|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல்
அறிக்கையில்: அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் இலவச பிரிட்ஜ்; அனைத்து குடும்பங்களுக்கும் விசேஷ உதவித் தொகையாக, ரூபாய்
பத்தாயிரம்; ஒவ்வொரு தீபாவளிக்கும், குடும்ப அட்டை
வைத்திருக்கும் பெண்களுக்கு இலவச உயர்தரப் புடவை; ஆண்களுக்கு இலவச உயர்தர
வேட்டி; ஆகிய தேர்தல் வாக்குறுதிகளையும் எடப்பாடி பழனிசாமி
அறிவித்திருக்கிறாரே? பதில்: மாநிலத்தின்
பொருளாதாரத்தை மேம்படுத்த, வேலை வாய்ப்பை அதிகரிக்க, தொலைநோக்கும் முனைப்பும் இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி.
ஆகையால் கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அவர் அள்ளி வீசியிருக்கிறார். இதில்
அவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகரானவர். அதிமுக ஆட்சிக்கு வந்தால் வேறு எந்த விதத்தில் பழனிசாமி ஸ்டாலினுக்கு
அருகில் வருவார், எவ்வளவு அருகில் வருவார், என்பதைத் தற்போது கணிக்க முடியாது. பாஜக-வைப் பொறுத்தவரை, அது ஒரு புறம்
வெளிப்படையாக ஸ்டாலினை எதிர்க்க வேண்டும். இன்னொரு புறம், பின்னணியில் பழனிசாமியைச் சமாளிக்க வேண்டும். வேறு வழி
இல்லை. |
|
2. கேள்வி: "கனிமொழியை மாநில அரசியலுக்கு வரவிட
மாட்டார்கள். அவரை மாநில அரசியலுக்கு வரவிடாமல் தடுப்பது யார் என அனைவருக்கும்
தெரியும்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசி இருக்கிறாரே? பதில்: 'கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால், அவர் நாம் தமிழர் கட்சியை ஓரம் கட்டுவார், அதனால் நாம் தமிழர் கட்சி பலவீனப் படும், அதனால் திமுக மேலும் வலிமை பெறும்; அப்படி ஏதும் நல்லது நடக்காமல் இருக்க, கனிமொழி மாநில அரசியலுக்கு வருவதை யாரோ தடை
செய்கிறார்கள்' என்று கவலைப் படுகிறாரா சீமான்? திமுக-வை எப்போதும் கடுமையாக எதிர்க்கும்
சீமானைப் பொறுத்தவரை, கனிமொழி திமுக-வின் எம்.எல்.ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன? கனிமொழி திமுக-வின் தலைவராகவே ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன? சீமான் பேச்சில் அவ்வப்போது 'போகஸ்' என்பது ஜூட் விட்டு ஓடுகிறது. ஸ்டேண்ட்-அப் காமெடியன் மாதிரி அவர் எல்லா
விஷயங்களையும் பேசுகிறார். ஒரு சீரியஸ் அரசியல் தலைவருக்கு இது அழகல்ல. |
|
3. கேள்வி: சரத்குமார் தோற்றுவித்த சமத்துவ மக்கள் கட்சியை அவர்
பாஜக-வுடன் இணைத்துவிட்டார். பின்னர், "கட்சியில் எனக்குப் பதவி வழங்கப் படாததில் என்
ஆதரவாளர்களுக்கு ஆதங்கம் இருக்கிறது. எனக்கும் ஆதங்கம் இருக்கிறது" என்று
காமிரா முன்பாகப் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார், அது பற்றிக்
கட்சியிடம் கடிதமும் கொடுத்திருக்கிறாரே? பதில்: ஒரு
அரசியல் கட்சியில் இருப்பவர் கட்சிக்குள் முன்னுக்கு வரமுடியவில்லை, கட்சிப் பதவிகளைப் பெற முடியவில்லை, என்றால் அது பற்றிய மனக்குறையை அவர்
பத்திரிகையாளர்களிடமா பேசுவார், அதுவும் காமிரா
முன்பாக? கட்சிக்குள் தொண்டர்களும் நிர்வாகிகளும்
அவர் ஒரு கட்சிப் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்புகிற மாதிரி சரத்குமார்
நடந்துகொண்டாரா, அதற்கான திறமையும் சாமர்த்தியமும்
சரத்குமாரிடம் இருக்கிறதா? தெரியவில்லை. சரத்குமாரின் போக்கு சரியில்லை. 'கட்சியில்
எனக்குப் பதவி கிடைத்தால் நான் கட்சியில் இருப்பேன். இல்லையென்றால் லெப்ட், ரைட், ஸ்ட்ரெயிட், ரிவர்ஸ் என்று நான் எந்தப் பக்கமும் கால் வைத்து
நகரலாம்' என்ற செய்தியைச் சரத்குமார்
அனைவருக்கும் உணர்த்திவிட்டார். அவர் எப்போது நகர்ந்தாலும், 'முன்பே என் ஆதங்கத்தைத் தெரிவித்துக் கட்சியிடம்
கடிதம் கொடுத்தேன்' என்று சொல்லிக் கொள்ளலாம். கட்சியில்
அவர் தொடர்ந்தாலும், கட்சிக்கு எதிராகத் தன் மனக்குறையைக்
காமிரா முன் பேசியது - அது எந்தக் கட்சியாக இருந்தாலும் - கட்சிக்குள் அவருக்கு
என்றும் சுமையாக அமையும். |
|
4. கேள்வி: "ஆப்பரேஷன் சிந்தூர் வாயிலாக இந்தியா ராணுவ ரீதியாக வெற்றி
பெற்றிருந்தாலும், பாகிஸ்தானின்
ராஜதந்திர ஈடுபாடும், செய்திகளைக் கையாளும் விதமும், மத்திய அரசின் முயற்சியை விட
மிகவும் சிறப்பாக உள்ளது" என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்
ஜெய்ராம் ரமேஷ் தற்போது
அறிவித்திருக்கிறாரே? பதில்: ஜெய்ராம் ரமேஷ் இப்படியும் ஒரு அறிக்கை
தரலாம்: "ராகுல் காந்தி லோக் சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை விட, பாகிஸ்தான் நாட்டின் மக்களவையில்
எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினால் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாய்ப்பு
கிடைக்கும், அதற்காக அங்கு மதிக்கப் படுவார்." ராகுல் காந்தியை மகிழ்விக்கப்
பாதி மறையைக் கழட்டிய ஜெய்ராம் ரமேஷ், அதை முழுதாகக் கழட்டி விடலாம். |
|
5. கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி
மய்யம் போட்டியிடாது; திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் என்று
அவர் அறிவித்து விட்டார். கமல் ஹாசன் தன்னை விளக்கி வெளியிட்ட நீண்ட அறிக்கையில், "நமக்குத்
தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதிகள் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில்
போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யம்
உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை .... நாட்டுக்கான போராட்டத்தில், தமிழகம்
முன்னணியில் நிற்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்கவேண்டியது என் கடமை. எனக்கு
அரசியல், தொழில் அல்ல; கடமை"
என்று சொல்ல, அதற்கான பதில் அறிக்கையை
ஸ்டாலினும் உடனே வெளியிட்டு, "அவருக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை.
அவரது முடிவு, என்னை நெகிழ
வைத்துவிட்டது .... அவரது பெருந்தன்மையான முடிவை, வரலாறு பாராட்டும்"
என்று கூறி இருக்கிறாரே? பதில்: இரண்டு
ஹீரோக்கள் ஒரு கிளைமேக்ஸ் காட்சியில் தோன்றுகிறார்கள். "உனக்கு உன் வழி, எனக்கு என் வழி" என்று சொல்லி இருவரும் முடிவில்
பிரிவதுதான் அசல் கதை. ஆனால் அந்தக் காட்சியை நாசுக்காக நகர்த்தி, அவர்கள் இருவரும் ஒரே பாதையில் இணைந்து பயணிப்பது போல்
அவர்கள் இருவருக்கும் டயலாக் எழுதிய வசனகர்த்தா
பாராட்டுக்கு உரியவர். இரண்டு ஹீரோக்களில் ஒருவர் தனக்கான வசனத்தை அவரே
நீள நீளமாக எழுதுபவர். உயிரோட்டத்துடன் நடித்த இரண்டு நடிகர்களுக்கும் சபாஷ். சிறந்த
நடிகருக்கான விருதை இரண்டு நடிகர்களுக்கும் கூட்டாக அளிக்கலாம். |
|
பகுதி 71 // 25.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment