Sunday, 29 March 2026

கேள்வி-பதில் (28.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பேசுகிறாரே?

 

பதில்: ஆட்சியிலிருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்று தமிழகத்தில் கணிசமான வாக்காளர்கள் நினைக்கிறார்கள். இது ஒரு புறம்.

 

இன்னொரு புறத்தில், தமிழகத்தில் அதிமுக-வைத் தவிர, அல்லது அதிமுக-வுடன் கூட்டாக, ஆட்சிக்கு வருவதற்கு பாஜக-வும் மாநிலத்தில் ஒரு தகுதியான கட்சியாக வளர்ந்திருக்கிறது என்று நிறைய வாக்காளர்கள் நினைப்பார்கள். இதற்கு ஒரு வெளி அடையாளம்: திமுக அதிமுக தவிர, இந்த சட்டசபைத் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது (பாஜக, தமாகா மற்றும் ஒன்றிரண்டு கட்சி வேட்பாளர்கள் அனைவருமாக), பாஜக-வின் தாமரை சின்னத்தில். ஆகவே ஆட்சி மாற்றம் வந்தால் அதில் பாஜக-வும் சேர்ந்து இடம் பெறுவது சரியாக இருக்கும், தமிழகத்திற்கு நன்மை தரும்.

 

திமுக-வை எதிர்க்கும் பெரிய கூட்டணி முற்றிலும் ஒன்றுபட்டுத் திமுக-வைத் தோற்கடிப்பது, தமிழகத்திற்கான பெரிய பலன். 'அதிமுக தனித்து ஆட்சி' என்பது, பழனிசாமியின் சின்ன ஆசை.

 

சின்ன ஆசைகளை விட்டால் தான் பெரிய பலன்களை எளிதில் அடைய வாய்ப்புண்டு. ஒருவேளை, அதிமுக தனித்து ஆட்சி அமைத்தால், அதில் பழனிசாமிக்கு மட்டும் தெரிகிற பெரிய பலன்கள் இருக்கலாம்.

 

 

2. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில், அண்ணாமலையின் உடல் மொழியும் தோரணையும், அதிமுக-பாஜக  கூட்டணிக்கு எளிதில் வலு சேர்ப்பதாகத் தெரியவில்லையே?

 

பதில்: அது உண்மையாக இருந்தாலும், ஒரு வகையில் பரவாயில்லை.

 

'எங்கள் கூட்டணி வென்றால், அதிமுக மட்டும் ஆட்சி அமைக்கும். அதிமுக-வுடன் கூட்டணியாக இணைந்திருந்த மற்ற எந்தக் கட்சிக்கும் ஆட்சியில் பங்கு கிடையாது' என்ற எடப்பாடி பழனிசாமியின் பல சுயநல அறிவிப்புகளை ஜீரணிக்காத ஒரு தமிழக பாஜக தலைவர், சிறிது முறுக்கிக் கொண்டு நிற்பது பாதகமில்லை. அதாவது, பழனிசாமியின் அந்தப் பேச்சுக்கும் அணுகுமுறைக்கும் பாஜக நைஸாக - நேரடியாக இல்லாமல் - ஒரு எதிர்ப்பு காட்டிய மாதிரி இருந்தால் அது களத்தில் நல்லது. அதைச் செய்து காட்டும் தமிழக பாஜக தலைவர், தன் கட்சியின் மத்தியத் தலைமையின் அபிமானம் பெற்றவராக இருப்பதால் அது இன்னும் நல்லது. இப்போதைக்கு இந்த அளவுதான் ஒருவர் ஒட்டுமொத்த நல்லதாக யோசிக்கலாம்.

 

 

3. கேள்வி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பல இடங்களில் பாட்டுப் பாடி ஓட்டு சேகரிக்கிறாரே?

 

பதில்: ஒரு கட்சியில் நான்காம் கட்டத் தலைவர்கள், அல்லது வெறும் பேச்சாளர்கள், இதைச் செய்யலாம். சீமான் கட்சியில் அவர் மட்டும்தான் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டத் தலைவர். அவரே பாடிப் பாடி ஓட்டுக் கேட்கும்போது பரிதாபமாகக் காட்சி தருகிறார். அவருடைய பரிதாபத்திலும் அவருக்குப் பலன் உண்டா என்பது அவருக்குத் தான் தெரியும்.

 

 

4. கேள்வி: ஈரான் அருகில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி அதற்குத் தனது பெயரை வைக்கவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் யோசனை கூறி இருக்கிறாரே?

 

பதில்: பெயரை மாற்றித்தான் ஆகவேண்டும் என்றால், டிரம்ப் தனது பெயரை விட, ஒரு இந்தியரின் பெயரைப் பரிசீலிக்கலாம் - மோடி அல்ல.

 

அற்ப சிந்தனை, அகராதிப் போக்கு மற்றும் அசட்டுப் பேச்சின் உருவம், டிரம்ப். இந்த குணாதிசயங்களை அப்படியே பிரதிபலிக்கிறது, டிரம்பின் யோசனை. ஆனால் அவரை விடவும், இந்த அனைத்து குணாதிசயங்களையும் இளவயதிலேயே பெற்ற கில்லாடி, ராகுல் காந்தி. தன்னை மிஞ்சியவர் பெயரை டிரம்ப் பணிந்து பரிசீலிக்கலாம்.

 


5. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்கு தமிழகக் காங்கிரஸ் தயாராகும் விதம் குறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை .... அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது .... காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் உழைப்பை சிலர் விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது .... மாநிலத் தலைவர், சட்டமன்றத் தலைவர் மட்டுமே கட்சியல்ல" என்றெல்லாம் தமிழகக் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?

 

பதில்: உண்மையில் ஜோதிமணி இப்படிச் சொல்வதாக அர்த்தம்: "தமிழகத்தில் சரியான நபர்கள் மாநிலத் தலைவராகவும் சட்டமன்றத் தலைவராகவும் வருவதற்கு வழி செய்யத் துப்பில்லாத, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயே! அவர் சிண்டைப் பிடித்திருக்கும் ராகுல் காந்தியே! நீங்கள் இருவர் மட்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியல்ல! இப்படித்தான் நாட்டிலுள்ள காங்கிரஸ் தொண்டர்களின் உழைப்பை விற்றோ விற்காமலோ தின்பீர்களா?"

 

ஜோதிமணி அறிக்கையின் இந்த உண்மையான அர்த்தம் தமிழகக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகைக்குத் தெரியும். இந்த அர்த்தம் ராகுல் காந்திக்கும் தெரியும். ஆனால் இந்த அர்த்தம் தனக்குத் தெரியாதது மாதிரியும், தான் வேறு வகையில் பிஸியாக இருப்பது போலவும் ராகுல் காந்தி நடிப்பார். இந்த நடிப்பும் செல்வப் பெருந்தகைக்குத் தெரியும்.


பகுதி 73 // 28.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment