Wednesday, 6 May 2026

பாஜக-வின் அண்ணாமலை. தவெக-வின் விஜய். யார் எப்படி?


-- ஆர். வி. ஆர்

 

 

தமிழக அரசியல் உலகில் பெரிய சாதனை செய்திருக்கிறார் நடிகர் விஜய்.

 

கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில், 2026 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு, இரண்டு ஜாம்பவான் கட்சிகளான திமுக-வையும் அதிமுக-வையும் மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார் விஜய். அவற்றில் ஒன்றை, அதாவது திமுக-வை, பாஜக-வின் அண்ணாமலையும் ஐந்தாண்டுகள் மேலாகக் கடுமையாக எதிர்த்து வந்தார், அதன் காரணமாக அவர் பரவலாகப் பல வாக்காளர்களைத் தன் பக்கம் திரும்ப வைத்திருந்தார். ஆனால் திமுக, அதிமுக, அவற்றோடு சேர்ந்த கூட்டணிக் கட்சிகள், அனைத்தையும் ஒருசேர இந்தத் தேர்தலில் வென்று வீழ்த்தியது விஜய்யின் தவெக.

 

அண்ணாமலை அதிமுக-வையும், குறிப்பாக அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, முன்னர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். பின்னர், ஆளும் திமுக-வை இந்தத் தேர்தலில் வீழ்த்துவதற்காக அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைத்தவுடன், அண்ணாமலை அதிமுக-வை விமர்சிக்கவில்லை.

 

திமுக மற்றும் அதிமுக-வைத் தேர்தலில் வென்று காட்டிய தனிப் பெருமை விஜய்க்கு உண்டு என்பதால் விஷயம் இதோடு முடிகிறதா? இனி அண்ணாமலையும் விஜய்க்கு சல்யூட் அடித்து ஒதுங்கி நிற்க வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை.


திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காலத்தால் அழியாத விமர்சனத்தை வைத்தவர் காமராஜ். அந்த இரண்டு கட்சிகளையும் ஒருசேரத் தேர்தலில் வீழ்த்தியுள்ள விஜய் தற்காலத்தின் காமராஜரா? இல்லை என்றால் ஏன் இல்லை?


அண்ணாமலை எதிர்த்த திமுக-வைத் தான் விஜய் ‘தீய சக்தி’ என்று மேடைக்கு மேடை பேசினார். விஜய் அதிமுக-வைக் குறிப்பாக விமர்சனம் செய்யவில்லை. காரணம், விஜய் அரசியலுக்கு வந்தபோது ஆட்சியில் இருந்தது திமுக. அந்தத்  திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றினால்தான் விஜய்யின் குறியான முதல் அமைச்சர் பதவி அவர் கைக்கு வரும். ஆகையால் அவர் திமுக-வைத்தான் எதிர்க்க வேண்டும், அதை அவர் செய்தார்.


விஜய் அரசியலுக்கு வந்தபோது அதிமுக ஆட்சியில் இருந்தால், அதிமுக ஒரு தீய சக்தி என்று அவர் மேடையில் பேசியிருப்பார். அப்போது அவருடைய குறி அதிமுக-வை ஆட்சியிலிருந்து விரட்டிவிட்டு, அவர் முதல்வர் பதவிக்கு வரவேண்டும் என்று இருந்திருக்கும்.


காமராஜ் மாதிரித் திமுக, அதிமுக இரண்டுமே தீய சக்திகள் என்று உணர்ந்து, மலிவு அரசியலையும் ஊழலையும் அரசியல் காவாலித் தனத்தையும் உறுதியாக எதிர்க்கின்ற, அந்த எதிர்ப்பைத் தன் கட்சிக்குள் எல்லா மட்டத்திலும் செயல்படுத்துகின்ற, உன்னதத் தலைவராக விஜய் தெரியவில்லை. தனது முதலமைச்சர் பதவி ஆசைக்காக, கெட்டிக்கார அரசியல்வாதி விஜய் இரண்டு கழகங்களையும் தேர்தலில் வீழ்த்தி இருக்கிறார். இப்போது அவரைப் பற்றி இவ்வளவுதான் சொல்லமுடியும்.


அண்ணாமலை திமுக-வை எதிர்த்தது, அதற்கான காரண காரியங்களை ஊர் ஊராகச் சென்று விளக்கியது, ஊழல் சக்தி ஒழிக்கப் படவேண்டும் என்ற நோக்கத்திற்காக – அவர்  முதல் அமைச்சராக வரவேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் அண்ணாமலைக்கு, விஜய்யின் சினிமா பிரபல்யம் கிடையாது என்பதால் அண்ணாமலையின் பேச்சு மக்களை மெள்ள மெள்ளத்தான் சென்றடையும் – அதிலும் சினிமா எட்டமுடிகிற வீச்சு அவருக்குக் கிடைக்காது.


என்ன இருந்தாலும் அண்ணாமலை பேசியதை நீங்களும் நானும் மக்களிடம் பேசினால் ஒன்றும் நடக்காது, பாஜக-வில் மற்றவர்கள் பேசினாலும் ஏதும் நிகழாது, அண்ணாமலை பேசினால் நிகழ்கிறது. அதற்குக் காரணம்: அண்ணாமலையிடம் உள்ள உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் பொதுமக்கள் மனதில் ஊடுருவுகிறது. அது அவருக்கு இருக்கும் அசாதாரண சக்தி. அதை வாக்கியங்களில் முழுவதுமாக விளக்க முடியாது.


ஆறு வருடங்கள் முன்பு அண்ணாமலையின் வயது 36. அப்போது, கர்நாடகாவில் ஐ.பி.எஸ் வேலையை விட்டுவிட்டு பாஜக-வில் சேர்ந்து தமிழக அரசியலுக்கு அவர் வந்தார்.  அதற்கு முன் அவர் யாரென்று தமிழக மக்களுக்குத் தெரியாது.  விஜய் சுமார் 32 வருடங்கள் தமிழ்ப் படங்களில் கதாநாயகனாக நடித்து மாஸ் ஹீரோவாக நன்கு அறியப்பட்ட நிலையில், இரண்டு வருடங்கள் முன்னர் கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்தவர். அண்ணாமலையை விட, விஜய் பத்து வருடங்கள் மூத்தவர்.


திரைக் காட்சிகளில் ஒரு கதாநாயகன் கெட்டவர்களைப் புரட்டி எடுப்பதும், போட்டுத் தள்ளுவதும், கதாநாயகியுடன் நடனம் செய்வதும், விதவிதமாகக் கேளிக்கை காண்பிப்பதும் – அதுவும் எடுப்பான முகவெட்டுள்ள ஒரு ஹீரோ அவற்றைச் செய்வது – சாதாரண மக்களைச் சட்டென்று ஈர்க்கும், அவர்களைக் கனவு காண வைக்கும், அந்தக் கதாநாயகன் மீது அவர்களுக்குத் தணியாத பற்றை ஏற்படுத்தும். பல வருடங்கள் அப்படி ஒரு திரைக் கதாநாயகனாக இருந்த விஜய் அரசியலுக்கு வரும்போது சாதாரண மக்களிடம் அவருக்குள்ள சினிமா ஈர்ப்பு அவர் கூடவே வரும். அந்த மக்களின் ஓட்டுகள் அவருக்கு எளிதாகக் கிடைக்கும் – அவர் அரசியலில் யாரை எதிர்த்தாலும், யாரை ஆதரித்தாலும். இந்தத் தேர்தல் நேரத்தில், திமுக போகவேண்டும் என்றும் நிறைய மக்கள் நினைத்தார்கள்; அவர்களுக்கு மாஸ் ஹீரோ விஜய் ஒரு வடிகாலாக அமைந்தார். எல்லாம் இப்படிச் சேர்ந்து, இந்தத் தேர்தலில் தனக்கான ஆதரவு வாக்குகளை விஜய் பாதிக்கு மேல் எளிதாகப் பெற்று விட்டார்.


விஜய்க்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் அவருடைய சீரிய அரசியல் கேரக்டருக்காக, அவரது தேச நலன் மற்றும் மக்கள் நலன் தொடர்பான முனைப்பிற்காக, அவரைத் தேடி வந்த வாக்குகள் அல்ல. அவை பெரும்பாலும் அவருடைய சினிமா ஈர்ப்பின் பேரில் வந்து சேர்ந்தவை. அப்பாவி மக்கள் நிறைந்த நமது நாட்டில் இது சகஜம். அத்தகைய மக்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து, வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் கொடுத்து, வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி, அவர்களை முன்னேற்றி விடவும் ஒரு அரசியல் தலைவர் இயங்க வேண்டும். விஜய் அப்படியான தலைவராக இருப்பதற்கு லேசான அறிகுறியையும் அவர் வெளிப்படுத்தவில்லை. போதாததற்கு, இது இந்தியா என்பதை மறந்து, நல்ல தனிமனித ஒழுக்கத்தையும் அவர் காண்பிக்கவில்லை.


இதுவரை விஜய் மேடையில் பேசிய பேச்சுகள் அநேகமாகத் திமுக-வை எதிர்த்துப் பேசியவை. அவை அனைத்தும் சினிமா டயலாக் ரகம். ஆழமும் அகலமும் இல்லாத டப்பு டுப்பு பேச்சுகள். அவருக்குள்ள சினிமா ஈர்ப்பினால் அந்த டயலாக் பேச்சுகளைக் கேட்க சாதாரண மக்கள் விரும்பினார்கள்.


சினிமா ஈர்ப்பு என்ற கவசம்தான் இன்றைய தேதியில் விஜய்யின் பிரதான அரசியல் சொத்து, அரசியல் பாதுகாப்பு. அந்தக் கவசத்தை அணிந்துகொண்டு, நமது மாநில அரசாங்கத்தை வழி நடத்தப் போகிறவராக, அவர் செய்யவேண்டியதைச் செய்யாமல், செய்யக் கூடாதவற்றைச் செய்து, அந்தக் கவசத்தின் பாதுகாப்பில் தப்பிக்க நினைப்பாரா? அந்த வகையில் அவர் கண்காணிக்கப் படவேண்டியவர்.


அண்ணாமலையைப் பொறுத்தவரை, திமுக ஏன் தீதான அரசியல் சக்தி என்பதை அவர் மக்களுக்கு விளக்கிச் சொன்னார். பொத்தாம் பொதுவாகப் பேசாமல் புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவருடைய கூரிய அரசியல் பார்வை, தேசாபிமானம், பொது அறிவு, மக்கள் நலன் சார்ந்த எண்ணங்கள், வெளிப்படைத்தன்மை, பொதுவாழ்வில் நம்பகத் தன்மை, ஆகியவை மட்டும்தான் அவருடைய அரசியல் சொத்து. இந்த குணாதிசயங்களுடன் இவரைப் போன்ற ஒரு இளம் அரசியல் தலைவர் உலகிலேயே எந்த நாட்டிலும் காணக் கிடைப்பது மிக அரிது. 


விஜய்யைப் பொறுத்தவரை, அவர்தான் கட்சி. அவர் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் கட்சியில் யாருடைய ஒப்புதலும் அவசியமில்லை, கட்சிக்குள் அனைவரும் அவருக்குத் துணை நின்றாக வேண்டும். பாஜக-வில் இருக்கும் அண்ணாமலை அப்படி அல்ல. அண்ணாமலையின் அரசியல் பணியும் செயல்பாடுகளும் தடையற்றவை அல்ல. அடுத்த சில வருடங்கள் பாஜக-வின் மத்தியத் தலைமையும் அவருக்குத் தொடர்ந்து துணை நிற்பது தமிழக நலனுக்கு அவசியம்.


அண்ணாமலையின் அரசியல் பயணம் – குறிப்பாக திமுக-வைத் தீவிரமாக எதிர்த்து அவர் பிரசாரம் செய்தது – தனது  கை கால்கள் பலத்தில் மனத் துணிவோடு அவர் செய்த கடுமையான மலையேறும் முயற்சியைப் போன்றது.  அந்த நேரத்தில், சினிமா ஈர்ப்பு என்ற ஹெலிகாப்டரில் பறந்து அந்த மலை உச்சியில் இறங்கிப் புன்முறுவலுடன் கையசைப்பவர் விஜய். பெருவாரியான மக்களுக்குத் தற்போது இந்த இரண்டு முயற்சிகளின் வேறுபாடு தெரியாமல் இருக்கும். ஆனாலும் அண்ணாமலை தனது கைகால் பலத்தில், தனது மன வலிமையில், தொடர்ந்து மலை ஏறுவார், தேவைப் படும்போது தவெக எனும் புதிய மலைமீதும் ஏறுவார், சாதிப்பார், அதிகமான மக்கள் மனங்களைத் தனது பயணத்தில் வெல்வார் என்று நாம் நம்பவேண்டும். அவருடைய பயணம் அவருக்காக அல்ல, எண்ணற்ற அப்பாவி ஜனங்களுக்காக.

 

* * * * *

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

No comments:

Post a Comment