Monday, 20 April 2026

கேள்வி-பதில் (20.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "ராஜராஜ சோழனையும் தாண்டி கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்தவர் சேகர் பாபு" என்று சட்டசபைக்குப் போட்டியிடும் திமுக அமைச்சர் சேகர் பாபுவைப் பாராட்டி கமல் ஹாசன் பிரசாரம் செய்திருக்கிறாரே?

 

பதில்: கமல் ஹாசன் இப்படிப் பேசுகையில், அருகில் அவரைப் பார்த்து நின்றிருந்த சேகர் பாபு உடனே வேறு புறம் முகத்தைத் திரும்பிக் கொள்வது வீடியோவில் தெரிகிறது. சேகர் பாபுவுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லையோ? உளறு நாயகன்.

 

 

2. கேள்வி: "பெரியார் என்ற பிம்பத்தைத் தமிழ்நாட்டில் அண்ணா, கருணாநிதி, பிறகு மு.க. ஸ்டாலின் ஆகியோர் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள். அதை உடைக்கவே முடியாது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அது முடியாது" என்று திமுக அமைச்சர் எ.வ. வேலு சமீபத்தில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: வேலு சொன்ன ஐம்பது வருடத்தில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. அது புரிவதற்கு, முதலில் திமுக தலைவர் ஸ்டாலினுடைய தற்போதைய வயது தெரியவேண்டும். அவர் வயது 73, அவர் மகன் உதயநிதியின் வயது 48. ஸ்டாலின் தொடங்கி, திமுக தலைமைக் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் காதுகள் பல பத்தாண்டுகள் குளிரும் வகையில் பேசிவிட்டார் வேலு. வேலுவுக்கே வயது 75. மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை நிறுவி நடத்துபவர். பெரியாரைப் போற்றியதில் வேலுவின் பிழைப்பு, அவருடைய தொழில் வளம், அவர் குடும்பத்தின் செழிப்பு ஆகியவை திமுக-வின் கீழ் நூறு சதவிகிதம் கேரண்டி. நமக்கு இதில் சம்பந்தமில்லை.

 

 

3. கேள்வி: லோக் சபாவில் ஒரு அரசு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் கருப்பு உடையணிந்து வந்ததைப் பார்த்த பிரதமர் மோடி ஏதோ சொல்ல, அதற்குப் பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, "கருப்பு என்பது காளி தேவியின் நிறம்" என்று தங்கள் உடைகளின் நிறத்தை நியாயப் படுத்தி அங்கு பேசி இருக்கிறாரே?

 

பதில்: இக்கட்டான சமயத்தில் திமுக-வினருக்கும் காளி தேவி உதவுவாள் என்று கனிமொழி புரிந்துகொள்ளலாம்.

 

 

4. கேள்வி: "தற்போது 543 எம்.பி-க்கள் உள்ளபோதே 3 மாதங்களுக்கு ஒரு முறைதான், ஒருவர் பேச 7 நிமிடம் வாய்ப்பு கிடைக்கிறது. தொகுதி சீரமைப்பால் 816 எம்.பி-க்கள் வந்தால் 5 மாதங்களுக்கு ஒரு முறை 3 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கும்" என்று இளையான்குடியில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம். இதன் மூலம்,  லோக் சபா எம்.பி-க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அவசியமில்லை என்று அவர் வாதிடுகிறார். இந்த வாதம் சரியா?

 

பதில்: சிதம்பரத்தின் பேச்சில் கெட்டிக்காரத் தோற்றம் மட்டும் இருக்கிறது.

 

சிதம்பரத்தின் கெட்டிக்கார ரூட்டில் போய், லோக் சபாவின் தற்போதைய எம்.பி-க்கள் எண்ணிக்கையைப் பாதி குறைத்து 272-ஆக மாற்றலாமா? அப்போது லோக் சபாவில் ஒரு எம்.பி இரண்டு மடங்கு நேரம், அதாவது 14 நிமிடங்கள், பேசலாமே - அது வேண்டாமா? எம்.பி எண்ணிக்கையைக் கால் பங்காகக் குறைத்து 136 என்று ஆக்கினால், லோக் சபாவில் ஒரு எம்.பி 28 நிமிடங்கள் பேசி அசத்தலாம் - அது பயன் தராதா?

 

இன்னொன்று. லோக் சபாவில் எம்.பி-க்கள் என்ன பேசினாலும், எவ்வளவு நேரம் பேசினாலும் பிரயோஜனம் இல்லை; பேசிய பிறகு தனது கட்சிக் கொறடாவின் உத்தரவின் படிதான் அவர் லோக் சபாவில் ஓட்டளிக்க வேண்டும் - இல்லாவிட்டால் அவருடைய எம்.பி பதவி பறிபோகலாம்.  ஆகையால் 3 நிமிடம் என்ன, 30 நிமிடம் கூட நீட்டி முழக்கி அவர் வெளியில் பேசட்டுமே - இப்போது சிதம்பரம் பேசின மாதிரி?

 

 

5. கேள்வி: "அமெரிக்க அதிபர் டிரம்பின் கட்டுப்பாட்டில் நமது பிரதமர் மோடி இருக்கிறார். அவர் குதி என்றால் இவர் குதிப்பார். அவர் கீழே கிட என்றால் இவர் கீழே கிடப்பார்" என்று ராகுல் காந்தி சென்னையில் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தான் பேசுவதை ஒருவராவது நம்புவாரா என்ற சிந்தனை ராகுல் காந்திக்கு இல்லை. காரணம்: ராகுல் காந்திக்கு உள்ளே ஒரு பைத்தியம் இருக்கிறது. அது பிதற்று என்றால் இவர் பிதற்றுவார். அது புளுகு என்றால் இவர் புளுகுவார்.

 

அமெரிக்க அதிபர் பதவி மாதிரி அல்லாமல், அந்தப் பைத்தியத்தின் பதவிக் காலம் நான்கு வருடங்கள் ஆனாலும் முடிவுக்கு வராது. அது சாஸ்வதம்.

 

பகுதி 82//20.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment