Friday 24 May 2019

வாக்காளர் பா.ஜ.க-விற்கு கொடுத்தது: தேசிய அளவில், மாங்கா. தமிழ் நாட்டில் கடுக்கா

நிம்மதி, மகிழ்ச்சி. இந்த இரண்டையும் நேற்றைய லோக் சபா தேர்தல் முடிவுகள் உங்களுக்கு அள்ளிக் கொடுத்ததா?  ஆம் என்றால் நீங்கள் இந்தியாவை நேசிப்பவர்.

அரசியல் பற்றி அதிகம் விவாதிக்காதவர்களும் பா.ஜ.க லோக் சபா தேர்தலில் அடைந்த அமோக வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.  அடக்கத்துடன் கருத்துக்களை தெரிவிக்கிற  பலர்கூட, எதிர்க்கட்சிகளின் படுதோல்வியை வாங்கு வாங்கென்று நக்கல் செய்யும் மீம்களை வாட்ஸ்-அப்பில் முன் நகர்த்துகிறார்கள். பாரதியின் 'ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல் வரிகளை  சற்று மாற்றி, பிரதமர் நரேந்திர  மோடியை சிலாகித்து நாட்டு வளர்ச்சியை எதிர்நோக்கி, தான் பாடிய குரல் பதிவை அனுப்புகிறார் அரசியல் பேசாத ஒரு பெண்.  இவர்களையும் மனதில் குதியாட்டம் போட வைத்திருக்கும் மகத்தான தேர்தல் வெற்றி, பா.ஜ.க கூட்டணிக்கு நேற்று கிடைத்தது. தனியாக 300 இடங்களுக்கு மேல், கூட்டணியாக 350-க்கு மேல், வென்றது பாரதிய ஜனதா கட்சி. இந்த உயர்ந்த சாதனைக்கு காரணங்கள் உண்டு.

பேச்சில், தோரணையில் பலமானவராக தோன்றும் மனிதரைத்தான் சாதாரண இந்திய மக்கள் அரசியல் தலைவராக ஏற்பார்கள். அவர்தான் அந்த மக்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருவார். அவர் குறைவாக யோசிக்கலாம். குயுக்தியாக சிந்திக்கலாம். கெட்டவராக இருக்கலாம். என்னென்னவோ செய்யலாம்.  அதெல்லாம் சட்டம் தலை தூக்காத, முதிர்ச்சி அடையாத,  ஒரு ஜனநாயக நாட்டில் பொருட்டில்லை. மம்தா பானர்ஜி, மாயாவதி, முலயாம் சிங், லாலு பிரசாத் போன்றவர்கள் இப்படி பாதுகாப்பு உணர்வு அளித்து தலைவர்களாக எழுந்தவர்கள்.

இப்படியான தலைவர்கள் ஏழைகளின் காப்பாளன், ஒரு மொழியின் காவலன், ஒரு ஜாதியின் தலைவன், ஒரு நிலப்பரப்பின் அடிதடி ராஜா,  போன்ற தோற்றங்களில் தங்களை  நிலை நிறுத்தியவர்கள். இவர்களின் குணாதிசயங்கள் பொது வெளியில் பலரும் உணர்ந்ததுதான். இவர்கள்  ஜெயிலுக்குப் போனால் அங்கிருந்தும் அதிகாரம் செய்வார்கள். 

இத்தகைய தலைவர்கள் பேட்டை வஸ்தாத்கள் மாதிரி. வஸ்தாதை எதிர்த்தால் நமக்கு திண்டாட்டம் என்று பேட்டைவாசிகள் ஐயாவுக்கு சலாம் வைத்து பணிவு காட்டி ஜே போடுவார்கள். ஐயா மறைந்தால், அல்லது கைகாட்டினால், அவர் அறிமுகம் செய்த வாரிசு அல்லது சொந்த பந்தத்திற்கு சலாம் வைப்பார்கள். இல்லை என்றால் தலைவரின் நிழலாக இருந்த ஒரு கூட்டாளி அவர் இடத்திற்கு வரலாம். வெறும் நல்லவர்கள், புத்திசாலிகள் இந்தத் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர்த்து நிற்க முடியாது. சமூக வலைத்தளங்களில் கத்தலாம், எத்தலாம். அதோடு சரி.

இன்றைய இந்தியாவில், காலத்தின் பரிசாக வந்த ஒரு தலைவர்தான் இந்த வஸ்தாத்-தலைவர்களை நிமிர்ந்து எதிர்த்து வெல்ல முடியும், மக்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் காண்பிக்க முடியும். அத்தகைய ஒருவருக்கு, வஸ்தாத்-தலைவர்களுக்கும் மேலான மனோ பலம் இருக்கும். அவர் அரசியல் சூது வாதில் அத்துப்படியாக இருப்பார். சாதுரியமான பேச்சிலும் காரியத்திலும் கைதேர்ந்தவராக இருப்பார். பலரையும் அணைத்துச் செல்வார்.  தேசத்தை ஆழ்ந்து நேசிப்பார். சாதாரண மக்களின் பரிதாபத்தை உணர்ந்து அவர்களை கைதூக்கிவிட முயல்வார், அவர்களின் மனங்களைத் தொடுவார். பலராலும் பெரிதாக மதிக்கப் படுவார். அந்த ஒருவர் நரேந்திர மோடி. அதனால்தான் மோடியைப் பார்த்தாலே ஜனங்கள் சல்யூட் வைப்பது என்றில்லாமல் குதூகலத்தில் 'மோடி மோடி' என்று அடிமனதிலிருந்து குரல் எழுப்புகிறார்கள்.

கட்சியில் மோடிக்கு உறுதுணையாக நிற்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களில் 99 சதவிகிதம் நாட்டின் நலனை மட்டும் அரசியலில் நினைப்பவர்கள். ஏனென்றால் மோடியும் அதை தீர்க்கமாக பேச்சிலும் செயலிலும் பிரதிபலிப்பவர். இவர்களும் மோடியின் பலம்.

பல எதிர்க் கட்சிகளின் தலைவர்களுக்கு நேரான அரசியல் எண்ணங்களோ செயல்களோ கிடையாது. கட்சிக்குள் இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களில் 99 சதவிகிதத்தினர், அவர்கள் முன்னர் செய்த முறைகேடுகளை மறைக்கவும், ரகசியமாக வளம் பெறவும் மோடியை எதிர்த்தாக வேண்டும். அதற்கு அவர்கள் தங்களின் தலைவர்களை அண்டி இருக்க வேண்டும். அவர்களின் செயல்களை ஊக்கப் படுத்தி அதே வழியில் அவர்களை விட பயன் அடைபவர்கள் அந்த கட்சித் தலைவர்கள். அவர்களும் மோடியை எதிர்துத்தான் அரசியல் செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும்  தேச நலனுக்கு ’டூ’ விட்டவர்கள்.  நாட்டில் நிறைய கட்சிகள் இந்த கதியில் இருக்கின்றன. ஏன் இருபத்தி இரண்டு கட்சிகள் மோடியை எதிர்ப்பதற்காகவே கூடுகின்றன என்று புரிகிறதா?

எப்படி வஸ்தாத்-தலைவர்கள் பொது மக்களை வஞ்சித்தார்களோ, அதன் மறு பக்கமாக மோடி என்ற அரசியல் மாமனிதர் மக்களின் மனம் தொட்டு அவர்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்.  அவர் பிரதமராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், அவர் நல்ல மனிதர், தேசத்துக்கு நன்மை செய்ய அரசியலில் இருக்கிறார் என்ற என்ணம் மக்களுக்கு இன்னும் ஆழமாக பதிந்து விட்டது.   இத்தகைய மனிதர் தனக்கு நேரடி அரசியல் எதிரியாக இருந்தால், அவரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் குழம்பினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. சாதாரண மக்களிடம் அவர்கள் ஆர்வம் காட்டாத ரஃபால் போர் விமான ஒப்பந்தத்தைப் பேசி, தூய்மையான தலைவராக அவர்கள் மதிக்கும் மோடியை ‘திருடன்’ என்று எப்போதும் தேர்தல் பிரசாரத்தில் வர்ணித்தார் ராகுல். ஆனால் வாக்காளர்கள் ராகுல் காந்தியை நம்பவில்லை. இதைப் புரிந்துகொண்ட மோடி, ராகுலின் ‘திருடன்’ பேச்சுகளுக்கு பதில் சொல்லவும் இல்லை. இருவரில் யார் மக்களை சரியாக புரிந்து கொண்டவர் என்பதற்கு இதுவே உதாரணம்.

மோடியின் நேர்மை மீது நம்பிக்கை வைத்த மக்களிடம் சென்று, “நான் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதா மாதம் ஆறாயிரம் ரூபாய் இலவசமாகத் தருவேன்” என்று ராகுல் காந்தி வாக்குறுதி சொன்னார். பாரம்பரியமான காங்கிரஸ் கட்சியே இப்படி ஒரு தேர்தல் வாக்குறுதி அளித்தது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேறும் என்று மக்கள் நம்பலாம்.  ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் அதிர்ஷ்டம் என்று நினைக்கும் மக்கள், காங்கிரஸ் ஆட்சியின் ஆறாயிரம் ரூபாய் ’ஆஃபரை’யும் தள்ளினார்கள் என்பது தெரிந்துவிட்டது. தேசிய அளவில் வாக்காளர்கள் யார் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்தார்கள், எவர் மீது பெரிய அவநம்பிக்கை கொண்டார்கள் என்பதற்கு இது நிரூபணம்.

          மோடியின் இன்னொரு பக்கமும் கோடிக்கணக்கான இந்தியர்களை வசீகரித்தது.  இந்துக்கள் கிட்டத்தட்ட 80% வாழும் நாடு இந்தியா. அவர்களின் மத நம்பிக்கைகளும் மத சம்பிரதாயங்களும் வழிபாட்டு முறைகளும் அவர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானவை. சுதந்திர இந்தியாவில் எந்த தேசியத் தலைவரும் இது வரை காண்பிக்காத தனது இந்து மத நம்பிக்கையை, மோடி தைரியமாக வெளிப்படுத்தினார்.  இது இந்துக்களோடு அவருக்கு உள்ளார்ந்த பிணைப்பை உண்டாக்கியது.  வேற்று மதத் தலைவர்கள் மூலமாக இந்துக்கள் பலருக்கும் ஏற்பட்ட கவலைகளுக்கு அவரது சொல்லும் செயலும் மருந்தாக இருந்தன.  இவரைப் பார்த்து ராகுல் காந்தி ’நானும் இந்துதான்!’ என்று அவ்வப்போது வேஷம் கட்டினாலும், போறாத நடிப்பில் நகைச்சுவை செய்தார்

தான் ஒரு இந்து என்பதை மோடி நேர்மையாக வெளிப்படுத்தினாலும், மற்ற மதத்து மக்கள் இந்துக்களிடம் அச்சப் படாமல் இருக்கலாம் என்கிற நம்பிக்கையை  மோடி பெரிதும் ஏற்படுத்தினார். அதாவது, அவர் ஒருவரை மற்றோருவருக்கு பயம் காட்டி அந்த மற்றோருவர் மீது சவாரி செய்யவில்லை.  எல்லா மதத்தினரின் இணக்கத்தையும் மோடி விரும்புகிறவர் என்று பல தரப்பட்ட மக்களும் உணர்கிறார்கள். இப்படி பல வகைகளில் பா.ஜ.க-வின் பிரும்மாண்டமான தேர்தல் வெற்றிக்கு மோடி காரணம் ஆகிறார்.

           இவ்வளவு உயர்ந்த அரசியல் தலைவரான மோடியின் பெருமை தமிழ் நாட்டில் ஏன் எடுபடவில்லை? இந்த மாநிலத்தில் ஒரு பா.ஜ.க வேட்பாளர் கூட நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் வெற்றியை தொடவில்லை. பா.ஜ.க-வை எதிர்த்த தி.மு.க கூட்டணிக்கு தமிழ் நாட்டில் பெரிய வெற்றி கிடைத்தது. அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழ் நாட்டு வாக்காளர்கள் மோடியின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களா? இதைப் புரிந்து கொள்ள வஸ்தாத்-தலைவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

          தமிழ் நாட்டில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் கட்சித் தலைவர்கள் இருந்தார்கள். தி.மு.க-வை கருணாநிதியும் அ.தி.மு.க-வை ஜெயலலிதாவும் சக்கரவர்த்திகளாக நிர்வகித்து வந்தார்கள். இவர்கள் தலைமையை ஏற்பது தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதிய பெருவாரியான மக்கள் அவ்வப்போது இந்தக் கட்சி அல்லது அந்தக் கட்சி, அல்லது அவர்கள் தலைமையிலான கூட்டணி என்று ஆட்சியில் அமர்த்தினார்கள். கடைசிவரை, அடுத்த தலைவர் என்று எவரையும் கட்சியில் வரவிடாமல் வளரவிடாமல் செய்து ஜெயலலிதா 2016-ல் மறைந்தார். அடுத்த வஸ்தாத்-தலைவர் இல்லாத அ.தி.மு.க இப்போது தள்ளாடுகிறது. ஜெயலலிதா-வின் நிஜ உருவத்துக்கு தாங்கள் காட்டிய மரியாதையை அவரின் புகைப்படத்திற்கும் காட்டி இப்போது அ.தி.மு.க-வை நடத்துபவர்களுக்கு ஓட்டு போட மக்களில் பலர் தயார் இல்லை.  

தி.மு.க-வை பொறுத்தவரை, கருணாநிதி இறப்பதற்கு  5 வருடங்களுக்கு முன்பே, தனது மகன் ஸ்டாலின்தான் தனக்கு அடுத்த தி.மு.க தலைவர் என்று உறுதியாகக் காட்டிவிட்டார்.  ஆகையால் கட்சியும் கட்சியை ஆதரிக்கும் பொது மக்களும் தி.மு.க-வின் அடுத்த வஸ்தாத்-தலைவர் ஸ்டாலின் என்று புரிந்துகொண்டார்கள். அதோடு, அவருக்கு ஈடு கொடுக்கும் எந்த வஸ்தாத்-தலைவரும் எதிர்க்கட்சியிலும் இப்போது இல்லை என்பதையும் அறிந்து ஸ்டாலினுக்கே சாதாரண மக்கள் பலரும் பாதுகாப்பாக சலாம் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வின் வேட்பாளர்களும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் சென்ற லோக் சபா தேர்தலிலில் 37 தமிழக தொகுதிகளில் வெற்றி அடைந்தார்கள். நேற்று அரசியலுக்கு வந்த கார்த்தி சிதம்பரமும், பலமான ஸ்டாலின் தலைமை தாங்கும் தி.மு.க ஆதரவால் தமிழ் நாட்டு லோக் சபா தொகுதியில் இப்போது ஜெயிக்க முடிகிறது – ஆனால் ராகுல் காந்தி, பரம்பரையாக வென்ற அமேதியில் வெட்கப்படும் தோல்வியை சந்திக்கிறார்.

மோடி எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், நேரடியாக அவர் மக்களிடம் பேசித்தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதை செய்வதற்கு அந்த மக்களின் மொழி அவருக்குத் தெரிய வேண்டும். இந்தி பேசும் மக்களிடம் அவர் இந்தியில் பேசி அதை சாதிக்கிறார். அவரது பேச்சை நேரில் கேட்டு, அதை இயல்பாக புரிந்துகொண்டு, அந்த மக்களும் அவரோடு ஒன்று படுகிறார்கள். அதனால்தான் குஜராத்தியரான மோடி, உத்திர பிரதேசத்திலும், பிஹாரிலும், மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கூட அந்த மாநில மக்களிடம் இந்தியில் பேசி அவர்களைக் கவர்ந்து பிரமிக்கும் தேர்தல் சாதனைகள் புரிகிறார். இன்னொரு மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்று அந்த மக்கள் கூட்டத்தில் இந்தியில் பேசி அந்த தொகுதியிலேயே போட்டியிட்டு பெரிய வெற்றி பெறுகிறார்.

தமிழ் நாட்டை கவனித்தால், இந்த மாநில மக்களை இந்தி படிக்காமல் செய்த தி.மு.க, அதன் பெரிய பலனை இன்று அனுபவிக்கிறது – அதாவது மோடி பேசும் இந்தி இங்கு யாருக்கும் புரியாது, அதனால் மோடியின் தாக்கம் தமிழ் நாட்டில் கொஞ்சமும் இல்லை என்று ஆகிவிட்டது. வாரணாசி தமிழ் நாட்டில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, இந்தி பேசும் மோடி அந்த தமிழ்நாட்டு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது. ராமேஸ்வரம் உ.பி-யில் இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். அப்போது, அந்த வட இந்திய புனித நகரத் தொகுதியில் போட்டியிட்டாலும்  இந்தி பேசும் மோடி ஜெயிப்பார். தமிழ் நாட்டில் இந்த லோக் சபா தேர்தலில் மோடி எடுபடாமல் போனதற்கு பெரும் காரணம் இதுதான். மக்களைப் பரவலாக ஈர்க்கும் தலைவர்கள் தமிழ் நாட்டு பா.ஜ.க-வில் உருவாகவில்லை என்பது கட்சியின் மாநில வளர்ச்சி பற்றியது. அது வேறு விஷயம். ஆனாலும், அதுவும் ஓரளவு காரணம்.

நடந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ.க கூட்டணி  தமிழ் நாட்டில் பெரும் தோல்வி அடைந்ததால், ”தமிழ் நாட்டு மக்களுக்கு தேசிய சிந்தனை இல்லை. இந்து மத நம்பிக்கை கொண்ட தமிழர்களுக்கு, யார் அவர்களின் மத உணர்வுகளுக்கு பாதுகாவலர்கள் என்பதும் புரியவைல்லை” போன்ற விமரிசனங்கள் எழுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் சரியில்லை.  உண்மை என்னவென்றால், நமது ஜனநாயகத்தின் குறைகளும் நமது மாமூல் அரசியல்வாதிகளின் சக்தியும் அலாதியானவை. மக்கள் நலனுக்காக மக்களுக்குப் புரியும் மொழியில் பேசும் நிஜத் தலைவர்களை தமிழ் நாடு பல மாமாங்கம் ஆகியும் பார்க்கவில்லை. பின்னடைவில் இருக்கும் தமிழக மக்களை உயர்த்திவிட முனைப்பான தலைவன் அவசரத் தேவை. தமிழ்நாடு காத்திருக்கிறது.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019



Thursday 16 May 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: நான் மானசீக பாட்டி, கமல் ஹாசனுக்கு. படவா ராஸ்கல்!


தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பல பேர் தினுசு தினுசா உளறுவா. அதுல கமல் ஹாசனை கண்டிப்பா சேக்கணும்.

தெரியுமில்லையா?  "நான் மஹாத்மா காந்தியோட மானசீக கொள்ளுப் பேரன்"னு  கமல் ஹாசன் பேசிருக்கார். இன்னொரு பைத்தியக்கார உளறலை நியாயப் படுத்தணும்னு இப்படி ஒரு அசட்டுத்தனமான 'கொள்ளுப்பேரன்' வழிசல். சரி, அவர் வழில நானும் கொஞ்சம் அசட்டுத்தனமா போய், "நான் கமல் ஹாசனுக்கு மானசீக பாட்டி"ன்னு ஆரமிச்சு அவர்கிட்டயே பேசறேன்.

ண்டாப்பா கமல், மஹாத்மா காந்திக்கும் உனக்கும் கடுகளவு கூட ஒத்துமை கிடையாது. பேதம்தான் கடல் அளவு இருக்கு.  இது உனக்கே தெரியும். நீ மஹாத்மா காந்தி பேரை சொல்லித்தான் ஆகணும்னா என்ன பேசணும்? "காந்தி ஒரு மகான். அவர் மாதிரி தலைவரை பாக்க முடியாது. அவர் பாதம் பணிகிறேன்" அப்டின்னு மரியாதையா சொல்லிட்டு நாசூக்கா கழண்டுக்கணும். எதுக்குடா கண்ணா வேண்டாத பேச்சு?

ஒருத்தர் கிட்ட நேரடியா எதையும் கேட்டு தெரிஞ்சுக்காம, அவர் சொன்னதை அறிஞ்சுண்டு வாழ்க்கைக்கு முக்கியமான விஷயத்தை ஒருத்தர் கிரகிச்சுண்டா, அவர் அந்த இன்னொருத்தரை 'மானசீக குரு'ன்னு சொல்லலாம். ஆனா யாரோ யாருக்கோ தாத்தா கொள்ளுத்தாத்தான்னு இருந்தா நீ அந்த மனுஷனைக் கைகாட்டி, “நான் அவருக்கு மானசீக பேரன், மானசீக கொள்ளுப் பேரன்” அப்படின்னு பேக்கு மாதிரி பேசுவையா?

உன் குடும்பத்தையே எடுத்துக்கோ. உங்க அப்பா சீனிவாச ஐயங்கார் இருந்தாரே, அவர் காங்கிரஸ்காரர். சுதந்திர போராட்டத்துல ஜெயிலுக்கு போனவர். உங்கப்பாவே "நான் காந்தியோட மானசீக பேரன்”ன்னு சொன்னதில்லை. நீ என்ன ’காந்தியோட மானசீக கொள்ளுப் பேரன்’னு பீத்திக்கறது? உன் பொண்கள் கிட்டயாவது சொல்லி வைடாப்பா - இல்லாட்டி அவாளும் "நாங்கதான் காந்தியோட மானசீக எள்ளுப்பேத்திகள்"னு கிளம்பிடப் போறா.

உன்னோட இன்னொரு மெயின் உளறலையும் சொல்லணும். அதுக்காகத்தான நீ கொள்ளுப்பேரன் பேச்சை எடுத்து விட்ட? அது என்னன்னா, “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே”அப்படின்னு பேசிருக்க. இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்றேன்.

"காந்தியைக் கொன்னவன் ஒரு ஹிந்து.  அவரைக் கொன்னதுனால அவன் தீவிரவாதி"ன்னு ஒண்ணு பிரதானமா சொல்லிருக்க. இன்னொண்ணு, "ஹிந்து மதம்னு இருக்கே, அந்த மதத்து மனுஷன்தான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி. அந்த உண்மையை மத்தவா சொன்னா தப்பாகலாம். ஆனா நான் வேற ஆளு. காந்தியோட மானசீக கொள்ளுப் பேரனாச்சே! அதுனால, காந்தி தாத்தாவை உரிமையோட கட்டிண்டு, ’கோட்சேதான் முதல் ஹிந்து தீவிரவாதி’ அப்படிங்கற கண்டுபிடிப்பை நான் சொன்னா சரி"ங்கறது உன் கட்சி. 

கோட்சே ஒரு ஹிந்துன்னு சொன்னயே, அது கரெக்ட். ஆனா அவன் காந்தியை கொலை பண்ணினதுக்காக அவனை தீவிரவாதின்னு சொன்னா அது குழப்பம் இல்லாட்டி பேத்தல் - உனக்கோ ரெண்டும் உண்டு. காந்தியோட கொள்கை ஏதோ பிடிக்காம கோட்சே அவரை சுட்டான். அது மன்னிக்க முடியாத கொலைன்னு எல்லாரும் நினைப்பா. ஆனா அதையும் தாண்டி அது தீவிரவாதம், கோட்சே தீவிரவாதின்னு நீதான் சொல்ற. ஒரு அரசியல் தலைவரையோ ஒரு அரசாங்க அதிகாரியையோ பலி வாங்கினா அது கொலையா தீவிரவாத செயலான்னு பாகுபடுத்தி பாக்க வேண்டாமா? எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு குத்தத்தை, ஒரு பயங்கர குத்தமா பெரிசு படுத்தி பேசிட்டா சமூகத்துல ரொம்ப அக்கறை இருக்குன்னு காட்டிக்கற ஏமாத்து அரசியல்தான் நீ பண்றது.

இன்னொரு விஷயம்.  இது முக்கியம். அரவக்குறிச்சில, முஸ்லிம்கள் அதிகமா கூடின இடத்துல நின்னுண்டு ஓட்டுக் கேக்கும்போது நீ இப்படி உளறிக் கொட்டின. அதாவது, அந்த மக்கள் கிட்ட ’காந்தி, கோட்சே, ஹிந்து’ன்னு நீ பேசினதுக்கு உண்மையான அர்த்தம் இதுதான். "இத பாருங்கோ. தேசத் தந்தையை கொன்னதே ஒரு ஹிந்து. அந்தக் கொலை தீவிரவாதம், அந்தக் கொலைகாரன் தீவிரவாதி. அப்ப, தேசத்துலயே முதல் பெரிய தீவிரவாதி அந்த கோட்சேதான், அந்த ஹிந்துதான். அதுனால, இந்தியாவுல முஸ்லிம் மனுஷா யாராவது தீவிரவாதியா இருந்தா அதெல்லாம் ரெண்டாம் பட்சம். அதுக்காக நீங்க ஒண்ணும் சஞ்சலப்பட வேண்டாம். உங்க மதத்துக்காரா மேல யாரும் நேராவோ மறைமுகமாவோ தீவிரவாத பழி சுமத்த முடியாது. அப்படி யாராவது பழி சுமத்தினா, 'காந்தி கொலைக்கு ஹிந்துக்கள்ளாம் முதல்ல பழி ஏத்துக்கட்டும். அதுவும் தீவிரவாதம்தான். அதுக்கான ஜவாப் ஹிந்துக்கள் முதல்ல சொல்லட்டும். அதுக்கப்பறம் மத்தவாளைப் பத்தி பேசட்டும்'னு நீங்க எதிர்ப் பேச்சு பேசுங்கோ. நான் கமல்ஹாசன், உங்களுக்கு பக்க பலமா இருக்கேன். நம்மள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. சந்தோஷம்தான? உங்க ஓட்டெல்லாம் என் கட்சி வேட்பாளருக்கே போடுங்கோ!" இதான கமல், உன் விஷமப் பேச்சுக்கு உள்ளர்த்தம்? உண்மையா இல்லையா, படவா ராஸ்கல்?

உன் பேச்சை நான் சரியான அர்த்தத்துல புட்டு புட்டு வச்சது வாஸ்தவம்னு உனக்கே தெரியும். இது எப்படி இருக்குன்னா, மூணு மாசத்துக்கு முன்னால  தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு முஸ்லிம் கல்யாண வரவேற்புல தம்பதிகளை வாழ்த்த வந்தவர், "ஹிந்துக்கள் திருமண சடங்குல, புரோகிதர் சமஸ்கிருத மொழில சொல்ற மந்திரங்கள் யாருக்குமே புரியாது. அவருக்கே கூட புரியாது"ன்னு ஹிந்துக்களை இளப்பமா பேசினார். இவர் சில தடவை தமிழ்ள பேசறது கூட தமிழர்களுக்கே புரியாதுங்கறது இருக்கட்டும். முஸ்லிம்கள் கிட்ட போய் ஸ்டாலின் ஹிந்துக்களை பரிகாசம் பண்ணினா, "நான் முஸ்லிம்கள் பக்கம், அதாவது உங்க பக்கம்தான். நான் உங்களுக்கு சப்போர்ட்டா இருந்து ஹிந்துக்கள் கிட்டேர்ந்து உங்களை பாதுகாப்பேன்! என்னை நம்பி ஹிந்துக்களும் என்கிட்ட ஏமாந்துண்டே இருப்பா! தேர்தல்ல உங்க ஓட்டெல்லாம் தி.மு.க கட்சிக்கே போடுங்கோ!" அப்படின்னு முஸ்லிம்கள் கிட்ட யாசகம் கேக்கறார்னு அர்த்தம்.  அப்பாவி முஸ்லிம் ஜனங்ககிட்ட, சுபாவத்துல சாதுவான ஹிந்துக்கள் மேல ஒரு சந்தேகத்தையும் பயத்தையும் உண்டு பண்ணி, தான் பொழைக்கணும்னு கீழ்த்தரமா பேசினார் ஸ்டாலின். அதையேதான் நீயும் அரவக்குறிச்சில பண்ணிருக்க.

சாதாரண முஸ்லிம் ஜனங்க யாரும் நீ பேசினதை எதிர்பார்த்து ஏங்கிண்டு நிக்கலை. நீயா அவாகிட்ட குழைஞ்சு, கோட்சே பேரை சொல்லி ஹிந்து சமுதாயத்தையே பழிச்சு உன் கட்சிக்கு ஓட்டு சம்பாதிக்க பாத்திருக்க, அவ்வளவுதான். உன் பொய்ப் பேச்சை பேசிட்டு, முட்டாள்தனமா ஒரு நினைப்பையும் வச்சிண்டிருக்க. அது என்னன்னா: 'என் பேச்சோட உள்ளர்த்தம் முஸ்லிம்களுக்கு சுரீர்னு புரியும். அது எனக்கு லாபம். ஆனா ஹிந்துக்கள் ஒண்ணும் புரியாம பேசாம இருப்பா. அதுவும் எனக்கு லாபம்.’  உண்மையா இல்லையா, படவா ராஸ்கல்?

சிலபேர் கேப்பா, ’கமல் ஹாசன் பேசினதை ஏன் பாட்டி சீரியசா எடுத்துக்கறேள்?’னு. உங்கிட்டயே சொல்றேன். ஆரம்பத்துல ஈ.வெ.ரா பேச்சையும் அட்டகாசத்தையும் சட்டை பண்ணாம ஹிந்துக்கள் கௌரதையா ஒதுங்கி இருந்தா. அதுனால அவர் துளுத்துப் போனார். அவருக்கப்பறம் கமல் ஹாசன் வரைக்கும் பலபேர் அவர் புகழை பாடிண்டு ஹிந்துக்கள்னா கிள்ளுக் கீரைன்னு மட்டம் தட்டறா. இனிமே ஹிந்துக்களை இழிவு படுத்தறவாளை போடு போடுன்னு போடணும். சூட்டுக்கு சூடு குடுக்கணும். அதான் உறைக்கும். அது உன் வாயைக் கூட அடைக்கலாம்னு நினைக்கறேன்.

சரி, இப்போதைக்கு கிட்ட வா கமல். ஆர்வத்துல ரகசியமா  ஒண்ணு கேக்கறேன்.  கோட்சே மேல கோபம் வச்சுக்கோ. இந்துக்கள் மேலயும் கோபத்தை காட்டிக்கோ. போய்ட்டுப் போ. தேர்தல்ல மக்கள் பாத்துக்கட்டும். ஆனா, மஹாத்மா காந்தி கிட்ட உறவு கொண்டாடற அளவுக்கு அவர் மேல என்னடா கோபம் உனக்கு?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019

Saturday 11 May 2019

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராகுல் காந்தி அலறுகிறார், “திருடன்! திருடன்!”


நேருவோட கொள்ளுப்பேரன், இந்திரா காந்தியோட பேரன், ராஜீவ் காந்தியோட பையன்னா சும்மாவா? ராகுல் காந்திக்கு இத்தனை லட்சணம் இருக்கு. ஆனா இதைத் தவிர அவர்கிட்ட மெச்சிக்க ஏதாவது இருக்கா? உதட்டைத்தான் பிதுக்கணும்.

நேருவுக்கு அரசியல் எதிரிகள் இருந்தா. இந்திரா காந்திக்கு நிறையப்பேர் எதிரியா இருந்தா. ராஜீவ் காந்திக்கும் உண்டு. அவா யாராவது அரசியல் எதிரிகளை 'திருட்டுப் பசங்க'ன்னு பப்ளிக்கா அநாகரிகமா திட்டிருக்காளோ? கிடையாது. ஆனா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேடைக்கு மேடை பிரதமர் மோடியை 'சோர்'ங்கற இந்தி வாரத்தைல 'திருடன்'னு திட்டிண்டே இருக்கார்.  அந்த வார்த்தை ஒரு விமரிசன வார்த்தையான்னா, இல்லை.  பொதுவுல சொன்னா, அதுவும் மோடி மாதிரி கைசுத்தத்துக்கு பேர் போன ஒரு அரசியல் தலைவரைப் பார்த்து அப்படி சொன்னா, அது வசவு வார்த்தைன்னு ஆகும். இதெல்லாம் புரியறதுக்கும் ஒரு மனப்பக்குவம் வேணுமே?  சரி, அந்தப் பக்குவம்லாம் ராகுல் காந்திட்ட கிடையாதுதான். நாமதான் அவரை சரியா புரிஞ்சுக்கணும். எப்படின்னு சொல்றேன்.

அப்பாவி மக்களுக்கு வஞ்சனை பண்ணி, அவா கண்ணைக் கட்டி, ஏதோ கட்டாயத்தை உண்டு பண்ணி, நைசா அவா ஆதரவை வாங்கி ஒரு குடும்பம் ராஜாங்கம் பண்றதுன்னு வச்சுக்கோங்கோ. அந்த சமயத்துல, ஒரு நல்ல மனுஷன் மக்கள் மனசோட பேசி, அவா நம்பிக்கையை வாங்கிண்டு அவா கண்ணையும் மெள்ள மெள்ள அவுத்துவிட்டா ராஜங்க குடும்பத்துல புது ராஜாவா வந்தவருக்கு சுள்ளுன்னு கோபம் வருமா வராதா? இனிமே அந்தக் குடும்பத்து வண்டவாளம் ஒவ்வொண்ணா வெளில வரும். குடும்ப மானம் கப்பல் ஏறும், ராக்கெட்லயும் பறக்கும். குடும்ப வருமானமும் அதள பாதாளத்துக்கு இறங்கும். அதுவும், குடும்பத்துல மாப்பிள்ளையா வந்தவருக்கு விசேஷ வருமான வழிகள் எல்லாம் காணாம போகும். அது புது ராஜாவையும் பாதிக்கலாம். ஏன்னா அவா ரெண்டு பேருக்குள்ள என்ன அட்ஜஸ்ட்மெண்ட் உண்டோ யாருக்குத் தெரியும்? திடீர்னு குடும்பத்துல இவ்வளவு பெரிய நஷ்டம் வரும், செல்வம் குறையும்னா, புது ராஜாவும் "ஐயோ திருடன்! திருடன்! காப்பாத்துங்கோ!"ன்னு பயத்துல கத்தலாமே?  நாமதான் இதை புரிஞ்சுக்கணும். நன்னா புரிஞ்சுதா?

இன்னொண்ணு சொல்றேன். யாரையும் பொது வெளில ஒரு அரசியல் தலைவர் இப்படிப் பேசினா, பேசற மனுஷருக்கு கூச்ச நாச்சம் சுத்தமா கிடையாதுன்னு அர்த்தம். இப்ப ராகுல் காந்தியைப் பார்த்தாலோ கேட்டாலோ நேரு உங்க ஞாபகத்துக்கு வருவாரா? இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி யாராவது வருவாளா? உஹும். பின்ன யாரு? நீங்களே கரெக்ட்டா ஊகிச்சிருப்பேளே! "டேய், தீவட்டி தலையா!" அப்படின்னு தமிழ் சினிமால கவுண்டமணி ஒரு சக நடிகரை கூப்பிடுவாரே, அது மாதிரித்தான ராகுல் நடந்துக்கறார்?  இதை நான் சொன்னேன்னு கவுண்டமணி மாமா கிட்ட யாரும் சொல்ல வேண்டாம். ஏன்னா, அவரை இளக்காரம் பண்ணிட்டேன்னு என்னை கோவிச்சுப்பார். 

எந்த மனுஷனைப் பத்தியும் ஒரு கீழான அபிப்பிராயத்தை நாம மூணு பேர்கிட்ட சொல்ல வேண்டி வரலாம். ஒண்ணு, நம்ம நமக்குள்ளேயே சொல்லிக்கறது. அதாவது, மனசுல அப்பட்டமா, உள்ளது உள்ளபடியா உணர்றது. ரெண்டு, நெருக்கமா இருக்கறவா கிட்ட மட்டும் தனியா பகிர்ந்துக்கறது. இதைக் கூட, நமக்கு மனசுல தோணினதை அப்படியே கண்ணாடி மாதிரி காட்டிக்காம வார்த்தைகளை நாம கவனமா எடுத்து சொல்றதுண்டு. இதைக் கேட்டுக்கறவாளும், நம்ம சொன்னோம்னு வெளி மனுஷாட்ட கசியவிடப்பிடாது, அதுதான் நாகரிகம். மூணாவது, பொது வெளில நாம இன்னொரு மனுஷனைப் பத்தி குத்தம் சொல்லணும்னா எந்த விஷயத்தை சொல்லலாம், என்ன வார்த்தைல சொல்லலாம்னு ஒரு நியதி இருக்கு. தலைவர்களா இருக்கறவாளுக்கு இந்த நியதி கட்டாயம் தெரியணும். அது அவாளுக்கான அடிப்படைத் தகுதி.  ராகுலுக்கு புரியற மாதிரி உதாரணம் சொல்லட்டுமா?

 இப்ப, கருணாநிதி மாமாவை எடுத்துக்குங்கோ. அவர் அரசியல்ல நேர்மைக்கும் தூய்மைக்கும் பேர் போனவரான்னு கேட்டா, தலையை வலப்பக்கம் இடப்பக்கம் ஆட்டணும். அது வேற விஷயம். ஆனா ஒரு தலைவரா அவர் நன்னா பேசத் தெரிஞ்சவர். 'காங்கிரஸ் கட்சியோட கூட்டு வச்சிருக்க வேண்டாம்'னு ஒரு சமயம் சொல்ல வந்தவர் "அந்த சனியன் பிடிச்ச கட்சியோட நாங்க சேர்ந்திருக்க வேண்டாம்"னு ராகுல் மாதிரி உளறலை. "கூடா நட்பு கேடாய் முடியும்"னு இனிமையா, இன்னும் அழுத்தமா சொல்லிட்டு போய்ட்டார்.  சரியோ தப்போ, நாசூக்கா பேசிட்டார்.  இந்திலயும் ராகுல் காந்திக்கு கத்துக் குடுக்கறவா இருக்கா.  வாஜ்பாயி மாமா பேச்செல்லாம் ராகுல் படிச்சிருந்தா, படிச்சது புரிஞ்சிருந்தா, அழகான வார்த்தை வராட்டாலும் அசுத்தமான வார்த்தையாவது பேசாம இருக்கலாம்.

மோடியைப் பார்த்து "சோர்"னு ராகுல் சொல்றாரே, அதையே அவரோட கூட்டணி கட்சித் தலைவர்கள் யாராவது சொல்றாளா? இல்லை. இவ்வளவு பெரிய வார்த்தையை ராகுல் ஒரு குற்றச்சாட்டா சொல்றபோது, அதை ஏன் அந்தத் தலைவர்கள் சொல்லலை? அதுக்கு காரணம், ராகுல் எல்லை மீறி பெனாத்தரார்னு அவாளுக்கு தெரியறது. அதுனால, அவா இதுல விலகி நிக்கறா. அது மட்டுமில்ல – ராகுல் பின்னால நிக்கறது அவமானம்னு  சிலர் நினைக்கறாளோ என்னவோ?

போபோர்ஸ் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல் இப்படின்னு வெளிவந்தது, வெளிவராததுன்னு ஏகப்பட்ட ஊழல் வியாபிச்ச ராஜ்ஜியத்தை நடத்தினது காங்கிரஸ். அப்ப நடந்த ஊழல்-திருட்டு மாதிரி மோடி அரசங்கத்துல ஒரு தப்பும் கிடையாது. யார் யாரைப் பத்தி என்ன சொல்றதுன்னு ஒரு விவஸ்தையாவது வேண்டாமா?

ராகுல் காந்தி தத்துப் பித்துன்னு பேசறார்னு சில பா.ஜ.க தலைவர்கள் கூட அவரை 'பப்பு'ன்னு கூப்பிட்டிருக்கா. ஆனா அது வசவு வார்த்தை இல்லை. ஒரு பாலகனை, 'பப்பு'ன்னு இந்தில செல்லமா அழைக்கறது உண்டு. அந்த வார்த்தையே, ஒண்ணும் தெரியாத வயசுல வெகுளியா இருக்கற ஒரு குழந்தையைக் குறிக்கும். '50 வயசு ஆனாலும், ராகுல் பிள்ளையாண்டான் மன முதிர்ச்சில அப்படித்தான்'னு சுட்டிக் காட்டறதுக்காக அவரையும் 'பப்பு'ன்னு கிண்டலா கூப்பிட்டா எதிர்க்கட்சிக்காரா. அதைக்கூட பா.ஜ.க-வோட முன்னணி தலைவர்கள் யாரும் இப்ப மேடைல சொல்றதில்லை. இருந்தாலும், அந்த 'பப்பு' பேச்சும் இந்த 'சோர்' பேச்சும் ஒண்ணு, அதுக்கு இது சரியா போச்சுன்னு ஆகாது. 

ராகுல் காந்தியும் இந்த 'சோர்' வசவு வார்த்தையை நிறுத்தறதா காணோம். அவர் இதை சொல்லிண்டே இருந்தா நாம இப்படித்தான் யோசிக்கணும். இந்த ஜென்மத்துல இந்த பப்பு வேகவே வேகாதா?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2019