Wednesday 22 November 2023

எஸ். வி. சேகர் தவறு செய்கிறார்

 

-- ஆர். வி. ஆர்

.

      நடிகர் எஸ். வி. சேகர் நீண்ட காலம் நடிப்புத் துறையில் இருப்பவர், விருதுகள் பெற்றவர், பிரபலமானவர்அரசியல் களத்தில் அவர் இப்போது பெரிய தவறு செய்கிறார்.

 

பிராமணர்களுக்காகத் தமிழ்நாட்டில் ஒரு ஜாதிக் கட்சியை சிலர் துவங்க இருந்தபோது, அந்த முயற்சியை ஆதரித்திருக்கிறார் எஸ். வி. சேகர். அந்தக் கட்சி ஆரம்பிக்கப் பட்ட பிறகு, சமீபத்தில் மைலாப்பூரில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து ‘தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்’ என்ற தலைப்பில் அவர் பேசினார்.

 

அடுத்துவரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், அந்தப் புதிய கட்சி எல்லா பொதுத் தொகுதிகளிலும் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்த முயலும் என்று சொல்லி அதை வரவேற்றார் எஸ். வி. சேகர். “அரசியல் அங்கீகாரம் இல்லாத எந்த ஜாதிக்கும் மரியாதை கிடையாது” என்றும் அவர் சொன்னார்.  

 

இந்த அளவிற்கு எஸ். வி சேகர் பேசியது இன்றைய நடைமுறை அரசியலில் தவறல்ல என்று எடுத்துக் கொள்ளலாம். மற்ற ஜாதியினர் சிலரும் தங்கள் மக்களின் நலனுக்காக என்று அப்படிச் செய்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் ஜாதியின் பேரில் ஓட்டு சேகரிக்க முனைந்தால், ஜாதிப் பிரமுகர்களும் அரசியலுக்கு வந்து ஆதாயம் தேடலாம். என்ன – பிராமணர்கள் நலனுக்கு மட்டும்  என்று ஒரு அரசியல் கட்சி செயல்படுவதைப் பெருவாரியான தமிழக பிராமணர்களே வரவேற்பார்களா என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கும், அவ்வளவுதான்.

 

        தான் பேச வந்த  விஷயத்தின் எல்லைக்குள் நிற்கவில்லை எஸ். வி. சேகர். அதைத் தாண்டி, தனது வழக்கமான அண்ணாமலை-எதிர்ப்பையும் கூட்டத்தில்  கொட்டினார்.

 

பிராமணர்களை அரசியலில் வலுப் படுத்த முயற்சிப்பதற்கும் அண்ணாமலையை எதிர்ப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. முன்பு ஒருமுறை எஸ். வி. சேகர் பேசும்போது, சினிமாவில் ஒருவர் மற்றவரை உருவக் கேலி செய்து ஏளனமாகப் பேசுவது போல் அண்ணாமலையைக் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்தார். அது மன்னிக்க முடியாதது.

 

   மைலாப்பூரில் பேசும்போது, “அண்ணாமலை பிராமணர்களை வெறுப்பவர். நூறு சதவிகிதம். ஒரு பிராமணனும் பாஜக-வில் இருக்கக் கூடாது என்று செயல்படுகிறவர்” என்றெல்லாம் அபத்தமாக வார்த்தைகள் விட்டார் எஸ். வி. சேகர். ஒரு கட்டத்தில், “மாண்புமிகு தமிழக முதல்வர்” என்று ஸ்டாலினை மரியாதையாகக் குறிப்பிட்டார்.  அது சரிதான், ஆனால் பல விஷயங்களில் ஸ்டாலின் ஒட்டுமொத்த ஹிந்துக்களைப் புறக்கணிப்பதைப் பற்றி எஸ். வி. சேகர் ஒன்றும் சொல்லவில்லை.  “திராவிடர் கழகத்தின் சுப. வீ எனது நல்ல நண்பர்” என்றும் அவர் சிலாகித்தார்.  எதுவோ இங்கெல்லாம் இடிக்கிறது.

 

      அந்தக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் அளவிற்கும் கீழிறங்கிப் போனார் எஸ். வி. சேகர். “மத ரீதியாகவோ சமூக ரீதியாகவோ அண்ணாமலை ஏதாவது ஒன்றைச் சொல்லி அதனால் ஒரு கலவரம், ஒரு கலாட்டா ஏற்பட்டு நாலு பேர் உயிரை விட்டுட்டா அதை வைச்சு ஓட்டு வாங்கலாம்னு கேடு கேட்ட புத்தி உடையவர் அண்ணாமலை"  என்று குரூரக் கற்பனை செய்து மிக மலிவாகப் பேசினார் எஸ். வி. சேகர். 

         

      அதிகமான பிராமணர்கள் தேசிய சிந்தனை உள்ளவர்கள், அவர்கள் அநேகமாக பாஜக-வை ஆதரிப்பவர்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. அதிலும் தமிழ்நாட்டில் திமுக-வை, குறுகிய நோக்கமுள்ள திராவிட அரசியலை, தினம் தினம் தீர்க்கமாக எதிர்க்கும் அண்ணாமலை என்ற அரசியல் தலைவரை பிராமணர்கள் ஆர்வத்துடன் ஆதரிக்கிறார்கள் என்பதும் பரவலான எண்ணம். இந்த நிலையில் அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிரி என்று கொளுத்திப் போட்டால், அதை நம்பிப் பல பிராமணர்கள் தங்களின் பாஜக ஆதரவை விலக்கி எஸ். வி. சேகர் கைகாட்டும் பிராமணர்கள் கட்சிக்குத் துணை நிற்பார்கள் என்று அவர் ஆசைப்படுகிறார். அவர் ஆசை நிறைவேறாது. 

 

அண்ணாமலை மாநிலத் தலைவராக இருக்கிற வரை தமிழ்நாட்டில் பாஜக வளராது என்று எங்கும் சொல்லி வருகிறார் எஸ். வி. சேகர். மோடிதான் 2024 லோக் சபா தேர்தலில் ஜெயித்து மெஜாரிட்டியுடன் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் சொல்கிறார். இந்த இரண்டு விஷயத்தை அவர் மைலாப்பூர் மேடையிலும் வெளிப்படுத்தனார். இதற்கு என்ன அர்த்தம்?

 

தமிழ்நாட்டு பாஜக-விற்கு மட்டும் தகுதியே இல்லாத ஒருவர் மாநிலத் தலைவராக இருக்கிறார், அது எஸ். வி. சேகருக்குத் தெரிகிறது, ஆனால் அதை உணராதபடி பாஜக-வின் தேசியத் தலைமையில் சில மக்கு பிளாஸ்திரிகள், மண்டூகங்கள் – மோடி, அமித் ஷா, நட்டா  உள்பட – அமர்ந்திருக்கிறார்கள் என்று எஸ். வி. சேகர் நினைப்பதாக அர்த்தம் ஆகிறது. 

 

மோடியை ஒருவர் மனமார ஆதரித்துவிட்டு, மோடியும் அமித் ஷாவும் பாராட்டுகிற அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் எதிர்ப்பது கோளாறாக இருக்கிறது.  இதை எஸ். வி. சேகரும் பின்மண்டையில் லேசாக உணர்கிறார். இதை நேர் செய்ய நினைத்த அவர், “இங்க இருக்கறவங்க அங்க யாரையோ சந்தோஷப்படுத்தி, அவர்களும் இவங்களைத் திருப்பி சந்தோஷப்படுத்தி, ஒருவரை ஒருவர் சந்தோஷப் படுத்தினால் ஜனங்க துக்கமா இருப்பாங்க” என்று அவரே சிரிக்கும் ஒரு தன்னிலை விளக்கத்தைக் கூட்டத்தினரிடம் சொன்னார்.

 

தமிழ்நாட்டு பாஜக தலைமையிடமிருந்து, குறிப்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடமிருந்து, எஸ். வி. சேகர் எதிர்பார்த்த விசேஷ அங்கீகாரமும், கூடுதல் மரியாதையும் அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றத்தை எஸ். வி. சேகரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தனது ஈகோ பாதிக்கப்பட்டு அவர் காட்டமாக, நாகரிகம் இல்லாமல், அண்ணாமலையை எதிர்க்கிறார். இதுதான் விஷயம்.

 

மாறிவரும் அரசியல் களத்தின் நிஜத்தை ஏற்பதும், அதில் தன் நிலையை உணர்வதும், நடிகர் எஸ். வி. சேகருக்கு நல்லது.  இல்லை என்றால், கடைசியில் வேஷம் கலையும்.

* * * * *

 Author: R. Veera Raghavan, Advocate, Chennai

Sunday 12 November 2023

ஸ்ரீரங்கம் கோவில் முன் ஈ.வெ.ரா சிலை. அகற்ற முடியுமா அண்ணாமலையால்?

          -- ஆர். வி. ஆர்

  

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் முன்பாக உள்ள ஈ. வெ. ராமசாமியின் சிலை இருக்கக் கூடிய இடம் அதுவல்ல, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்தச் சிலை அகற்றி வேறிடத்தில் வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் அண்ணாமலை பேசியது சரியா?

 

அண்ணாமலையின் பேச்சு சரி என்பது மட்டுமல்ல. அவருக்குப் பெருகிவரும் மக்கள் சக்தியின் விளைவாகவும் அது இருக்கிறது. 


அண்ணாமலை ஏன் அப்படிப் பேசினார்? 

 

ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா சிலையின் பீடத்தில் காணப்படும் அவரது சில வாசகங்கள் – “கடவுள் இல்லை. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற சொற்கள் – மக்களின் தெய்வ நம்பிக்கையை அவமதிக்கின்றன. ஹிந்துக்களின் தெய்வ நம்பிக்கை ஆழ்ந்தது. வேண்டுமென்றே அவர்கள் அருகில் சென்று அவர்களின்  நம்பிக்கையை அவமதிப்பது அநாகரிகம், அடாவடி. 

 

கடவுள் இல்லை என்று நினைத்து வாழ்வது தவறில்லை. அது அந்த மனிதர்களின் ஜனநாயக உரிமை.  இன்னொரு பக்கத்தில், கடவுளை வழிபடுகிறவர்கள் தங்களின் நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள் – அதே ஜனநாயக உரிமையில். அதற்கு மற்றவர்கள் சங்கடமோ இடையூறோ தரக் கூடாது. இந்தப் பண்பைத் தமிழகத்தின் திமிர்  பகுத்தறிவுவாதிகள் புரிந்து கொள்வதில்லை. 

 

கடவுளை நம்புகிறவர்கள்தான் கோவிலுக்கு வருவார்கள். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக – அதுவும் ராஜகோபுரத்தின் எதிரே நூறு மீட்டர் தூரத்திற்குள், நடு ரோட்டில் – பெரியார் எனப்படும் ஈ.வெ.ரா-வின் சிலையை அமைத்து “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற அவரது வார்த்தைகளைச் சிலையின் பீடத்தில் பொறித்து வைத்தால் என்ன அர்த்தம்? ஹிந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்று வம்படியாகச் செய்தது அது.  


அந்தச் சிலை அங்கு இருப்பதின் அராஜகத்தை, அண்ணாமலை எழுப்பிய ஒரு கேள்வி சுரீர் என்று மற்ற சில கட்சிகளுக்கு உறைக்க வைத்திருக்கும். அவர் கேட்டது:  “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக குறித்து பெரியார் பேசிய வார்த்தைகளை அவர்கள் கட்சி வாசலில் வைப்பார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், ஹிந்து மக்களுக்கு ஒரு நியாயமா?"

 

ஈ.வெ.ரா சிலையை ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் வைக்க 1973ம் வருடம் அப்போதைய கருணாநிதி அரசு ஒரு அரசாணை பிறப்பித்து உதவியது. அந்த அரசாணை இல்லாமல் அந்த இடத்தில் சிலை வந்திருக்க முடியாது. 

 

ஸ்ரீரங்கம் தவிர்த்து வேறு இடங்களில் – பிற கோவில்கள் முன்பாகவும் கூட – வைக்கப் பட்டிருக்கும் சில ஈ.வெ.ரா சிலைகளின் கீழ், கடவுள் நம்பிக்கையை எட்டி உதைத்துத் திட்டித் தீர்க்கும் அவரது இன்னும் காட்டமான வார்த்தைகள் இடம் பெறுகின்றன.  (“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”). அந்த மனிதரின் சிலையைக் கோவில் முன்பாக ஸ்ரீரங்கத்தில், பிற ஊர்களில், வைக்க அரசு அனுமதித்ததே ஹிந்துகளை இம்சிக்கும். 


ஈ.வெ.ரா-வின் கடவுள் எதிர்ப்பு வாசகங்களுக்குத் திமுக தலைமையின் அமோக ஆதரவு உண்டு.  அதிமுக-வின் நிலை இது. அதாவது, தாங்களும் ஒரு திராவிடக் கட்சி, தாங்களும் பெரியார் வழிவந்த கட்சி என்று காண்பித்துக் கொள்ள, அதிமுக-வும் பெரியாரின் அந்த வாசகங்களை ஆட்சேபிக்காது.

 

திமுக-வை அண்டி அரசியலில் ஜீவிக்கும் தமிழக காங்கிரசும், “இது பெரியார் மண்” என்ற உயிர் காக்கும் மந்திரத்தை அவ்வப்போது உச்சரிக்க வேண்டும். ஆகையால் ஈ.வெ.ரா-வின் ஸ்ரீரங்கச் சிலை வாசகங்களைக் காங்கிரஸ் எதிர்க்காது. மற்ற சிறு திராவிடக் கட்சிகளும் அந்த வார்த்தைகளைத் தூக்கித்தான் பிடிக்கும்.  

 

ஈ.வெ.ரா சிலையைத் தாண்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், அந்தப் பகுதியில் வசிக்கும் ஆத்திகர்கள், தலைவிதியே என்று அவர் சிலையையும் அவர் சொற்களையும் கசந்து பார்த்து, வேறு வழி இல்லாமல் மனதில் அவதியைத் தாங்குகிறார்கள்.   

 

நம் ஊர்களில் ஓயாமல் கழிவுநீர் ஓடும் சில தெருக்கள் வழியே செல்ல வேண்டியவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் ஆடைகளைச் சற்று உயர்த்திப் பிடித்து, முடிந்தால் தங்கள் மூக்கையும் பிடித்துக் கொண்டு, அந்தப் பகுதியைக் கடப்பார்கள். மற்றபடி ஊழலில் திளைத்து அலட்சியம் காட்டும் நகராட்சியுடனோ அரசுடனோ கழிவு நீர்க் குழாய்கள் அமைக்க அல்லது ரிப்பேர் செய்யக் கேட்டு மல்லுக்கு நிற்க மாட்டார்கள் நமது குடிமக்கள். அதற்கான திராணி அவர்களிடம் இல்லை.    

 

இந்த ரீதியில்தான் ஸ்ரீரங்கம் ஈ.வெ.ரா சிலை வாசகங்கள் அவ்வழியே செல்லும் ஹிந்து மதத்தினரை, பக்தர்களை, சீண்டுகின்றன. இருந்தாலும் சாலையில் ஓடும் கழிவுநீருக்குப் பழக்கப்பட்டு அதைச் சகித்துச் செல்லும் பாதசாரிகளைப் போல் ஸ்ரீரங்கம் சிலைப் பகுதியில் ஹிந்துக்கள் போய் வருகிறார்கள். அவர்கள் ஒன்றுகூடி அந்த வாசகங்களை எதிர்த்துப் போராடாமல் இருப்பதால் அவர்கள் பெரியாரையும் போற்றிவிட்டு எதிரே கோவிலுக்குள் சென்று அரங்கனையும் வணங்குகிறார்கள் என்று அர்த்தம் ஆகாது. இந்த நாலாம் கிளாஸ் லாஜிக் திராவிட அரசியல்வாதிகளுக்குப் புரியுமா? 

 

ஸ்ரீரங்கம் ஈ.வெ.ரா சிலையை அகற்றச் சொல்லும் தார்மீகக் குரல் உள்ளவரும், ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்யும் தைரியம் உள்ளவருமான தலைவர் என்று மக்கள் யாரை நினைக்கிறார்கள்? அண்ணாமலையைத் தான். இதை  அண்ணாமலையும் உணர்கிறார்.

 

அப்படியான மக்கள் நம்பிக்கையும் மக்கள்  சக்தியும் தனக்குப் பெருகி வரும்போது அதை இயற்கையாக வெளிப்படுத்துகிறார் அண்ணாமலை. அதனால்தான் அந்த  ஈ.வெ.ரா சிலையையும், அதுபோன்ற மற்ற ஈ.வெ.ரா சிலைகளையும், அகற்றுவதற்கான நடவடிக்கையைப் பின்னாளில் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது எடுக்கும் என்று அவர் பேசினார். அதற்கான வல்லமையை, அவர் மீதான மக்கள் நம்பிக்கை  அவருக்குத் தரும்.

 

2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் போனாலும், அதனால் ஸ்ரீரங்கத்தில்  மற்ற கோவில்கள் முன்பாகவும்   ஈ.வெ.ரா சிலையும் அவர் வாசகங்களும் சிலகாலம் நீடித்தாலும் பரவாயில்லை. அண்ணாமலையின் இந்தப் பேச்சும் அவருக்குப் பெருகும் மக்கள் சக்தியும் நீண்டகாலப் பயன்கள் நமக்கு வருவதற்கான அறிகுறி: ஒரு சிறந்த மாநில அரசும் நல்ல எதிர்காலமும் கிடைக்க.  நாம் காத்திருக்கலாம்.

 

நிரந்தரமாக அகற்றப்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிற  போது, இதுநாள் வரை சாலையில் ஓடுகிற கழிவுநீர் கொஞ்சம் தொடர்ந்து ஓடினால் ஓடட்டுமே? அப்படி நினைத்துத்தானே நமது ஜனநாயகத்தில் மக்கள் சாந்தம் கொள்ள முடியும்?

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Tuesday 7 November 2023

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: இன்னா பேசுற வேலு? இந்தியா துபாய் பக்கமான ஊர்னு நெனச்சியா?


-- ஆர். வி. ஆர்


எ. வ. வேலுன்னு தமிள்நாட்ல ஒரு ஆளைத் தெரிமா? ஆங், அவருதான்! இப்ப வர்மான வரி ரெய்டு போய்க்கினு இருக்கே,  அது தொடர்பான மாநில அமிச்சர்தான். அவருக்கு இப்ப 72 வயசு.


        வேலு பேர்ல இருக்குற இனிசியல் ‘எ.வ’ அப்பிடின்ற எளுத்து எதைக் குறிக்கிதுன்னு முதல் அமிச்சர் ஸ்டாலின் சொல்லிக்கிறாரு. 'எதிலும் வல்லவர்'னு அர்த்தமாம். வெளக்கமா சொன்னா, வேலைல கிங்கா இருப்பாரு வேலுன்னு பாராட்டிக்கிறாரு ஸ்டாலின். அதுக்கு இன்னா அர்த்தம்னு நம்ம கரீக்டா ஊகிச்சிரலாம். 


          எ. வ. வேலு இப்ப பொதுப்பணித்துறை, ஐவேஸ் அப்பிடின்னு பால் சுரக்கற துறைங்களுக்கு மந்திரி. வல்லவருக்கு ஏத்த துறைங்களை கைல
வெச்சிக்கினு வல்லமைய காட்டிக்கினு இருப்பாரு.  இப்ப அவரு மேல வந்துக்குதே ரெய்டு, அத்தைக் காட்டியும் அவரு இன்னொரு விசயத்துல ஆல்  இந்தியா பேமஸ் ஆயிக்கினாரு. அத்தைக் கொஞ்சம் பேசுவோம்.


      கொஞ்ச நாள் மின்னாடி வேலு மைக்கைப் புடிச்சி ஒரு விசயம் பேசினாரு. கை தட்றதுக்கு வந்த ஆளுங்க டப டபன்னு கை தட்னானுங்க. வேலுவும் சிரிச்சிக்கினே அந்த விசயத்தை ரண்டு நிமிசம் நீட்டி பேசிக்கினாரு. கைதட்டல் கூடுச்சு. வேலுவும் கெத்தா மூஞ்சை வெச்சிக்கினாரு.

 

வேலு பேசுனது வரிக்கு வரி சுருக்கமா இதான்.  

 

ஒரு காலத்துல இந்தியா என்பது கூட நமக்கு எப்பொழுதும் பெரிய தாக்கம் இருப்பதில்லை இந்தியா என்ற வார்த்தைக்கு எந்தக் காலத்துல நமக்கெல்லாம் தாக்கம் இருந்திருக்கிறது? ஒரு காலத்துல எங்க இருந்தது நமக்கெல்லாம்? இந்தியான்னா ஏதோ வடக்கே இருக்கற ஊரு! நம்ம ஊரு தமிழ் நாடுதான்! முடிஞ்சா திராவிட நாடுன்னு யோசிப்போம். நம்முடைய எண்ணங்கள் இப்படித்தான போய்க் கொண்டிருந்தது?

 

 

வெக்கம், மானம் இருந்து நாட்டை மதிக்கிற எந்தத் தலிவரும், எந்த அமிச்சரும், பொது மேடைல பேச ஆவாத ஒரு விசயத்தை வேலு தெனாவெட்டா பேசிக்கினாரு.

 

‘நம்ம, நமக்கு, நமக்கெல்லாம்’ அப்பிடின்னு வேலு பேசினது யாரை? திராவிடர் களகத்து ஆளுங்க, ஒட்டு மொத்த திராவிட அரசியல் தலிவருங்க, அதுல குறிப்பா முந்தின தலைமுறை மனுசங்க  – இவுங்க இந்தியாவை முன்ன எப்பிடி நேசிக்காம இருந்தாங்கன்னு வேலு பேசிக்கினாரு. அந்த டைப்பு ஆளுங்கள்ள வேலுவும் ஒருத்தரு.

 

‘முன்ன அப்பிடி இருந்துக்கினோம்’னு ஒரு பளைய தகவலை மட்டும் சொன்னாரா வேலு – இல்லை ‘இப்பவும் அப்பிடி இருக்க எங்களுக்கு ஆசையா கீது’ன்னு சைடால சொல்ல வந்தாரான்னு தெர்ல. கேக்குறவன் அப்பிடி கன்பியூஸ் ஆவுற மாதிரி பேசிக்கினாரு வேலு. அவர் பூரிச்சிப் போய் பேசுனதை நீ வீடியோவுல பாத்தின்னா நா சொல்றது டக்குனு புரியும்.

 

“முன்னதான் அப்பிடி தெரியாத் தனமா இருந்தோம், இப்ப திருந்தி ஊறுகா போட்ட கணக்கா தேச பக்தில ஊறிக்கினு இருக்கோம்” அப்பிடின்னும் வேலு பேசிக்கலை, மறைமுகமாவும் காட்டிக்கலை. அப்பிடிலாம் நெனச்சி  பாக்குற ஆளா வல்லவர் வேலு?  

 

இன்னா வேலு? நீ பொறந்ததே 1951, சுதந்திரத்துக்கு அப்பால. இந்தியா ஒரு நாடுன்னு உனக்கு தெரியாமவே இருந்திச்சா? இந்தியான்றது வடக்கையோ துபாய்க்குப் பக்கமோ எங்கியோ இருந்த ஊர் அப்பிடின்னு நெனச்சியா?  யார் உனக்கு அப்பிடி சொன்னது? இஸ்கோல் போயி ஒண்ணு ரண்டு கிளாஸ் படிச்ச எவனும் – இல்லை  அரசியல்ல பூந்த எவனும்  உன்னை மாதிரி நெனச்சிருக்க மாட்டானே?  

 

‘இந்தியா ஒரு நாடு இல்லை, அது வடக்கே இருக்கற ஊருதான்’, அப்பிடின்னு நீயும் உன் ஆளுங்களும் நெனச்சிருந்தா, நீங்க பொறந்த ஊரு, பக்கத்து ஊரு, அதெல்லாம் எந்த நாடுன்னு நெனச்சீங்க?  

 

‘முடிஞ்சா திராவிட நாடுன்னு’னு முன்ன யோசிச்சதா பேசினியே, அதுக்கு இன்னாபா அர்த்தம்?  ஏற்கனவே உன் ஊரு ஒரு நாட்டுல அதோட பகுதியா இருக்குது, அந்த நாட்டுலேர்ந்து உன் ஊரு, அடுத்த ஊருன்னு கூட்டா பிரிஞ்சு திராவிட நாடுன்னு  தனிநாடு அமைக்கணும்னு தானப்பா அர்த்தம்? எந்த நாட்லேர்ந்து  நீ வெட்டிக்க நெனச்சியோ, அந்த நாடுதான் இந்தியா அப்பிடின்னு தெரியாத மண்ணாங்கட்டியா இருந்திச்சா ஒரு கட்சி, ஒரு கூட்டம்? இன்னா வேலு பேசுற?

 

நீ பையனா இருந்த நாள் தொட்டு தேசிய கீதம் கேட்ருப்பேல்ல? அது என்ன சொல்லுது? இந்திய நிலப் பரப்புல பஞ்சாப், திராவிடப் பிராந்தியம், வங்கம், குஜராத்னு நாலு திசைல இருக்கற பகுதிகள் பேரும் தேசிய கீதத்துல வர்தே,  தெரிமா? இன்னும் மலைகள், நதிகள் பேரையும் சொல்லி இதெல்லாம் உள்ளடக்கியது ‘பாரதம்’னு தேசிய கீதத்துல இருக்கே?  உன் 11வது வயசுல இருந்து – அதான் 1962ல இருந்து – எல்லா சினிமா தியேட்டரும் வருசக் கணக்கா தேசிய கீதம் போட்டுச்சே, தெரியும்ல? அது எந்த நாட்டுக்காரனுக்கு?  திராவிடப் பகுதில இருக்கற தமிள் நாட்டு மக்களுக்கும் அதுதான் தேசிய கீதம்னு அப்ப புரிஞ்சிச்சா இல்லியா, வேலு?

 

இந்தியா பத்தி வேலு மேடைல பெனாத்தி மூணு மாசம் ஆச்சு. அதை  முதல் அமிச்சர் ஸ்டாலின் கண்டுக்கலை, கண்டிக்கலை. வேலு பேசி ஒரு மாசம் களிச்சு, ‘மலேரியா, டெங்கு மாதிரி சனாதனத்தை ஒளிக்கணும்’னு இன்னொரு அமிச்சர் பேசிக்கினாரு. அவருதான் ஸ்டாலின் மவன் உதயநிதி. சனாதனம் இந்தியா பூரா இந்துக்கள் மதிக்கிற, கடைப்பிடிக்கிற வாள்வு முறை. அதை ஒளிக்கணும்னு உதயநிதி பேசுனா ஸ்டாலின் அதுக்கும் சப்போர்ட் குட்துகினாரு. சனாதன எதிர்ப்பு பேச்சு மேல, ஏன் போலீஸ் ஆக்சன் எடுக்காம கைய கட்டிக்கினு இருந்திச்சுன்னு இப்ப நம்ம ஹை கோர்ட்டே கேக்குது.

 

இந்திய தேசம் பத்தி பெருமையா உணர்வு இல்லை.  இந்துக்கள் பெர்சா மதிக்கற சனாதனம் பத்தி அளிக்கணும் ஒளிக்கணும்னு திமிருப் பேச்சு.  இந்த மாதிரி ஆளுங்களுக்கு என்னதான்பா வேணும் இந்தியாவுல?  மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை சுளுவா நடக்க இந்த மண்ணு  வேணும். மாய்மாலமா பேசி ஓட்டு வாங்க நம்ம ஜனங்க வேணும். மத்திய ஆட்சில பங்கு கெடிக்கிறா மாதிரி இருந்தா, விடக் கூடாது.  அந்தப் பங்குதான் டாப்பு – அது சுளையா கெடச்சிட்டா, வேலு கூட  இந்தியாவை  ஒஸ்த்தியா  பேசிப்பாரு.

 

தமிள்நாட்டு அரசியல் உருப்புட்டு, ஆட்சில நீதி நாயம் ஏற்பட்டா என்ன ஆவும்? அப்ப எல்லாப் பெரிய கட்சித் தலிவருங்களும் மேடைல இப்பிடித்தான் பேசுவாங்க: “திராவிடம்னா இப்ப நமக்கு ஒரு தாக்கமும் இல்லை. எங்க இருக்கு நமக்குலாம்? திராவிட நாடு, திராவிட மாடல்னு ஏதோ பளைய காலத்துல தலிவருங்க ராங்கா பேசிக்கினாங்க. இப்ப நமக்கு உயிர் மூச்சு எது? அதான் பாரதம். ஜெய்  ஹிந்த்!”

 

தமிள்நாடு உருப்புடணும், தலிவருங்க இப்பிடி மாத்திப் பேசற  காலம் வர்ட்டும்னு வேண்டிக்கினு கோவிலுக்குப் போ,  அங்கப் பிரதட்சிணம் பண்ணு. வெரதம் இரு, காவடி எடு. ஆண்டவன்தான் இப்ப தமிள் நாட்டு மானம், மருவாதை, மக்கள் அல்லாத்தையும் காப்பாத்தணும். இன்னான்ற?  

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai


Friday 3 November 2023

ஆரியம், திராவிடம் என்றால் என்ன? ஸ்டாலின் அருளிய அற்புத விளக்கம்!

 

-- ஆர். வி. ஆர்

 

 

“இன்னார்க்கு இதுதான்னு சொல்றது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டுன்னு சொல்றது திராவிடம்” என்று சமீபத்தில் பேசி இருக்கிறார் மு. க. ஸ்டாலின்.  அவர் பேசிய வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது.

 

அவ்வப்போது மக்களை, அதுவும் குறிப்பிட்ட ஒரு வகுப்பு மக்களை, நேரடியாகவும் மறைமுகமாகவும் இகழ்ந்தும் பேதப் படுத்தியும் பேசுவது திமுக தலைவர்களின் வாடிக்கை - பிழைப்பும் கூட. 


தமிழக முதல்வர் ஆனபின் தனது ஆட்சிக்கு “திராவிட மாடல் ஆட்சி” என்று  பளபளவென்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார் ஸ்டாலின். அதில் உள்ள ‘திராவிடம்’, ‘திராவிட மாடல்’ என்ற சொற்களுக்கு அர்த்தம் சொல்ல முற்பட்டு தாராளமாக உளறுவது அவர் வழக்கம். அதற்கு ஒரு உதாரணம் அவர் இப்போது பேசியது.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்களைக் கேட்கும்போது, அவர்மீது உங்களுக்குப் பரிதாபம் ஏற்படுகிறதா? அதே உணர்வு ஸ்டாலின் பேசும்போதும் அவரிடம் உங்களுக்கு ஏற்படுகிறதா? அப்படித்தான் இருக்க வேண்டும். காரணம்: அவர்கள் இருவரும் பொதுவெளியில் பொலபொலவென்று பிதற்றுவது, தங்களின் பிதற்றல்களைத் தத்துவக் கருத்துக்களாக பாவிப்பது என்பதுதான்.

 

‘எல்லாருக்கும் எதுவும் உண்டு' என்பது திராவிடம் என்று ஸ்டாலின் சொன்னதற்கு அர்த்தம் அவருக்கே தெரியாது. ஏதாவது இருந்தால்தானே அவருக்கும் தெரிவதற்கு?   

 

ஓட்டப் பந்தயத்தில் ஓடும் எல்லா வீரர்களுக்கும் பரிசு கிடைக்கிறதா? முதல் மூன்று வீரர்களுக்குத் தானே, அதிலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற வரிசையில் தானே, பரிசுகள் தரப் படுகின்றன?

 

தலைக்குமேல் கூரை இல்லாதவர்கள், வேலையும் வருமானமும் இல்லாத இளைஞர்கள், தமிழ்நாட்டிலும் உண்டே?

 

எந்த அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தினாலும், விண்ணப்பிக்கிற எல்லா மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காதே?  

 

எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் ஸ்டாலின் அரசு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அளிக்கிறதா? ‘தகுதியுள்ளவர்களுக்கு’ என்று பாகுபடுத்தித்தானே அவர் அரசு வழங்குகிறது?

 

கலைஞர் மகனாகப் பிறக்காவிட்டால் ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை, முதல் அமைச்சர் நாற்காலியை,  கனவிலும் நினைக்க முடியுமா? ஸ்டாலின் மகனாக இல்லாவிட்டால் உதயநிதிதான் எளிதாக எம்.எல்.ஏ, அமைச்சர் என்றாகிக் கட்சியில் அனைவரும் சலாம் வைக்கும் இளவரசராக  ஜொலிக்க முடியுமா?

 

ஒரு எளிய உண்மை: மனிதர்கள் சம அளவிலான புத்திசாலித்தனம், சாமர்த்தியம், படிப்பறிவு, திறமைகள், அதிர்ஷ்டம் உடையவர்கள் அல்ல. ஒரு குடும்பத்தில் பிள்ளைகளாகப் பிறந்து சமமாக வளர்க்கப் படுகிறவர்கள் இடையேயும் இயற்கையான குணாதிசய வேறுபாடு காணப்படும். அதற்கு ஏற்றபடிதான் மக்களின் வாய்ப்புகள், வருமானம், வாழ்க்கை வசதிகள் அமையும்.

 

பொதுமக்களுக்கு சம வாய்ப்புகள் அளிப்பதைத் தான் ஒரு அரசாங்கம் தன் பங்கிற்குச்  செய்ய முடியும் – அதுவும் அவர்கள் அரசாங்கத்தை அணுகும்போது, அரசாங்கப் பலன்களை நாடும்போது. அப்போதும் கூட, மனிதர்களிடம் இயற்கையாக உள்ள திறமையைப் பொது நன்மை கருதி அரசாங்கம்  பெரிதாகப் புறக்கணிக்கக் கூடாது.   

 

உலகெங்கும் இதுதானே நடக்கக் கூடியது? இதன் விளைவாக ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று கிடைக்காது.  ‘இன்னார்க்கு இதுதான்’ என்றுதான் ஆகும்.  ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இன்னும் வேண்டும்’ என்று ஒருவர் ஆசைப்பட்டால் அதற்கான போட்டியில் அவர் ஈடுபட வேண்டும். அவரது திறமை, அனுபவம், பொருளாதாரப் பின்னணி, முனைப்பு மற்றும் அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து அவருக்கு வெற்றியைத் தரலாம், தராமலும் போகலாம்.

 

ஒருவரிடம் எல்லாம் குறைவாக இருந்தாலும், அபரிதமான அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவருக்கு அரிய வாய்ப்புகளும் வெற்றியும் வந்து சேரலாம். இதுதான் உலகம். இதைப் புரிந்துகொண்டு, ஆனால் இதைப் பற்றிப் பேசாமல், அனைத்து மக்களுக்கும் பொது வசதிகள் மற்றும் வாய்ப்புகளை அதிகப்படுத்த உழைக்கும் திறமையான தலைவர் ஒரு நாட்டிற்குத் தேவை. அவர்தான் தேசத்தை உயர்த்தி மக்கள் நெஞ்சில் இடம் பெறும் ஒரு தலைவராக உயர முடியும்.

 

‘இன்னார்க்கு இதுதான்’ என்பது வாழ்வின் உண்மையாக இருக்கிறது – சிலவற்றில் நியாயமாக, சிலவற்றில் நியாயம் இல்லாமல், இன்னும் சிலவற்றில் போட்டியாளர்கள் எவருக்கு வெற்றி கிடைத்தாலும் அது அநியாயம் என்பதாக. இந்த உண்மையை ஸ்டாலினே ஏற்கும் ஒரு உதாரணத்துடன் எடுத்துச் சொன்னால் அவருக்கு விளங்க வேண்டும். 

 

கருணாநிதிக்கு மு. க. அழகிரியும் மகன், மு. க. ஸ்டாலினும் மகன். இருவரும் அப்பா காலம் முதல் பல வருடங்கள் அரசியலில் ஈடுபட்டவர்கள். இருவரும் அப்பாவுக்கு அடுத்ததாகக் கட்சியில் உச்சம் தொட முனைந்தவர்கள். இன்று நிலைமை என்ன?  அழகிரி ஒதுக்கப்பட்டு அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. மு. க. ஸ்டாலின் திமுக தலைவராக, முதல் அமைச்சராக, அதிகாரம் மிக்கவராக வளர்ந்திருக்கிறார்.  


‘இன்னார்க்கு இதுதான்’ என்பது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நேரடி அனுபவமாக  இருக்கிறது. இது வாழ்வின் சாதாரண உண்மை. இதில் ஆரியம், திராவிடம் என்ற கப்ஸாக்களுக்கு இடமில்லை. ஸ்டாலின் பிதற்றுவதை நிறுத்தட்டும்!

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

.