Friday, 3 November 2023

ஆரியம், திராவிடம் என்றால் என்ன? ஸ்டாலின் அருளிய அற்புத விளக்கம்!

 

-- ஆர். வி. ஆர்

 

 

“இன்னார்க்கு இதுதான்னு சொல்றது ஆரியம். எல்லாருக்கும் எதுவும் உண்டுன்னு சொல்றது திராவிடம்” என்று சமீபத்தில் பேசி இருக்கிறார் மு. க. ஸ்டாலின்.  அவர் பேசிய வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது.

 

அவ்வப்போது மக்களை, அதுவும் குறிப்பிட்ட ஒரு வகுப்பு மக்களை, நேரடியாகவும் மறைமுகமாகவும் இகழ்ந்தும் பேதப் படுத்தியும் பேசுவது திமுக தலைவர்களின் வாடிக்கை - பிழைப்பும் கூட. 


தமிழக முதல்வர் ஆனபின் தனது ஆட்சிக்கு “திராவிட மாடல் ஆட்சி” என்று  பளபளவென்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தார் ஸ்டாலின். அதில் உள்ள ‘திராவிடம்’, ‘திராவிட மாடல்’ என்ற சொற்களுக்கு அர்த்தம் சொல்ல முற்பட்டு தாராளமாக உளறுவது அவர் வழக்கம். அதற்கு ஒரு உதாரணம் அவர் இப்போது பேசியது.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்களைக் கேட்கும்போது, அவர்மீது உங்களுக்குப் பரிதாபம் ஏற்படுகிறதா? அதே உணர்வு ஸ்டாலின் பேசும்போதும் அவரிடம் உங்களுக்கு ஏற்படுகிறதா? அப்படித்தான் இருக்க வேண்டும். காரணம்: அவர்கள் இருவரும் பொதுவெளியில் பொலபொலவென்று பிதற்றுவது, தங்களின் பிதற்றல்களைத் தத்துவக் கருத்துக்களாக பாவிப்பது என்பதுதான்.

 

‘எல்லாருக்கும் எதுவும் உண்டு' என்பது திராவிடம் என்று ஸ்டாலின் சொன்னதற்கு அர்த்தம் அவருக்கே தெரியாது. ஏதாவது இருந்தால்தானே அவருக்கும் தெரிவதற்கு?   

 

ஓட்டப் பந்தயத்தில் ஓடும் எல்லா வீரர்களுக்கும் பரிசு கிடைக்கிறதா? முதல் மூன்று வீரர்களுக்குத் தானே, அதிலும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற வரிசையில் தானே, பரிசுகள் தரப் படுகின்றன?

 

தலைக்குமேல் கூரை இல்லாதவர்கள், வேலையும் வருமானமும் இல்லாத இளைஞர்கள், தமிழ்நாட்டிலும் உண்டே?

 

எந்த அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தினாலும், விண்ணப்பிக்கிற எல்லா மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காதே?  

 

எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் ஸ்டாலின் அரசு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அளிக்கிறதா? ‘தகுதியுள்ளவர்களுக்கு’ என்று பாகுபடுத்தித்தானே அவர் அரசு வழங்குகிறது?

 

கலைஞர் மகனாகப் பிறக்காவிட்டால் ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை, முதல் அமைச்சர் நாற்காலியை,  கனவிலும் நினைக்க முடியுமா? ஸ்டாலின் மகனாக இல்லாவிட்டால் உதயநிதிதான் எளிதாக எம்.எல்.ஏ, அமைச்சர் என்றாகிக் கட்சியில் அனைவரும் சலாம் வைக்கும் இளவரசராக  ஜொலிக்க முடியுமா?

 

ஒரு எளிய உண்மை: மனிதர்கள் சம அளவிலான புத்திசாலித்தனம், சாமர்த்தியம், படிப்பறிவு, திறமைகள், அதிர்ஷ்டம் உடையவர்கள் அல்ல. ஒரு குடும்பத்தில் பிள்ளைகளாகப் பிறந்து சமமாக வளர்க்கப் படுகிறவர்கள் இடையேயும் இயற்கையான குணாதிசய வேறுபாடு காணப்படும். அதற்கு ஏற்றபடிதான் மக்களின் வாய்ப்புகள், வருமானம், வாழ்க்கை வசதிகள் அமையும்.

 

பொதுமக்களுக்கு சம வாய்ப்புகள் அளிப்பதைத் தான் ஒரு அரசாங்கம் தன் பங்கிற்குச்  செய்ய முடியும் – அதுவும் அவர்கள் அரசாங்கத்தை அணுகும்போது, அரசாங்கப் பலன்களை நாடும்போது. அப்போதும் கூட, மனிதர்களிடம் இயற்கையாக உள்ள திறமையைப் பொது நன்மை கருதி அரசாங்கம்  பெரிதாகப் புறக்கணிக்கக் கூடாது.   

 

உலகெங்கும் இதுதானே நடக்கக் கூடியது? இதன் விளைவாக ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று கிடைக்காது.  ‘இன்னார்க்கு இதுதான்’ என்றுதான் ஆகும்.  ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும், இன்னும் வேண்டும்’ என்று ஒருவர் ஆசைப்பட்டால் அதற்கான போட்டியில் அவர் ஈடுபட வேண்டும். அவரது திறமை, அனுபவம், பொருளாதாரப் பின்னணி, முனைப்பு மற்றும் அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து அவருக்கு வெற்றியைத் தரலாம், தராமலும் போகலாம்.

 

ஒருவரிடம் எல்லாம் குறைவாக இருந்தாலும், அபரிதமான அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவருக்கு அரிய வாய்ப்புகளும் வெற்றியும் வந்து சேரலாம். இதுதான் உலகம். இதைப் புரிந்துகொண்டு, ஆனால் இதைப் பற்றிப் பேசாமல், அனைத்து மக்களுக்கும் பொது வசதிகள் மற்றும் வாய்ப்புகளை அதிகப்படுத்த உழைக்கும் திறமையான தலைவர் ஒரு நாட்டிற்குத் தேவை. அவர்தான் தேசத்தை உயர்த்தி மக்கள் நெஞ்சில் இடம் பெறும் ஒரு தலைவராக உயர முடியும்.

 

‘இன்னார்க்கு இதுதான்’ என்பது வாழ்வின் உண்மையாக இருக்கிறது – சிலவற்றில் நியாயமாக, சிலவற்றில் நியாயம் இல்லாமல், இன்னும் சிலவற்றில் போட்டியாளர்கள் எவருக்கு வெற்றி கிடைத்தாலும் அது அநியாயம் என்பதாக. இந்த உண்மையை ஸ்டாலினே ஏற்கும் ஒரு உதாரணத்துடன் எடுத்துச் சொன்னால் அவருக்கு விளங்க வேண்டும். 

 

கருணாநிதிக்கு மு. க. அழகிரியும் மகன், மு. க. ஸ்டாலினும் மகன். இருவரும் அப்பா காலம் முதல் பல வருடங்கள் அரசியலில் ஈடுபட்டவர்கள். இருவரும் அப்பாவுக்கு அடுத்ததாகக் கட்சியில் உச்சம் தொட முனைந்தவர்கள். இன்று நிலைமை என்ன?  அழகிரி ஒதுக்கப்பட்டு அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. மு. க. ஸ்டாலின் திமுக தலைவராக, முதல் அமைச்சராக, அதிகாரம் மிக்கவராக வளர்ந்திருக்கிறார்.  


‘இன்னார்க்கு இதுதான்’ என்பது அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் நேரடி அனுபவமாக  இருக்கிறது. இது வாழ்வின் சாதாரண உண்மை. இதில் ஆரியம், திராவிடம் என்ற கப்ஸாக்களுக்கு இடமில்லை. ஸ்டாலின் பிதற்றுவதை நிறுத்தட்டும்!

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

 

.  

 

 

 

 

 

 

2 comments:

  1. As always well written. Citing his own example to match with the title of this blog, a strong urge comes when will TN have a patriotic, sensible leader? How long we are destined to hear such unintelligent talks? Priya Sundaram

    ReplyDelete
  2. Thanks for your blog on Ariyam & Dravidam of DMK & Stalin, who shines on his father's light. Annamalai will soon put Dravidian parties into oblivian in T.N..

    ReplyDelete