Sunday, 5 April 2026

கேள்வி-பதில் (04.04.2026)


 

கேள்வி-பதில்

 

 

கேள்வி: வரும் சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  பாஜக வேட்பாளர்களில் அண்ணாமலையின் பெயர் இல்லை என்பது அவரின் பல ஆதரவாளர்களுக்கும் வருத்தம் தருகிறது. அவர் ஒரு வேட்பாளராக இல்லை என்ற காரணத்தால் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, குறிப்பாக பாஜக-வின்  வெற்றி வாய்ப்பு, இந்தத் தேர்தலில் பாதிக்கப் படுமா?

 

பதில்: இந்தத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்று அவர் ஏற்கனவே பாஜக-வின் தலைமைக்குத் தெரியப்படுத்தி விட்டதாக அவரே தெரிவித்திருக்கிறார். அந்தக் கூற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

அண்ணாமலை எப்படி விருப்பப் பட்டாலும், பாஜக-வின் மத்தியத் தலைமை அதை உதாசீனம் செய்து ஏன் அவரைப் போட்டியிடுமாறு நிர்பந்திக்கவில்லை? ஏனென்றால், அண்ணாமலை மீது, பாஜக-வின் மத்தியத் தலைமை பெரு மதிப்பு வைத்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம்: அவர் தமிழகத்தில் பரவலான மக்கள் செல்வாக்குப் பெற்று அதன் மூலம் கட்சிக்கு வலிமை சேர்க்கிறார்; இப்போதும் அவர் தேர்தலில் போட்டியிடாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகத் தமிழகம் முழுவதும் பணியாற்றப் போவதாகச் சொல்லியிருக்கிறார்; தேர்தலில் போட்டியிடாமல் அவர் அந்தப் பணியை அதிகம் செய்ய முடியும்; அதுவும் பாஜக-வுக்கு நன்மை செய்யும், அதிமுக கூட்டணிக்கும் உதவும்.

 

தான் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு, அண்ணாமலை மாதிரி மக்கள் செல்வாக்குள்ள ஒரு தலைவர், தேர்தல் பணியில் ஈடுபடாமல் இருந்தால்தான் அது பாஜக வேட்பாளர்களுக்கு உதவாது, அந்த நிலை கட்சிக்கும் நல்லதல்ல.  ஆனால் நடப்பது வேறு.

 

அண்ணாமலை போட்டியிடாவிட்டாலும், அவர் தேர்தல் களத்தில் இருக்கப் போகிறார், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காக - குறிப்பாக பாஜக வேட்பாளர்களுக்காக - தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறார் என்றால், அது அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதனால் கட்சியினர் மத்தியிலும் அவருடைய அபிமானிகள் மனத்திலும் அவருடைய மதிப்பு போகப் போக  உயரும்.

 

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் பாஜக 27 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. பாஜக பெரும்பான்மை இடங்களை வெல்வதற்கு, அல்லது அதன் அருகில் வருவதற்கு, சாத்தியமில்லாத தேர்தல் இது. இதில் அண்ணாமலை போட்டியிடாததால், பாஜக முக்கியப் பங்கு வகிக்கப் போகும் ஆட்சியில் பங்காற்றும் வாய்ப்பை அவர் இழக்கிறார் என்று ஆகாது. ஆகையால் இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடாமல், கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் - பொதுவாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு - பாடுபட்டால் அதுவும் கட்சிக்கு நல்லதுதான். அவரே இந்தப் பெரிய பணியைத் தேர்வு செய்ததால், கட்சியும் அதை ஏற்றுக் கொள்வதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 

ஒருவேளை அதிமுக கூட்டணி வென்று, வரப்போகும் ஆட்சியில் பாஜக-வும் பங்கேற்கும் என்றாலும், அந்த சூழ்நிலை பற்றி இப்போது நிச்சயமாக ஒன்றும் சொல்வதற்கில்லை, அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைய நிச்சயத் தேவை, பாஜக வேட்பாளர்களுக்காக அண்ணாமலை பிரசாரம் செய்வது; அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாமல் அவர் அந்தப் பணியை மேலும் பரவலாக, சிறப்பாக, செய்யமுடியும்.

 

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிய வந்ததும், அவருடைய அபிமானிகளும் ஆதரவாளர்களும் சட்டென்று வருத்தம் கொள்ளலாம். அது இயற்கை. ஆனால் அவர் பாஜக வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்யும் போது, ஓட்டுக் கேட்கும் போது, அந்த மக்கள் மனமுவந்து அவ்விதம் வாக்களிப்பார்கள். ஏதோ கோபத்தையும் வருத்தத்தையும் மனதில் கொண்டு, அண்ணாமலையின் வேண்டுகோளையும் புறம் தள்ளி, தேர்தலில் ஓட்டுப் போடாமல் இருப்பது, அல்லது அதிமுக கூட்டணியை எதிர்க்கும் வேறு கட்சிக்கு வாக்களிப்பது, ஆகிய பயனற்ற செய்கைகளை அந்த மக்கள் செய்ய மாட்டார்கள்.  ஆகையால், அண்ணாமலை போட்டியிடாததால் - அந்தக் காரணத்தால் - அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பும், பாஜக-வின் வெற்றி வாய்ப்பும்,  பாதிப்படையாது.

 

இன்னொன்று: அண்ணாமலையின் தன்னலமற்ற செய்கையால், அவருடைய அசாதாரண அர்ப்பணிப்பால், அவர் பாஜக-வுக்குச் சில புதிய வாக்காளர்களையும் ஈர்க்கலாம்.

 

1963-ம் வருடம், தான் வைத்திருந்த தமிழக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகி, "நான் முழு நேர கட்சிப் பணிக்கு வருகிறேன்" என்று சொல்லி கட்சிக்காக வேலை செய்ய வந்தார் ஒரு மக்கள் தலைவர். அவர் காமராஜ். இப்போது, "நான் தேர்தலில் போட்டியிடவில்லை, கட்சி வேட்பாளர்களுக்காக - அதோடு கூட்டணிக்காக - பிரசாரம் செய்கிறேன்" என்று வந்திருக்கிறார் அண்ணாமலை, அவருடைய கட்சியும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. தொலைநோக்கில், இது நல்லது. 

 

சட்டடபைத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், அண்ணாமலையின் எண்ணமும் செய்கையும் வியக்கத் தக்கவை. தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும், கட்சிக்குள் அண்ணாமலையின் மதிப்பு மேலும் உயரும். அவருக்கு வயது நிறைய இருக்கிறது. சிந்திக்கும் திறன் இருக்கிறது. தேசப்பற்று இருக்கிறது. தன்னலமற்ற அர்ப்பணிப்பு இருக்கிறது. கட்சியில் வேலையும் நிறைய இருக்கிறது. மற்றவை காலப் போக்கில் தானாக நடக்கும்.

 

பகுதி 76 // 04.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

 

No comments:

Post a Comment