Sunday, 24 May 2026

கேள்வி-பதில் (24.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியினர் முன் பேசும்போது, "இன்னிக்கு நம்ம ஆட்சிய இழக்கலை. நம்ம தயவுலதான் ஆட்சியே நடக்குது. உங்களுக்கு என்னன்னு புரியும்" என்று சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: முன்பு ஆட்சி செய்த திமுக பதவியிலிருந்து இறக்கப் பட்டு, தவெக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடக்கும்போது அந்த ஆட்சிக்கு ஏன் திமுக 'தயவு' காட்ட நினைக்க வேண்டும்? பயம்தான் காரணம் - தவெக தலைமையில் ஒரு ஆட்சி அமையாமல், வேறு எந்த வகைக் கூட்டணியும் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை எட்ட முடியாமல், ஜனாதிபதி ஆட்சி வந்து சட்டசபை முன்கூட்டியே கலைக்கப் பட்டு இன்னொரு தேர்தல் வருமானால், சென்ற தேர்தலில் திமுக-வுக்குக் கிடைத்த 59 எம்.எல்.ஏ-க்களை விட அக்கட்சி அநேகமாகக் குறைவான எம்.எல்.ஏ-க்களைப் பெறலாம்.

 

தவெக-வைப் பொறுத்தவரை, இப்போது ஆட்சி பெரிதும் நம் கையில் இருக்கிறது, அடுத்த சட்டசபைத் தேர்தல் ஐந்தாண்டுகள் கழித்தே வரட்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆகையால் தவெக-வின் தயவில் திமுக-வின் சட்டசபை எண்ணிக்கை சார்ந்த மானம் மேலும் சரியாமல் பிழைக்கிறது. இங்கு தயவு காட்டுவது தவெக, தயவை அனுபவிப்பது திமுக. திமுக காட்டுவது தயவு அல்ல, பந்தா.

 

 

2. கேள்வி: தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள் பங்கேற்றதை ஆபாசமாக விமர்சித்து - பெண்களையும் இழிவு செய்து - திமுக-வின் ஆ. ராசா எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார். அதை ஒட்டி, திமுக தலைவர் ஸ்டாலின், "கட்சியினர் யாரையும் புண்படுத்தும்படி கடும் சொற்களைப் பேசவேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவரான எனது அன்பு வேண்டுகோள்" என்று வலைத்தளம் மூலமாகச் சொல்லி இருக்கிறார்.

 

ஆ. ராசாவின் ஆபாசம் மிக்க விமர்சனத்தைக் கண்டிக்காமல், ஸ்டாலின் ஏன் அவரிடம் அன்பான வேண்டுகோள் வைக்கிறார்?

 

பதில்: ஆபாசம் மிக்க ஆ. ராசா. பாசம் மிக்க ஸ்டாலின்.

 

 

3. கேள்வி: தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனது கட்சிக்கு வியக்கத் தக்க எண்ணிக்கையில் எம்.எல்.ஏ-க்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் விஜய், ஏன் வியக்கத் தக்க நல்லாட்சி தர முடியாது, தர மாட்டார்?

 

பதில்: இன்னொருவர் தனக்காக, தன் விருப்பப்படி, எழுதிய சினிமா வசனங்களைச் சிறப்பாகப் பேசி, அதற்கேற்ற வகையில் சிறப்பாக நடித்துப் பேர் வாங்குவது வேறு. அதை விஜய் கச்சிதமாகச் செய்தார். ஆனால் நல்லாட்சி என்பது, தான் விரும்பும் டிராக்கில் மக்களின் தேவைகளையும் பிரச்சனைகளை அமைத்து, ஆட்சிக்கான சட்டங்களையும் விதிகளையும் தனக்குப் பிடித்த மாதிரி டான்ஸ் ஆடவைத்து, எல்லாப் பத்திரிகைகள், செய்திச் சேனல்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டை எப்போதும் இதமான மியூசிக் போடவைத்து, கடைசியில் வணக்கம் போடுவதல்ல.

 

முதலமைச்சரை ஆவென்று பார்த்தபடி இருந்து, தனக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் முதலமைச்சரிடம் நன்றி விசுவாசம் காட்டும் நெஞ்சோடு வலம் வருகின்ற அமைச்சர்களைத் தான் விஜய் பெற முடியும் - ஒன்றிரண்டு நன்கு படித்தவர்கள் சந்தடி சாக்கில் விஜய் கட்சியில் சேர்த்து எளிதாக அமைச்சர்களாகி விடுவது அவர்களுக்கு கெத்தாக இருக்கலாம், அது வேறு விஷயம். சுயமாக விசாலமாகச் சிந்தித்து, உயர் திறமையுடன் செயல்படும் மனிதர்களை விஜய் ஈர்த்துத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட வைத்து, அவர்கள் ஜெயித்து வந்தபின் அவர்களை அமைச்சர்களாக ஆக்கியதாகத் தெரியவில்லை. கூட்டணி ஆட்சியில் இணைந்த பிற கட்சி அமைச்சர்களும் வெறும் லக்கி பிரைஸ் அமைச்சர்களாகத் தெரிகிறார்கள். விஜய் தலைமையிலான இத்தகைய அமைச்சரவை, வியக்கத்தக்க நல்லாட்சி தருவதற்கான சுபாவமும் திறமையும் கொண்டது என்று நம்பமுடியவில்லை.

 

 

4. கேள்வி: "பதவியை என் தலையிலிருக்கும் முடிக்குச் சமமாகக் கருதுகிறவன் நான்" என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருக்கிறாரே?

 

பதில்: கடவுள் மனிதனைப் படைத்து அவனுக்குத் தலைமுடியையும் சேர்த்துப் படைத்திருக்கையில், பேதம் காட்டாமல் அந்தத் தலைமுடியையும் உயர்வாக மதிக்கும் திருமாவளவனின் மனப்பாங்கு வியக்கத் தக்கது.

 

 

5. கேள்வி: திமுக-வின் தேர்தல் கூட்டணிக் கட்சிகளான விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல் கட்சிகள், தவெக தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றதை விமர்சித்து, திமுக-வின் ஆ. ராசா வெளியிட்ட ஆபாசப் பதிவை அவரே நீக்கிவிட்டார். பிறகு அவர், "என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டுக்கு இளநீர் தந்தால், இலக்கியத்தில் அதற்குப் பெயர் 'முடத்தெங்கு'! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!" என்று கவிதை ரீதியில் இன்னொரு பதிவைப் போட்டிருக்கிறாரே?

 

பதில்: தமிழக மக்கள் என்ற உரிமையாளரின் தென்னந்தோப்பில் எண்ணிலடங்கா தென்னை மரங்கள் உண்டு. அந்தத் தென்னை மரங்களின் எண்ணிக்கை, அவற்றில் காய்த்து இளநீர் வழங்கும் தேங்காய்களின் எண்ணிக்கை ஆகியவை அந்தத் தோப்பின் காவல்காரனுக்கு மட்டும் அத்துப்படி. அந்தக் காவல்காரனும் அவன் குடும்பத்தவரும் தங்களுக்கென்று நைஸாகப் பறித்துக் கொண்ட பெரு மதிப்புள்ள இளநீர்த் தேங்காய்களின் எண்ணிக்கை, அவற்றில் ரகசியமாக வெளிநாட்டுக்கு அனுப்பப் பட்ட இளநீர்த் தேங்காய்களின் எண்ணிக்கை, ஆகியவற்றுக்கு, சமூகத்தில் 'ஆட்டை' என்று பெயர். இலக்கியத்தில் என்ன பெயர் வைக்கலாம்? வாழ்க ஜனநாயகம்!

 

பகுதி 96 // 24.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment