Sunday, 31 May 2026

கேள்வி-பதில் (30.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "அரசியலில் நேர்மையின் அடையாளமாக விளங்கியவர் காமராஜர். ஒன்பது ஆண்டுகள் எளிமையாக ஆட்சி செய்த அவரையே, மாற்றம் வேண்டும் என்று மக்கள் தோற்கடித்தனர். காமராஜரைத் தோற்கடித்தது போல, இன்று திமுக அதிமுக மீது மக்கள் அதிருப்தி கொண்டதால் தவெக தலைவர் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்" என்று நடிகர் சிவகுமார் பேசி இருக்கிறாரே?

 

பதில்: சிவகுமார் என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை.

 

தமிழகத்தில் விஜய் கட்சி மூலம் வந்த ஆட்சி மாற்றத்தை விளக்கிப் பேசுகிறாரா? அல்லது, 'காமராஜர் ஆட்சிக்குப் பின் நேர்மைக்கும் எளிமைக்கும் விரோதமான திமுக, அதிமுக ஆட்சிகளைத் தமிழகம் பார்த்தது; அதே ரீதியில், திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாற்றாக வந்திருக்கும் விஜய் ஆட்சி அந்த இரு கட்சிகளின் ஆட்சியைவிட மோசமாக இருக்கலாம்' என்று பயம் காட்டுகிறாரா?

 

 

2. கேள்வி: தனது ஆதரவாளர்கள் மற்றும் விராலிமலை தொகுதி நிர்வாகிகள் பலரைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், "அவர்கள் பல கருத்துகளைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டேன், உள்வாங்கினேன்" என்று சொல்லி, "கட்சியைத் தாண்டி தொகுதி மக்கள்தான் எனக்கு முக்கியம்" என்றும் கூறி இருக்கிறாரே?

 

பதில்: அவர் பேசியதில் நமக்கு ஒரு சேதியும் இல்லை. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அவர் சங்கேதமாக ஏதோ சொல்கிறார். அது அவர்களுக்குப் புரிந்திருக்கும். என்னவென்றால்: விஜயபாஸ்கரின் ஆசைக்கு ஏற்றபடி பின்னணி உடன்பாடுகள் ஏற்பட்டால், அவர்  குறித்த 'பிரேக்கிங் நியூஸ்' விரைவில் வரலாம்.

 

 

3. கேள்வி: "குதிரை பேரத்தைக் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது" என்று தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறி இருக்கிறாரே?

 

பதில்: ஒரு லாயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரைகள் நிரந்தரமாக இருந்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு, ஆனால் அங்கிருக்கும் நிரந்தரக் குதிரைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவு என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அந்த லாயத்தின் மதிப்பைத் தற்காலிகமாக நிலைநிறுத்துவதற்காக, வெற்றிலை பாக்கு வைத்துக் கடனாக வரவழைக்கப்பட்ட சில குதிரைகள் டக் டக்கென்று மிடுக்குடன் உலவும் - 'நாங்கள் வந்தது எங்கள் இஷ்டம். வெளியேறுவதும் எங்கள் சாய்ஸ். நாங்கள் போய்விட்டால் இந்த லாயத்தின் மதிப்பு ஜீரோ' என்ற செருக்குப் பார்வையுடன். இந்தச் சூழலில் அந்த லாயத்தில் நிரந்தரமாகச் சேருவதற்காக, அதன் மதிப்பை நிரந்தரமாக உயர்த்தும் வகையில், சில குதிரைகள் வரக்கூடும் என்றால் என்ன ஆகும்? ஏற்கனவே கடனுக்காக வந்த தற்காலிகக் குதிரைகளுக்கும் அவற்றின் மேனேஜருக்கும் கெத்து குறையும், விரக்தி ஏற்படும். அந்த விரக்தியில் பேசுகிறார் செல்வப் பெருந்தகை.

 

 

4. கேள்வி: "நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம் சார்!" என்று தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கி திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

 

பதில்: தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு பற்றி, அதன் கீழ்நிலை பற்றி, சிறிது தூரம் சென்று பேசுகிறார் உதயநிதி. அவர் ஆசைப்பட்டுச் செல்ல விரும்பும், ஆனால் கூச்சப்பட்டு செல்ல முடியாத, மீதி தூரம் இந்த வார்த்தைகள்: "சட்டம் ஒழுங்குன்னா அது மு.க. ஸ்டாலின் ஆட்சி மாதிரி சூப்பரா இருக்கணும்!"

 

 

5. கேள்வி: "தவெக தான் உண்மையான அதிமுக" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். என்ன அர்த்தம்?

 

பதில்: 'விஜய்தான் இன்றைய எம்.ஜி.ஆர்' என்று அவர் சொல்லவருவதாக அர்த்தம். விஜய் கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைப் பொறுத்தவரை அந்த ஒப்பீடு சரி. ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி அல்லாமல், முதல்வர் நாற்காலியில் விஜய் ஒரு மர்ம மனிதாராக - மர்ம சிந்தனைகள் உள்ளவராக - தெரிகிறார். இது கவலைக்குரியது.

 

பகுதி 99 // 30.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Thursday, 28 May 2026

கேள்வி-பதில் (27.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: லேட்டஸ்டாக, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உடனே தவெக-வில் சேர்ந்தும் விட்டார். இது பற்றிப் பேசிய இசக்கி சுப்பையா, "தொகுதி மக்கள் நலனுக்காகவே ராஜினாமா செய்திருக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறாரே?

 

பதில்: ஒரு மாதத்திற்கு முன் நடந்த தேர்தலில் தவெக உட்பட நான்கு கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து, அதிக வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவை அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர்கள் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுத்தனர். இப்போது அவர் தனது எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு, வாக்காளர்கள் நிராகரித்த கட்சிகளில் ஒன்றான தவெக-வுக்குத் தாவுகிறார், தாவியது மக்கள் நலனுக்காக என்கிறார். காதுல பூ-ந்தோட்டம்.

 

 

2. கேள்வி: "தமிழகத்தில் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது. அது கவிழும்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார். ஆட்சியில் புதிதாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் விசிக-வின் தலைவர் திருமாவளவனோ, "எந்தச் சூழலிலும் தவெக ஆட்சி கவிழ நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்" என்று பேசி இருக்கிறார். இருவர் பேச்சும் எதிர்க் கோணங்களில் இருக்கிறதே?

 

பதில்: தவெக ஆட்சியைச் சில காலம் தாங்குமாறு விசிக-விடம் சொன்னது திமுக - ஒரு அரசியல் உத்தியாக. சரி என்று தலையாட்டிய விசிக, தவெக-விடம் கவிழ்ந்தே விட்ட மாதிரி இருக்கிறது - இல்லை, அதுவே விசிக-வின் அரசியல் உத்தியாகவும் இருக்கலாம். இதுபோக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் வேகவேகமாகத் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் சேருகிறார்கள்  - வரப்போகும் இடைத் தேர்தலில் அவர்களே தவெக வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டு அவர்கள் ஜெயிக்கலாம், அதனால் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியைத் தொட்டுவிடும் என்பது தவெக-வின் கணக்காக இருக்கும்.

 

ஸ்டாலினுக்கு ஒரு ஆசை. திருமாவளவனுக்கு ஒரு எதிர்பார்ப்பு. விஜய்க்கு ஒரு கணக்கு. அவரவரின் வெற்றி, அவரவரின் குதிரை சக்தியைப் பொறுத்தது.

 

 

3. கேள்வி: சமீபத்தில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட ஒரு தமிழகப் பெண் சார்பதிவாளர், கைதாகிப் போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் போது முகத்தைத் துணியால் மறைத்தபடி கண்ணீருடன் நடக்கிறார், அது ஒரு செய்திச் சேனல் வீடியோவில் தெரிகிறது. ஆனால் ஊழல் தடுப்பு சட்டதின் கீழ் தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த சசிகலா முகத்தை மறைத்ததில்லை, சிரிக்கிறார், அம்மா ஆட்சி பற்றிப் பேசுகிறார், புதுக் கட்சி ஆரம்பிக்கிறார், தேர்தலில் கூட்டணி வைத்துத் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார். ஏன் இந்தப் பெரிய வேறுபாடு?

 

பதில்: தப்புக் காரியங்கள் செய்தாலும் பின்னர் எழுவதற்கு, வளர்வதற்கு, மக்களைத் தான் முழுதாக உறுதியாக நம்பலாம். கோர்ட்டை அவ்வளவாக நம்ப முடியாது.

 

லஞ்ச ஊழலுக்காகக் கைதான சார்பதிவாளர் கோர்ட்டைச் சந்திக்கவேண்டும், ஆகையால் அவருக்கு அழுகை வருகிறது. சிறைத்தண்டனை பெற்ற சசிகலா மக்களைச் சந்திக்கிறார், மக்களை நம்புகிறார், கவலை இல்லாமல் புன்னகைக்கிறார். கடைசியில் பதவி கிடைக்கிறதோ இல்லையோ, கடைசிவரை அவர் அரசியலில் கௌரவமாக, கெத்தாக வலம் வரலாம் என்று அவருக்குத் தெரியும். நிறைய விஷயங்கள் சாதாரண மக்களுக்குப் புரியாது என்பது நமது அரசியல்வாதிகளின் பலம்.

 

 

4. கேள்வி: அதிமுக-வின் இ.பி.எஸ் மற்றும் வேலுமணி தரப்பினர், ஒருவருக்கு எதிராக ஒருவர் சபாநாயகரிடம் முன்பு அளித்த தகுதி நீக்க கோரிக்கை மனுக்களை வாபஸ் பெற்றிருக்கிறார்களே?

 

பதில்: மதிப்புள்ள ஒரு கட்சியாக மக்களிடம் மீண்டும் தகுதி பெறுவதுதான் அக்கட்சிக்கு மிக முக்கியம். இதற்கு மனுக்கள், பேட்டிகள் ஏதும் உதவாது. மக்கள் மனதைக் கவரும் ஒரு தலைவர் தேவை. அப்படி யாரும் அங்கு தென்படவில்லை. ஆகையால் இப்போதைக்கு அவர்கள் ஒற்றுமையாகச் செய்ய முடிவது இதுதான்: குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவது.

 

 

 

5. கேள்வி: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்ப்புத் தெரிவித்து, "இந்த நடவடிக்கைகள் தவெக மீதான நம்பகத் தன்மையை பாதிக்கச் செய்யும். இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல. தவெக தலைமை இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது" என்று கூறி இருக்கிறாரே?

 

பதில்: சட்டசபைத் தேர்தலுக்கு முன், 'திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி' என்று பேசினார் தவெக தலைவர் விஜய். அந்த திமுக தலைமை தாங்கிய கூட்டணியில் இருந்த விசிக-வின் தலைவர் திருமாவளவன், "ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை" என்று விஜய்யைச் சாடினார். ஆனால் தேர்தல் முடிவுகளில் மெஜாரிட்டியை எட்டாத தவெக-வுக்குத் தனது கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அளித்து அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க அவரும் உதவி செய்து, பின்னர் தனது எம்.எல்.ஏ ஒருவரை விஜய் ஆட்சியில் மந்திரியாகவும் அமர வைத்தார் திருமாவளவன். இதில் விஜய் மற்றும் திருமாவளவன் வேண்டியதும் செய்ததும் ஒரே வகை அரசியல் - ஆதாய அரசியல். திடீரென்று ஆரோக்கிய அரசியல் பற்றித் திருமாவளவன் விஜய்க்கு ஆலோசனை சொல்வதில் அர்த்தமில்லை.

 

கரிய மையிடம் காரிருள் சொன்னதாம்: கண்ணே உனக்கு ஆகாது கருமை!

 

பகுதி 98 // 27.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

Tuesday, 26 May 2026

கேள்வி-பதில் (26.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த சில நாட்கள் கழித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன் கட்சியினர் முன் பேசும்போது, "இன்னிக்கு நாம ஆட்சிய இழக்கலை. நம்ம தயவுலதான் ஆட்சியே நடக்குது. உங்களுக்கு என்னன்னு புரியும்" என்று கூறி இருக்கிறார். எனக்குப் புரியவில்லை. எந்த அர்த்தில் "நாம ஆட்சிய இழக்கலை" என்று அவர் பேசினார்?

 

பதில்: கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் கஞ்சாப் புழக்கம் தமிழகத்தில் குறையாமல் இருப்பதால், திமுக ஆட்சி தொடர்கிறது என்ற மயக்கத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அதன்படி பேசிவிட்டார்.

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த பின் அக்கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி குறித்து, "காங்கிரஸ் நம் முதுகில் குத்திவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குத் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் கற்றுக் கொடுப்பார்கள்" என்று பேசி இருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்குச் செமத்தியாகக் கற்பித்த பாடங்களை, உதயநிதி நினைவு கொள்ளவில்லை. ஒன்று: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் திமுக-வுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். இரண்டு: 1967 தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சிக்கும் அவர்கள் வழங்கிய பாடம்.

 

59 வருடங்களாகியும் தமிழக காங்கிரஸ் தனது பாடத்தைச் சரியாகக் கற்கவில்லை. திமுக கற்பதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ?

 

 

3. கேள்வி: முதல்வர் விஜய்யைச் சந்தித்து, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவரிடம் கோரிக்கைகள் அளித்துவிட்டு வந்த பாஜக தலைவர் குஷ்பு, "தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வரப் போகிறது. முதல்வருக்கு அவகாசம் கொடுங்கள்" என்று பேட்டி கொடுத்திருக்கிறாரே?

 

பதில்: முதல்வரிடம் தங்களுக்காகக் கோரிக்கைகள் வைத்துவிட்டு வந்த ஒருவர், அதே முதல்வர் பற்றி நல்லதாக மட்டும் சொல்லவேண்டியதைக் குஷ்பு சொல்லி இருக்கிறார். மற்றபடி, தேர்தலில் தன்னை நிரூபித்த விஜய், இப்போது வேறொரு தளத்தில் - அரசு நிர்வாகத்தில், அரசு கஜானாவைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் - தன்னை நிரூபிக்க வேண்டியவர்.

 

தமிழகத்திற்காக முதல்வர் விஜய் பெரிய பணிகள், நல்ல காரியங்கள், செய்ய முடிந்தால் அவற்றின் முக்கிய அறிகுறிகளாவது அவர் ஆட்சியின் முதல் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் வெளிப்பட வேண்டும். நிர்வாகத்தில் பெரிய தவறுகள் நடக்காமல், கோணல்கள் நிகழாமல், தடுக்க அவருக்கு அவகாசம் ஏதும் கிடையாது. இதையெல்லாம் அவர் உணர்ந்திருப்பார். நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். உற்சாகமாக விசில் அடித்துக் கொண்டே இருக்க முடியாது.

 

 

4. கேள்வி: அதிமுக-வின் வேலுமணி-சி.வி. சண்முகம் தரப்பு மூன்று எம்.எல்.ஏ-க்கள் சட்டசபை சபாநாயகரைச் சந்தித்துத் தங்களின் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுக்க, சபாநாயகரும் அந்த ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார். சபாநாயகர் ஏற்ற ராஜினாமாக்களை அவர் திரும்பப் பெறவேண்டும், இல்லையென்றால் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று இ.பி.எஸ் தரப்பு அதிமுக எம்.பி இன்பதுரை சொல்கிறாரே?

 

பதில்: உடனடியாக விற்பனை ஆகவேண்டிய சில குதிரைகளை சீக்கிரம் பைசல் செய்யவேண்டும். காத்திருந்தால் நல்ல விலை கிடைக்கத் தக்க சில குதிரைகளை, பின்னால் தள்ளி விடலாம். ஜனநாயக விளையாட்டு விளையாடும்  குதிரைகள், தாங்களாகவே முடிவு செய்து இப்போது அல்லது பிற்பாடு விலைபோக முயலும்.

 

விலையைப் பொறுத்தவரை,  குதிரைகளை வாங்குபவர் தனக்கு அவசரத் தேவை என்ன, சல்லிசாகக் கிடைக்கும் நேரம் எது என்று ஒரு கணிப்பில் தான், சிறிது ரிஸ்க் எடுத்துதான், செயல்பட முடியும். அவரவர் அதிர்ஷ்டமும் இங்கு வேலை செய்யும்.

 

குதிரைகள் இருக்கும்வரை, குதிரைகள் விற்பது வாங்குவது, அதற்கான பேரம், நடக்கும். ராஜினாமாக்கள், அதில் ஓரமாக நடக்கும் ஒரு சிறு நடைமுறை. அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் இன்பதுரை இதை நன்கு அறிவார்கள்.

 

 

5. கேள்வி: "தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

 

பதில்: குதிரைகளை ஜெட் வேகத்தில் வாங்க முடிகிறவர், தற்போது நொடித்திருக்கும் தனது நிலையில் ஒரு குதிரையும் தன்னிடம் விலைக்கு வராது, வந்தால் அதற்குக் கொள்ளு கிடைக்காது என்று குதிரைகளுக்கே தெரியும் என்பதை அறிந்து, அங்கும் இங்கும் ஓடும் குதிரைகளைப் பார்த்து ஆதங்கத்தில் ஏதோ சொல்லலாம்.

 

பகுதி 97 // 26.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr