|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யும்
போது கூறுகிறார்: "கிரிக்கெட்ல, சச்சின் டெண்டுல்கர் கிட்ட எல்லா ரெகார்டும்
இருக்கும். அரசியல்ல அப்படி யாரும் முறியடிக்க முடியாத ரெகார்டை திமுக
செஞ்சிருக்கு." கிரிக்கெட் டெண்டுல்கர், அரசியல் டெண்டுல்கர், இருவரையும்
ஒப்பிடவும். பதில்: கிரிக்கெட்
டெண்டுல்கரின் சாதனைகளை மற்றவர்கள் சொல்வார்கள். அரசியல் டெண்டுல்கர், அவரே ஏதேதோ சொல்வார். |
|
2. கேள்வி: "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக்
குழந்தையும் சொல்லும். அது திமுக-வின் தேர்தல் அறிக்கை" என்று மு.க.
ஸ்டாலின் மேடைக்கு மேடை பாட்டுப் பாடி பிரசாரம் செய்கிறாரே? பதில்: ஒரு சின்னக் குழந்தை பாடுகிறது. மற்ற
குழந்தைகள் பிஞ்சுக் கை தட்டி ரசிக்கலாம். |
|
3. கேள்வி: "தமிழ்நாட்டை உலகளவில் தனி பிராண்டாக உருவாக்க
வேண்டும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே? பதில்: ஒரு
பிரதேசத்தில் மண்ணும் மலையும் திருடப்பட்டு - குற்றங்கள், போதை, லஞ்சம், ஊழல் பெருகினால் - அது ஒரு பிராண்டா? |
|
4. கேள்வி: "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடு மாடு
வளர்ப்பதும் அரசு வேலையாகும்" என்று நா.த.க தலைவர் சீமான் பிரசாரம்
செய்கிறாரே? பதில்: சீமான் என்ன சொல்கிறார்? ஆடு மாடுகள் தனியார் உடமையில் இருக்கும், ஆனால் அவற்றை வளர்ப்பது அரசு வேலை
என்கிறாரா? அல்லது, கால் நடைகள் அரசுடைமை ஆக்கப்பட்டு அவற்றை அரசுப் பணியாளர்கள்
வளர்ப்பார்கள் என்கிறாரா? கசாப்புக் கடைக்குப் போன, அல்லது இறந்து போன, கால்நடைகள் பெயரில் யாரும் அரசுக் கணக்கில்
செலவு எழுதக் கூடாது என்பதற்காக, வாரா வாரம் கால்நடைகள் கணக்கெடுப்பை சீமான்
அரசு நடத்துமா? அதுபோல், புதிய கால்நடை பிறப்புகளையும் அவருடைய அரசு தொடர்ந்து கணக்கெடுக்குமா? ஒரு அபத்தத்தை சரளமாக, சத்தமாகப் பேசினால் அது அபத்தம் ஆகாது
என்பது சீமான் கட்சி. |
|
5. கேள்வி: தமிழகத்தின் தற்போதைய முக்கிய அரசியல் தலைவர்கள்
குறித்து ஒருவர் நினைக்கக் கூடிய வாக்கியக் குறி (tagline) என்ன? பதில்: மு.க.
ஸ்டாலின் - தந்தை வழிச் சொத்து உதயநிதி - எங்க பாட்டன் சொத்து எடப்பாடி பழனிசாமி - யாரோ உருவாக்கி யாரோ எடுத்து என் கையில் கொடுத்த
சொத்து விஜய் - என் கனவு, பிரும்மாண்ட சினிமா. தியேட்டர்
கிடைக்குமா? திருமாவளவன் - காத்து எந்தப் பக்கம்யா அடிக்குது? சீமான் - மர்ம யோகி அண்ணாமலை - கர்ம யோகி |
|
பகுதி 79// 12.04.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment