Thursday 31 December 2020

ரஜினிகாந்திடம் – ஆண்டவன் இதை சொல்வானா?

        -- ஆர்.வி.ஆர்  


ரஜினிகாந்தின் முந்தைய அறிவிப்புகளுக்கு மாறாக, அவர் அரசியல் கட்சி துவங்கப் போவதில்லை, அரசியலுக்கு வரப்போவதில்லை என்றாகி விட்டது. இரண்டு நாட்கள் முன்பு அவரே ஒரு  நீண்ட அறிக்கை கொடுத்து, “நான் கட்சி  ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெளிவுபடுத்தி விட்டார்.

 

ரஜினிகாந்த் 70 வயது நிரம்பியவர். மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர். மருந்துகள்  உதவியுடன் தனது உடல் நலத்தை கவனிக்க வேண்டியவர் – குறிப்பாக இப்போதைய கொரோனா தொற்று காலத்தில்.  ஆகையால் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி எண்ணத்தைக் கைவிடுவது   அவரது உடல் நலத்துக்கு நல்லதுதான். அவர் ஆரோக்கியமாக இருக்கட்டும்.

 

மூன்று வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் தனது 67-வது வயதில், மாற்று சிறுநீரகத்துடன் இருந்தபோதே, ‘அரசியல் கட்சி ஆரம்பிப்பேன்’ என்று ஏன் சொன்னார் என்று ஒருவர்  கேட்கிறாரா? அப்படியானால்  ஒரு பக்கத்தில் தமிழ் நாட்டின் அரை நூற்றாண்டு மலிவான அரசியலும் அதன் ஊழலின் உயரமும், இன்னொரு பக்கம் ரஜினிகாந்தின் நல்ல மனதும் கேள்வி கேட்பவருக்குப் புலப்படவில்லை என்று அர்த்தம்.

 

நல்லது செய்ய நமக்கு சக்தி இருக்கிறதோ இல்லையோ, காரியம் கடைசியில் கைகூடுகிறதோ இல்லையோ, அதற்கான முதல் அடிகள் எடுத்து முயன்று பார்க்கலாம் என்று நம்மில் பலர் ஏதாவது நல்ல காரியத்தில், பெரிய காரியத்தில், இறங்குவது உண்டு. மேலே போக முடியவில்லை என்றால் எடுத்த காரியத்தை விட்டுவிடுவதும் உண்டு. ரஜினிகாந்தும் அதைத்தான் செய்து பார்த்திருக்கிறார் – அதாவது அரசியல் கட்சி ஆரம்பிக்கும் காரியத்தைப் பொறுத்தவரை. கட்சி தொடங்கும் எண்ணத்தை அவர் கைவிட்டது புரிந்து கொள்ளக் கூடியதுதான்.  

 

ரஜினிகாந்த்-திற்கு தமிழக மக்களிடையே அபார நற்பெயர் இருக்கிறது.  அவர் நல்லவர், எளிமையானவர், நேர்மையானவர், நம்பிக்கை வைக்கத் தகுந்த தலைவர் என்று சினிமாவுக்கு அப்பாலும் அவரைப் பற்றி பொதுமக்களிடம் ஒரு இமேஜ் இருக்கிறது. இன்று தமிழகத்தில் வேறு எவருக்கும் இந்த  சிறப்பு இல்லை.

 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன், கட்சி ஆரம்பிப்பேன், என்று சொன்ன நேரத்தில் தமிழகத்தில் இரு பெரும் அரசியல் கட்சிகள் ஆளுமையில் இருந்தன, இப்போதும் அப்படி  இருக்கின்றன.   அவை திமுக மற்றும் அதிமுக. மாற்றி மாற்றி இந்த இரண்டு கட்சிகள்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசை நடத்துகின்றன. அதிமுக என்பது விபூதி-பொட்டு வைத்த திமுக, ஹிந்து மத விரோதம் இல்லாத கட்சி,  அவ்வளவுதான். மற்றபடி ஆட்சி செய்யும் “வழிமுறை”களில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை.  இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றாவது தமிழக நலனில் உண்மையான அக்கறையோடு, சுய லாபத்தைப் பெருக்காமல், லஞ்ச லாவண்யத்தைக் கட்டுப் படுத்தி நேராக ஆட்சி செய்யும் என்று ரஜினி நினைத்திருந்தால் அவர் எதற்காக புதிய கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்ல வேண்டும்? சினிமாவில் அவருக்கு இல்லாத புகழா, சம்பாதிக்காத பணமா?  

 

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று ஆட்சி செய்தால் தமிழ் நாட்டிற்கு வளம் சேராது, கண் காணாத இடத்திற்குத்தான் தமிழ்நாட்டின் வளம் செல்லும் - அதே சமயம் இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கி ஆட்சிக்கு வரும் வல்லமை வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை, ஆனால் இந்த காலகட்டத்தில் தனக்கு இருக்கிறது, என்று ரஜினி நினைத்தார். அதனால்தான், தானே அரசியலுக்கு வருவேன், கட்சியும் தொடங்குவேன் என்று டிசம்பர் 2017-ல் அறிவித்தார்.  

 

தான் ஆரம்பிக்க நினைத்த கட்சியின் முக்கிய  நோக்கத்தைப் பற்றி ரஜினிகாந்தின் எண்ணம் இப்படித்தான் இருக்க முடியும். அதாவது, வருகின்ற 2021 சட்டசபை தேர்தலில்  திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்றான ஒரு அரசியல் சக்தியாக உருவாகி அந்த இரு கட்சிகளையும் ஆட்சிக்கு வராமல் தடுத்து, அரசு அமைக்கும் புதுக் கட்சியாக அது இருக்கும், தனியாகவோ ஒரு கூட்டணியாகவோ. அதுவே ஒரு நல்ல ஆரம்பம். ஆனால் அதற்கு அடுத்து 2026-ல் வரும் தேர்தலைப் பற்றி அவர் எதையும் நினைக்க முடியாது. ஏனென்றால், தான் 70 வயதில் கட்சி ஆரம்பிக்கிறோம், தனக்கு வாரிசு அரசியலிலும் நம்பிக்கை இல்லை என்பதால்,  தனது புதிய கட்சியானது காங்கிரஸ், திமுக, பா.ஜ.க. மாதிரி தனக்குப் பின்னால் தொடர்ந்து வளரும் என்று ரஜினி நினைக்க இடமில்லை. அந்தக் கட்சிகளில் ஏற்பட்ட  மாதிரி ரஜினி கட்சியில் பிற தலைவர்கள் உருவாக முடியுமா, முடிந்தாலும் அதற்கு எத்தனை வருடங்கள் ஆகும், பின்னர் 2026 தமிழக தேர்தல் சமயத்தில் ரஜினியின் உடல்நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் இப்போது ஒன்றும் கணிக்க முடியாது.

 

ரஜினிகாந்தை வைத்துத்தான் அவர் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும் – கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களை வைத்து அல்ல. ஆகையால்  2021 தேர்தலை மட்டும்தான் பிரதானமாக மனதில் வைத்து ரஜினி கட்சி ஆரம்பிக்க எண்ணி இருப்பார். அதற்காக திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக ஒரு மக்கள் அலையை தனது செல்வாக்கால் உருவாக்கி, ஒரு நேர்மையான திறமையான ஆட்சி தமிழகத்தில் 2021-ம் வருட தேர்தல் மூலமாக அமைய வேண்டும் என்பது மட்டுமே ரஜினியின் முனைப்பாக இருந்திருக்கும்.  இருந்தாலும், அதற்காக அவர் வைத்திருந்த புதிய அரசியல் கட்சி எண்ணத்தை இப்போது கைவிடும்படி நேர்ந்துவிட்டது.  

 

முடிவாக என்ன ஆகிவிட்டது? ரஜினிகாந்த் வரும் 2021 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கட்சி அமைத்து போட்டி போடமுடியவில்லை. ஆனால் தமிழகத்தின் ஆட்சியில்  தொடர்ந்து பல வருடங்கள் அமர்ந்து மாநிலத்துக்குப் பெரும் நஷ்டத்தையும் முன்னேற்றத் தடங்கலையும் ஏற்படுத்திய பெரிய கட்சிகள் இவை இவை, அவைகள் மறுபடியும் 2021 தேர்தல் மூலமாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற அவரது நல்ல எண்ணம் மறைந்துபோகாதே? அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் போனாலும், அவரது நல்ல அரசியல் எண்ணத்தை பெரிய அளவில் நிறைவேற்ற முடியும்.  அதற்கு அவர் வயதும், கொரோனா காலமும், கையில் கட்சி இல்லாததும் ஒரு தடை இல்லை.

 

திமுக-வையும் அதிமுக-வையும் தவிர்த்து தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி என்று பல கட்சிகள் இருக்கின்றன. இவற்றில் எந்தக் கட்சி தலையெடுத்து ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என்று ரஜினி நினைக்கிறாரோ, அந்தக் கட்சிக்கு அல்லது அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் நல்ல கூட்டணி இருந்தால் அதற்கு பொதுமக்கள் வாக்களிக்குமாறு  ரஜினிகாந்த் வேண்டுகோள் விடலாம். காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக,  கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது மற்ற உதிரிக் கட்சிகளுக்காக வாக்கு கேட்கும் அளவிற்கு ரஜினி விவரம் தெரியாதவர் அல்ல. கமல் ஹாசன் மாதிரியான குழப்பவாதியோ  சந்தர்ப்பவாதியோ அல்ல ரஜினிகாந்த்.

 

உண்மையான தேசப் பற்று, ஹிந்து மதப் பற்றுதல், பிற மதத்தவரிடம் பல்லிளிக்காத சகோதரத்துவம், வாரிசு அரசியல் தவிர்ப்பு, நேர்மையான ஆட்சித் திறன் ஆகிய குணங்கள் மிக்க பாஜக-வோடுதான் ரஜினிகாந்த் மனதளவில் உண்மையாக ஒன்ற முடியும். ஆகையால் பாஜக தனித்து நின்றால் அந்தக் கட்சிக்கோ, அது கூட்டணியாக நின்றால் அந்தக் கூட்டணிக்கோ வாக்களிக்கும்படி ரஜினிகாந்த் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கலாம்.

 

வாக்காளர்களுக்கான தனது வேண்டுகோளை ரஜினிகாந்த் 2021 தமிழக தேர்தலுக்கான கூட்டணிகள்  முடிந்த பின்னர் அறிவிக்கலாம்.  அதற்குமுன் அவர் பலருடனும் ஆலோசனைகள் செய்யலாம். அதைப் பொறுத்து கூட்டணிகளும் இறுதிப் படும்.

 

பாஜக கண்டிப்பாக திமுக-வுடன் கூட்டணி அமைக்காது.  அதிமுக-வோடு பாஜக-வின் கூட்டணி 2021 தமிழக  தேர்தலிலும் அமையலாம். அப்படியானால், பெரியண்ணன் திமுக-வை தோற்கடிப்பதற்காக, அதிமுக-பாஜக கூட்டணியை ரஜினிகாந்த் ஆதரிப்பதும் நல்லதுதான். விஷக்கடியும் சுளுக்கும் கொண்ட  ஒரு நபர், முதலில் ஒரு மந்திரவாதியைக் கூப்பிட்டு விஷக்கடியை இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தானாக சூளுக்கை எடுத்துவிட்டுக் கொள்ளலாம்.   

 

“தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்” என்றும் ரஜினிகாந்த் தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.  “தேர்தலில் இந்தக் கட்சிக்கு, இந்தக் கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்கள்”  என்று ரஜினிகாந்த் மக்களுக்கு வேண்டுகோள் வைத்தால் அது “தேர்தல் அரசியலா”? அப்படி இருக்கலாம். தனது உடல் நலத்தின் காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ஒரு பெரிய முடிவிலிருந்து ரஜினி மாறியது எப்படி சரியோ, நியாயமோ, அதை போல் மக்கள் நலன் காரணமாக வரும் சட்டசபை தேர்தலில் சரியான கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ரஜினி வேண்டுகோள் வைப்பதும் சரிதான், நியாயம்தான்.  அப்போது, “ஏன் எங்களுக்கு வேண்டுகோள் வைத்தீர்கள்?” என்று ரஜினியைப்  பார்த்து பொதுமக்கள் கேட்கப் போவதில்லை. பாதிப்படையும் கட்சிகள் விமரிசனம் செய்வார்கள் – அதற்குத்தான்  ரஜினி முன்பிருந்தே தயாரே?  

 

அகில இந்திய அளவில் ஒரு காலத்தில் காமராஜ் கிங்-மேக்கராக இருந்தார் – அது ஒரே கட்சிக்குள் நடந்தது. ரஜினிகாந்த் அந்தப் பணியை இப்போது தமிழகத்தில் செய்ய முனைய வேண்டும் – பல கட்சிகளின் போட்டியின் நடுவில்.   அவரது முயற்சி முழு வெற்றி அடைகிறதோ இல்லையோ, தமிழக அரசியலுக்கு முக்கிய பலன்களைத் தரும். அவரை வாழவைத்த தமிழகத்திற்கு அவர் செய்யும் பெரிய கைமாறு இந்த முயற்சியாகத்தான் இருக்கும்.  ஆண்டவனும் இதைத்தானே சொல்வான், ரஜினிகாந்த்?  

* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2020