|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
பேசும்போது, "கொளத்தூர்
தொகுதியை முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் போல மாற்றி
வைத்திருந்தார். ஆனால் கேடுகெட்ட அந்தத் தொகுதி மக்கள் அவரைத் தோற்கடித்து
விட்டனர்" என்று கூறி இருக்கிறாரே? பதில்: இதில்
கேடுகெட்டது, கொளத்தூர் வாக்காளர்கள் அல்ல. அங்கு
தோல்வியடைந்த வேட்பாளர் ஸ்டாலினும் அல்ல. கேடுகெட்டது, அந்த வேட்பாளரைக் காக்கா பிடிக்கும் ஆவலில் கொளத்தூர்
வாக்காளர்களை இகழ்ந்து, சிங்கப்பூரையும் களங்கப் படுத்தும்
வேறொருவர். |
|
2. கேள்வி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் பேசும்போது, சட்டசபைத்
தேர்தலில் தவெக அதிக இடங்களை வென்று சில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி
அமைத்திருக்கும் விஜய் குறித்து, "சோஷியல் மீடியா வாயிலாக, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு
பிள்ளைகளைப் பிரசாரம் செய்யவைத்து, அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற
பெரியவர்களிடையே, குழந்தைகள்
வாயிலாகப் பிரசாரம் நடத்தி, ஆட்சிக்கு வந்து விட்டனர்" என்று கூறி
இருக்கிறாரே? பதில்: தேர்தலில் திமுக அடைந்த தோல்விக்கான
காரணங்களை அறிய, 36 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்த ஸ்டாலின், உடனே அந்தக் காரணம் என்ன என்று அவரே
அறிவித்து விட்டார். தமிழ்நாட்டுக் குழந்தைகள் வழிகாட்ட, என்ன ஏது என்று கேட்காமல் குழந்தைகள்
சொற்படி வாக்களித்த அம்மா அப்பா, தாத்தா பாட்டி, ஆகியோர் திமுக-வை இறக்கிவிட்டு, தவெக-வை ஆட்சியில் அமர்த்தி விட்டார்களாம்.
குழந்தை மாடல் உடான்ஸ். |
|
3. கேள்வி: "மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து, தொடர்ந்து
கடினமாக உழைப்பேன்" என, திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனும் 'பென்' வியூக வகுப்பு
நிறுவனத்தின் நிறுவனருமான சபரீசன் அறிக்கை வெளியிட்டுள்ளாரே? பதில்: திமுக
இப்போது ஆட்சியில் இல்லை என்பதால், திமுக
தலைவர்களின் மகன்களும் மருமகன்களும் இனி கடினமாக உழைத்துத்தான் ஆகவேண்டும்.
பாவம், பழக்கம் இல்லாத உழைப்பைப் பழகிப் பழகிக் தெரிந்துகொள்ள
வேண்டும். கஷ்டம்தான். |
|
4. கேள்வி: சட்டசபைத் தேர்தலில் தோற்ற முன்னாள் திமுக அமைச்சர்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வெடுக்கிறேன்.
தொடர்ந்து மக்கள் பணியாற்றியதால் சிறிது காலம் தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம்
செலுத்த உள்ளேன்" என்று அறிவித்திருக்கிறாரே? பதில்: இந்தத் தேர்தலில் திமுக ஜெயித்து பழனிவேல்
தியாகராஜனுக்கு மீண்டும் மாநில அமைச்சர் பதவி கிடைத்தால், அந்தப் பதவியிலிருந்து ஓய்வை நினைத்துப்
பார்ப்பாரா அவர்? இன்னொன்று. மிகச் சிறிய காலம் - ஒன்றிரண்டு, அல்லது அதிக பட்சம் மூன்று, மாதங்கள் - ஓய்வெடுப்பார் என்றால் அதை அவர்
பெரிதாக அறிவிக்கத் தேவை இல்லை. உடன் பயணிப்பவர்கள் முகம் சுளித்து அதை
விட்டுவிடலாம். அதை விட நீண்ட ஓய்வாக இருக்கும் என்றால், கட்சிக்குள் உயர்நிலையில் பணி செய்யும்
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? பண்ணை அரசியல் செய்பவர்கள், அந்த வசதி உள்ளவர்கள், எந்த விளைவைப் பற்றியும் கவலைப் படாமல் 'போனால் போகட்டும் போடா' பாடலாம். |
|
5. கேள்வி: தன்னைவிட மிக இளைய நடிகரான விஜய் முதலமைச்சர் ஆனதில்
தனக்கு அவர்மேல் பொறாமை ஏதுமில்லை என்று சொன்ன ரஜினிகாந்த், "கமல் ஹாசன்
முதலமைச்சர் ஆகி இருந்தால் கூட எனக்கு அவர்மேல் பொறாமை வந்திருக்குமா என்று
தெரியவில்லை" என்று சிரித்தவாறு சொன்னார். உண்மையில் தற்போது கமல் ஹாசன் தமிழக முதலமைச்சராகி
இருந்தால் அவர் மீது ரஜினி பொறாமைப் பட்டிருப்பாரா இல்லையா? பதில்: கமல்
தமிழக முதல்வராகி இருந்தால், ரஜினிக்குத்
தாங்க முடியாத, வெளியில் சொல்லமுடியாத, ஒரு உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கமலை நினைத்துப்
பொறாமை அல்ல. தமிழகத்தை எண்ணி துக்கம். |
|
பகுதி 93
// 19.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment