Saturday, 18 April 2026

கேள்வி-பதில் (18.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தால், கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய திமுக-வை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும். என்ன இவன் மிரட்டுகிறான் என்று நினைக்காதீர்கள்; நான் உங்களை எச்சரிக்கிறேன்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மற்றும் மத்திய அரசை நோக்கிப் பேசினார். ஸ்டாலின் விடுத்தது உண்மையில் எச்சரிக்கையா, மிரட்டலா? எச்சரிக்கைக்கும் மிரட்டலுக்கும் என்ன வித்தியாசம்?

 

பதில்: இரண்டுக்குமான வித்தியாசம் எளிதானது.

 

உயர் அழுத்த மின்சாரம் கடத்தப்படும் இடங்களுக்கு அருகில், அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கைப் பலகை வைக்கலாம். "மதியம் கடுமையான வெயில் அடிக்கிறது. இப்போது வெளியில் சென்றால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம். சாயங்காலம் போ" என்று வீட்டில் ஒருவர் மற்றவருக்குச் சொல்லலாம். இவை முறையான எச்சரிக்கை. 

 

"நான் எதிர்பார்க்கும் வகையில் நீ நடந்துகொண்டால் ஓகே. நீ வேறுவகையில் செயல்பட்டால், நான் அந்தக் காலத்தில் செய்த மாதிரி அதகளம் செய்வேன்" என்று ஒருவர் பேசினால் அது மிரட்டல். அதைத்தான் ஸ்டாலின் செய்தார்.

 

 

2. கேள்வி: காட்பாடியில் தனக்காகத் தேர்தல் பிரசாரம் செய்த திமுக அமைச்சர் துரைமுருகன் “நான் லஞ்சம் வாங்கியதாக யாராவது காண்பிக்கட்டும், நெருப்பில் குதித்து விடுகிறேன்” எனப் பேசி இருக்கிறாரே?

 

பதில்: துரைமுருகன் சொல்ல வருவது இது: "நான் லஞ்சம் வாங்கியதாகக் கோர்ட்டுக்குச் சென்று  - அதாவது இறுதியில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று - நிரூபிக்க எந்த ஆவணமோ மற்ற சாட்சியமோ யாருக்கும் கிடைக்காது." கெட்டிக்காரராகப் பேசியிருக்கிறார். கேட்பவர் கெட்டிக்காரராகப் புரிந்துகொள்ள வேண்டும்.

 

 

3. கேள்வி: மத்திய மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்ட திருத்த அரசு மசோதா, போதிய விசேஷப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் லோக் சபாவில் தோற்றது. இந்தத் தோல்வி, நடைபெறவிருக்கும் ஐந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில், யாருக்கு பாதகமாக இருக்கும்? காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணிக்கா? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கா?

 

பதில்: லோக் சபாவில் மசோதாவை எதிர்த்துத் தோற்கடித்த எதிர்க் கட்சிகளின் எண்ணம் இது:

 

'எங்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறினால், "பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை முன்னெடுத்தது எங்கள் அரசு" என்று அந்த ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பாஜக பிரசாரம் செய்யும்; அதனால் அங்கு நடக்கவிருக்கும் தேர்தல்களில் எங்களுக்குக் கணிசமான ஓட்டிழப்பு ஏற்படும். மாறாக, எங்கள் எதிர்ப்பால் லோக்சபாவில் மசோதா தோற்றால் அப்போதும் அந்த ஐந்து தேர்தல்களில் எங்களுக்கு ஓட்டிழப்பு ஏற்படலாம், ஆனால் அந்த ஓட்டிழப்பு குறைவாக இருக்கும். ஆகையால் தோற்கட்டும் மசோதா!'

 

இன்னொன்று. மசோதா நிறைவேறிப் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால், 2004-14 மத்திய ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பின்னால் சோனியா காந்தி லகான் பிடித்து ஹை-ஹை சொன்ன மாதிரி, மத்திய மாநில சட்டசபைகளில் நிறையப் பெண் உறுப்பினர்கள் கடனே என்று கடமையாற்ற, பின்னணியில் கணவன்மார்கள் தூள் கிளப்பலாம். இந்தியாடா!

 

 

4. கேள்வி: தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து லோக்சபாவில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, "இந்த மசோதாவை எதிர்த்துத் தமிழகத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின் கறுப்புக் கொடி ஏற்றியுள்ளார்" என்று சொல்ல, அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா, "நீங்கள் கறுப்புக் கொடியோ மஞ்சள் கொடியோ ஏற்றுங்கள். அதற்கும் இந்த அவைக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டிருக்கிறாரே?

 

பதில்: என்ன சம்பந்தமா? ஸ்டாலின் செயலை டி.ஆர். பாலு லோக் சபாவில் போற்றிப் பறை சாற்றினால், உடனே ஸ்டாலின் மனதில் டி.ஆர். பாலு பட்டொளி வீசிப் பறப்பார், அதனால் டி.ஆர். பாலுவின் பலவகையான நலன்கள் தொடர்ந்து காக்கப் படும் என்ற சம்பந்தம் ஓம் பிர்லாவுக்குத் தெரியுமா? 

 

 

5. கேள்வி: சமீபத்தில் லோக் சபாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "எனக்கும் பிரதமர் மோடிக்கும் மனைவிப் பிரச்சனை இல்லை" என்று பேசி அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறாரே?

 

பதில்: சிரிப்புக்கு இடமில்லாத ஒரு விஷயம்: ராகுல் காந்தியை அவர் போக்கில் கட்சிக்குள் வளரவிட்டு, அவருடன் சேர்ந்து ஜனநாயகத்தை மிதித்து நடந்த இன்னொரு பிரச்சனை மோடிக்கு இருந்ததில்லை. அன்னைப் பிரச்சனை.

 

பகுதி 81//18.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment