|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: திமுக-வின்
உதயநிதி ஸ்டாலின், பாஜக-வின்
அண்ணாமலை - இருவரையும் சுருக்கமாக ஒப்பிடவும். பதில்: பெற்ற
பாசத்தால் மு.க. ஸ்டாலினும், சுய
லாபத்திற்காகத் திமுக-வின் மற்ற தலைவர்களும், உதயநிதியைத்
தாங்குகிறார்கள். மக்கள் மனதை விட, கட்சிக்குள்
உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம். தங்களின் வாழ்க்கை நலனுக்காக, தமிழக
நன்மைக்காக, எண்ணற்ற பொதுமக்கள் அண்ணாமலையை
நம்புகிறார்கள். கட்சியின் மாநில அமைப்பை விட, மக்கள்
மத்தியில் அவருக்கு அதிக முக்கியத்துவம். |
|
2. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக, அதிமுக
கூட்டணியில் தவெக சேராது என்ற தற்போதைய நிலையில், "தவெக 234 தொகுதிகளிலும்
போட்டியிட்டு வெற்றி பெறும். யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் இளிச்சவாயர்களா?" என்று தவெக
தலைவர் செங்கோட்டையன் கூறி இருக்கிறாரே? பதில்: தனித்துப் போட்டியிடுவதால் தவெக-வுக்கு
மெஜாரிட்டி கிடைக்குமோ இல்லையோ, 'அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கத் தேர்தலில் போட்டியிட்டு
உழைப்பதற்கு நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல' என்று விஜய் கட்சி நினைப்பது சிறிதளவு சரி.
எடப்பாடி பழனிசாமியும் இப்படி நினைக்கலாம்: 'ஏற்கனவே முதல்வராக இருந்து, இரட்டை சிலை சின்னத்தைக் கொண்ட அதிமுக-வின்
பொதுச் செயலர் பதவியை அடைந்திருக்கும் நான், நேற்று அரசியலுக்கு வந்த விஜய்யை
முதல்வராக்க இளிச்சவாயன் அல்ல'. எல்லாக் கட்சிகளுக்கும் இனிய
இளிச்சவாயர்களாக இருப்பது, பொதுமக்கள். அது புரிந்து அந்தப் பாதுகாப்பில், "நான் இளிச்சவாயன் அல்ல" என்ற தன்மானச்
சிலிர்ப்பு கொண்டவர்கள் அரசியல் தலைவர்கள். |
|
3. கேள்வி: திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு நான்கு தொகுதிகள்
ஒதுக்கப் பட்டாலும், அவற்றில் மதிமுக
ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடும், மீதி மூன்று தொகுதிகளில்
திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று ஒப்பந்தம் ஆகியிருக்கிறதே? பதில்: வெளியில்
டீ குடிப்பதற்கு, தெருவோர டீக்கடைக்குப் போகும்
அளவுக்குத்தான் உங்களுக்குப் பொருளாதார சக்தி இருக்கிறது என்றால் நீங்கள் அங்கு
போய் கிளாசில் டீ வாங்கிக் குடிக்கவேண்டும். குடிப்பதற்குத் தனியாகத் தண்ணீரும்
கிடைக்காது. ஒரு ஹோட்டலுக்குப் போகும் பொருளாதார சக்தி உங்களுக்கு இருக்குமானால்
நீங்கள் உட்கார சேர், குடிநீர், பளபளவென்ற கோப்பையில் டீ, எல்லாம் அங்கு வழங்குவார்கள். திமுக பெரிய ஹோட்டல் மாதிரித் தான். ஆனால் தேறாத சில கஸ்டமர்களைத் திமுக
தனது பில்டிங் வாசலில் அமைத்திருக்கும் சின்ன டீக்கடையில் மட்டும் அனுமதித்து, அவர்களுக்கு உண்டான சேவையை அளித்து அனுப்பிவிடும். |
|
4. கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக-வை
எதிர்க்கும் எல்லாக் கட்சிகளும் திமுக தலைமையிலான ஒரே கூட்டணியில் இணைந்து
விட்டன. ஆனால் திமுக-வைக் கடுமையாக எதிர்க்கும் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி, அதிமுக
தலைமையிலான கூட்டணியில் சேராமல் தனியாகப் போட்டியிட எண்ணுகின்றன. அதனால்
திமுக-வுக்கு எதிரான வாக்குகள் பிளவுபட்டுத் தேர்தலில் திமுக-வுக்கு வலிமை
தரும். இது புரியாதவர்களா விஜய்யும் சீமானும்? பதில்: இது புரியாத மண்டூகம் அல்ல இருவரும். 'நான் முதல்வன்' என்ற கனவில் இருக்கும் விஜய், தேர்தல் முடிவால் தனது கனவுலகம் சிதைந்தால்
இன்னும் சில ஆண்டுகள் கழித்தும் அவரை வரவேற்கத் திரையுலகம் காத்திருக்கும் என்று
அறிந்தவர். "என் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய வெற்றி பெறாது. இருந்தாலும் நான்
அரசியல் செய்வதின் ரகசியம் எனக்கு மட்டும் தெரியும்" என்று சொல்வதுபோல்
தெரிகிறவர் சீமான். என்ன ஆனாலும் அந்த இருவருக்கும் தனிப்பட்ட
முறையில் நஷ்டம் இல்லை. ஆகையால் அதிமுக கூட்டணியில் தங்கள் கட்சியை அவர்கள்
சேர்க்காமலே இருக்கலாம், கடைசி நிமிடத்தில் சேர்க்கவும் செய்யலாம். மற்ற பல கட்சிகளின்
தலைவர்களைப் போல், தங்கள் சுய தேவை மற்றும் ஆதாயம் எந்தப் பக்கம் அதிகம் கைகூடும் என்று
அந்த இருவரும் கணிப்பதைப் பொறுத்து அவர்களின் கூட்டணி முடிவு இருக்கும். வேறு
கொள்கை கொத்தவரங்காய் இதில் ஏதுமில்லை. |
|
5. கேள்வி: பிப். 24-ம் தேதி, சசிகலா தனது புதிய கட்சியின் கொடியை அறிமுகம்
செய்தார். 17 நாட்கள்
கழித்து, கட்சியின் பெயர்
"அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" என்று
செய்தியாளர்கள் முன்பாக அறிவித்திருக்கிறார். கட்சியின் பெயரை அறிவிக்க ஏன்
இத்தனை நாட்கள்? பதில்: கட்சியின்
பெயரை சசிகலா சில நாட்கள் மனனம் செய்ய முயன்றதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்.
இறுதியாக அவர் கட்சியின் பெயரைக் கேமரா முன் நின்று அறிவிக்கையில், "அனைத்திந்திய" என்று சொல்லி நிறுத்தி, மேஜை மீதிருந்த உதவும் காகிதத்தை ஒருமுறை
பார்த்துவிட்டு மீதிப் பெயரை அறிவித்தார். கட்சிப் பெயரை சுருக்கிச் சொல்வதற்கு
(அஇபுமமுக?) இன்னும் அதிக ஞாபக சக்தி, தெளிவான தமிழ் உச்சரிப்பு, தேவை. சசிகலா, பெயரளவுக்கும்
யோசிக்கவில்லை. |
|
பகுதி 66 // 13.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment