|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: லேட்டஸ்டாக, அம்பாசமுத்திரம் தொகுதி
அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா
செய்திருக்கிறார். உடனே தவெக-வில் சேர்ந்தும் விட்டார். இது பற்றிப் பேசிய
இசக்கி சுப்பையா, "தொகுதி மக்கள்
நலனுக்காகவே ராஜினாமா செய்திருக்கிறேன்" என்று அறிவித்திருக்கிறாரே? பதில்: ஒரு
மாதத்திற்கு முன் நடந்த தேர்தலில் தவெக உட்பட நான்கு கட்சிகளின் வேட்பாளர்களை
நிராகரித்து, அதிக வாக்குகளுடன் அதிமுக வேட்பாளர்
இசக்கி சுப்பையாவை அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர்கள் எம்.எல்.ஏ-வாகத்
தேர்ந்தெடுத்தனர். இப்போது அவர் தனது எம்.எல்.ஏ பதவியை உதறிவிட்டு, வாக்காளர்கள் நிராகரித்த கட்சிகளில் ஒன்றான
தவெக-வுக்குத் தாவுகிறார், தாவியது மக்கள் நலனுக்காக என்கிறார்.
காதுல பூ-ந்தோட்டம். |
|
2. கேள்வி: "தமிழகத்தில் தவெக ஆட்சி 5 ஆண்டுகள்
நீடிக்காது. அது கவிழும்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி
வருகிறார். ஆட்சியில் புதிதாகக் கூட்டணி சேர்ந்திருக்கும் விசிக-வின் தலைவர்
திருமாவளவனோ, "எந்தச்
சூழலிலும் தவெக ஆட்சி கவிழ நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்" என்று பேசி
இருக்கிறார். இருவர் பேச்சும் எதிர்க் கோணங்களில் இருக்கிறதே? பதில்: தவெக ஆட்சியைச் சில காலம் தாங்குமாறு
விசிக-விடம் சொன்னது திமுக - ஒரு அரசியல் உத்தியாக. சரி என்று தலையாட்டிய விசிக, தவெக-விடம் கவிழ்ந்தே விட்ட மாதிரி
இருக்கிறது - இல்லை, அதுவே விசிக-வின் அரசியல் உத்தியாகவும் இருக்கலாம். இதுபோக, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் வேகவேகமாகத்
தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் சேருகிறார்கள் - வரப்போகும் இடைத் தேர்தலில் அவர்களே தவெக
வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டு அவர்கள் ஜெயிக்கலாம், அதனால் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ-க்களின்
எண்ணிக்கை மெஜாரிட்டியைத் தொட்டுவிடும் என்பது தவெக-வின் கணக்காக இருக்கும். ஸ்டாலினுக்கு ஒரு ஆசை. திருமாவளவனுக்கு ஒரு
எதிர்பார்ப்பு. விஜய்க்கு ஒரு கணக்கு. அவரவரின் வெற்றி, அவரவரின் குதிரை சக்தியைப் பொறுத்தது. |
|
3. கேள்வி: சமீபத்தில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட ஒரு தமிழகப்
பெண் சார்பதிவாளர், கைதாகிப்
போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் போது முகத்தைத் துணியால் மறைத்தபடி
கண்ணீருடன் நடக்கிறார், அது ஒரு செய்திச் சேனல் வீடியோவில் தெரிகிறது. ஆனால்
ஊழல் தடுப்பு சட்டதின் கீழ் தண்டிக்கப்பட்டு சிறை சென்று வந்த சசிகலா முகத்தை
மறைத்ததில்லை, சிரிக்கிறார், அம்மா ஆட்சி
பற்றிப் பேசுகிறார், புதுக் கட்சி
ஆரம்பிக்கிறார், தேர்தலில்
கூட்டணி வைத்துத் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார். ஏன் இந்தப் பெரிய
வேறுபாடு? பதில்: தப்புக்
காரியங்கள் செய்தாலும் பின்னர் எழுவதற்கு, வளர்வதற்கு, மக்களைத் தான் முழுதாக உறுதியாக நம்பலாம். கோர்ட்டை
அவ்வளவாக நம்ப முடியாது. லஞ்ச ஊழலுக்காகக் கைதான சார்பதிவாளர் கோர்ட்டைச் சந்திக்கவேண்டும், ஆகையால் அவருக்கு அழுகை வருகிறது. சிறைத்தண்டனை பெற்ற
சசிகலா மக்களைச் சந்திக்கிறார், மக்களை
நம்புகிறார், கவலை இல்லாமல் புன்னகைக்கிறார்.
கடைசியில் பதவி கிடைக்கிறதோ இல்லையோ, கடைசிவரை
அவர் அரசியலில் கௌரவமாக, கெத்தாக வலம் வரலாம் என்று அவருக்குத்
தெரியும். நிறைய விஷயங்கள் சாதாரண மக்களுக்குப் புரியாது என்பது நமது
அரசியல்வாதிகளின் பலம். |
|
4. கேள்வி: அதிமுக-வின் இ.பி.எஸ் மற்றும் வேலுமணி தரப்பினர், ஒருவருக்கு
எதிராக ஒருவர் சபாநாயகரிடம் முன்பு அளித்த தகுதி நீக்க கோரிக்கை மனுக்களை வாபஸ்
பெற்றிருக்கிறார்களே? பதில்: மதிப்புள்ள ஒரு கட்சியாக மக்களிடம்
மீண்டும் தகுதி பெறுவதுதான் அக்கட்சிக்கு மிக முக்கியம். இதற்கு மனுக்கள், பேட்டிகள் ஏதும் உதவாது. மக்கள் மனதைக்
கவரும் ஒரு தலைவர் தேவை. அப்படி யாரும் அங்கு தென்படவில்லை. ஆகையால் இப்போதைக்கு
அவர்கள் ஒற்றுமையாகச் செய்ய முடிவது இதுதான்: குண்டுசட்டியில் குதிரை ஓட்டுவது. |
|
5. கேள்வி: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா
செய்து தவெக-வில் இணைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
எதிர்ப்புத் தெரிவித்து, "இந்த நடவடிக்கைகள் தவெக மீதான நம்பகத் தன்மையை
பாதிக்கச் செய்யும். இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல. தவெக தலைமை இது
போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது" என்று கூறி இருக்கிறாரே? பதில்: சட்டசபைத்
தேர்தலுக்கு முன்,
'திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி' என்று
பேசினார் தவெக தலைவர் விஜய். அந்த திமுக தலைமை தாங்கிய கூட்டணியில் இருந்த
விசிக-வின் தலைவர் திருமாவளவன், "ஆர்.எஸ்.எஸ்
பெற்றெடுத்த பிள்ளை" என்று விஜய்யைச் சாடினார். ஆனால் தேர்தல் முடிவுகளில்
மெஜாரிட்டியை எட்டாத தவெக-வுக்குத் தனது கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ-க்களின்
ஆதரவை அளித்து அக்கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க அவரும் உதவி செய்து, பின்னர் தனது எம்.எல்.ஏ ஒருவரை விஜய் ஆட்சியில்
மந்திரியாகவும் அமர வைத்தார் திருமாவளவன். இதில் விஜய் மற்றும் திருமாவளவன்
வேண்டியதும் செய்ததும் ஒரே வகை அரசியல் - ஆதாய அரசியல். திடீரென்று ஆரோக்கிய
அரசியல் பற்றித் திருமாவளவன் விஜய்க்கு ஆலோசனை சொல்வதில் அர்த்தமில்லை. கரிய மையிடம் காரிருள் சொன்னதாம்: கண்ணே உனக்கு ஆகாது கருமை! |
|
பகுதி 98
// 27.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment