Thursday, 2 April 2026

கேள்வி-பதில் (31.03.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-பாஜக இடையே கூட்டணி அமைந்ததில், அண்ணாமலையை பாஜக உதாசீனம் செய்து விட்டதா? தமிழக பாஜக-வில் மற்ற தலைவர்கள் அண்ணாமலையை முன்னுக்கு வரவிடாமல் தடுக்க முனைகிறார்களா?

 

பதில்: தமிழக பாஜக-வுக்கும் தமிழக அரசியலுக்கும் அண்ணாமலையை ஒரு பொக்கிஷமாகப் பார்க்கும் பலரின் மனதில் மேற்காணும் கேள்விகள் எழலாம். சில விஷயங்களை நாம் அமைதியாக, கூர்மையாகப் பார்த்தால் நமக்குத் தெளிவு கிடைக்கும்.

 

நம் அனைவரையும் விட மோடியும் அமித் ஷாவும் ஒன்றைத் தீர்க்கமாக உணர்ந்தவர்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக-வின் முக்கிய குறிக்கோள் இது: திமுக-வைத் தோற்கடித்து ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதே சமயம், எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு திமுக-வை விட ஒரு சிறந்த ஆட்சியைத் தமிழகத்தில் நிறுவ வேண்டும்.

 

இந்த முக்கிய குறிக்கோளை இழந்து, திமுக மறுபடியும் ஜெயித்து ஆட்சி அமைத்தாலும் பரவாயில்லை, அது நடக்கையில் பாஜக-வும் தமிழகத்தில் தனது வாக்கு சதவிகிதத்தை அதிகரித்துக் காட்டி, அதைச் சொல்லி மார் தட்டலாம் என்று நினைப்பது முதிர்ச்சியற்ற, தொலைநோக்கில்லாத, பார்வை. முற்றிலும் தீய திமுக-வைத் தேர்தலில் தோற்கடிப்பது எல்லாவற்றையும் விடப் பிரதானமானது. மற்ற அனைத்தும் பிறகு.

 

பாதத்தில் பெரிய எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் அதற்கான கட்டுப் போட்டு கட்டிலில் படுத்து பாதத்தைச் சரி செய்துகொள்ள வேண்டும். எலும்பு முறிவு ஏற்பட்ட பாதத்திலுள்ள பித்த வெடிப்புக்கு முதலில் வைத்தியம் பார்க்கிறேன், எலும்பு முறிவு சிகிச்சைக்கான கட்டை அப்புறம் போட்டுக் கொள்கிறேன் என்று நாம் இருக்க மாட்டோம். இங்கு எது அதி முக்கியமோ, அதைப் போல் முக்கியம் திமுக-வை ஆட்சியிலிருந்து இறக்குவது.

 

அதிமுக தூய்மையான அரசியல் கட்சி அல்ல. அவர்களிடம் ஆட்சி இருந்தால் அவர்கள் தூய்மையாக, நேர்மையாக, திறமையாக, ஆட்சி செய்வார்கள் என்று மோடியும் அமித் ஷாவும் நினைக்க மாட்டார்கள். ஆனால் திமுக-வைப் போல தேச விரோத, ஹிந்து விரோத, சூப்பர் கில்லாடித்தனமான ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்காது என்பது நிச்சயம். ஒரு மாம்பழம், ஒரு செவ்வாழைப் பழம் மட்டும் ஒரு கடைக்காரரிடம் இருக்கின்றன. மாம்பழம் மிகவும் அழுகியது, செவ்வாழைப்பழம் மிகவும் கனிந்தது என்றால், நாம் செவ்வாழைப் பழத்தை வாங்குவோம். அப்படியான வாழைப் பழம், அதிமுக - இப்போதைக்கு வயிறு நிறைய உதவும்.

 

அண்ணாமலையின் வரவுக்குப் பின் தமிழகத்தில் பாஜக-வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கும் - அதற்கு முக்கிய காரணம் அவர்தான்.

ஆனாலும் மாநிலத்தில் தற்போதைய பாஜக வாக்கு சதவிகிதம், அதிமுக-வின் வாக்கு சதவிகிதத்தை விடக் குறைவுதான். அதிமுக-வின் ஜென்ம எதிரி திமுக என்பதால், திமுக-வைத் தேர்தலில் வீழ்த்தும் நோக்கில் பாஜக அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும். தமிழகத்தில் பிற்கால நல்லாட்சி குறித்தும் தேசநலன் பற்றியும் அதிகம் சிந்திக்கும் பாஜக-வுக்கு இந்தக் கூட்டணி அமைந்தது மிக முக்கியம் - அதிமுக இதைத் தன் பக்கத்திலிருந்து அவ்வளவு முக்கியமாகக் கருதியதோ இல்லையோ.

 

2026 சட்டசபைத் தேர்தலுக்காக அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய பாஜக-விடம், "எங்கள் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ஒத்துவராது. ஆகையால் இந்தக் கூட்டணி ஏற்படவேண்டும் என்றால், அண்ணாமலை பாஜக-வின் தமிழகத் தலைவராக நீடிக்கக் கூடாது, அவர் இடத்தில் வேறு ஒருவரைப் பாஜக நியமிக்க வேண்டும்" என்று அதிமுக நிபந்தனை விதித்ததா, அதைப் பாஜக மேலிடம் ஏற்றுக் கொண்டுதான் அவ்வாறு செயல்பட்டதா என்பது பொதுவெளியில் யாருக்கும் தெரியாது. அது உண்மை என்றாலும், மாநில ஆட்சியிலிருந்து திமுக-வை இறக்க வேண்டும், அதைத் தீவிரமாக முயற்சிப்பதற்கு அதிமுக-வுடனான கூட்டணி அவசியம் என்று பாஜக நினைத்துச் செயல்பட்டால் அது நல்ல அரசியல் யுக்தி.

 

அண்ணாமலை தமிழக பாஜக-வின் தலைவராக வருவதற்கு, அல்லது அதையும் விடக் கட்சியிலும் அரசாங்கத்திலும் உயர்ந்த இடங்களை அடைவதற்கு, அவருக்கு வயது இருக்கிறது. அதுபோன்ற கால சௌகரியம் அற்றது, திமுக ஆட்சியிலிருந்து விடுபடக் காத்திருக்கும் தமிழகம்.

 

வரும் தேர்தலில் அதிமுக துணையுடன் திமுக-வைத் தோற்கடிக்க முடிந்தால், அதன் பிறகு பாஜக-வின் நோக்கங்கள் இவ்வாறு இருக்கும்: திமுக-வை ஆட்சியிலிருந்து தள்ளியே வைத்திருக்க வேண்டும்; அதற்காகக் கூடிய வரை அதிமுக-வுடன் கூட்டணி தொடர வேண்டும்; அதே நேரம் பாஜக-வைத் தமிழகத்தில் மேலும் வளரச் செய்ய வேண்டும்; பிறகு தனது கட்சி பிரதான கூட்டணிக் கட்சியாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் நிலையை பாஜக எட்ட வேண்டும். மோடியும் அமித் ஷாவும் - குறைந்த பட்சம் அமித் ஷா மட்டுமாவது - தேக ஆரோக்கியத்துடன் தீவிர அரசியலில் இருக்கும்போதே இந்த நோக்கங்களைப் பெருமளவு நிறைவேற்ற - அதற்கான வலுவான அடித்தளம் அமைக்க - பாஜக முயற்சிக்க வேண்டும். அதுதான் விவேகம்.

 

இதே எண்ண ஓட்டம், அண்ணாமலைக்கும் இருக்கும் என்று நாம் கருதலாம்.

 

அடுத்ததாக, தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை மீது, அவருடைய வளர்ச்சி மீது, பொறாமை கொண்டு, கட்சிக்குள் அவருக்கு ஒத்துழைப்பு தராமல் இருக்கிறார்களா என்று பொதுமக்களில் சிலர் சந்தேகம் கொள்கிறார்கள், அதைச் சமூக வலைத் தளங்களில் வெளிப்படுத்துகிறார்கள், அதன் மறுபக்கமாக மற்ற தமிழக பாஜக தலைவர்களைக் கண்டனம் செய்கிறார்கள். இது, நல்ல எண்ணத்தில் செய்யப்படும் தவறு.

 

அண்ணாமலையின் வரவால், அவரது தடலடியான பேச்சுகளால், அவருக்குக் கிடைக்கும் எழுச்சியான மக்கள் ஆதரவால், சில சீனியர் தமிழக பாஜக தலைவர்களுக்கு அவர் மீது சிறிதளவு பொறாமை ஏற்பட்டிருந்தாலும், அது சாதாரண மனித குணம், உலக இயல்பு. அது ஏற்பட்டாலும் அந்த சீனியர் தலைவர்கள் பண்பு மிக்கவர்கள், அவர்களின் அர்ப்பணிப்பும், தேச சேவையும் மதிப்பு மிக்கவை, பிற கட்சிகளில் காணக் கிடைக்காதவை. அவர்களும் பாஜக-வின் சொத்து.

 

அண்ணாமலையும் அந்த சீனியர் தலைவர்களும் காலப் போக்கில் ஒருவருக்கு ஒருவர் சரியாகி விடுவார்கள். நல்லவர்களுக்கு இடையில் இதுதான் நடக்கும். அவர்கள் தங்களுக்குள் சரியாகிக் கொண்டிருந்தாலும், பாஜக ஆதரவாளர்கள் எதையும் ஊதி ஊதிப் பார்க்காமல் இருப்பது நல்லது. இந்த இயல்புகள், இந்தப் போக்குகள் அனைத்தையும் அண்ணாமலை உணர்ந்திருப்பார் என்று நாம் நம்பலாம்.

 

அரசியல் ஆட்டம் என்பது தினம் தினம் சோதனைகளும் சவால்களும் நிரம்பியது - கட்சிக்கு உள்ளே சில, கட்சிக்கு வெளியே சில என்றிருக்கும். எல்லாக் கட்சிகளுக்கும் அதுதான் விதி.   அவற்றைப் பொறுமையாகக் கடந்து, கட்சியில் உள்ள சீனியர்களையும் அரவணைத்து அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று இன்று உச்சம் தொட்டிருப்பவர்கள் மோடியும் அமித் ஷாவும். அந்த வழியில் அண்ணாமலையும் பயணிக்க வேண்டும்.

 

மோடியும் அமித் ஷாவும் அண்ணாமலைக்கு அரவணைப்பாகக் கிடைத்த மாதிரி, மோடி மத்திய அரசியலுக்கு வரும்போது அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த வகையில், பாஜக-வுக்குள் காலடி வைக்கும் போதே அண்ணாமலைக்கு அதிக அதிர்ஷ்டம் உண்டு. அவர் பொறுமை காத்து பாஜக-வில் உயர்ந்த இடத்தை அடைவார், திமுக எதிர்ப்பிலும் தமிழகத்திற்குப் பெரும் சேவை செய்வார்.

 

இப்போது அனைவருக்கும் தேவை பொறுமை. அது பாஜக-வுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யும்.

 

பகுதி 75 // 31.03.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment