேடிக்கைதான் பார்க்க முடியும். இதை நன்றாக உணர்ந்த
கில்லி, தவெக தலைவர் விஜய். |
|
5. கேள்வி: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளாக, "சென்னை
மட்டுமின்றி திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரியும் தலைநகரங்களாக மாற்றப்படும், அனைவருக்கும்
அரசு வேலை உண்டு, தன்னலமற்ற
அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும், ராவணனுக்கு கோவில் கட்டப்படும்" என்றெல்லாம் நாம்
தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிவித்திருக்கிறாரே? பதில்: முகமது
பின் சீமான். |
|
பகுதி 69 // 20.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment