|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-னு வள்ளுவர்
சொன்னதுதான் எங்கள் வழி" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்துள்ளார். அவர் சொல்வது சரியா? பதில்: உதயநிதியின்
தாத்தா மு. கருணாநிதி அந்தக் குறளுக்கு எழுதிய உரை இது: "பிறப்பினால்
அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையினால் மட்டுமே வேறுபாடு
காணமுடியும்." இந்தக் குறள் காட்டும் வழிதான் திமுக-வின் வழியா? பிறப்பை ஒதுக்கிவைத்து, ஒருவரின்
திறமையின் அடிப்படையில் மட்டும்தான் திமுக-வில் பதவிகள் தரப்படுமா, திறமையின் அடிப்படையில் மட்டும் திமுக-விற்குள்
வேறுபாடுகள் காணப்படுமா? பிறப்பால் - அதாவது, மு.
கருணாநிதியின் மகன் என்பதால் - மு.க. ஸ்டாலின் முன்பு எளிதாக எம்.எல்.ஏ ஆனார்.
பிறகு மந்திரி, துணை முதலமைச்சர், முதலமைச்சர் என்று உயர்ந்தார். மு.க. ஸ்டாலினின் மகன்
உதயநிதியும் பிறப்பால் எம்.எல்.ஏ, மந்திரி, துணை முதலமைச்சர் என்று ஆனவர். திமுக-வின் அடுத்த
மட்டங்களிலும் இந்த வழி பரவலாகப் பின்பற்றப் படுகிறது. இதுதான் திமுக-வின் வழி என்றாலும், 'பிறப்பொக்கும்' குறளை உதயநிதி கூசாமல் மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் இருக்கிறது.
தன்னைப் போல் அநேகத் தமிழர்கள் அந்தக் குறளை முழுதாகப் படித்துப்
புரிந்துகொண்டிருக்க மாட்டார்கள், ஆனாலும்
எடுப்பாகத் துவங்கும் அந்தக் குறளை மேற்கோள் காட்டுவது அரசியல் தலைவர்களுக்கு
ஒரு பேஷன் என்று அவர் நினைக்கிறார். அவர் நினைப்பு சரி. |
|
2. கேள்வி: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விஜய்
முதல்வராவதற்கு முன்பு, "திமுக-வும் அதிமுக-வும் இணைந்து என்னை முதல்வராக்க
முயற்சிக்கின்றன என நண்பர்கள் தெரிவித்தனர். அது குறித்த விவரம் எனக்குத்
தெரியாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் சொல்கிறாரே? பதில்: திருமாவளவனின் வி. சி கட்சிக்குச்
சட்டசபையில் 2 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். திமுக-வும் அதிமுக-வும் இணைந்து, திருமாவளவனைக் கலந்து ஆலோசிக்காமல், அவரை முதல்வராக்க முயற்சித்திருந்தால், அவரைத் தங்கள் சௌகரியத்திற்காக, தங்களைத் தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்த
விஜய் முதல்வர் ஆவதைத் தடுப்பதற்காக, ஒரு பொம்மை முதல்வராகத் திருமாவளவனை
வைத்திருக்க நினைத்தார்கள் என்று அர்த்தம். அந்த முயற்சி பற்றிக் கேள்விப்பட்ட
திருமாவளவனுக்கும் அது புரிந்திருக்கும். இருந்தாலும் அப்படி ஒரு முதல்வராக
வருவதைத் திருமாவளவன் விரும்பவில்லையா என்ன? அது மாதிரித் தெரியவில்லை. எதிர்காலத்தில் திருமாவளவன் ஒரு பொம்மை
முதல்வராக ஆக்கப்பட வாய்ப்பு இருந்தால், அதற்கு அவர் தயார் என்று சூசகமாக இப்போது
அனைவருக்கும் தெரிவித்து விட்டார். வேறு விஷயமில்லை. |
|
3. கேள்வி: பெட்ரோல் டீசல் விலையை மத்திய எண்ணை நிறுவனங்கள்
லிட்டருக்கு மூன்று ரூபாய் ஏற்றியதற்கு முதல்வர் விஜய் கண்டனம்
தெரிவித்திருக்கிறார். அது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அந்த விலை
உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். விஜய்யின் கண்டனம்
சரியா? பதில்: மேற்காசியப்
போரின் உலகளாவிய பாதிப்பு என்ன என்று அறியாதவர் போல விஜய் சினிமா டயலாக்
பேசியிருக்கிறார். விஜய் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் தனது பகட்டான தேர்தல் வாக்குறுதிகளை
நிறைவேற்ற அவகாசம் கேட்டது - எத்தனை நாட்களுக்கு என்றும் சொல்லாமல் அவகாசம்
கேட்டது - ஏழை எளிய நடுத்தர மக்களைப் பாதிக்காதா? இருந்தாலும்
அவர் அவகாசம் கேட்டது பரவாயில்லை, போகட்டும்
- மற்றபடி அவர் தமிழக அரசின் கஜானாவை ஒரு பைசா கூட நஷ்டம் இல்லாமல்
காப்பாற்றினால். திமுக-வை வீழ்த்திவிட்டு, அதிமுக-வையும்
ஓரம் கட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த விஜய், நடிகர்
என்ற நன்மதிப்பாலும் அவருடைய முகராசியாலும் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர்
மக்களிடம் உலகப் பொருளாதார உண்மையை மறைத்து, அவர்களின்
கண்களைக் கட்டி, அவர்களுக்கு ஐஸ் வைத்து, ஆட்சி செய்ய அவசியமில்லை. இது புரிவதற்கு அவரிடம்
நேரான சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் இருப்பது அவசியம். இருப்பதாகத்
தெரியவில்லை. |
|
4. கேள்வி: "பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசின்
தவறே காரணம்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளாரே? பதில்: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் நாட்டின்
மீது குண்டுகள் வீசித் தாக்கியது, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது, இவற்றுக்கு மோடி அரசின் தவறா காரணம்? உலகெங்கும் தற்போது பெட்ரோல் டீசலுக்குத்
தட்டுப்பாடு ஏற்பட்டதும், அவற்றின் சில்லறை விலை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, என்று பல நாடுகளில் - ஐக்கிய அரபு
எமிரேட்சில் கூட - உயர்ந்ததும், மோடி அரசின் தவறினாலா? சமீபத்தில் தமிழ்நாட்டில் வெயில் மக்களை
வறுத்தெடுத்தது. சொல்லுங்கள் ராகுல்: இதற்கும் படுபாவி மோடிதானே காரணம்? |
|
5. கேள்வி: "சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக ஆதரவு, விஜய்க்குத்
தேவை இல்லை. விஜய்யால் 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரமுடியும்"
என்று காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே? பதில்: கார்த்தி
சொல்வதன் அர்த்தம் இது: 'எப்போது வேண்டுமானாலும் விஜய்யின் காலை
வாரி ஆட்சியைக் கவிழ்க்கும் சக்தி காங்கிரஸ், இரு
கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக மற்றும் முஸ்லிம் லீக்
கட்சிகளுக்கு மட்டும் இருக்கவேண்டும், திரைமறைவாகத்
திமுக-விற்கும் அந்த சக்தி இருக்கட்டும். இந்த எல்லாக் கட்சிகளின் சக்தியையும்
சைபர் ஆக்கிவிடும் சி.வி. சண்முகம் தரப்பு அதிமுக ஆதரவு விஜய்க்குக் கிடைக்க
வேண்டாம்'. கார்த்தி சிதம்பரத்திற்கு விஜய்யின்
பதில் இதுவாக இருக்கும்: 'ஆசை தோசை அப்பளம் வடை!' |
|
பகுதி 91
// 16.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment