|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "அரசியலில் நேர்மையின் அடையாளமாக விளங்கியவர்
காமராஜர். ஒன்பது ஆண்டுகள் எளிமையாக ஆட்சி செய்த அவரையே, மாற்றம் வேண்டும் என்று
மக்கள் தோற்கடித்தனர். காமராஜரைத் தோற்கடித்தது போல, இன்று திமுக அதிமுக மீது
மக்கள் அதிருப்தி கொண்டதால் தவெக தலைவர் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்"
என்று நடிகர் சிவகுமார் பேசி இருக்கிறாரே? பதில்: சிவகுமார்
என்ன நினைக்கிறார் எனத் தெரியவில்லை. தமிழகத்தில் விஜய் கட்சி மூலம் வந்த ஆட்சி மாற்றத்தை விளக்கிப்
பேசுகிறாரா? அல்லது, 'காமராஜர் ஆட்சிக்குப் பின் நேர்மைக்கும் எளிமைக்கும் விரோதமான திமுக, அதிமுக ஆட்சிகளைத் தமிழகம் பார்த்தது; அதே ரீதியில், திமுக
மற்றும் அதிமுக-வுக்கு மாற்றாக வந்திருக்கும் விஜய் ஆட்சி அந்த இரு கட்சிகளின்
ஆட்சியைவிட மோசமாக இருக்கலாம்' என்று பயம்
காட்டுகிறாரா? |
|
2. கேள்வி: தனது ஆதரவாளர்கள் மற்றும் விராலிமலை தொகுதி
நிர்வாகிகள் பலரைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், "அவர்கள் பல
கருத்துகளைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டேன், உள்வாங்கினேன்" என்று
சொல்லி, "கட்சியைத்
தாண்டி தொகுதி மக்கள்தான் எனக்கு முக்கியம்" என்றும் கூறி இருக்கிறாரே? பதில்: அவர் பேசியதில் நமக்கு ஒரு சேதியும் இல்லை.
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் அவர் சங்கேதமாக
ஏதோ சொல்கிறார். அது அவர்களுக்குப் புரிந்திருக்கும். என்னவென்றால்:
விஜயபாஸ்கரின் ஆசைக்கு ஏற்றபடி பின்னணி உடன்பாடுகள் ஏற்பட்டால், அவர்
குறித்த 'பிரேக்கிங் நியூஸ்' விரைவில் வரலாம். |
|
3. கேள்வி: "குதிரை பேரத்தைக் காங்கிரஸ் ஒருபோதும்
அனுமதிக்காது" என்று தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை
கூறி இருக்கிறாரே? பதில்: ஒரு
லாயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரைகள் நிரந்தரமாக இருந்தால்தான் அதற்கு
மதிப்பு உண்டு, ஆனால் அங்கிருக்கும் நிரந்தரக்
குதிரைகளின் எண்ணிக்கை சற்றுக் குறைவு என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அந்த லாயத்தின் மதிப்பைத் தற்காலிகமாக
நிலைநிறுத்துவதற்காக, வெற்றிலை பாக்கு வைத்துக் கடனாக
வரவழைக்கப்பட்ட சில குதிரைகள் டக் டக்கென்று மிடுக்குடன் உலவும் - 'நாங்கள் வந்தது எங்கள் இஷ்டம். வெளியேறுவதும் எங்கள்
சாய்ஸ். நாங்கள் போய்விட்டால் இந்த லாயத்தின் மதிப்பு ஜீரோ' என்ற செருக்குப் பார்வையுடன். இந்தச் சூழலில் அந்த
லாயத்தில் நிரந்தரமாகச் சேருவதற்காக, அதன்
மதிப்பை நிரந்தரமாக உயர்த்தும் வகையில், சில
குதிரைகள் வரக்கூடும் என்றால் என்ன ஆகும்? ஏற்கனவே
கடனுக்காக வந்த தற்காலிகக் குதிரைகளுக்கும் அவற்றின் மேனேஜருக்கும் கெத்து
குறையும், விரக்தி ஏற்படும். அந்த விரக்தியில்
பேசுகிறார் செல்வப் பெருந்தகை. |
|
4. கேள்வி: "நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம்
ஒழுங்கைக் காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம் சார்!" என்று தமிழக
முதலமைச்சர் விஜய்யை நோக்கி திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? பதில்: தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு பற்றி, அதன் கீழ்நிலை பற்றி, சிறிது தூரம் சென்று பேசுகிறார் உதயநிதி.
அவர் ஆசைப்பட்டுச் செல்ல விரும்பும், ஆனால் கூச்சப்பட்டு செல்ல முடியாத, மீதி தூரம் இந்த வார்த்தைகள்: "சட்டம்
ஒழுங்குன்னா அது மு.க. ஸ்டாலின் ஆட்சி மாதிரி சூப்பரா இருக்கணும்!" |
|
5. கேள்வி: "தவெக தான் உண்மையான அதிமுக" என்று
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். என்ன அர்த்தம்? பதில்: 'விஜய்தான் இன்றைய எம்.ஜி.ஆர்' என்று அவர் சொல்லவருவதாக அர்த்தம். விஜய் கட்சியின்
மகத்தான தேர்தல் வெற்றியைப் பொறுத்தவரை அந்த ஒப்பீடு சரி. ஆனால் எம்.ஜி.ஆர்
மாதிரி அல்லாமல், முதல்வர் நாற்காலியில் விஜய் ஒரு மர்ம
மனிதாராக - மர்ம சிந்தனைகள் உள்ளவராக - தெரிகிறார். இது கவலைக்குரியது. |
|
பகுதி 99
// 30.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment