Saturday, 9 May 2026

கேள்வி-பதில் (09.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ஸ்டாலின் எப்படியாப் பட்ட தலைவர்! அவரே வெற்றி வாய்ப்பை இழக்குமாறு மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்களே! என்று சொல்லி மனதில் கஷ்டப் பட்டார் எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமி" என்று, சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் தோற்றது பற்றி அதிமுக தலைவர் சி. வி. சண்முகம் பேசியிருக்கிறாரே?

 

பதில்: எங்கு உட்காரப் போகிறோம் என்பது சிலருக்கு நிச்சயம் இல்லை என்றால், பார்க்கிற ஒன்றிரண்டு காலி இடங்களில் அவர்கள் டக்கென்று துண்டைப் போட்டு வைப்பார்கள். சி. வி. சண்முகம் அதைச் செய்திருக்கிறார்.

 

ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி யாருக்கு எப்படி வாய்க்கும், தங்கள் கட்சிக்கு அதில் சான்ஸ் உண்டா, என்பதில் தெளிவு வந்தவுடன் - சான்ஸ் இல்லை என்று தெரிந்தவுடன் - முன்பு எச்சரிக்கையாகத் துண்டைப் போட்ட மனிதர் அதை  அமைதியாகத் திரும்ப எடுத்துக் கொள்வார். 

 

 

2. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்குப் பின்பாக திமுக-வும் அதிமுக-வும் தங்களுக்குள் ஒரு புதிய கூட்டணி அமைத்து, தேர்தலுக்கு முன்னர் அந்த இரு கட்சிகளும் தனித் தனியாக அமைத்த கூட்டணிகளில் அங்கம் வகித்த கட்சிகளையும் அந்தப் புதிய கூட்டணியில் சேர்த்து தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதில் அந்த இரு கட்சிகளுக்குள் என்ன பிரச்சனை - திமுக-வை எட்டி உதைத்துத் தவெக பக்கம் போன காங்கிரஸ் கட்சி, ஒரு தொகுதி வென்ற பாஜக அந்தப் புதிய கூட்டணியில் சேரவில்லை என்றாலும்?

 

பதில்: திமுக அல்லது அதிமுக மட்டும் தனியாக ஆட்சி செய்தால், சில விஷயங்களைக் காதும் காதும் வைத்த மாதிரி கமுக்கமாகக் கவனித்துக் கொள்ள முடியும். பிற கட்சிகளை ஆட்சியில் சேர்த்தால் எதுவும் எப்போதும் அம்பலம் ஆகலாம். இதுபோக, ஆட்சியில் பங்குபெறும் கட்சிகளுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அவை எப்போது வேண்டுமானாலும் ஒரு மெல்லிய மெஜாரிட்டி ஆட்சியைக் கவிழ்க்கலாம். சீக்கிரம் அடுத்த தேர்தல் வரலாம். அதில் விஜய் தனி மெஜாரிட்டி எட்டலாம். ஆகையால் இப்போதைக்கு அசிரத்தை பாவனையில் வேடிக்கை பார்ப்பது நல்லது என்று திமுக-வும் அதிமுக-வும் நினைக்கலாம்.

 

 

3. கேள்வி: சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது 'தீய சக்தி' என்று விஜய் இகழ்ந்த திமுக-வின் சில முக்கிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத்தான், ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டிக்காக விஜய் இப்போது சலிக்காமல் நாடுகிறார். அந்த சில கட்சிகள்தான், இப்போது விஜய் ஆட்சி அமைப்பதை விரும்புகின்றன, அவர் ஆட்சி அமைக்க ஆதரவு தர முன்வருகின்றன. இந்த முரண்பாடு, திமுக கூட்டணியில் அங்கம் வகித்த அந்தச் சில கட்சிகளை உறுத்தாதா?

 

பதில்: விஜய் கட்சி இப்போது ஆட்சி அமைக்க முடியாமல், திமுக மற்றும் அதிமுக-வும் ஒரு ஸ்திரமான கூட்டணி ஆட்சியைத் தர முடியாமல், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்து அடுத்த தேர்தலும் சீக்கிரம் வந்தால், தற்போதுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களில் - அதைப் போல் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களில் - யாருக்கு சீட் கிடைக்குமோ, கிடைத்தாலும் மறு தேர்தலில் அவர்கள் விஜய் கட்சி வேட்பாளரை எதிர்த்து வெல்ல முடியுமா என்பதில் நிச்சயம் இல்லை. அத்தகைய மறு தேர்களின் போது, அதிமுக அமைக்கும்  கூட்டணியில் பாஜக சேராது, சீமானும் யாருடனாவது கூட்டணி சேருவார், என்றால் அந்தத் தேர்தல் முடிவு எப்படி அமையுமோ? தற்போது ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருக்கும் பாஜக-வுக்கு மட்டும் இந்தப் பெரிய கவலைகள் இருக்காது.

 

இவ்வளவு இருக்கும்போது, முரண்பாடாவது முருங்கைக் காயாவது!

 

 

4. கேள்வி: தமிழகத்தில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி தேடி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, ஆகிய கட்சி அலுவலகங்களுக்கு விஜய்யும் அவர் கட்சித் தலைவர்களும் மாறி மாறிக் கும்பிடு போட்டபடி சென்று வருகிறார்கள். விஜய்யின் நிலை என்ன, அவருடைய முயற்சிகளின் வெற்றி நிலையாக இருக்குமா?

 

பதில்: ஆட்சி அமைவதற்கு முன்பே, ஆளும் கூட்டணி அமைவதற்காக விஜய் சில கட்சித் தலைவர்களை நோக்கிக் கும்பிட்ட கையும் சிரித்த முகமும் அணைக்கும் கரங்களாகக் காட்சி தந்தபடி இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்சி அமைத்தபின் அவர்களில் எந்தத் தலைவர் எந்தக் கையை முறுக்குவாரோ, எந்த விலாவில் உதைப்பாரோ, எந்தக் காலை வாருவாரோ, என்ன தெரியும்?  சிந்தனையில் தெளிவும், ஆட்சியில் நேர்மையும், சீரிய தலைமைப் பண்பும் இருந்தால்தான் - அதாவது, மோடி மாதிரி - சொந்தக் கட்சியினரின் அத்துமீறல்களையும், கூட்டணிக் கட்சிகளின் சில்மிஷங்களையும், விஜய் கட்டுப்பாட்டில் வைத்து சமாளிக்க முடியும். விஜய் அப்படியானவராகத் தோன்றவில்லை.

 

விஜய் ஆட்சி அமைத்தால் அரசு நிர்வாகத்திற்கு என்ன பயன், மக்களுக்கு என்ன பயன், என்பது பற்றித் தெளிவான அறிகுறி ஏதுமில்லை. நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

 

5. கேள்வி: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் கட்சியைப் பாஜக தீர்க்கமாக வென்றிருக்கிறது. இதில் பாஜக-வுக்கு என்ன செய்தி இருக்கிறது?

 

பதில்: நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விஜய் கட்சியின் தாக்கத்தால் ஜாம்பவான் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வுக்குப் பெரிய சரிவு ஏற்பட்ட மாதிரி, பாஜக-வுக்கும் ஏற்பட்டிருக்கிறது. தேச நலன், மக்கள் நலன், இரண்டையும் முன்வைத்து சாமர்த்தியமாக அரசியல் செய்ய முடிகிற பாஜக, சரியான மாநிலத் தலைமையின் கீழ் தமிழகத்திலும் பெரிய உயரத்தை எட்டும். எந்தப் பெரிய வெற்றிக்கும் நம்பிக்கை பெரிய அடித்தளம். இவை பாஜக-வுக்கான முக்கியச் செய்தி என்று பாஜக எடுத்துக் கொள்ளலாம்.

 

பகுதி 88 // 09.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment