Wednesday, 15 April 2026

கேள்வி-பதில் (15.04.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "தமிழகத்திற்காகப் போராட ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் முழு உருவமாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: மறைந்த நான்கு தலைவர்களுடன் தன்னை ஒப்பிட்டு, ஸ்டாலின் மறைமுகமாகச் சொல்ல வருவது இது:

 

'தன்னை ஈ.வெ.ரா-வின் வழிவந்த தலைமகனாக வீரமணி நினைத்துக் கொண்டால், அவருக்கு ஒரு பளார்! நான்தான் இன்றைய ஈ.வெ.ரா!'

 

'காமராஜரின் அடிச்சுவட்டில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருவர் வருவார் என்று தமிழக காங்கிரஸார் யோசித்தால், அவர்களுக்கு ஒரு டிஷ்யூம்! நானே இன்றைய காமராஜர்!'

 

'அண்ணாதுரையின் நினைவுக்கும் புகழுக்கும் அண்ணா திமுக சொந்தம் கொண்டாடினால், அதற்கும் தலையில் ஒரு தட்டு! இன்றைக்கு நான்தான் அண்ணாதுரை!'

 

'இப்போது கருணாநிதியின் உருவமாக இருக்க வேறு யாரும் ஆசைப்படாவிட்டால் என்ன? நான்தான் கருணாநிதி!'

 

 

2. கேள்வி: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக பாஜக-வும் "அனைத்து குடும்பங்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரெண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை, வருடத்திற்கு மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசம்" போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறதே?

 

பதில்: பிள்ளை பிடிப்பவர்கள் தங்கள் காரியம் நிறைவேறக் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுக்கிறார்கள். அதே சமயம், தெருவில் நின்றபடி பிள்ளை பிடிப்பவர்களிடம் அகப்படவிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு போலீஸ்காரரும் அந்தக் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து எளிதாக அவர்களைத் தாய் தந்தையாரிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கலாம். இரண்டு சக்லேட்டுகளின் நோக்கமும் வேறு.

 

 

3. கேள்வி: "மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியைப் பத்து ஆண்டுகளாகியும் மத்திய அரசு கட்டி முடிக்கவில்லை. பத்து ஆண்டுகள் கட்டுவதற்கு அது என்ன தாஜ் மஹாலா?" என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

 

பதில்: தொடர்ந்து இந்தியாவுக்கு விரோதமாகச் செயல்படும் பாகிஸ்தான் நாட்டைப் பற்றி கூட, முதல்வர் ஸ்டாலின் தவறாக நினைக்க மாட்டார்; ஆனால் சொந்த நாட்டின் மத்திய அரசை, தமிழகத்திற்கு நன்மைகள் செய்துவரும் மத்திய அரசை, தினமும் கரித்துக் கொட்டுகிறார் அவர். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஸ்டாலினுக்கு ஏதோ மன வியாதி இருக்கிறது. அல்லது, எதிர்காலத்தில் மத்தியப் புலன்விசாரணை அமைப்புகளிடம் ஸ்டாலின் குடும்பம் மாட்டிக் கொண்டால், மத்திய அரசு மீது அவர் தொடர்ந்து சொல்லி வருகிற குற்றச்சாட்டுகளின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை அவை என்று அப்போது சொல்லலாம், என்ற தற்காப்பு எண்ணத்தில் இப்போது அவதூறு பேசுகிறார். இரண்டு காரணங்கள் சேர்ந்தும் இருக்கலாம்.

 

 

4. கேள்வி: "தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தால், கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய திமுக-வை இந்தியா மீண்டும் பார்க்கவேண்டி இருக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?

 

பதில்: 2020-ல் இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது மோடியின் மத்திய அரசு தனது தற்காப்பு ராணுவ நகர்வுகள் மூலமாகச் சீனாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து, அதைச் சீனாவும் நன்றாகப் புரிந்து கொண்டது. மத்திய அரசின் அந்த எச்சரிக்கை: "எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறினால், கடந்த 1950 மற்றும் 1960ம் ஆண்டுகளில் பார்த்த பழைய இந்தியாவாக எங்கள் நாடு இருக்காது. சீனா இனி புதிய இந்தியாவைப் பார்க்கும்." இந்த எச்சரிக்கை, தானாகவே ஸ்டாலினின் உதார்ப் பேச்சுக்கும் பொருந்தும்.

 

 

5. கேள்வி: விஜய்யின் தேர்தல் பயணத்தின் போது நெடுஞ்சாலையில் தனது வேனை நிறுத்தச் சொல்லி, ஒரு சைக்கிளை வெளியே எடுத்து அந்த சைக்கிளைச் சிறிது தூரம் ஓட்டிப் பல இளைஞர்கள் தன்னைப் பார்த்து ஆர்ப்பரிக்கச் செய்தார் விஜய். இதைக் குறிப்பிட்டுப் பேசிய நா.த.க தலைவர் சீமான், "நாங்களும் கோலிக்குண்டு விளையாட்டு விளையாடுகிறோம். எங்களையும் பார்க்க வாருங்கள்" என்று மக்களை நோக்கிச் சொல்கிறாரே?

 

பதில்: வேண்டாத செயலைச் செய்து விளையாட்டுக் காண்பித்தவர், விஜய். வேண்டாத பேச்சைப் பேசி விளையாட்டுக் காண்பித்தவர், சீமான். விளையாட்டுப் பிள்ளைகள் இருவர்.

 

பகுதி 80//15.04.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

Username in Arattai: @veera_rvr

 

No comments:

Post a Comment