Thursday, 9 July 2026

கேள்வி-பதில் (09.07.2026)

 

 

கேள்வி-பதில்

 

 

1. கேள்வி: "மாணவர்கள் நல்ல அரசியலைப் பழகவேண்டும். நல்ல அரசியல்வாதியின் பின்னால் செல்லவேண்டும்" என்று கமல் ஹாசன் பேசி இருக்கிறாரே?

 

பதில்: 2026 சட்டசபைத் தேர்தல் நடக்கும் முன்னர், திமுக கூட்டணி ஜெயித்து மு.க. ஸ்டாலின் மறுபடியும் முதல்வர் ஆவதற்குத் தனது மக்கள் நீதி மய்யம் பணியாற்றும் எனப் பேசினார் கமல் ஹாசன். திமுக அந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து, தவெக தலைவர் விஜய் முதல்வரானவுடன் புதிய முதல்வரை விரைவாகச் சந்தித்து வாழ்த்தினார் கமல் ஹாசன். அதன் மூலம் கமல் இனி திமுக-வின் பக்கம் சாய்ந்திருக்கவில்லை என்று சூசமாக உணர்த்தி, இனி அவரது அரசியல் சாய்மானம் எந்தப் பக்கம் என்பதையும் தற்போது அவர் ரகசியமாக வைத்திருக்கிறார்.

 

கமல் ஹாசன் குறிப்பிடும் நல்ல அரசியல்வாதி யார் என்று மாணவர்கள் குழம்புவார்கள். கமல் ஹாசனின் அரசியல் கருத்துகளைக் கேட்கும் மாணவர்களுக்கு அரசியல் புரியாது, கமல் ஹாசனையும் தெரியாது என்று அர்த்தம்.

 

 

2. கேள்வி: "காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன் தவெக-வுடன் கூட்டணி அமைக்காததற்கு, கட்சிக்குள் இருந்த குள்ளநரிகள் தான் காரணம்" என்று அந்தக் கட்சியைச் சார்ந்த மாநில அமைச்சர் விஸ்வநாதன் கருத்து சொல்லி இருக்கிறாரே?

 

பதில்: உண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி அமைச்சர் விஸ்வநாதன் ஏதோ சொல்ல வருகிறார்.

 

தனது கட்சிக்குள் இருக்கும் குள்ளநரிகளை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கிவைக்கத் தெரியாத ராகுல் காந்தி, காங்கிரஸை எதிர்க்கும் பாஜக-வில் உள்ள குள்ளநரிகளை எப்படி அடையாளம் காணுவார், எப்படி சமாளிப்பார், அவர்களை எப்படி ஜெயிப்பார்? காங்கிரஸ் கட்சிக்குள் சர்வ வல்லமை படைத்த ராகுல் காந்தியின் இயலாமையை விஸ்வநாதன் இவ்வளவு அப்பட்டமாகக் கேலி செய்யவேண்டாம்.

 

 

3. கேள்வி: 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, "50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தவுடன் மக்களிடம் நாம் அரசியலுக்கு வரவேண்டுமா என கருத்துக் கேட்கவுள்ளோம். அதன்பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளார். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

 

பதில்: 2020-ம் ஆண்டு பாஜக-வில் அண்ணாமலை உறுப்பினராகித் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் அவர் எத்தனை நபர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுத்திருப்பார்? பத்து இருபது பேர் இருக்கலாம். 2021-ல் பாஜக-வின் மத்தியத் தலைமை, கட்சிக்குப் புதியவரான அண்ணாமலையைத் தமிழக பாஜக-வின் தலைவராக நியமனம் செய்தபோது, அந்த முக்கிய முடிவை எடுக்க எத்தனை நபர்கள் கலந்து ஆலோசித்திருப்பார்கள்? மூன்று நான்கு பேர் இருக்கலாம். ஆனால் இப்போது அண்ணாமலை அரசியல் கட்சி தொடங்கலாமா என்பதற்கான தீவிர ஆலோசனை நடைபெறவே, அவரது வீ த லீடர்ஸ் இயக்கத்தில் குறைந்தது 50 லட்சம் உறுப்பினர்கள் இணையவேண்டுமா? 

 

வீ த லீடர்ஸ் இயக்கத்தில் இதுவரை இணைந்ததாகச் சொல்லப்படும் 19 லட்சம் நபர்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அண்ணாமலை எதிர்பார்க்கிறாரா?:  'அண்ணாமலை தொடங்கக் கூடிய அரசியல் கட்சியின் தொண்டர்களாக அல்லது அக்கட்சியின் மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட, முதல் கட்ட அரசியல் தலைவர்களாக நாம் உருவாகிச் செயல்படுவோமா என்பது பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை. இருந்தாலும் வெறுமனே வீ த லீடர்ஸ் உறுப்பினர் அட்டையைப் பைக்குள் வைத்தபடி இருப்போம். 50 லட்சம் உறுப்பினர்களை அண்ணாமலையின் இயக்கம் எட்டுமா என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது. 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தால் அதன் பிறகு அவரது இயக்கம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை அண்ணாமலை குறிப்பிடும் 'மக்கள்' வெளிப்படுத்துவார்களா என்பதும் நமக்குத் தெரியாது. ஒன்றுமே நிச்சயம் இல்லாவிட்டாலும் அண்ணாமலையின் கீழ் அரசியலில் ஈடுபடுவது குறித்து  நாம் சிவனே என்றிருப்போம். எல்லாம் ஈசன் செயல்'

 

பாஜக-வில் அண்ணாமலை இருந்தபோது அவருடைய பேச்சுகளில் புத்திசாலித்தனம் இருந்தது, தெளிவும் இருந்தது. தற்போது அவரிடம் புத்திசாலித்தனம் மட்டும் தூக்கலாகத் தெரிகிறது.

 

 

4. கேள்வி: "தவெக ஆட்சியில் பங்கெடுத்த போதிலும், திமுக-வுடன் நட்பு தொடர்கிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூற, அதை விமர்சித்த வைகோ, "அது நோபல் பரிசு பெறவேண்டிய கருத்து" என்று கூறி இருக்கிறார். திருமா பேசியது சரியா அல்லது வைகோவின் கிண்டல் சரியா?

 

பதில்: சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக-வைத் தனது அரசியல் எதிரி, திமுக ஒரு தீய சக்தி என்று சொன்னவர் விஜய். அந்த விஜய்யின் தலைமையில் இன்று தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் விசிக-வின் தலைவர் திருமாவளவன், "திமுக-வுடன் நட்பு தொடர்கிறது" என்று பேசுவதை விஜய் உள்ளூர ஏற்க மாட்டார், திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டா வெறுப்பாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவருடைய நட்பாவது இன்று கிடைக்கிறதே என்று சந்தேகத்துடன் ஏற்பார்.  திருமாவளவன் வழக்கம் போல் எதையும் எப்போதும் தடம் புரண்டு பேசலாம்.

 

வைகோவைப் பொறுத்தவரை, தவெக தலைமையிலான கூட்டணியில் அவர் கட்சியும் இணைந்த நிலையில், அதே கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியின் தலைவரான திருமாவளவனைப் பொதுவெளியில் கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது. ஒருவேளை, விஜய் ரசிக்க முடியாத திருமாவளவன் கருத்துக்காக அவரை ஒரு இடி இடித்தால், விஜய்க்கு அருகில் நைசாக நகரலாம் என்று வைகோ நினைக்கிறாரோ?

 


5. கேள்வி: "அதிமுக-வை நிர்மூலமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்" என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறாரே?

 

பதில்: அந்த வேலையில் அவருக்குப் போட்டியாக இன்னொரு மனிதரா!


பகுதி 111 // 09.07.2026

 

- ஆர். வி. ஆர் –

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

blog address: rvr-india.blogspot.com

email: veera.rvr@gmail.com

 

No comments:

Post a Comment