Sunday, 5 April 2026

கேள்வி-பதில் (05.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "திமுக-வை ஆட்சியிலிருந்து அகற்றத் தமிழகம் எங்கும் பிரசாரம் செய்வதற்கு வசதியாக, வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை" என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அதுபோல் "திமுக-வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்குப் பிரசாரம் செய்வதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை" என்று ஏன் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கவில்லை?

 

பதில்: தமிழகத்தில் பாஜக-வுக்காக ஓட்டு ஈர்க்கும் சக்தி, பாதிக்கு மேல் அண்ணாமலையின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கிலிருந்து கிடைக்கிறது. ஆகவே அவர் தேர்தலில் போட்டியிடாமல் பல இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்வது பலன் அளிக்கும்.

 

திமுக-வின் ஓட்டு ஈர்க்கும் சக்தி, அக் கட்சியில் அண்ணா ஆரம்பித்து கருணாநிதி வளர்த்த கட்சிக் கட்டமைப்பிலிருந்து கிடைக்கிறது.  அத்துடன் திமுக-வின் தலைமைக்கும் கட்சியின் மற்ற தலைவர்களுக்கும் இடையே கருணாநிதி தொடங்கிவைத்து, ஸ்டாலின் விரிவாக்கிய,  'ஒண்ணுக்குள்ள ஒண்ணு' பிணைப்பிலிருந்து அதிகம் கிடைக்கிறது. உதயநிதிக்கு, அவர் தந்தை ஸ்டாலினுக்கு, தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு என்று பெரிதாக இல்லை. ஆகையால் உதயநிதி தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரம் செய்வதால் திமுக-வுக்குப் பலன் இருக்காது.

 

இன்னொன்று. திமுக ஆட்சிக்கு வந்து உதயநிதி அமைச்சர் ஆகவில்லை என்றால், ஒரு மாபெரும் நஷ்டத்தை யார் ஈடு செய்வது?

 

 

2. கேள்வி: "தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி வந்தால், நமது மாநிலத்தின் பெயரை 'தட்சிண பிரதேஷ்' என்று மாற்றவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: அந்த அந்தப் பிரதேச மக்களுக்கு அவரவர் தாய்மொழியின் மீது உணர்வுபூர்வமான அபிமானம் இருக்கும். 'தமிழ்நாடு' என்ற பெயரில் உள்ள 'தமிழ்' என்ற சொல்லை நீக்கிவிட்டு, நமது மாநிலத்துக்கு வேறு பெயர் வைக்க எந்த அரசியல் கட்சியும் நினைத்துப் பார்க்காது, திமுக-வைத் தவிர. அந்தக் கட்சி நமது மாநிலத்துக்கு ஒரு புதிய பெயரை ஆசையுடன் கற்பனை செய்து பார்க்கலாம், தனது ஆரம்பகாலக் கனவில். திராவிட நாடு.

 

 

3. கேள்வி: "இள வயதில் நான் தலைச் சுமையாக கத்தரிக்காய் சுமந்து விற்றவன்" என அமைச்சர் துரைமுருகன் தனது தொகுதி மக்களிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளாரே?

 

பதில்: துரைமுருகன் இப்போது மு. க. ஸ்டாலினையும் உதயநிதியையும் சுமக்கிறார். சொத்தைக் கத்தரிக்காய்.

 

 

4. கேள்வி: ஈரானுடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தினம் தினம் மாறுபாடான கருத்துகள் கூறி வருவதைக் குறிப்பிட்ட பிரெஞ்சு அதிபர் மேக்ரான், "நீங்கள் தினம் தினம் பேச வேண்டியதில்லை" என்று டிரம்புக்கு அறிவுரை சொல்லியிருக்கிறாரே?

 

பதில்: டிரம்புக்கான அறிவுரை சரிதான். அதில் 'தினம் தினம்' என்ற வார்த்தையை மேக்ரான் தவிர்த்திருக்கலாம்.

 

 

5. கேள்வி: திமுக கூட்டணியில் வைகோ-வின் மறுமலர்ச்சி திமுக-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் மூன்று தொகுதிகளில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் மறுமலர்ச்சி திமுக போட்டியிடும், ஒரு தொகுதியில் தனது சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் என்று ஒப்பந்தம் ஆனது. ஆனால் திடீரென்று, நான்கு தொகுதிகளிலுமே மறுமலர்ச்சி திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று வைகோ அறிவிக்க, அந்த முடிவைத் திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேற்றிருக்கிறாரே?

 

பதில்: திமுக-வுடன் பின்னிப் பிணைந்துவிட்ட வைகோ, தன் கட்சியின் பெயரை மாற்றி வைக்கலாம். மறுசுழற்சி திமுக.

 

பகுதி 77 // 05.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment