|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு
நான்கு நாட்கள் இருக்கின்றன. இப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன
நினைப்பார்? திமுக கூட்டணி
வெல்லும் சூழ்நிலையில், தான் தோற்றாலும் தனது மகன் உதயநிதி வெல்லட்டும் என்று
நினைப்பாரா, அல்லது உதயநிதி
தோற்றாலும் தான் வெல்லவேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பாரா? பதில்: திமுக
கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலையில், செந்தில்
பாலாஜி நிச்சயம் வெல்லட்டும் என்று ஸ்டாலின் நினைப்பார். மற்ற அனைத்தையும்
நிர்வாகம் செய்துகொள்ளலாம். |
|
2. கேள்வி: இயக்குநர்-நடிகர் பார்த்திபன், தான் 'ஜாதி மதமற்றவர்' எனத் தாசில்தார்
தனக்குச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றத்தில்
பெற்று, அவ்வாறு ஒரு
சான்றிதழையும் பெற்றிருக்கிறார். இதனால் யாருக்கு என்ன பயன்? பதில்: ஒரு நடிகர் எதை எப்படிப் பேசி எவ்வாறு
நடித்தால், அந்த சீனுக்குப் பொதுமக்களிடம் சிறந்த எபெக்ட் கிடைக்கும் என்று ஒரு
இயக்குநருக்குத் தெரியும். ஒரே நபர் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்தால், கோச்சிங் இல்லாமல் காரியம் எளிதில்
முடியும். நாம் நமது வேலையைப் பார்ப்போம். |
|
3. கேள்வி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் பற்றிய மேல்முறையீட்டு
வழக்கை, டெல்லி உயர்
நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரிக்கக் கூடாது என்று முன்னாள்
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்த நீதிபதி முன் ஒரு மனு தாக்கல் செய்ய, அந்த மனு
நிராகரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதிய கெஜ்ரிவால்
"டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் உங்கள் அமர்வில் நீதி கிடைக்கும்
என்ற நம்பிக்கை சிதைந்து விட்டது. எனவே இந்த வழக்கில் நேரடியாகவோ வழக்கறிஞர்
மூலமாகவோ இனி ஆஜராக மாட்டேன்" எனத் தெரிவித்து, தனது மனு நிராகரிக்கப்
பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப் போவதாகவும்
அறிவித்திருக்கிறாரே? பதில்: தனது
கோர்ட்டில் நடக்கும் வழக்கில் கட்சிக்காரராக இருக்கும் ஒருவரின் கடிதத்திற்கு, அதுவும் அந்த வழக்கு சம்பந்தமான கடிதத்திற்கு, ஒரு கீழ்க் கோர்ட்டு நீதிபதி கூடப் பதில் எழுதக்
கூடாது. ஒரு நீதிபதியும் கட்சிக்காரரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதி எந்த
வழக்குப் பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது, அந்தச்
செய்கைக்குச் சட்டத்திலும் இடமில்லை. இது தெரிந்தும் கெஜ்ரிவால் நீதிபதிக்குக்
கடிதம் எழுதியது மலிவான டிராமா. இன்னொன்று. சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் செய்யப்போகும் அப்பீல்
தள்ளுபடியாகி, உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா
சர்மாவே டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் பற்றிய மேல்முறையீட்டு வழக்கை
விசாரிக்கலாம், இது பற்றி கெஜ்ரிவால் எழுப்பிய ஆட்சேபணை
செல்லாது, என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டால்
கெஜ்ரிவால் என்ன செய்வார்? அப்படி உத்தரவளித்த சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகளுக்கும் கெஜ்ரிவால் உடனே கடிதம் எழுதித் தனது அதிருப்தியைச் சொல்வாரா? முடிந்தவரை பித்தலாட்டம் செய்கிறார் கெஜ்ரிவால். அவருடைய நாடகத்தின்
முடிவு என்னவாக இருந்தாலும் அவர் ஆடுவது பித்தலாட்டம். |
|
4. கேள்வி: ராகுல் காந்தி அல்ல, நரேந்திர மோடிதான்
இந்தியாவின் பிரதமராக இருப்பதற்குக் தகுதியானவர் என்பது தனது தேர்வு என்பதாக, 'க்ராக்' என்ற ஏ.ஐ
எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பச் செயலி சொல்லி இருக்கிறதே? பதில்: இந்த ஒண்ணாம் கிளாஸ் நிதர்சனம் ராகுல்
காந்திக்கே தெரியும். அதை ஒப்புக் கொண்டால் அரசியலில் குப்பை கொட்ட முடியாது
என்பதால், வெளியில் மாறுதலாக நடிக்க முயல்கிறார் ராகுல். ஆனாலும் பித்துக்குளித்
தோற்றம் அவரிடம் பளிச்சிடுகிறது. |
|
5. கேள்வி: மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 90 வயதுப் பெண், அவர் தொடர்ந்த
ஒரு அவதூறு வழக்கில் தொடர்ந்து பிடிவாதம் காட்டுகிறார் என்ற அடிப்படையில், 'இது
அகங்காரங்களின் மோதல்' எனக் கூறிய மும்பை உயர் நீதிமன்றம், வழக்கு
விசாரணையை 20 ஆண்டுகளுக்குப்
பின் 2046-ம் வருடத்திற்கு
ஒத்திவைத்திருக்கிறதே? பதில்: யாருக்கும்
எந்தவித அகங்காரமும் கூடாது. |
|
பகுதி 85//30.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment