Friday, 22 May 2026

கேள்வி-பதில் (22.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: விஜய் கட்சியான தவெக, தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. இதில் அதிக முக்கியத்துவம் எதற்கு இருக்கிறது? பலம் வாய்ந்த திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்கியதற்கா? ஒரு புத்தம் புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றியதற்கா?

 

பதில்: இரண்டுக்கும் சேர்த்து. அத்துடன் இதில் வேறொரு முக்கியத்துவம் உண்டு. என்னவென்றால்: நமது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத் தன்மை பளிச்சிடுகிறது.

 

விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது, மேடையில் புன்னகைத்து அமர்ந்திருந்த ராகுல் காந்தி சிம்பிளான இந்த மூன்றாவது விஷயத்தை ஏற்க மாட்டார். அதை ஏற்றால், பாஜக மத்தியிலும் பிற மாநிலங்களிலும் பெற்றுவரும் தேர்தல் வெற்றிகளை 'ஓட்டுத் திருட்டு' என்று ராகுல் மலிவாக இகழ முடியாது என்பதால்.

 

விஜய் பெற்ற ஓட்டுகளை உண்மைத் தன்மையுடன் பதிவு செய்து வெளிக்காட்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை, விஜய்யாவது ஏற்றுக் கொண்டு அந்த இந்திய அதிசயத்தைப் பாராட்ட வேண்டும். அதைச் செய்வதற்கு புத்திசாலித்தனம் தாண்டிய, நடிப்பைத் தாண்டிய, நல்மனது அவருக்குத் தேவை.

 

 

2. கேள்வி: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இப்போது விசிக சார்பாகவும் ஒருவர் சேர்ந்திருக்கிறார். அதாவது, இந்த அரசு விசிக-வும் இணைந்த கூட்டணி ஆட்சி என்று ஆகிவிட்டது. இனி மாநில அரசைத் திமுக குறை சொன்னால், அரசுக்கு ஆதரவாகவும் திமுக விமர்சனத்தை மறுத்தும் விசிக தலைவர் திருமாவளன் அறிக்கை வெளியிடுவாரா?

 

பதில்: அது திருமாவளவனுக்கே இப்போது தெரியாது. அந்த இக்கட்டான தருணங்களில், "அரசியல் ரீதியாக நாங்கள் தவெக கூட்டணி மந்திரிசபையில் இருக்கிறோம். கருத்தியல் ரீதியாக திமுக கூட்டணியில் எங்களுக்கான இடம் உண்டு" என்று ஆரம்பித்து அவர் ஏதாவது ஒரு கத்தரிக்கா-அவியல் அறிக்கை தரலாம். இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.

 

 

3. கேள்வி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி, அக்கட்சியின் அதிருப்தி அணித் கலைவர் சி.வி. சண்முகம், "என் புள்ளையையும் உங்க புள்ளையையும் இங்க நிறுத்துங்க. என் புள்ளை தலையில அடிச்சு சத்தியம் பண்றேன் - திமுக-வுடன் கூட்டணி அமைக்கலாம்னு நீங்க சொன்னீங்கன்னு. அதை மறுத்து உங்க புள்ளை தலையில அடிச்சு நீங்க சத்தியம் பண்ணத் தயாரா?" என்று கேட்டிருக்காரே?

 

பதில்: மலிவான திராவிட அரசியல் சவால்களைக் கேட்கும் நாம்தான் தலையில் அடித்துக் கொள்ளவேண்டும்.

 

 

4. கேள்வி: சட்டசபைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து விட்டனர்.  இது அந்தக் கட்சிகள் திமுக-வுக்குச் செய்யும் துரோகம் என்று சொல்லவந்த திமுக தலைவர் ஆ. ராசா, மிக ஆபாசமாகப் பதிவிட்டிருக்கிறாரே?

 

பதில்: ஆட்சியில் இருக்கும்போது எதிரிகளைத் தகாத வார்த்தைகளில் விமர்சிக்கும் திமுக, எதிர்க் கட்சியானால் அந்தத் தகாத சொற்களை இரட்டிப்பாகும். ஆட்சியில் இருக்கையில் அவை ஏன் குறைவு என்றால், அப்போது பல தகாத செயல்களிலும் அது கவனம் செலுத்துகிறது. தவறானது, தகாதது, தேசியத்துக்கு எதிரானது, என்பவை திமுக-வின் கேரக்டர். இது மாறாது.

 

முன் காலத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களைத் திமுக பிரபலம் செய்தது. சமீப காலமாக அவற்றை உச்சரிக்கத் திமுக-வுக்கே கூச்சமாக இருக்கிறது. திமுக இப்போது பிரபலம் செய்திருக்கும் வேறு மூன்று சொற்கள்: டெங்கு, கொசு, மலேரியா.

 

 

5. கேள்வி: "திமுக எதிர்ப்பு என்பதற்காக மட்டும் நாங்கள் தவெக-வை ஆதரிக்கிறோம். பதவிக்காக அல்ல. நாங்கள் அமைச்சர் பதவி கேட்கவில்லை. நாங்கள் அமைச்சர் பதவி கேட்பதாகச் செய்யப்படும் பிரசாரம் தவறானது" என்று, அதிமுக-விற்குள் இயங்கும் பழனிசாமி எதிர்ப்பு அணித் தலைவர் வேலுமணி கூறியிருக்கிறாரே?

 

பதில்: இது மக்களிடம் ஓரளவு மரியாதை பெறத்தக்க அணுகுமுறை - பின்னணி உண்மைகள் நமக்குத் தெரியாது என்றாலும்.

 

திமுக எதிர்ப்பைப் பிரதானமாகச் சொல்லி சட்டசபைத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட கட்சி தவெக - அதை அறைகூவலாகச் சொன்னது விஜய் என்பது அதற்குப் பெரிய காரணம்.

 

இனி தமிழக அரசியலில் திமுக எதிர்ப்பு செய்து தேர்தலில் வெல்ல நினைக்கும் வேறு எந்தக் கட்சியும், தவெக-வின் விரலைப் பிடித்து நின்றால் அங்கேயே நிற்கவேண்டியதுதான். திமுக-வை எதிர்ப்பதோடு, தவெக-வையும் தீவிரமாக எதிர்க்கும் காரணங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி - அதற்கான காரணங்கள் நிறைய உண்டு - அரசியல் செய்தால்தான் இன்னொரு கட்சி பெரிதாக எழ முடியும். அந்த வழியில் தவெக-வை நோக்கிச் சொல்லப்படும் வெறும் சாடல்கள், லாஜிக் பேச்சுகள், புள்ளி விவரங்கள் மட்டும் இங்கு உதவாது - அவையும் அவசியம் என்றாலும். இந்த விஷயத்தில், மக்களின் மனதைக் கவரும் ஒரு தலைவர் வரமாய்க் கிடைக்க வேண்டும், அவர் தவெக-வையும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.

 

காலம் சத்தம் போட்டு பாஜக-வின் அண்ணாமலையை அழைக்கிறது.

 

பகுதி 95 // 22.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment