|
கேள்வி-பதில் |
|
1. கேள்வி: 'வருமான வரி செலுத்தாத
குடும்பங்களுக்கு, எங்கள் அரசு 8,000 ரூபாய்க்கான
இல்லத்தரசி கூப்பன்களை வழங்கும். அந்தத் தொகைக்கு அவர்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி என்று
விரும்பிய வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக் கொள்ளலாம்' என்பது திமுக-வின் ஒரு புதிய
தேர்தல் வாக்குறுதி. இது மக்களுக்குப் பயனுள்ளதா? பதில்: அறிவித்த
கட்சிக்கு இது பயனுள்ளது. திமுக என்ன சொல்கிறதென்றால்: "மக்களே! எங்களை
மாதிரி நீங்களும் பலவிதமாகப் பயன் அடையுங்கள்! அரசு தரும் இலவச கூப்பனைக்
கொடுத்து நீங்கள் அருகிலுள்ள கடையில் ஒரு வீட்டு உபயோகப் பொருளை வாங்கிக்
கொள்ளலாம்! அந்தக் கூப்பனை கடைக்காரர் அரசிடம் கொடுத்துப் பணம் வாங்கிக்
கொள்வார் - அதில் ஏதும் கமிஷன் மறைந்திருந்தால் அது உங்களைப் பாதிக்காது! உங்கள்
கூப்பனை நீங்கள் உபயோகப் படுத்தாமல் வெளியில் விற்கலாம்! அதை உடனடி
ரொக்கத்திற்கு முடித்துக் கொடுக்க வியாபாரிகளோ ஏஜெண்டுகளோ கமிஷன் கேட்டால், அது நியாயம் என்று கருதி நீங்களே கொடுத்து
விடுவீர்கள்! இந்தக் கூப்பனை ஒருவர் கல்யாண சீர்வரிசையாகக் கேட்கலாமா, கொடுக்கலாமா, என்பதெல்லாம்
மக்களின் விருப்பம்!" அடுத்து இப்படியும் நடக்கலாம்: வருமான வரி கட்டாத ஆண்கள் வெளியில்
போகும்போது அவர்கள் பயன் பெறுமாறு 'அனைத்துப்
பருவகால சிறப்புத் தொகை' என்ற பெயரில் அரசு அவர்களுக்கு மாதம்
ஆயிரம் ரூபாய்க்கு குடிநீர்க் கூப்பன் வழங்கலாம்! டாஸ்மாக் கடைகளிலும் நிறைய
குடிநீர் பாட்டில்கள் வைக்கப் படும்! அனைவரும் பயனடையலாம்! |
|
2. கேள்வி: சில நாட்கள் முன் அதிமுக-வை விட்டு திமுக-வில்
சேர்ந்தவர்களுக்கு, சட்டசபைத்
தேர்தலில் திமுக சீட் கொடுக்கிறது.
மிகச் சமீபத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து
தவெக-வுக்கு வந்தவர்களுக்கு, தவெக -வில் சீட் கிடைக்கிறது. சில மாதங்கள் முன் பெரிய
எதிர்பார்ப்பில் அதிமுக-வை விட்டு திமுக-வில் சேர்ந்த ஒருவருக்கு அங்கு சீட்
கிடைக்காமல் போய், தவெக
வேட்பாளர்களை அறிவிக்கும் தினத்தில் அவர் தவெக-வுக்குத் தாவி அங்கு சீட்
பெறுகிறார். தேர்தலில் சீட்டுக்காக, எப்படி இவர்களால் எளிதாகக் கட்சி மாற முடிகிறது? பதில்: ஒரு தொழிலில் பெருத்த லாபம்
கிடைப்பதற்காகக் கம்பெனிகளை நடத்தும்
முதலாளிகள், சந்தையில் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவார்கள். அந்த முதலாளிகளின்
கீழ் வேலை செய்து அவர்களை விடக் குறைவாக சம்பாதிக்கும் பணியாளர்கள், தங்களுக்கு அதிகப் பலன்கள் கிடைக்க ஒரு
கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனிக்குத் தாவலாம். இதுபோக, ஒரு பணியாளர் வேலையை விட்டு அவரே தனிக்
கம்பெனி ஆரம்பித்த பின் ஒன்றும் தேறாமல், கடையை மூடிவிட்டு மீண்டும் ஒரு பெரிய
கம்பெனியில் வேலைக்குப் போய் விடலாம். முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் இந்தச்
செயல்களை இயல்பாக எடுத்துக் கொள்வார்கள். பிசினஸ் இப்படித்தான் நடக்கும். |
|
3. கேள்வி: "வசதியான வாழ்க்கையைத் தூக்கி எறிஞ்சிட்டு
அரசியலுக்கு வந்திருக்கேன். உங்களுக்காக மட்டும்தான் வந்திருக்கேன்" என்று
தவெக தலைவர் விஜய் மேடையிலிருந்து மக்களை நோக்கிப் பேசியிருக்கிறாரே? பதில்: அரசியல்
பணியை தார்மீகக் கடமையாக, சேவை மனப்பான்மையுடன் செய்கிற ஒருவர், விஜய் பேசிய வார்த்தைகளை நினைக்க மாட்டார், பேசவும் மாட்டார். விஜய் பெரிதும் தனக்காக, தனது ஆசைகளுக்காக, அரசியலுக்கு
வந்திருக்கிறார் என்பதை அவரே நிரூபிக்கிறார். |
|
4. கேள்வி: சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தமிழக
காங்கிரஸ் தேர்வு செய்யும் விதம், அந்தக் கட்சிக்குள்ளேயே கடுமையாக விமர்சிக்கப் பட்ட
நிலையில், "குலுக்கல்
முறையில் ஏன் வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கூடாது?" என்று அக்
கட்சியின் ஒரு மத்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கேட்டிருக்கிறாரே? பதவி: பிரவீன் சக்கரவர்த்தி இப்படி
நினைத்திருப்பார்: தகுதியான ஒரு
காங்கிரஸ்காரர் எம்.எல்.ஏ ஆனால், அவரைக் கட்சி மேலிடம் - அதாவது, டெல்லி மேலிடம் - பெரிதாக அங்கீகரிக்காது, ஊக்குவிக்காது. தகுதியற்ற ஒரு
காங்கிரஸ்காரர் எம்.எல்.ஏ ஆனால், கட்சி மேலிடம் அது பற்றியும் கவலைப் படாது.
ஆகையால் வேட்பாளர் தேர்வு முறை பற்றி, வேட்பாளர் தகுதி பற்றி, விவாதம் நடப்பது பயனில்லை. குலுக்கல்
முறையில் காங்கிரஸ் கட்சிக்கான எம்.எல்.ஏ வேட்பாளர்கள் தேர்வானால், அது குறித்து கட்சிக்குள் மாநில அளவில்
விவாதம் ஏழாதபடி மாநில நிர்வாகிகளின் வாய் மொத்தமாக அடைபடும். வழக்கம் போல் டெல்லித் தலைமை கொட்டாவி
விட்டுத் தூங்கலாம். |
|
5. கேள்வி: அமெரிக்கா
ஈரானுடன் தொடர்ந்து போர் நடத்தும் போது, "ஈரான்
நாட்டிலிருந்து கச்சா எண்ணை எடுக்க விரும்புகிறேன்" என்று அதிபர் டிரம்ப்
கூறி இருக்கிறாரே? பதில்: போர் முடிந்து நல்லது நடப்பதற்கு, பாதிப்படைந்த சாதாரண ஈரானியர்களின் கோபம் தணிவதற்கு, டிரம்ப் ஏதுவாக இருக்கமாட்டார்; வெறுப்பை வளர்த்து எரிய விடும் அசட்டுப் பேச்சுகள்
பேசுவார். தீதும் நன்றும் பிறர் தர வாரா; டிரம்பும்
நன்றும் சிறிதும் சேரா. |
|
பகுதி 74 // 30.03.2026 |
|
- ஆர். வி. ஆர் – Author: R. Veera Raghavan, Advocate,
Chennai blog address: rvr-india.blogspot.com email: veera.rvr@gmail.com Username in Arattai: @veera_rvr |
No comments:
Post a Comment