Monday 12 April 2021

ஊசி போடலையோ ஊசி!

 - ஆர்.வி. ஆர்

  

கோவிட்-19 தடுப்பூசி, சில படித்தவர்களையும் பாமரர்களையும் ஒரு அரிக்கும் சந்தேகத்தில் வைத்திருக்கிறது.

 

அருகிலிருக்கும் மளிகைக் கடை பாமர அண்ணாச்சியிடம், "ஊசி போட்டாச்சா?" என்று நேற்று குசலம் விசாரித்தேன். "அதுங்க..." என்று நிறுத்தி, "ஊசி போட்டா ஏதோ பண்ணும்கிறாங்க. அதான் போட்டுக்கிடலை" என்று நியாயம் சொன்னார். படித்த 70-வயது நண்பரிடமும் (சர்க்கரை வியாதியின் பாதிப்பு அதிகம் உடையவர்) இன்று கேட்டேன். "அதுல சைட் எஃபட்ஸ் ஜாஸ்தியா இருக்கும்னு நானும் ஒய்ஃபும் அவாய்ட் பண்றோம்" என்று புத்திசாலித்தனம் காட்டினார். "பிரதமர் மோடிக்கே போட்டாச்சே?" என்று நான் கேட்க, "அவர் வெறும் பி-காம்ப்ளெக்ஸ் ஊசி போட்டுட்டு ஃபோட்டோக்கு போஸ் காட்டி தடுப்பூசின்னு பொய் சொல்லுவார்" என்று அசட்டு மேதாவித்தனம் பேசினார்.

 

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்திய டாக்டர், "இங்கே ஒரு இந்திய டாக்டரே வாக்ஸின்ல தனக்கு நம்பிக்கை இல்லைன்னு அதைத் தவிர்த்தார்" என்று சொல்லி, பிறகு அவரே கோவிட் கையைப் பிடித்தபடி மேலோகம் போனதாக வருத்தப்பட்டார் .

 

60 வயது நிரம்பியவர்களுக்குத் தடுப்பூசி ஆரம்பித்த முதல் தினமே நான் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஓடிப்போய் முதல் குத்து வங்கிக் கொண்டேன். அன்று காலை ஒன்பது மணிக்கு நாற்பது ஐம்பது பேர் அங்கு தடுப்பூசிக்கு வந்தனர். முதல் நாள் அந்த நேரத்தில் அவ்வளவு எண்ணிக்கையில் கூட்டம் வரும் என்று கணிக்க முடியாமல், தடுப்பூசிக்கு வந்தவர்களை இருந்த நாற்காலிகளில் அருகருகே ரண்டு இன்ச் இடைவெளியில் உட்கார வைத்தார்கள். எதிரே சுவரில் தொங்கிய எச்சரிக்கை வாசகம், "கோரோனா காலத்தில், வெளி இடங்களில் பிறரிடம் இருந்து 6 அடி விலகி இருங்கள்" என்று பயனில்லாத அறிவுரை சொன்னது. அதை நான் உன்னிப்பாகப் படித்துப் புன்னகைப்பதைக் கவனித்த ஒரு ஆஸ்பத்திரி ஒருங்கிணைப்பாளர்,  "சாரி சார். முதல் நாள் காலைலயே இத்தனை பேர் வருவாங்கன்னு நாங்க நினைக்கலை" என்று என்னிடம் சொன்ன சமாதானம் சரி என்று பட்டது. மற்றபடி தடுப்பூசி போடுவதற்கு நேர்த்தியான ஏற்பாடு, போட்டபின் அரை மணி காத்திருக்க தனி இட வசதி,  செய்திருந்தார்கள். 


அங்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு அந்த ஆஸ்பத்திரி பெயரில் உடனே ஒரு சிறிய மெலிய நோட்டுப் புத்தகமும் தந்தார்கள். அதன்  பக்கங்களில் ஊசி போட்டுக் கொண்டவரின் பெயர், ஆதார் போன்ற நபர்-அடையாள நம்பர், முதல் ஊசி போட்ட தினம், ஆகிய விவரம் எழுதி ஒரு சான்றாக வழங்கினார்கள். வந்தவர்களுக்கும்  திருப்தி, ஆஸ்பத்திரிக்கும் நல்ல பேர்.

 

இன்று அதே ஆஸ்பத்திரியில் இரண்டாவது ஊசி போட்டுக் கொண்டேன். நிறைய நாற்காலிகள்  இருந்தன. வந்தவர்கள்  தள்ளித்தள்ளி உட்கார முடிந்தது. புஜத்தில் குத்து வாங்கி வெளியே வருகையில், "உங்களுடைய நோட்டுப் புத்தகத்தைக் கொடுங்கள். ஒரு எண்டார்ஸ்மென்டும் போடுகிறோம்" என்று சொல்லி வாங்கி, அதில் எனது பெயர், ஆதார் நம்பர், இன்றைக்கு இரண்டாவது ஊசி போட்ட விவரம் எழுதினார்கள். பிறகு கடைசிப் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான அரை உண்மையை  நல்லெண்ணத்தோடு ரப்பர் ஸ்டாம்பில் பதித்தார்கள். நான் இனி "கோவிட் அண்டாதவர்" (Covid Immune) என்று அது என் முதுகைத் தட்டி ஊக்கப்படுத்தியது.

 

இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் கோரோனா வைரஸ் தாக்கலாம், அவர்களும் அதைப் பிறருக்குத் தரலாம், ஆனால் வாக்ஸின் போட்டவருக்கு வைரஸால் மரணம் நேராமல் தடுப்பூசி ஆளைப் பிழைக்க விடும் என்றுதான் பத்திரிகைகள் சொல்கின்றன. பேச்சில் சொல்வது போல்  'பிழைத்துக் கிடந்தால்', அதையும் ஊர்ஜிதம் செய்கிறேன்.

 

* * * * *

Copyright © R. Veera Raghavan 2021

Sunday 4 April 2021

வார்த்தைகள்


 -- ஆர். வி. ஆர்   


 
 

 

சிற்சில நேரத்தில்

சில சில எண்ணங்கள் 
சேர்ந்தால் அவைகளைச் 
சொல்வது அழகல்ல! 
 

 

 

சில பேச்சை  சில

செவிகள் கேட்கலாம்

எழுத்தில் வருவது

எந்நாளும் முறையல்ல!


 

 

என்னென்ன சிந்தனை

எவ்வெந்த வார்த்தையில்

எக்காலம் உரைப்பது

என்றுணர்தல் அறிவு! 

 

 


வார்த்தை வடிவில்

வெளிப்படும் அறிவு

வெளிவரும் முதிர்ச்சி

வசப்படுமா நமக்கு?

 

 

   

இறைவன் அருளோ

இயற்கையின் பரிசோ

இருத்தல் வேண்டும்

இதில்நாம் வெல்வதற்கு!


 


* * * * *

 

Copyright © R. Veera Raghavan 2021