Sunday, 15 March 2026

கேள்வி-பதில் (15.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "முதல்வர் ஸ்டாலினுக்கு 73 வயது போல் தெரியவில்லை; 37 வயது இளைஞரைப் போல் செயல்படுகிறார். திமுக-வும் ஸ்டாலினும் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு" என்று நடிகர் வடிவேலு கூறி இருக்கிறாரே?

 

பதில்: வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகர். எப்போதுமே அவர் நகைச்சுவை டாப் கிளாஸ்.

 

 

2. கேள்வி: கவிஞர் வைரமுத்துக்கு இலக்கியத்துக்கான ஞானபீட விருது வழங்கப் படுவது சரியா?

 

பதில்: இதில் இலக்கியத்துக்கான வைரமுத்துவின் பங்களிப்பு என்பது ஒன்று. அது ஒரு புறம் இருக்கட்டும். அது வேறு.

 

இன்னொரு புறம், எளிதில் ஒதுக்கித் தள்ள முடியாத பல பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் வைரமுத்து மீது இருக்கின்றன. அந்த அடிப்படையில் மட்டும், பாரதத்தின் பழமையான உயர்ந்த இலக்கிய விருதுக்கு வைரமுத்துவின் பெயர் பரிசீலிக்கப் பட்டிருக்கக் கூடாது - அதை வழங்குவது ஒரு தனியார் அமைப்பு என்றாலும்.

 

இலக்கியம் வாழ்க்கையின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும். ஆனால் வாழ்க்கையின் கேவலத்தைக் கொண்டாடாது. பாலியல் குற்றம் பெண்மையை அவமானம் செய்வது, ஆகையால் கேவலமானது.

 

'வைரமுத்துக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் இருந்தாலும் அவை கோர்ட்டில் நிரூபிக்கப் படவில்லை; ஆகையால் அந்த விதத்தில் பாரதத்தின் உயர்ந்த இலக்கிய விருதை அவருக்கு வழங்கத் தடையில்லை' என்று ஞானபீட அமைப்பு கருதினால் அதில் வெகுளித்தனம் மற்றும் அசட்டுத்தனம் உண்டு; ஞானம் இல்லை, ஞானத்தின் அங்கமான விவேகம் இல்லை. மொத்தத்தில் சரியில்லை.

 

 

3. கேள்வி: "அப்போலோ ஆஸ்பத்திரியில் தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற ஒருவரும் டாக்டராக இல்லை" என்று அந்த மக்களுக்கு ஆதரவாக, ராகுல் காந்தி பொது வெளியில் தனது மனக்குறையை வெளிப்படுத்தி இருக்கிறாரே?

 

பதில்: ராகுல் காந்தி என்ன சொல்ல வருகிறார்?

 

'கல்லூரிப் படிப்பிற்கு வரும் ஒருவர் மருத்துவம் படித்து டாக்டர் ஆவதுதான் சிறப்பானது, வேறு எதைப் படித்தாலும் வேஸ்ட்';

 

'ஒருவர் டாக்டர் ஆகிவிட்டாலும், அவர் அப்போலோ ஆஸ்பத்திரியில் ஸ்டெதாஸ்கோப் மாட்டிக்கொண்டு உலவுவது தான் கெத்தானது, பயனுள்ளது. வேறு தனியார் ஆஸ்பத்திரியிலோ அரசாங்க ஆஸ்பத்திரியிலோ அவர் வேலை செய்வது வெட்கக் கேடானது';

 

'ஆகையால் அப்போலோ ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்க்காத தலித், பழங்குடியினர் மற்றும் ஓபிசி மக்கள், வாழ்க்கையில் தோற்றவர்கள். குறிப்பாக, அவர்கள் இந்தியாவின் பிற ஜாதியினரால் வஞ்சிக்கப் படுகிறார்கள்';

 

என்கிறாரா ராகுல் காந்தி?

 

ஒரு சாதாரண இந்தியருக்கு - அவர் என்ன ஜாதியோ எந்த மதமோ - உணவு, உடை, குடிநீர், இருப்பிடம், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், போதிய வருமானம் அனைத்தும் நாம் நாட்டில் கிடைத்து விட்டதா? அதெல்லாம் அமோகமாகக் கிடைத்தது போக, டாக்டராகி அப்போலோவில் வேலை பார்க்காததுதான் அவருக்கான பெரிய இழுக்கா இப்போது? அதனால்தான் அவர்களுக்காக ராகுல் காந்தி மனம் கசிந்து வருத்தம் கொள்கிறாரா?

 

ராகுல் காந்தி வெளிப்படுத்தியது அவருடைய மனக்குறை அல்ல. புத்திக் குறை மற்றும் நேர்மைக் குறை. அதற்கு நிவர்த்தியே இல்லை.

 

 

4. கேள்வி: "மகளிர் ஆதரவு இருக்கும் வரை திமுக-வை யாரும் வெல்ல முடியாது" என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: எல்லாக் கட்சிகளும் அப்படிப் பேச நினைக்கும். ஆனால் "ஆண்களின் ஆதரவு இருக்கும் வரை எங்கள் கட்சியை யாரும் வெல்ல முடியாது" என்று எந்தக் கட்சியின் தலைவரும் பேச நினைப்பதில்லை.  காரணம்: உரிமைத் தொகை, சலுகைகள் மற்றும் இலவசங்கள் மூலமாகப் பெண்களைத் தான் எளிதில் ஏமாற்றி அவர்களின் வாக்குகளை ஈர்க்கலாம் என்று எல்லாக் கட்சிகளும் நினைக்கின்றன. உண்மை நிலை வேறு.

 

முக்கிய சிறுபான்மையின ஆண்களும் பெண்களும் அவரவர் மதத் தலைவர்களின் சொற்களுக்கு ஏற்ப ஒரே கட்சிக்கு அல்லது ஒரே கூட்டணிக்கு வாக்களிக்கலாம். ஆனால் ஹிந்துப் பெண்கள் - ஹிந்து ஆண்களைப் போல் அல்லாமல் - ஒரு கட்சியிடம் ஏமாறுவது போல் போக்குக் காட்டி, தாங்கள் ஏற்கனவே தீர்மானித்து வைத்த கட்சிக்கு வாக்களிக்கலாம். ஓட்டோ ரகசியம். மற்றபடி வருவது வரட்டுமே!

 


5. கேள்வி: அதிமுக-வில் மூன்று முறை முதல்வராக இருந்துவிட்டு இப்போது திமுக-வில் இணைந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், "நான் 18 வயதிலேயே திமுக-வில் இணைந்தவன் தற்போது மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்துள்ளேன்" என்று விளக்கம் தந்துள்ளாரே?

 

பதில்: தாய்க் கிழவி மற்றும் தாய்க் கழகம் - இரண்டும் சிறந்த நடிப்புக்காகத் தற்போது கவனம் பெறும் வேடங்கள்.


பகுதி 67 // 15.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment