|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: திமுக கூட்டணி மீண்டும் வென்று தமிழகத்தில் ஆட்சி
அமைக்கும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த கவிஞர் வைரமுத்து அதற்குக் காரணமாக, "தமிழ்நாட்டுத்
தாய்மார்கள் தங்கள் நன்றியைக் காண்பிப்பார்கள் என்ற நம்பிக்கை
எனக்கிருக்கிறது" என்று சொல்லி இருக்கிறாரே? பதில்: மே
4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். இடையில்
என்ன சொல்கிறார் வைரமுத்து? தமிழகத் தாய்மார்கள் பெருவாரியாக அதிமுக கூட்டணிக்கோ வேறு கட்சிக்கோ
வாக்களித்திருந்தால், அந்தப் பெண்கள் நன்றி கெட்டவர்களா? ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி எந்த
ஒரு கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் வாக்களிக்கலாம். அவர்கள் செய்த ஒரு தேர்வு
மாநிலத்திற்கு நன்மை பயக்காது என்றுகூட தோற்கும் கட்சியோ கூட்டணியோ கருத்து
சொல்லலாம். இந்த விஷயத்தில் வாக்காளர்களின் பக்கத்திலிருந்து நன்றிக்கு என்ன
வேலை? வைரமுத்து வெளிப்படுத்தியது ஜமீன் அரசியல் சிந்தனை - அதாவது திராவிட
மாடல் அரசியல் பார்வை. |
|
2. கேள்வி: "அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் திறமை
தாய்நாட்டிற்குத் தேவைப்படுவதால், ஒரு சமுதாயப் பணியாக அவர்கள் உடனடியாக நாடு திரும்ப
வேண்டும்" என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு
கூறியுள்ளாரே? பதில்: கல்லூரிகளில் படிக்கவும், பெரிய நிறுவனங்களில் வேலைக்குப் போகவும், லட்சக் கணக்கான
இந்தியர்கள் அமெரிக்கா சென்று அங்கு குடியேறி இருக்கிறார்கள். காரணம்: சொந்த
நாட்டில் அவர்களுக்குப் பல கதவுகள் அடைக்கப் பட்டிருக்கின்றன, பல இடங்களில் கதவுகளே இல்லை. அந்த
அடிப்படைக் காரணத்தில் நிரந்தர மாற்றம் வந்தால், பல இந்திய இளைஞர்கள் அமெரிக்கா செல்லவேண்டி
இருக்காது. ஏற்கனவே போனவர்கள் திரும்பி வருவது இருவர் சித்தப்படி நடக்கும்.
கடவுள். அடுத்தது டிரம்ப். |
|
3. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்
கணிப்புகள், மூன்று விதமாக
வேறுபடுகின்றன. எதை நம்புவது, எதை ஒதுக்குவது? பதில்: வாக்கு
எண்ணிக்கை முடியும் வரை உள்ள நேரத்தில் கிரிக்கெட் மாட்ச் பாருங்கள், சினிமா டிராமா பாருங்கள், கச்சேரிகளுக்குப் போங்கள், தியானம் செய்யுங்கள், சீக்கிரம்
தூங்குங்கள். எந்தக் கருத்துக் கணிப்பையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், அதிகாரபூர்வமான தேர்தல் முடிவுகளை மட்டும்
எதிர்நோக்குங்கள். உடம்புக்கு நல்லது. |
|
4. கேள்வி: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், "தமிழகத்தில்
காங்கிரஸ் இனி ஆட்சியில் இருக்கும் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும். நடுநிலை
இல்லை" என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறாரே? பதில்: ஷோடங்கர் சொல்லாமல் விட்டது இது: 'நான் சொன்னபடி பின்னர் காங்கிரஸ் நடந்துகொண்டால், அது கட்சி ஏற்கனவே அறிவித்தபடி நடக்கிறது
என்றாகும். நான் சொன்னதற்கு மாறாக பின்னர் காங்கிரஸ் நடந்துகொண்டால், கட்சி சார்பாக நான் முன்னர் பேசியதற்கு
எனக்கு அதிகாரம் இல்லை, வழக்கம் போல் ராகுல் காந்திதான் எதிலும் இறுதி முடிவெடுப்பார் என்று
அர்த்தம்.' |
|
5. கேள்வி: வரப்போகும் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்
திமுக-வுக்குச் சாதகமாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்த மு.க. ஸ்டாலின், "எல்லாருக்கும்
எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக ஆட்சி நடக்கிறது. அது தொடரும்
என்பது உறுதி" என்று பேசி இருக்கிறாரே? பதில்: முடியப்
போகும் ஐந்தாண்டு திமுக ஆட்சியில் பங்கு கொண்ட திமுக தலைவர்கள் மற்றும்
நிர்வாகிகள், "எல்லாருக்கும் எல்லாம்" என்ற
தத்துவத்தை கோணல்மாணலாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அந்தப் புரிதலோடு ஒரு
ஆட்சி தொடர்வது நல்லதல்ல. |
|
பகுதி 86//02.05.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
Saturday, 2 May 2026
கேள்வி-பதில் (02.05.2026)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment