Friday, 22 May 2026

கேள்வி-பதில் (21.05.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "பெரும் பொருளாதாரப் புயல் இந்தியாவை நெருங்குகிறது, நம் நாட்டைத் தாக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. அது நீங்களோ நானோ வாழ்நாளில் கண்டிராத ஒன்று. அது அம்பானி, அதானி, மோடியைத் தாக்காது. இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களைத் தாக்கும்" என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?

 

பதில்: 'மத்தியில் பாஜக கூட்டணிக்கு மாற்றாகக் காங்கிரஸ் கட்சிக்கு அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், நாங்கள் சிறப்பான ஆட்சி தருவோம்' என்று ராகுல் காந்தி பேசினால் அது மக்களிடம் எடுபடுவதில்லை. இது அவருக்கும் புரிகிறது. ஆகையால் 'பாஜக-வின் மோடி ஆட்சியில் காத்து, கருப்பு மற்றும் பல இன்னல்கள் மக்களை வாட்டி எடுக்கும்' என்று பேசினால், சாதாரண மக்கள் கலக்கம் கொண்டு மோடி அரசை வெறுக்கலாம் என்று அற்பமாக யோசிக்கிறார் ராகுல். அதன் விளைவு, அவரது பேச்சு.

 

மேற்காசியப் போரினால் கச்சா எண்ணை விலை கிடுகிடுவென்று உயர்ந்து உலகப் பொருளாதாரமே கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும். ஆனால் சோதனையான நேரத்தில் மக்களுக்கு மேலும் வேதனை தர முயல்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

 

தன் சரித்திரத்தில் காங்கிரஸ் கட்சி கண்டிராத ராகுல் காந்தி என்னும் கோரப் புயல் அந்தக் கட்சியை நெருங்கித் தாக்கிவிட்டது. அதை யாரும் தடுக்க முடியவில்லை. அது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வத்ரா ஆகியோரைத் தாக்கவில்லை. ஏனைய காங்கிரஸ் கட்சியினரைத் தாக்கி அவர்களை முடக்கி வைத்திருக்கிறது.

 

 

2. கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவைப் போற்றுகிற வகையில் முதலமைச்சர் விஜய் பதிவிட்டிருக்கிறாரே?

 

பதில்: திராவிட மாடலின் சில சாயல்கள் தவெக மாடலில் அவ்வப்போது தெரிகின்றன.

 

இது தொடர்பாக இன்னொன்று. தனது ஆட்சியின் முதல் ஒன்று-ஒன்றரை வருடத்திற்குள் முதலமைச்சர் விஜய் சாதனைத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் இருக்கலாம். அது புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் முதல் வாரத்திலிருந்து அவர் மற்றும் அவரது அமைச்சர்கள் பேச்சிலும் செயலிலும் பெரிய தவறுகள் செய்யாமல், அதீத அசட்டுத்தனங்கள் நிகழ்த்தாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் பொறுப்பு. அவரது எண்ணங்கள் நேராக, திடமாக இருந்தால், அவருடைய அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மீது அவருக்குச் சரியான தொடர்பும் பிடியும் இருந்தால், இது சாத்தியம். அந்த சாத்தியம் அவரிடம் பளிச்சென்று தெரியவில்லை.

 

 

3. கேள்வி: திருப்பூரில் ஆடுகள் ஏற்றிவந்த சரக்கு வாகனங்களை ஒரு போலீஸ் எஸ்.எஸ்.ஐ நிறுத்தி, டிரைவர்களிடம் தலா 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவ, அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கிறார். இந்த உடனடி நடவடிக்கைக்குத் தமிழக அரசைப் பாராட்டலாமா?

 

பதில்: தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக நடக்கும் ஆட்சி முறைக்கு, அதன் கன்னாபின்னா ஆட்டத்திற்கு, 'திராவிட மாடல்' என்ற ஸ்டைலான பெயரை ஸ்டாலின் சென்ற ஆட்சியில் வழங்கினார். அதன்படி, காதும் காதுமாக அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினால் அது அரசால் கண்டுகொள்ளப் படாது. ஆனால் அவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு, மறுக்கமுடியாத வலுவான ஆதாரம் வெளிப்படும் அளவுக்கு அந்த அலுவலர்கள் கிறுக்குத்தனமாக நடந்துகொண்டால், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அரசு அலுவலர்கள் விஷயத்தில் தவிர்க்க முடியாமல் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை, அமைச்சர்கள் விஷயத்தில் வாலை ஆட்டாமல் கப்சிப் ஆகிவிடும். இன்றுவரை லஞ்ச ஊழல் மீதான அரசு நடவடிக்கைகளின் நிலை இது. இனி புதிய அரசை உன்னிப்பாகக் கவனித்தால்தான்,  லஞ்ச ஊழலை இந்த அரசு எப்படிக் கையாள்கிறது என்று தெரிய வரும். அதற்கு இரண்டு வருடங்களாவது ஆகும். அவசரப் படேல்!

 

 

4. கேள்வி: தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி ஆலோசிக்கிறது என்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். அமைச்சரவையில் விசிக இணைந்தால், அரசுக்கு வெளியிலிருந்து விசிக ஆதரவு என்பது, இனி உள்ளிருந்து ஆதரவு என்று மாறுவதாக அர்த்தமா?

 

பதில்: வெளியிலிருந்து குடைச்சல் என்பது மாறி, உள்ளிருந்தே குடைச்சல் என்றும் இருக்கலாம். அமைச்சரவையில் விசிக பங்கேற்றால், அனுபவிக்கப் போகும் விஜய்க்குத்தான் அது முழுமையாகத் தெரிய வரும்.

 

 

5. கேள்வி: தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தவெக-வை விமர்சிக்க நினைத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  "பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது" என்று ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்ன வார்த்தைகளை மறுபதிவு செய்திருக்கிறாரே?

 

பதில்: 1967-ல் முதன்முறை தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுக - சமீப வருடங்களாக ஸ்டாலின் தலைமை தாங்கி அவர் குடும்பம் பெரும் பங்கு பெறும் திமுக - சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் புதிய கட்சியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்தத் தருணத்தில், அவர் பதிவிடும் சொற்களின் உடனடி அர்த்தம் புரியாமல் ஸ்டாலின் ஏதோ சொல்லிவிட்டார். சரி, இதற்காக ஸ்டாலினுக்குக் கிரெடிட் கொடுக்கவேண்டும் என்றால், 'தோல்வியிலும் மனிதர் தன்னை மறைக்காமல் பேசுகிறார்' என்று அவரைப் போற்றலாம்.

 

பகுதி 94 // 21.05.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment