Wednesday, 11 March 2026

கேள்வி-பதில் (09.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அண்ணாதுரை தலைமையில் திமுக முதன் முறையாக ஆட்சி அமைத்ததைக் குறிப்பிட்டு "அன்றுதான் தமிழினம் தலை நிமிர்ந்த நாள்" என்றும் அந்த நாள் "தமிழகத்தின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய நாள்" என்றும் சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: சுதந்திர இந்தியாவில் வேண்டுமென்றே தமிழினத்தைத் தலை குனியவைத்து, தமிழினத்தின் எழுச்சிக்கான வாய்ப்பைக் காலில் மிதித்து தமிழகத்தில் ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி என்கிறார் ஸ்டாலின். அந்தக் காங்கிரஸ் கட்சியை 1967ல் திமுக தான் ஆட்சியிலிருந்து வெளியேற்றியது என்பதையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்கிறார். வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, மற்ற தோழமைக் கட்சிகளுக்கு இல்லாத அதிகத் தொகுதிகளை ஒரு கட்சிக்கு வழங்கி, தயக்கம் காட்டிய அந்தக் கட்சியைத் திமுக இழுத்துப் பிடித்து இப்போது ஒரு கூட்டணியை முடித்திருக்கிறது என்றால், அந்த ஒரு கட்சியும் காங்கிரஸ் தான்.

 

பேசுகிற ஸ்டாலினுக்கு விவஸ்தை இல்லை. மௌனமாகக் கேட்கிற காங்கிரஸ் தலைவர்களுக்கு வெட்கம் இல்லை.

 

அரசின் அலட்சியம் ஏற்றுகிற சுமையால் முதுகு வளைய, தமிழின் பெயரால் தலையை மட்டும் ஸ்டாலின் நிமிர்த்திப் பிடிக்க, கழுத்து வலியுடன் தமிழினம் தரும் காட்சி பரிதாபமானது!

 

 

2. கேள்வி: "ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார் பிஹாரில் பத்து முறை முதல்வராகப் பதவி ஏற்றவர். அவர் தற்போது முதல்வர் பதவியிலிருந்து விலகி ராஜ்ய சபா உறுப்பினர் ஆகி இருக்கிறார். நிதிஷ் குமாருக்கு அந்த இறக்கத்தை ஏற்படுத்தியது, கூட்டணிக் கட்சியான பாஜக. அவருக்கு நேர்ந்த அதே நிலைமை இனி பழனிசாமிக்கு ஏற்பட்டு, அவரும் பாஜக-வினால் அதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து மாற்றப் படுவார்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு எதிர்க் கட்சியான அதிமுக-வின் இப்போதைய பிரதான நோக்கம் என்ன? ஆட்சியிலிருக்கும் திமுக-வைத் தேர்தலில் தோற்கடித்து, அதிமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். அதில்லாமல், ஒரு பழனிசாமியோ பாலுசாமியோ அதிமுக-வின் பொதுச் செயலராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும், இன்னொரு பக்கம் திமுக தமிழகத்தைத் தொடர்ந்து ஆள வேண்டும் என்பதா அதிமுக-வின் லட்சியமாக இருக்க முடியும்?

 

நிதிஷ் குமார் பிஹாரில் நீண்ட வருடங்கள் பெருமை கண்ட மாதிரி, அதிமுக தலைவர் பழனிசாமியும் தமிழகத்தில் சிறப்படைந்து நிலைக்க வேண்டும், அதற்குத் தடை வரக்கூடாது, என்று ஸ்டாலின் துடிக்கிறாரா? அப்படியானால், "நிதிஷ் குமார் மாதிரிப் பழனிசாமி பல முறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்பதைத் திமுக விரும்புகிறது. அதற்கு ஏற்பத் திமுக-வும் தேர்தல்களில் அதிமுக-வுக்கு ஆதரவளித்து நீண்ட காலம் சட்டசபையில் எதிர்க் கட்சியாக அமரும்" என்று ஸ்டாலின் அறிவிக்கட்டுமே!

 

 

3. கேள்வி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், 60 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம், மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம், திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச் சேலை, ஆகியவற்றை மாநில அரசு வழங்கும் என்று விஜய் அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: தற்போதைய திமுக கூட்டணிக்கு மாற்றாக தவெக ஆட்சிக்கு வந்தாலும், கொள்கை அளவில் திமுக கவலைப்பட வேண்டாம். திமுக மார் தட்டும் திராவிட மாடல் ரூட்டில், திமுக-வை விட வேகம் காட்டுகிறார் விஜய்.

 

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதல்வரானால் மாநிலத்தின் கடன் சுமை எகிறும், அரசின் கருவூலம் கதறும். திமுக தோற்றாலும், திமுக-வின் திராவிட மாடல் நிர்வாகம் நிலைக்கும்.

 

 

4. கேள்வி: பாமக நிறுவனர் ராமதாஸ், "சட்டசபையில் 234 எம்.எல்.ஏ-க்களும் பெண்களாக இருக்க வேண்டும்" என்று ஒரு மகளிர் தின விழாவில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: இந்திரா காந்தி, மார்கரெட் தாட்சர், கோல்டா மேயர் ஆகியோர் தமது நாட்டின் பிரதமர்களாக இருந்தனர். அவர்கள் பெண்கள் என்பதால் அந்த நாடுகளின் ஆண்களுக்குக் கேடு வரவில்லை. அதைப்போல் ஆண்கள் பலர் எம்.எல்.ஏக்களாக, முதல்வர்களாக இருந்தால் மட்டும் பெண்களுக்குக் கேடில்லை.

 

எதை வேண்டுமானாலும் சொல்லி எல்லாப் பெண்களின் வாக்குகளை ஈர்க்க வேண்டும் என்ற பைத்தியக்கார எண்ணத்தில்தான் கேடு இருக்கிறது - அது அநேகமாக அனைத்து முன்னணிக் கட்சிகளிலும் உண்டு.

 


5. கேள்வி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பேசும்போது, "பெண்கள் ஆண்களை விட அதி புத்திசாலிகள்" என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?

 

பதில்: தனக்குப் பெண்களின் வாக்குகள் அதிகம் கிடைப்பதில்லை என்ற சந்தேகத்தில் ராகுல் இப்படிப் பேசியிருக்கலாம்!


பகுதி 64 // 09.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment